Latest Post

கனிமொழி M.P பிறந்த நாள் விழாவில் திருநங்கைகளுக்கு உதவி!


Kanimozhi karunanithi birthday celebration | P.K Sekar about stalin & kanimozhi |Minister sekar babu | 2022 Kanimozhi birthday | dmk kanimozhi birthday

ஜனவரி 7 -ல் வெளியாகிறது 'அடங்காமை' !


திருக்குறள் கருத்தில் உருவாகியிருக்கும் திரைப்படம் 'அடங்காமை' நாளை முதல் இப்படத்தை வோர்ஸ் பிக்சர்ஸ் சார்பில் பொன் .புலேந்திரன்,ஏ.என்.மைக்கேல் ஜான்சன் தயாரிக்கிறார்கள்.  ஜனவரி 7 முதல்'அடங்காமை' உலகமெங்கும் வெளியாகிறது.

இதை பற்றி: 

"திருக்குறள் வாழ்வியல் நெறிகளை இரண்டே வரிகளில் கூறும் அற்புதமான நூல். அதிலும் குறிப்பாக 'அடக்கமுடைமை' அதிகாரத்தில் முதலில் வரும் 'அடக்கம்  அமரருள் உய்க்கும் அடங்காமை ஆரிருள் உய்த்து விடும்  'என்ற குறள் 100 பேருந்துகளில் 95 பேருந்துகளிலாவது இடம்பெற்றிருக்கும் .ஏன் இந்த வாழ்வியல் சிந்தனை மட்டும் எல்லாவற்றிலும் இருக்கிறது என்பதை யோசித்த போது அதை வைத்து ஒரு கதையை உருவாக்கினேன். அதுதான் இப்போது படமாக உருவாகியிருக்கிறது. இப்படத்தை 7 முதல் முதல் தமிழகமெங்கும் வெளியிடுகிறோம். இது மக்களுக்குப் பிடித்த படமாக இருக்கும் "என்கிறார்

தயாரிப்பாளர்கள் பொன் .புலேந்திரன், மைக்கேல் ஜான்சன்  இந்த படத்தயாரிப்பில் பங்கேற்று இருக்கிறார்கள். தமிழ்த் திரையுலகின் மீது அபிமானமும் ஆர்வமும் கொண்ட , இவர்கள் இப்படத்தினைத் தொடர்ந்து மேலும் படத் தயாரிப்பில் ஈடுபட இருக்கிறார்கள்.

திருக்குறளை மையமாக வைத்து உருவாகும் இத் திரைப்படம்  ஒரு முன்னுதாரணமாக இருக்கும் என்று நம்புகிறார்கள் புலேந்திரன்,மைக்கேல் ஜான்சன் இருவரும். இப்படத்திற்கு ஒளிப்பதிவு P.G. வெற்றி, பாடல் இசை கியூரன் மென்டிசன், திரை இசை M.S ஸ்ரீகாந்த், எடிட்டிங் துரைராஜ், பாடல்கள் ஏ.இரமணிகாந்தன், கெறால்ட் மென்டிசன், நடனம் சீதாபதிராம். கபில் ஷாம் ஜெனோசன் ராஜேஸ்வர்சண்டைக்காட்சிகள் முரளி, வசனம் ஏ.பி.சிவா.

மூன் மீடியா சார்பில் தமிழகமெங்கும் ஜனவரி 7 முதல் நாளை வெளியிடுகிறார்கள்.

தமிழகத்தில் இரவு ஊரடங்கு- தமிழக அரசு அறிவிப்பு


தமிழகத்தில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் விதமாக நாளை முதல் இரவு ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. இதேபோல், ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கும் அமல்படுத்தப்படுகிறது. 

இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவுபடி தமிழ்நாட்டில், கொரோனா நோய்த் தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில்  3.1.2022-ன்படி, 10.1.2022 வரை தளர்வுகளுடன் ஊரடங்கு நடைமுறையில் இருந்து வருகிறது.

மத்திய அரசின் உள்துறை அமைச்சகம்  கொரோனா நோய்த் தொற்றை கட்டுப்படுத்தத் தேவையான கட்டுப்பாடுகள் விதிக்கவும் மற்றும் அவசியம் ஏற்படின் குற்றவியல் நடைமுறைச் சட்டம், 1973, பிரிவு 144-ன் கீழ் நடவடிக்கை மேற்கொள்ளவும் மாநில அரசுகளுக்கு உத்தரவிட்டுள்ளது.

பொது இடங்களில் கொரோனா நோய்த் தடுப்பு நடைமுறைகளை முறையாக கடைபிடிக்காததன் காரணத்தினால் தமிழ்நாட்டில் தற்போது கொரோனா நோய்த் தொற்று அதிகரித்து 3.1.2022 அன்று 1728 ஆக உள்ளது. இந்நிலையில், கொரோனா நோய்த் தடுப்பு கட்டுப்பாடுகளை வலுப்படுத்தத் தவறினால் பரவல் அதிகரிக்க வாய்ப்புள்ளது என்று மருத்துவ வல்லுநர்கள் தெரிவித்துள்ள நிலையில், கொரோனா நோய்த் தொற்று பரவலைத் தடுக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ளும் வகையிலும், பரவி வரும் உருமாறிய கொரோனா ஒமைக்ரான் வைரஸ் நோயைக் கருத்தில் கொண்டும் மற்றும் பொது மக்கள் நலன் கருதியும் புதிய  கட்டுப்பாடுகள் விதிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, மாநிலம் முழுவதும் 6.1.2022 முதல் வார நாட்களில் இரவு 10.00 மணி முதல் காலை 5.00 மணி வரையிலும்  ஊரடங்கு ( night curfew) அமல்படுத்தப்படும்.  இந்த நேரத்தில் அனைத்து வணிக வளாகங்கள், வணிக நிறுவனங்கள், கடைகள், உணவகங்கள் போன்றவை செயல்பட அனுமதி இல்லை.

எனினும், இந்த இரவு நேர ஊரடங்கு கட்டுப்பாட்டின் போது  மாநிலத்திற்குள் பொது மற்றும் தனியார் பேருந்து போக்குவரத்து சேவைகள்,  மாநிலங்களுக்கிடையேயான பொது / தனியார் பேருந்து சேவைகள் (பயணத்தின் போது கொரோனா தடுப்பு நடவடிக்கைகளான முகக்கவசம் அணிதல், உடல் வெப்ப நிலையை பரிசோதனை செய்தல், கூட்ட நெரிசலைத் தவிர்த்தல் ஆகியவற்றை தவறாமல் பின்பற்றுவதை சம்பந்தப்பட்ட போக்குவரத்து நிறுவனங்கள் உறுதி செய்ய வேண்டும். ஓட்டுநர் மற்றும் நடத்துநர் இரண்டு தவணை தடுப்பூசி செலுத்தியிருப்பதை தொடர்புடைய போக்குவரத்து நிறுவன நிருவாகம் உறுதி செய்ய வேண்டும்)

அத்தியாவசியப் பணிகளான பால் விநியோகம், தினசரி பத்திரிக்கை விநியோகம், மருத்துவமனைகள், மருத்துவ பரிசோதனைக் கூடங்கள், மருந்தகங்கள், ஆம்புலன்ஸ் மற்றும் அமரர் ஊர்தி சேவைகள் போன்ற மருத்துவத்துறை சார்ந்த பணிகள், ATM மையங்கள், சரக்கு வாகனங்கள் மற்றும் எரிபொருள் வாகனங்கள் (petrol, diesel & LPG) இரவு நேரத்திலும் அனுமதிக்கப்படும்.

பெட்ரோல் மற்றும் டீசல் பங்குகள் (Petrol/Diesel Bunks) 24 மணி நேரமும் தொடர்ந்து செயல்பட அனுமதிக்கப்படும். உற்பத்தி தொழிற்சாலைகள், தகவல் தொழில்நுட்ப சேவை உள்ளிட்ட நிறுவனங்கள் செயல்பட அனுமதிக்கப்படும். பணிக்கு செல்லும் பணியாளர்கள் தொடர்புடைய நிறுவனங்களால் வழங்கப்பட்டுள்ள அடையாள அட்டை வைத்திருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.டிரெஸார் இ-சைக்கிள் அறிமுகம்!


துடிப்பான இளநபர்கள் அடங்கிய குழுவால் நிறுவப்பட்டிருக்கும் வோல்ட்ரிக்ஸ் மொபிலிட்டி, டிரெஸார் என்ற பெயருடன் நகர்ப்புற போக்குவரத்துக்கென பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டுள்ள தனது முதல் தயாரிப்பை அறிமுகம் செய்திருப்பதன் மூலம் மின் ஆற்றலில் இயங்கும் போக்குவரத்து துறையில் அதன் செயல்பாடுகளை தொடங்கியிருக்கிறது.

உலகளாவிய பருவநிலை மாற்றம் மற்றும் வாழ்க்கைமுறை தொடர்பான பிரச்சனைகளுக்கு எதிராக தனது பங்களிப்பை வழங்குவதே இந்நிறுவனத்தின் நோக்கமாகும். அழகிய தோற்றம் மற்றும் இயக்க பண்பியல்புகளின் நேர்த்தியான கலவையாக உருவாக்கப்பட்டிருக்கும் டிரெஸார், பெடல் உதவியுடன் இயக்கக்கூடிய எலெக்ட்ரிக் சைக்கிள்களுள் மிகச் சிறந்ததாகும். ஸ்மார்ட்டான, திறன்மிக்க மற்றும் மகிழ்ச்சியான சவாரியை ஏதுவாக்க 250 வாட் மோட்டார் இதில் பொருத்தப்பட்டுள்ளது. 

சார்ஜிங் செய்யும் நிலையங்களுக்கான தேவையை அவசியமற்றதாக ஆக்குவதற்கு திறன்வசதி கொண்ட ஒருங்கிணைக்கப்பட்ட லித்தியம் அயன் பேட்டரி டிரெஸார்-ஐ உண்மையிலேயே பிற தயாரிப்புகளிலிருந்து இதனை வேறுபடுத்தி காட்டுகிறது. ஒரு மணிநேரத்திற்கு 25 கிமீ என்ற உயர் வேகத்தை எட்டும் இந்த இ-பைசைக்கிள்-ஐ ஒருமுறை சார்ஜ் செய்வதன் மூலம் 60 – 80 கிமீ தூரம் வரை இயக்க முடியும். ஐந்து நிலைகள் கொண்ட பெடல் உதவி, த்ராட்டில் மட்டும் (வழக்கமான ஒரு பைக் போல) மற்றும் கால்களைக் கொண்டு மிதித்து இயக்கும் அம்சத்தோடு இந்த பைசைக்கிள் உருவாக்கப்பட்டுள்ளது.

டிரெஸார் எலெக்ட்ரிக் “சூப்பர் சைக்கிள்” ரூ. 55,999 (ஆரம்ப சிறப்பு விலை சலுகை) என்ற விலையில் தொடங்குகிறது. ரூ. 999/- என்ற தொகையை இப்போதே செலுத்துவதன் மூலம் இதற்கான முன்பதிவை செய்யலாம். இதை வாங்குவதற்கு எளிதான நிதிவசதி திட்டங்களும் கிடைக்கின்றன. அலுவலகத்திற்கு சென்றுவர தங்களது தினசரி பயணத்தை உண்மையிலேயே அனுபவித்து மகிழ தேவைப்படுகிற சிறப்பான பாதுகாப்பு அம்சங்களும், நவீன தொழில்நுட்பங்களும் டிரெஸார்-ல் ஒருங்கிணைந்திருப்பது இதன் கூடுதல் சிறப்பாகும். 2022 ஜனவரி 3வது வாரத்திலிருந்து டிரெஸார் இ-சைக்கிள் டெலிவரி தொடங்குகிறது. 


இந்த புதிய பிராண்ட் அறிமுகம் பற்றி வோல்ட்ரிக்ஸ் மொபிலிட்டியின் நிறுவனரும், தலைமைச் செயல் அலுவலருமான திரு. விவேக் M பழனிவாசன் கூறியதாவது:

“நோய்களுக்கும், திறனிழப்புக்கும் முதன்மைக் காரணமாக இருப்பது உடல்சார்ந்த உழைப்பு மற்றும் செயல்பாடுகள் இல்லாததே என்று உலக சுகாதார நிறுவனம் வலியுறுத்துகிறது. உடல் உழைப்பற்ற சோம்பலான வாழ்க்கைமுறை, நீரிழிவு மற்றும் உடற்பருமன் நோய்களுக்கான இடர்வாய்ப்பை அதிகரிக்கிறது. இத்தகைய நோய்கள் எதிர்கால தலைமுறையினருக்கும் பரம்பரை நோயாக வழங்கப்படுகிறது என்றுஆராய்ச்சி சுட்டிக்காட்டுகிறது. டிரெஸார் போன்ற பெடல் உதவியுடன்கூடிய எலெக்ட்ரிக் சைக்கிள்-ஐ நீங்கள் ஓட்டும்போது, இதயத்திற்கும், இரத்த நாளத்திற்கும் பாதுகாப்பான மற்றும் திறன்மிக்க உடற்பயிற்சியை உங்களுக்கு நீங்களே வழங்குகிறீர்கள்; உங்கள் ஆரோக்கியம் மீது கணிசமான அளவு நேர்மறை தாக்கத்தை உருவாக்கும் அளவுக்கு போதுமானதாக இந்த உடற்பயிற்சி இருக்கும். இன்றைய காலகட்டத்தில் தொழில்நுட்பமானது அனைத்தையும் ஒருவரது வீட்டு வாசலுக்கே கொண்டுவந்து விடுவதால் உடல் உழைப்பற்ற, சோம்பலான வாழ்க்கைமுறையும், மற்றும் அதன் விளைவாக நோய்களும் உருவாவதால் இத்தகைய சிறந்த உடற்பயிற்சி மிகவும் இன்றியமையாதது என்று நான் நம்புகிறேன். 90களின் ஆரம்பம் வரை முன்பு இருந்ததைப்போல ஆரோக்கியமான “இளம் இந்தியாவாக” நமது தேசம் மீண்டும் திகழ்வதற்கு அதிகம் தேவைப்படுவதாக மின்சார திறனோடு இயங்கும் சைக்கிள்கள் இருக்கின்றன. நகர்ப்புறங்களில் வசிக்கும் மக்களுக்கு பாதுகாப்பான, ஆரோக்கியமான மற்றும் மகிழ்ச்சியுடன் அனுபவிக்கக்கூடிய போக்குவரத்திற்கு ஒரு புதிய மாற்று வழிமுறை பிராண்டாக வோல்ட்ரிக்ஸ் உருவாகும் என்று நான் உறுதியாக நம்புகிறேன்.”

டிரெஸார் இ-சைக்கிள் குறித்து பேசிய வோல்ட்ரிக்ஸ் மொபிலிட்டியின் நிறுவனரும், தலைமை தொழில்நுட்ப அதிகாரியுமான திரு. சக்திவிக்னேஷ்வர் R:

“இந்த துடிப்பான பயணத்தில் வாடிக்கையாளர்களுக்கு உத்வேகம் அளிப்பதே எமது செயல்திட்டமாகும். வோல்ட்ரிக்ஸ்-ன் தயாரிப்பு தொகுப்பிலிருந்து வெளிவரும் முதல் தயாரிப்பான டிரெஸார், அலுவலகத்திற்கு பணியாற்ற செல்பவர்களுக்கெனவே குறிப்பாக வடிவமைக்கப்பட்டு தயாரிக்கப்பட்டிருக்கிறது. நமது நாட்டின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கு இவர்கள் ஆற்றும் பங்கை கருத்தில் கொண்டிருக்கும் டிரெஸார் எலெக்ட்ரிக் சைக்கிள்கள், உண்மையிலேயே கட்டுபடியாகக்கூடிய விதத்தில் இருப்பதோடு மகிழ்ச்சியையும், சிறப்பாக செயல்படும் திறனையும் சேர்த்து போக்குவரத்திற்கு வழங்குகிறது. நகர்ப்புற போக்குவரத்தில் சராசரி வேகம் ஒரு மணிநேரத்திற்கு 16 மற்றும் 20 கிமீ-க்குள் இருக்கின்ற நிலையில் நீங்கள் சென்றடைய வேண்டிய இடத்திற்கு வேகமாகவும், அதிக திறன்மிக்க வழிமுறையிலும் நீங்கள் போய்ச்சேர டிரெஸார் உதவும். மாறுபட்ட தேவைகளைக் கொண்டிருக்கும் வாடிக்கையாளர் பிரிவினருக்காக அடுத்த 6 மாதங்களில் இன்னும் இரு தயாரிப்புகளை இவ்வகையினத்தில் நாங்கள் அறிமுகம் செய்யவிருக்கிறோம்,” என்று கூறினார்.

 வோல்ட்ரிக்ஸ் மொபிலிட்டியின் பிரெசிடன்ட் டாக்டர் குமார் லோகநாதன்:

“தொடக்கத்திலிருந்தே, சிறப்பான சவாரி அனுபவத்தையும் மற்றும் நிலைக்கத்தக்க, ஆரோக்கியமான வாழ்க்கை முறையையும் வழங்குவது மீதே எங்களது நோக்கம் இருந்து வருகிறது. சிறப்பு கவனம் செலுத்த வேண்டிய சில குறிப்பிட்ட முக்கிய பகுதிகளை நாங்கள் அடையாளம் கண்டிருக்கிறோம்; இந்தியாவில் இ-பைக் பிரிவிற்காக எலெக்ட்ரானிக் பாகங்களுக்கு ஒரு உற்பத்தி தொழிலகத்தை உருவாக்குவதற்கு தெளிவான திட்டங்களை நாங்கள் கொண்டிருக்கிறோம். 2024ம் ஆண்டுக்குள் 6 நகரங்களில் 150 ரீடெய்ல் அமைவிடங்களை நிறுவுவது எமது இலக்காகும். இதன் மூலம், இந்திய சாலைகளில் 40,000க்கும் அதிகமான வோல்ட்ரிக்ஸ் எலெக்ட்ரிக் சைக்கிள்கள் வலம் வரும் மற்றும் 4 – 5% சந்தைப் பங்கினை கொண்டிருப்பதற்கு இது வழிவகுக்கும்,” என்று  கூறினார்.

வோல்ட்ரிக்ஸ் மொபிலிட்டி குறித்து:

சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கு உதவுகிற ஒரு நிறுவனமாக நிறுவப்பட்டிருக்கும் வோல்ட்ரிக்ஸ் மின்சாரத்தில் இயங்கும் வாகனங்களையும் மற்றும் அதனோடு தொடர்புடைய தொழில்நுட்பங்களையும் உருவாக்குவது மீது சிறப்பு கவனம் செலுத்துகிறது. இந்திய நகரங்களை அழகானதாகவும் மற்றும் மக்கள் வசிக்கத்தக்கதாகவும் ஆக்குவது மற்றும் மக்களின் வாழ்க்கை முறையை மேம்படுத்துவதன் மூலம் அவர்களுக்கு உதவுவதே இதன் இலக்காகும். ஒரு துடிப்பான, இளம் இந்தி நிறுவனமாக, புகை மற்றும் மாசு உமிழ்வு இல்லாத எதிர்காலத்திற்கு கணிசமான பங்களிப்பை வழங்குவது இதன் நோக்கமாகும்.

வாகன நிறுத்த அமைவிடங்கள் இல்லாத நிலை, சாலையில் அடர்த்தியான நெருக்கடி மற்றும் அதிகரித்துவரும் எரிபொருள் விலைகள் போன்ற பிரச்சனைகளுக்கு தீர்வுகாணும் அதே வேளையில், போக்குவரத்தில் சுதந்திரத்தை நுகர்வோர்களுக்கு மீண்டும் வழங்குகிறது. நகர்ப்புற போக்குவரத்து என்பது சுற்றுச்சூழலை மாசுபடுத்துவதாகவோ அல்லது அதிக நேரம் எடுப்பதாகவோ இருக்கக்கூடாது என்று நாங்கள் நம்புகிறோம். புதிய மற்றும் மேம்படுத்தப்பட்ட போக்குவரத்து தீர்வுகளை மக்களுக்கு வழங்குவதில் நாங்கள் கொண்டிருக்கும் நம்பிக்கையும், உறுதியுமே எங்களை இன்னும் புதிய சாதனைகள் படைக்க உத்வேகமளிக்கிறது.

FULL VIDEO HERE:

"ப்ரஜின்" நடிக்கும் படத்தின் தொடக்க விழா!


ப்ரஜின் கதாநாயகனாக நடிக்கும் புதிய படத்தின் தொடக்கவிழா  வளசரவாக்கத்தில் நடந்தது. இவ்விழா புத்தாண்டின்  நல்ல தொடக்கமாக, சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்தப் பெயரிடப்படாத புதிய படத்தை 'பொதுநலன் கருதி' படத்தை இயக்கிய சீயோன் இயக்குகிறார். பொதுநலன் கருதி  என்ற வித்தியாசமான பெயரில்  தனது முதல் படத்திலேயே பரவலாகப் பேசப்பட்டவர் இவர், இயக்கும் இரண்டாவது படம் இது.

இந்த படத்தில் ப்ரஜின் நாயகனாகவும், குஹாசினி நாயகியாகவும்  நடிக்கவுள்ளார்கள். இவர்களுடன் வனிதா விஜயகுமார், தயாரிப்பாளர் கே. ராஜன், கஞ்சா கருப்பு, நாஞ்சில் சம்பத், முத்துராமன், பாவனா ,சிவான்யா  ஆகியோரும் நடிக்கிறார்கள். இப்படத்தை மாபின்ஸ் புரொடக்ஷன்ஸ் சார்பில் சாலமன் சைமன் தயாரிக்கிறார். இப்படத்திற்கு ஒளிப்பதிவு விசுவாசம் படத்தில் பணியாற்றிய ஜிஜு,  உடன்பிறப்பே படத்தில் பணியாற்றிய முஜிபுர் கலை இயக்கத்தைக் கவனிக்கிறார். 

இப்படித்தான் வாழ வேண்டும் என்றிருக்கும் ஒருவனுக்கும் எப்படியும் வாழலாம் என்று இருக்கும்  இன்னொருவனுக்கும் என இரு துருவ குணச்சத்திரங்களுக்கும் இடையில் சுழலும் சம்பவங்கள்தான் கதை.

"இப் படம் அரசியல் நகைச்சுவை காதல் சென்டிமென்ட் என அனைத்தும் கலந்த கலவையாக இருக்கும். நாட்டின் நடப்பு அரசியலைத்  தோலுரித்துக் காட்டும் காட்சிகள் பரபரப்பாக இருக்கும் என்கிறார் இயக்குநர் சீயோன்.

தப்பு செய்யும் சாமியார்களுக்கும் தண்டனை வேண்டும்- இயக்குநர் பேரரசு


பொள்ளாச்சி என்னாச்சு என்று ஒரு திரைப்பட விழாவில் இயக்குநர் பேரரசு பொள்ளாச்சி விவகாரம் குறித்துக் கேள்வி எழுப்பினார். ரெயின்போ புரொடக்சன்ஸ் தயாரிப்பில் சார்பில் வரதராஜ் தயாரித்து இயக்கியிருக்கும் படம் ' பென் விலை வெறும் 999 ரூபாய் மட்டுமே ' படத்தின் ஆடியோ ட்ரெய்லர் வெளியீட்டு விழா  சென்னை பிரசாத் லேப் திரையரங்கில் நடைபெற்றது.

இந்த விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு இயக்குநர் பேரரசு பேசினார்.

அவர் பேசும்போது:

இங்கே வந்திருக்கும் ரோபோ சங்கர் மகளைப் பார்க்கும்போது எனக்கு அவர் பிகில் படத்தில் நடித்த பாண்டியம்மா என்ற பாத்திரத்தின் பெயர் தான் ஞாபகம் வருகிறது.சொந்தப் பெயரை விட்டுவிட்டு கதாபாத்திரத்தின் பெயர் பேசப்பட்டால் அதுதான் அந்தப் பாத்திரத்தின் வெற்றி என்று சொல்லுவேன். நான் 'திருப்பாச்சி'யில் பசுபதியை நடிக்க வைத்து இருந்தேன். அந்த படம் வெளியாகி ஐந்து வருடங்களுக்குப் பிறகு ஒருநாள் பசுபதி என்னிடம்  பேசினார் ."என்ன சார் இப்படி செய்து விட்டீர்கள்?" என்றார்.

என் படத்தில் நல்ல கேரக்டர் தானே அவருக்குக் கொடுத்து இருந்தேன். அவருக்கு நல்ல பெயர் தானே கிடைத்தது ஏன் இப்படிச் சொல்கிறார் என்று நினைத்து என்ன ? என்றேன்.  "என்னை எங்கே பார்த்தாலும் பட்டாசு பாலு என்றுதான் அழைக்கிறார்கள். பசுபதி என்று யாரும் அழைப்பதில்லை " என்றார்.அந்த அளவிற்கு அந்தக் கதாபாத்திரம் மக்களிடம் போய்ச் சேர்ந்து இருந்தது. இந்தப் படம் பெண்களுக்கு எதிரான வன்கொடுமை பற்றிப் பேசுகிறது. அதற்கு எதிராகப் பேசுகிறது என்று சொன்னார்கள் .

சிலரது செயல்பாடுகளைப் பார்க்கும்போது பெண்களுக்கு எதிரான வன்கொடுமை ஆண்களால் மட்டுமல்ல பெண்களாலும் தான் ஏற்படுகிறது என்று சொல்லத் தோன்றுகிறது. டிக் டாக் மூலம் நாட்டில் நடக்கும் கொடுமை தாங்க முடியவில்லை. சில கேவலமான பெண்கள் நடந்து கொள்ளும் விதமும் பேசுகிற பேச்சும் சகிக்க முடியவில்லை. குறிப்பாக இரண்டு பெண்கள் செய்யும் செயல்பாடுகள் மிகவும் அருவருப்பானவை. பார்க்க சகிக்க முடியவில்லை.அவர்களை எல்லாம் பிடித்து உள்ளே தள்ளவேண்டும்.

அந்த அளவிற்கு  அவர்களது செயல்பாடுகள் இருக்கின்றன .இவர்களை விட்டு வைக்கக் கூடாது. ஜெயிலில் தள்ள வேண்டும் நாட்டில் நடக்கும் பல கலாச்சார சீர்கேடுகளுக்குக் காரணம் செல்போன்கள் தான் .தங்கள் பிள்ளைகளிடம் செல்போன் கொடுப்பதைப் பெற்றோர்கள் தவிர்க்க வேண்டும் .

இதைப் பெற்றோர்கள் புரிந்துகொண்டு கவனமாக வேண்டும். நம் சுதந்திரம் இப்படி மோசமாகப் போய்க்கொண்டிருக்கிறது. அளவற்ற சுதந்திரம் தான் நாட்டைக் கெடுக்கிறது.செல்போனில் ஃபுல் டாக்டைம் என்பதை ஒழித்துக்கட்ட வேண்டும்.அளவில்லாமல் பேசும் வாய்ப்பு தான் அத்தனை தவறுகளுக்கும் வழிவகுக்கிறது. நாடு இப்படிப் போய்க்கொண்டிருக்கும் போது நாம் எத்தனை படம் எடுத்தாலும் இவர்கள் திருந்தப் போவதில்லை.

பெண்களுக்கு எதிரான கொடுமைகள், பெண்களைத் தவறாக பயன்படுத்துவது  என்று பல இடங்களிலும் நடக்கிறது.நம்பிக்கையோடு அனுப்பி வைக்கப்படும் இடத்தில் சில ஆசிரியர்கள்,நம்பிக்கையோடு வணங்கச் செல்லும் இடத்தில் சில மதகுருமார்கள் என்று எத்தனை வடிவங்களில்  இருக்கிறார்கள்.  பெண்கள் விஷயத்தில் யார் தப்பு செய்தாலும் கடுமையான தண்டனை கொடுக்க வேண்டும். வாத்தியாராக இருந்தாலும் சரி மதகுருமார் களாக சாமியார்களாக அவர்கள் எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் சரி,சரியான தண்டனை கொடுக்க வேண்டும்.

நாம் நம்பிக்கை வைக்கும் அவர்கள் இப்படி நடந்து கொள்வது பெரிய நம்பிக்கை துரோகமாகும். அப்படித் துரோகம் செய்பவர்களுக்குப் பெரிய தண்டனை கொடுக்க வேண்டும் சினிமா ஒரு பொழுதுபோக்கு சாதனம் அதில் மக்களை சந்தோஷப்படுத்தும் பொழுதுபோக்கு அம்சங்கள் தான் இருக்க வேண்டும். கருத்து சொல்லவேண்டும் விழிப்புணர்வுகளை வெளிப்படுத்த வேண்டும் என்று எடுத்துக் கொண்டிருந்தால் பொழுது போக்கு தளத்தை விட்டு சினிமா விலகிவிடும். அப்புறம் மக்களுக்கு மகிழ்ச்சி கிடைக்காது. சினிமா சரியாக இருக்கிறது என்றால் பொழுதுபோக்கு படங்கள் வந்தால் தான் சரியான பாதையில் செல்கிறது என்று அர்த்தம்.

பெண்களுக்கு எதிரான கொடுமைகள் ஒரு நாள் செய்தியாகக் கடந்து போய் விடுகின்றன - எத்தனையோ செய்திகளைப் பார்க்கிறோம்;நாம் மறந்துவிடுகிறோம். பொள்ளாச்சி என்னாச்சு? இப்போது யார் அதைப் பற்றிப் பேசுகிறார்கள்? எல்லாம் செய்தியாக கடந்து போய்விடுகின்றன.

அப்படித் தவறுகள் செய்துவிட்டு ஜெயிலுக்குப் போவது என்றால் கூட ஏதோ நாட்டுக்கு தியாகம் செய்துவிட்டு போய் வந்தது போல் 3 மாதம் 6 மாதம் என்று போய்விட்டு , நாட்டுக்குத் தியாகம் செய்து விட்டு சென்று வந்தது போல் மகிழ்ச்சியாக வருகிறான். இந்தப் படம் பெண்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் உருவாகி உள்ளதாகத் தெரிகிறது. இந்தப் படம் வெற்றியடைய வாழ்த்துகிறேன்"

இவ்வாறு பேரரசு பேசினார்.


படத்தை வெளியிடும் ஆக்சன் ரியாக்சன் ஜெனிஷ் பேசும்போது:

"இந்தப் படத்தை ஆரம்பித்து PV 999 என்று ஹேஷ்டாக் செய்தபோது விஜய் சேதுபதி, வரலட்சுமி சரத்குமார் போன்றவர்கள் ஆதரவு கொடுத்தார்கள். அதனால் நல்ல வகையில் அது மக்களிடம் போய்ச் சேர்ந்தது.அவர்களுக்கு இந்த நேரத்தில் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவர்கள் தந்த அந்த ஊக்கத்தில் தான் முழு படமாக எடுத்து முடித்திருக்கிறோம் .இப்போதுஅதை வெளியிடுகிறோம். கதாநாயகன் ராஜகமல் தொலைக்காட்சி, விளம்பரங்கள் என்று பரவலாக அறியப்பட்டவர். இதில் வித்தியாசமான பாத்திரத்தில் நடித்திருக்கிறார். இயக்குநர் இப்படித்தான் படம் எடுக்க வேண்டும் என்று தெளிவாக இருந்ததால் எவ்வளவோ சர்ச்சைகளையும் தாண்டிப் படம் தயாராகி இதோ வெளியீட்டுக்கே வந்திருக்கிறது. பெண்களுக்கு எதிரான வன்முறை பற்றி எத்தனையோ படங்கள் பேசலாம். இதுவரைக்கும்வந்த படங்களில் இது ஐகானிக் படம் என்று சொல்லலாம். RRR படம் அறிவித்துள்ள அதே 7 ஆம் தேதியில் இந்தப் படம் வெளியாகிறது. அதே நாளில் படம் மீது உள்ள நம்பிக்கையில் வெளியிடுகிறோம்'' என்றார்.

நடன இயக்குநர் அர்ச்சனா பேசும்போது:

"இந்தப்படத்தின் பாடல்கள் கேட்பதற்கு நன்றாக இருக்கும். பார்ப்பதற்கும் நன்றாக இருக்கும் .அந்த அளவுக்கு இசையிலும் சரி காட்சிகளிலும் சரி நன்றாக அமைந்துள்ளது. நாங்கள் காட்சி நன்றாக அமைய வேண்டுமென்று ரிஸ்கான மலைப்பகுதியில் அபாயகரமான இடங்களுக்கெல்லாம் சென்று எடுக்க விரும்பினோம்.நடித்தவர்கள் அதைப்பற்றி கவலைப்படாமல் நடித்துக் கொடுத்து அதற்கு ஒத்துழைப்பு கொடுத்தார்கள். பாடல் காட்சிகளை பார்த்தால் உங்களுக்குத் தெரியும் எங்கள் மேல் முழு நம்பிக்கை வைத்து ஒத்துழைப்பு கொடுத்தது மறக்க முடியாதது" என்றார்.

நாயகன் ராஜ் கமலின் மனைவி நடிகை லதா ராவ் பேசும்போது:

"என் கணவர் நடித்ததால் என்று மட்டும்  சொல்லவில்லை. உண்மையிலேயே இது ஒரு விழிப்புணர்ச்சி ஏற்படுத்தும் படம் தான்.  படத்தின் தலைப்பைக் கேட்டபோது முதலில் நான் அதிர்ந்தேன். இது என்ன தலைப்பு என்று எனக்குக் கோபமாக வந்தது. அவர் பேசிய பிறகுதான் புரிந்தது. இந்தப் படம் பார்த்த பிறகு  பெண்களுக்குச் சுற்றிலும் உள்ள மனிதர்களால், பழகும் மனிதர்களால் உள்ள ஆபத்தைப் பற்றி யோசிக்க வைக்கும்.நல்லவர்கள் தானே என்று நம்பும் நாம் அவர்களைப் பற்றி சரியானவர்கள் தானா என்று சிந்திக்க வைக்கும்.யாராவது படத்தை பார்த்த ஒரு பெண் யோசித்துத் திருந்தினால் அதுவே இந்த படத்தின் வெற்றி. என் கணவரின் பாத்திரம் பற்றி முதலில் எனக்குத் தயக்கம் இருந்தது பிறகு படத்திற்காகச் சமாதானம் ஆனேன்" என்றார்.

இந்திரஜா ரோபோ சங்கர் பேசும்போது:

"முதலில் படத்தின்  தலைப்பே ஆர்வமூட்டியது. படக்குழுவினர் அனைவரும் எனக்குத் தெரிந்தவர்கள் .பெண்களை மையப்படுத்தி படம் எடுப்பது என்பது சுலபமல்ல .பல ஆண்டுகளாகத் தெரிந்த ராஜ்கமல் மற்றும் நண்பர்களுக்கும் என் வாழ்த்துக்கள் "என்றார்.

நடிகர் இயக்குநர் போஸ் வெங்கட் பேசும்போது:

"இங்கே வந்தபோது பிரபஞ்சன் எழுதிய 'பெண்' என்கிற புத்தகத்தைப் பரிசாகக் கொடுத்தார்கள். அதன் மூலம் எதுவோ சொல்ல விரும்புகிறார்கள் என்றே நினைத்தேன். இப்படம்  பெண்கள் பிரச்சினையை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ளது .ராஜ்கமல் ஒரு வகையில் எனக்குத் தம்பி .ஒருவகையில் எனக்கு ரோல்மாடல். அவன் எப்போதும் ஓடிக் கொண்டே இருப்பான். எங்கே தான் இப்படி ஓடுகிறான் என்று நினைப்பேன்.இப்போது புரிகிறது  சரியான இடத்திற்குத்தான் சென்று கொண்டிருக்கிறான் என்று. அவன் மேலும் வளர்வான். சில படங்கள் ஓடுகின்றன. சில படங்கள் ஓடுவதில்லை. காரணம் சினிமாவிலும்  தலைமுறை இடைவெளி வந்துவிட்டது என்று சொல்லத் தோன்றுகிறது" என்றார்.

கதா நாயகனாக நடித்துள்ள ராஜ் கமல் பேசும்போது:

"முதலில் கன்னட நடன இயக்குநர் சதீஷ் அவர்களுக்கு என் நன்றி. ஏனென்றால் அவர் மூலம்தான் எனக்கு இந்த வாய்ப்பு கிடைத்தது .நான்  இயக்குநரிடம் கதை கேட்கப் போகவில்லை.  வாய்ப்பு கேட்டுத்தான் போனேன். அப்படித்தான் இந்த படம் எனக்குக் கிடைத்தது. இந்தப் படத்தில் நடித்தபோது இதில் பேசப்படும் பிரச்சினையைப் பார்க்கும் போது எனக்கு எதுவுமே தெரியவில்லை. என் இரண்டு மகள்கள் தான் எனக்குக் தெரிந்தார்கள். அந்த அளவிற்கு பெண் பிள்ளைகளைப் பெற்றவர்களை எச்சரிக்கிறது இந்தப் படம். நான் டிவி நடிகன் என்று என்னை ஒதுக்காமல் இயக்குநர் எல்லாமே நடிப்புதான் என்று என்னை ஏற்றுக் கொண்டு நடிக்க வைத்ததற்கு நன்றி. எந்த சமரசமும் இல்லாமல்  படப்பிடிப்பு நடத்தினார். தான் விரும்பிய காட்சிகளைத்தான் எடுத்தார்"என்றார்.

இவ்விழாவில் டப்பிங் கலைஞர் நடிகர் மது, பப்ஜி பட நாயகி சாண்ட்ரியா, தயாரிப்பு வடிவமைப்பாளர் கர்ணன் ருத்ராபதி,நடிகர் ஜெயச்சந்திரன் , சூர்யா டெலிகாம் வெங்கடேஷ் ராஜா மற்றும் படக்குழுவினர் கலந்துகொண்டனர்.

முன்னதாக இயக்குநர்கள் பேரரசு,போஸ் வெங்கட் ட்ரெய்லர் பாடல்களை வெளியிட்டார்கள். பதுங்கி பாயணும் தல படத்தின் தயாரிப்பாளர் அமீனா ஹூசைன் கலந்து கொண்டு வாழ்த்த்தினார். அவருக்கு தயாரிப்பாளர் வரதராஜ். பிரபஞ்சன் எழுதிய  பெண் புத்தகத்தை நினைவுப்பரிசாக வழங்கினார்.2022- ஆம் ஆண்டு இன்றைய ராசி பலன்கள்!


இன்றைய ராசி மேஷம்
மேஷம்


வழிபாட்டின் மூலம் வளர்ச்சி ஏற்படும் நாள். எதையும் யோசித்துச் செய்வது நல்லது. பணியில் குறுக்கீடுகள் ஏற்படும். பணநெருக்கடி அதிகரிக்கும். பொறுப்புகள் கூடலாம். நண்பர்களால் சிக்கல்கள் ஏற்படும்.இன்றைய ராசி ரிஷபம்
ரிஷபம்


மாலை நேரம் மனக்குழப்பம் ஏற்படும் நாள். வளர்ச்சிப்பாதையில் செல்ல சிலரிடம் ஆலோசனை கேட்பீர்கள். அத்தியாவசியப் பொருட்களை வாங்குவதன் மூலம் விரயம் ஏற்படும். எதிலும் கவனம் தேவை.


இன்றைய ராசி மிதுனம்
மிதுனம்


மனக்குறை அகன்று மகிழ்ச்சி கூடும் நாள். ஆரோக்கியம் சீராக ஆகாரத்தில் கட்டுப்பாடு செலுத்துவது நல்லது. பிரபலமானவர்களின் அறிமுகம் கிடைக்கும். உத்தியோக மாற்றத்திற்கான அறிகுறிகள் தோன்றும்.


இன்றைய ராசி கடகம்
கடகம்


யோகமான நாள். சந்தித்தவர்களால் சந்தோஷம் கிடைக்கும். நேற்றைய பிரச்சினை இன்று நல்ல முடிவிற்கு வரும். பிள்ளைகள் நலன் கருதி எடுத்த முயற்சிகள் கைகூடுவதற்கான அறிகுறி தோன்றும்.இன்றைய ராசி சிம்மம்
சிம்மம்


வளர்ச்சிக்கு வழிகாட்ட நண்பர்கள் முன்வரும் நாள். நேற்றைய சேமிப்பு இன்றைய செலவிற்கு கைகொடுத்து உதவும். உடன்பிறப்புகள் வழியில் உள்ளம் மகிழும் சம்பவமொன்று நடைபெறலாம்.


இன்றைய ராசி கன்னி
கன்னி


தன்னம்பிக்கையோடு பணி புரிந்து தடைகளை அகற்றிக் கொள்ள வேண்டிய நாள். விட்டுப்போன வரன்கள் மீ்ண்டும் வரலாம். பாதியில் நின்ற கட்டிடப் பணிகளை மீதியும் தொடருவது பற்றிச் சிந்திப்பீர்கள்.இன்றைய ராசி துலாம்
துலாம்


முக்கியப் புள்ளிகளின் ஆலோசனையால் முன்னேற்றம் கூடும் நாள். அலுவலகப் பணிகள் துரிதமாக நடைபெறும். குடும்பத்திற்குத் தேவையான பொருட்களை வாங்க கொஞ்சம் அலைச்சல்களைச் சந்திக்க நேரிடும்.இன்றைய ராசி விருச்சகம்
விருச்சகம்


புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டு மகிழும் நாள். பொருளாதார நலன் கருதி எடுத்த முயற்சி வெற்றி பெறும். உறவினர்களின் பாராட்டுகளைப் பெறுவீர்கள். குடும்பத்தில் கலகலப்பான சூழ்நிலை உருவாகும்.இன்றைய ராசி தனுசு
தனுசு


புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டு மகிழும் நாள். தன்னம்பிக்கையோடு பணி புரிந்து தடைகளை அகற்றிக் கொள்ள வேண்டிய நாள்.  நண்பர்களால் நல்ல தகவலொன்று வந்து சேரலாம்.


இன்றைய ராசி மகரம்
மகரம்


பம்பரமாகச் சுழன்று பணிபுரியும் நாள். பக்கத்தில் இருப்பவர்களை அனுசரித்துச் செல்வது நல்லது. நிச்சயித்த காரியமொன்றில் திடீர் மாற்றங்களைச் செய்வீர்கள். வாகன மாற்றம் பற்றிச் சிந்திப்பீர்கள்.இன்றைய ராசி கும்பம்
கும்பம்


புதிய பாதை புலப்படும் நாள். காரிய வெற்றிக்கு கண்ணியமிக்கவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். வீடு, இடம் சம்பந்தமாக எடுத்த முயற்சி வெற்றி பெறும். குடும்பத்தில் இருந்த குழப்பங்கள் அகலும்.


இன்றைய ராசி மீனம்
மீனம்


மனதில் உற்சாகமும். மகிழ்ச்சியும் அதிகரிக்கும் நாள். தனவரவில் இருந்த தடை அகலும். பெற்றோர் நலனில் அக்கறை எடுத்துக் கொள்வீர்கள். நண்பர்களால் நல்ல தகவலொன்று வந்து சேரலாம்.               குரு வாழ்க... குருவே துணை..... 

Author Name

{picture#YOUR_PROFILE_PICTURE_URL} YOUR_PROFILE_DESCRIPTION {facebook#YOUR_SOCIAL_PROFILE_URL} {twitter#YOUR_SOCIAL_PROFILE_URL} {google#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.