மூன்று மாவட்டத்தில் இணைய தள சேவையை முடக்கியதற்கு மு.க ஸ்டாலின் கண்டனம்

May 25, 2018
மூன்று மாவட்டத்தில் இணைய தள சேவையை முடக்கியதற்கு மு.க ஸ்டாலின் கண்டனம்


சென்னை: 

மு.க ஸ்டாலின் அறிக்கை: 
கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி ஆகிய மூன்று மாவட்டங்களில் இணைய தள சேவைகள்முடக்கி வைத்து அந்த மூன்று மாவட்ட மக்களின் இயல்பு வாழ்க்கையை கடுமையான பாதிப்புக்குள்ளாக்கியிருக்கும் மத்திய-மாநில அரசுகளுக்கு கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.

தூத்துக்குடியில் அரசே ஒரு பயங்கராவத்தை ஏற்படுத்தி, தனியார் ஆலையான ஸ்டர்லைட்டிற்கு எதிராக ஜனநாயக ரீதியில் போராடும் மக்களை தீவிரவாதிகள் போல சித்தரிக்கும் முயற்சியில் மத்தியில் உள்ள பா.ஜ.க. அரசும், அதிமுக அரசும் கூட்டணி அமைத்து செயல்பட்டிருப்பது மிகுந்த வேதனைக்குரியது.

ஆன்லைன் மூலம் நடைபெற்று வரும் ஏற்றுமதி – இறக்குமதி தொழில்கள் அனைத்துமே முடங்கி, தூத்துக்குடி துறைமுகப் பணிகள் மிக மோசமாக தேக்கமடைந்துள்ளன. இதுவரை ஐந்து கப்பல்கள் தூத்துக்குடி துறைமுகத்திற்கு வருவதை தவிர்த்து விட்டன. 5200 க்கும் மேற்பட்ட கன்டெனர்கள் மற்றும் பல்க் டேங்கர் வெசல்ஸுக்கு இணையதள சேவை முடக்கத்தால் பெர்த் கிடைப்பதில் தாமதம் ஏற்பட்டிருக்கிறது.

ஆன்லைன் மூலம் பணப்பரிமாற்றம் முழுமையாக தடைபட்டு பெரும்பாலான வணிக நிறுவனங்கள் செயலிழந்து நிற்கின்றன. மத்திய பா.ஜ.க. அரசு ஒருபுறம் வர்த்தகம் மற்றும் பணப்பரிமாற்றத்தை ஆன்லைன் ஆக்கி விட்டு, இந்த சேவை முடக்கத்தின் மூலம் சிறு – குறு, நடுத்தர நிறுவனங்களை (SME) அன்றாட பணிகளைச் செய்ய முடியாமல் தத்தளித்துக் கொண்டிருக்கின்றன.

அன்றாடம் பொதுமக்கள் தங்களின் அவசரத் தேவைக்குக் கூட ஏ.டி.எம்.களை பயன்படுத்த முடியவில்லை.வெளிநாடுகள் மற்றும் வெளியூர்களில் இருக்கும் உறவினர்கள், நண்பர்கள் ஆகியோருடன் செல்போனிலோ, வாட்ஸ் அப் காலிலோ பேச முடியாமல் இருப்பதால், கலவர பூமியாக்கப்பட்டிருக்கும் தூத்துக்குடியில் உள்ள தங்கள் பெற்றோர், உறவுகளை பத்திரமாக இருக்கிறார்களா என்பதை தெரிந்து கொள்ள முடியாமல் வெளிநாட்டு வாழ் தூத்துக்குடி மக்கள் எல்லாம் உறவுகள் பாதுகாப்பாக இருக்கிறார்களா என்பதை அறிந்து கொள்ள முடியாமல் நிம்மதியிழந்து தவிக்கிறார்கள்.

இந்தாண்டு முதல் மருத்துவ கல்வி அட்மிஷனுக்கும், பொறியியல் கல்விக்கும் ஆன்லைன் முறையை அதிமுக அரசு புகுத்தி விட்டு, இப்படி மூன்று மாவட்டங்களில் இணைய தள சேவையை ரத்து செய்து மாணவர்களின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கியிருக்கிறது. ஆன்லைன் மூலம் 22 ஆம் தேதி முதல் மதிப்பெண் சான்றிதழ் வெளியிடப்படுகின்றன. 

அதை பதிவிறக்கம் செய்ய முடியாமல் மாணவர்கள் திண்டாடிக் கொண்டிருக்கிறார்கள்.அது மட்டுமின்றி பொறியியல் கல்லூரி மாணவர்களின் தேர்வுத்தாள் மதிப்பீடு (Valuation) மற்றும் மறு மதீப்பீடு (Revaluation) அன்றைன்றைக்கு அரசின் வெப் போர்டல்களில் பதிவிட முடியாத நிலை ஏற்படுத்தப்பட்டுள்ளது.

பொறியியல் கல்லூரி பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள் அனைவருக்குமான பதவி உயர்வு, ஊதிய உயர்வு மற்றும் அரசு கல்லூரிகளில் இடம் பெறுவதற்கான சிறப்பு மதிப்பெண் ஆகியவற்றை வழங்குவதற்கான குறுகிய கால பயிற்சி திட்டம் (Short term training program) ஆண்டுதோறும் மே மாத விடுமுறையில் நடைபெறும். ஐஐடி மும்பை ஆன்லைன் மூலம் நடத்தும் 5 நாள் பயிற்சி முகாமில், 2 நாட்கள் நடந்து முடிந்த நிலையில் 3 நாள் பயிற்சி தடைபட்டதால், இந்தாண்டு அவர்கள் அனைவரும் பாதிக்கப்பட்டு உள்ளனர். அரசு சார்பில் 32 விதமான அரசு சான்றிதழ்கள் பொதுச்சேவை மையங்களில் (Common Services Centers) மட்டும் ஆன்லைன் மூலம் வழங்கப்படுகின்றன. 

அந்தச் சேவையில் ஸ்மார்ட் கார்ட், பாஸ்போர்ட், பிறப்பு – இறப்பு சான்றிதழ்கள், சமூக நலத்துறையின் 7 நலத்திட்ட உதவிகள், பட்டா வழங்குதல் முதற்கொண்டு வேலைவாய்ப்பு பதிவு மற்றும் புதுப்பித்தல் வரை பல இன்றியமையாத சேவைகளுக்கான சான்றுகளை பொதுமக்கள் பெற முடியும். இந்த இணைய தள சேவை முடக்கத்தால் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டு, பொதுமக்களாகிய பயனாளிகள் சான்றிதழ்களை பெற முடியாமல் இன்னலுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார்கள். 

பள்ளி – கல்லூரிகளில் ஆன்லைன் போர்டல் பாதிக்கப்பட்டு இருப்பதால் மாணவர் சேர்க்கையே கூட தடைபட்டு நிற்கிறது. குறிப்பாக, 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவ – மாணவியர் மதிப்பெண் சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்து, உயர்கல்விக்கு விண்ணப்பம் அனுப்பவும் முடியாமல் தவித்துக் கொண்டிருக்கிறார்கள். ஆன்லைன் மூலம் ரயில், பேருந்துகளில் முன்பதிவு மற்றும் கேன்சலேஷன் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளதால், இந்த மூன்று மாவட்டங்களில் இருந்தும் வெளியூர் செல்பவர்களும் பல்லாயிரக்கணக்கானோர் அவதிப்படுகிறார்கள்.

மூன்று மாவட்டங்களிலும் இணைய தள சேவை முடக்கம் என்பது ஏதோ பேரிடரைச் சந்தித்து விட்ட துயரம் போல் மக்களும், அங்குள்ள மாணவர்களும், வியாபாரிகளும், சிறு மற்றும் குறு வர்த்தக நிறுவனங்களும், ஏன் தூத்துக்குடி துறைமுகமும் கூட சந்தித்து வருகிறது. 


இதனால் பொருளாதார இழப்பு மட்டுமல்ல- மூன்று மாவட்டங்களின் வளர்ச்சியும் தற்காலிகமாக சிறைப்பிடிக்கப்பட்டிருப்பது தமிழ்நாட்டின் ஒட்டு மொத்த வளர்ச்சிக்கும், நாட்டின் முன்னேற்றத்திற்கும் பேரிடியாக மாறியிருக்கிறது. 

ஆகவே இணைய தள சேவை முடக்கத்தை உடனே மத்திய- மாநில அரசு கைவிட்டு, தமிழ்நாட்டை ஏதோ கலவர பூமி போல் வெளி மாநிலங்களுக்கு சித்தறித்து சிறுமைப்படுத்தும் போக்கையும் கைவிட்டு, மீண்டும் உடனடியாக இணைய தள சேவை துவங்குவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு குறிப்பிடபட்டுள்ளது.

Post a comment

[blogger][facebook][disqus]

Author Name

{picture#YOUR_PROFILE_PICTURE_URL} YOUR_PROFILE_DESCRIPTION {facebook#YOUR_SOCIAL_PROFILE_URL} {twitter#YOUR_SOCIAL_PROFILE_URL} {google#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

தொடர்பு படிவம்

Name

Email *

Message *

Powered by Blogger.