உங்கள் தேவைகளை தெரிந்து கொள்வதற்கான புனித பயணம் இது- கமல்ஹாசன் பேச்சு

May 17, 2018
உங்கள் தேவைகளை தெரிந்து கொள்வதற்கான புனித பயணம் இது- கமல்ஹாசன் பேச்சுநெல்லை:

மக்கள் நீதி மய்யம் தலைவர் நடிகர் கமல்ஹாசன் தென் மாவட்டங்களில் சுற்றுப்பயணம் செய்து மக்களை சந்தித்து வருகிறார். நேற்று அவர் குமரி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளுக்கு சென்று தொண்டர்கள் மற்றும் மக்களை சந்தித்தார். இரவு கன்னியாகுமரியில் தங்கினார்.

இன்று (வியாழக்கிழமை) காலை நாகர்கோவிலில் இருந்து புறப்பட்டு நெல்லை மாவட்டத்தில் சுற்றுப் பயணத்தை தொடங்கினார். பணகுடியில் அவருக்கு நெல்லை மாவட்ட மக்கள் நீதி மய்ய தலைவர் செந்தில்குமார் தலைமையில் மேள, தாளம் முழங்க உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் அவர் பணகுடி பஸ் நிலையம் அருகே திறந்த வேனில் நின்று பேசினார்.

உங்களை நான் அறிந்து கொள்ள மேற்கொண்டுள்ள பயணம் இது. மக்கள் நீதி மய்யம் முக்கியமான பாதையில் செல்கிறது. அதற்கு வழிகாட்டி நீங்கள்தான். உங்கள் ஆசி இல்லாமல் அந்த பயணத்தை தொடர முடியாது. உங்கள் தேவைகளை தெரிந்து கொள்வதற்கான புனித பயணம் இது. கண்ணோடு கண் பார்த்து உங்கள் அன்பை அறியும் இந்த சுகம் வேறு எங்கும் கிடைக்காது.

திரைப்படம், டி.வி. மீடியா மூலமாக உங்களை ஏற்கனவே சந்தித்து வந்துள்ளேன். 50 ஆண்டுகளுக்கு மேலாக என்னை நீங்கள் பார்த்துள்ளீர்கள். பக்தர்கள் தரிசனம் என்பது போல உங்களை தரிசிக்க வந்துள்ளேன். மக்களின் தேவைகளுக்காகவே நான் உங்களிடம் வந்துள்ளேன்.

இவ்வாறு அவர் பேசினார்.


இதைத்தொடர்ந்து கமல்ஹாசன் திசையன்விளை, உவரி ஆகிய பகுதிக்கு சென்றார். அங்கு பொதுமக்கள் மற்றும் தொண்டர்களை சந்தித்து பேசினார். கமல்ஹாசன் வருவதை அறிந்ததும் ஏராளமான ஆண்களும், பெண்களும் கூடி நின்று அவருக்கு வரவேற்பு அளித்தனர். கமல்ஹாசன் பேசும் போது அவர்கள் கை தட்டி ஆரவாரம் எழுப்பினார்கள்.இதன் பிறகு அவர் தூத்துக்குடி மாவட்ட பகுதியில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். தூத்துக்குடி மாவட்டத்திற்கு வந்த கமல்ஹாசனுக்கு மாவட்ட எல்லையான மணப்பாட்டில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

தொடர்ந்து அவர் மணப்பாட்டில் மீனவர்களை சந்தித்து உரையாடினார். அப்போது மீனவர்களின் குறைகளையும் அவர் கேட்டறிந்தார். பின்பு அவர் திருச்செந்தூருக்கு புறப்பட்டு சென்றார். அங்கு நடந்த பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார்.

தொடர்ந்து கமல்ஹாசன் இன்று மாலை 4மணிக்கு காயல்பட்டணத்திலும், 4.15 மணிக்கு ஆறுமுகநேரியிலும், 4.45 மணிக்கு புன்னக்காயலிலும், 5.10 மணிக்கு ஏரலிலும், 5.30 மணிக்கு பண்டாரவிளையிலும் மக்களை சந்தித்து உரையாடுகிறார்.

மாலை 6 மணிக்கு தூத்துக்குடி வி.வி.டி.சிக்னல் சந்திப்பு பகுதியில் நடைபெறும் மக்கள் நீதிமய்யம் பொதுக்கூட்டத்தில் நடிகர் கமல்ஹாசன் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றுகிறார். இதற்கான ஏற்பாடுகளை மாவட்ட மக்கள் நீதி மய்யத்தினர் செய்து வருகின்றனர்.

தூத்துக்குடி மாவட்ட நிகழ்ச்சியை நிறைவு செய்து விட்டு, இன்று இரவே நடிகர் கமல்ஹாசன் நெல்லை வருகிறார். நாளை (வெள்ளிக்கிழமை) காலை 9 மணிக்கு நெல்லை நகரில் பாளை தெற்கு பஜார், மேலப்பாளையம் சந்தை விலக்கு, கொக்கிரகுளம், நெல்லை சந்திப்பு, நெல்லை டவுன் பகுதிகளில் மக்களை சந்திக்கிறார்.

பின்னர் ஆலங்குளம், பாவூர்சத்திரம், தென்காசி, கடையநல்லூர், புளியங்குடி, சங்கரன்கோவில் ஆகிய இடங்களில் பொதுமக்கள் மற்றும் தொண்டர்களை சந்தித்து பேசுகிறார். பின்னர் விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் செல்கிறார். நாளை பிற்பகல் விருதுநகர் மாவட்டத்தில் சுற்றுப்பயணம் செய்து மக்களை சந்திக்கிறார். 

Post a comment

[blogger][facebook][disqus]

Author Name

{picture#YOUR_PROFILE_PICTURE_URL} YOUR_PROFILE_DESCRIPTION {facebook#YOUR_SOCIAL_PROFILE_URL} {twitter#YOUR_SOCIAL_PROFILE_URL} {google#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

தொடர்பு படிவம்

Name

Email *

Message *

Powered by Blogger.