சுபஸ்ரீ மரணம்: ஐகோர்ட் சரமாரி கேள்வி?!

சுபஸ்ரீ மரணம்: ஐகோர்ட் சரமாரி கேள்வி?!  


சென்னை:


சென்னை பள்ளிக்கரணையில் கடந்த 12-ந்தேதி அ.தி.மு.க.வினர் வைத்த பேனர் விழுந்தது. என்ஜினீயர் சுபஸ்ரீ பலியானார்.மோட்டார்சைக்கிளில் சென்ற அவர் மீது பேனர் விழுந்தபோது அவர் நிலைதடுமாறியதால் அந்த வழியாக வந்த தண்ணீர் லாரி மோதியதில் உடல் நசுங்கி அவர் உயிரிழந்தார்.

அ.தி.மு.க. பிரமுகரும், முன்னாள் கவுன்சிலருமான ஜெயகோபால் இல்லத்திருமண விழாவுக்காக வைக்கப்பட்டிருந்த பேனரே சரிந்து விழுந்தது. இதையடுத்து அவர் மீதும், அனுமதியின்றி பேனர் வைக்க அனுமதி வழங்கிய அதிகாரி மீதும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்தது.

இது தொடர்பாக அனைத்துக் கட்சியினரும் குரல் எழுப்பினர். கமல், விஜய், சூர்யா ஆகியோரும் பேனர் விவகாரத்தில் கண்டனம் தெரிவித்தனர்.

பேனர் விவகாரம் தொடர்பாக பள்ளிக்கரணை சட்டம்-ஒழுங்கு போலீசாரும், பரங்கிமலை போக்குவரத்து போலீசாரும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

அ.தி.மு.க. பிரமுகரான ஜெயகோபால் இதுவரை கைது செய்யப்படவில்லை. அவர் தலைமறைவாகவே உள்ளார். அதே நேரத்தில் பேனர் அச்சடித்து கொடுத்த அச்சகம் சீல் வைக்கப்பட்டது. இது சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது.


மாநகராட்சி மற்றும் போலீஸ் அனுமதியின்றி சாலை நடுவில் வைக்கப்பட்டிருந்த பேனர் காற்றில் பறந்து சென்று சுபஸ்ரீ மீது விழுந்ததே அவர் பலியாவதற்கு முக்கிய காரணமாக இருந்தது.இதைத் தொடர்ந்து பேனர் வைத்ததை கண்டு கொள்ளாத மாநகராட்சி மற்றும் போலீஸ் அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கிற கோரிக்கை முன்வைக்கப்பட்டது.

இந்த சம்பவம் தொடர்பாக கடந்த 13-ந்தேதி சென்னை ஐகோர்ட்டு நீதிபதிகள் சத்திய நாராயணன், சே‌ஷசாயி ஆகியோர் விசாரித்தனர். அப்போது, தமிழக அரசுக்கு கடும் கண்டனம் தெரிவித்தனர்.

சாலையை சிவப்பு நிறமாக்க பொதுமக்களின் ரத்தம் இன்னும் எத்தனை லிட்டர் தேவை? என்றும் அரசியல் தலைவர்களுக்கு சாதகமாக வேலை செய்யும் அரசு அதிகாரிகள் ரத்தத்தை உறிஞ்சும் அட்டை பூச்சிகள் என்றும் கடும் கண்டனம் தெரிவித்து இருந்தனர்.

இந்த நிலையில், இளைய தலைமுறை என்ற அமைப்பு சென்னை ஐகோர்ட்டில் இன்று ஒரு மனு தாக்கல் செய்து இருந்தது. அதில் கூறியிருப்பதாவது:-

சுபஸ்ரீ மரணத்துக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி உண்ணாவிரதப் போராட்டம் நடத்த முடிவு செய்தோம். இதற்காக போலீசாரிடம் அனுமதி கேட்டு சென்னை போலீஸ் கமி‌ஷனரிடம் மனு கொடுத்தோம்.

ஆனால், அந்த மனுவை பரிசீலிக்காமலும், உண்ணா விரதப்போராட்டத்துக்கு அனுமதி வழங்காமலும் போலீஸ் அதிகாரிகள் இழுத்தடிக்கின்றனர். எனவே, உண்ணாவிரதப் போராட்டத்துக்கு அனுமதி வழங்க போலீசாருக்கு உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு அதில் கூறியிருந்தனர்.

இந்த வழக்கு நீதிபதி எம்.எஸ்.ரமேஷ் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் சார்பில் ஆஜரான வக்கீல் கூறும்போது, ‘சுபஸ்ரீ மரண சம்பவம் நடந்து 11 நாட்களுக்கு மேலாகியும் குற்றவாளியை இதுவரை போலீசார் கைது செய்யவில்லை. அவர் அ.தி.மு.க.வை சேர்ந்தவர் என்பதால், போலீசார் அலட்சியமாக செயல்படுகின்றனர். இதை கண்டித்து உண்ணாவிரதப் போராட்டம் நடத்த அனுமதி கேட்டும் அதை தர போலீசார் மறுக்கின்றனர்’ என்று வாதிட்டார்.

அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் குற்றவியல் வக்கீல் அய்யப்பராஜ் கூறும்போது, ‘ஏற்கனவே, இதுதொடர்பான வழக்கு இரு நீதிபதிகள் கொண்ட டிவிசன் பெஞ்சில் நிலுவையில் உள்ளது’ என்றார்.

இதற்கு பதிலளித்த நீதிபதி ரமேஷ் கூறியதாவது:-

டிவிசன் பெஞ்சில் நிலுவையில் இருந்தாலும், இந்த வழக்கை விசாரிக்க இந்த ஐகோர்ட்டுக்கு (எனக்கு) முழு அதிகாரம் உள்ளது. அதனால், இந்த வழக்கு தொடர்ந்து விசாரிக்கப்படும். மேலும், பேனர் வைத்தவரை இதுவரை கைது செய்யவில்லை என்று மனுதாரர் கூறுகிறார்.

அதேநேரம், சட்ட விரோதமாக பேனர் வைத்ததை தடுக்காத, அதை உடனே அகற்றாத மாநகராட்சி அதிகாரிகள், போலீஸ் அதிகாரிகள் மீது ஏன் இதுவரை கிரிமினல் நடவடிக்கை எடுக்கவில்லை?’ என்று நீதிபதி கேள்வி எழுப்பினார்.

இந்த கேள்விக்கு விரிவான பதிலை வருகிற 25-ந்தேதி (புதன்கிழமை) மனுவாக தாக்கல் செய்ய வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டார்.
Post a Comment

[blogger][facebook][disqus]

Author Name

{picture#YOUR_PROFILE_PICTURE_URL} YOUR_PROFILE_DESCRIPTION {facebook#YOUR_SOCIAL_PROFILE_URL} {twitter#YOUR_SOCIAL_PROFILE_URL} {google#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

தொடர்பு படிவம்

Name

Email *

Message *

Powered by Blogger.