Kozhipannai Chelladurai Movie Audio Launch
‘கோழிப்பண்ணை செல்லத்துரை’ திரைப்படத்தின் இசை வெளியீடு
விஷன் சினிமா ஹவுஸ் பட நிறுவனம் சார்பில் டாக்டர் பி அருளானந்து மற்றும் மேத்யூ அருளானந்து தயாரிப்பில் தேசிய விருது பெற்ற படைப்பாளி சீனு ராமசாமி இயக்கத்தில் அறிமுக நாயகன் ஏகன் நடித்திருக்கும் ‘கோழிப்பண்ணை செல்லத்துரை’ திரைப்படத்தின் இசை வெளியீடு சென்னையில் சிறப்பாக நடைபெற்றது.
சீனு ராமசாமி இயக்கத்தில் உருவாகி, இருபதாம் தேதியன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் ‘கோழிப்பண்ணை செல்லத்துரை’ படத்தில் ஏகன், யோகி பாபு, பிரிகிடா, சத்ய தேவி, பவா செல்லத்துரை, லியோ சிவகுமார், ‘குட்டி புலி’ தினேஷ் , மானஸ்வி கொட்டாச்சி, ரியாஸ் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். அசோக் ராஜ் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு என். ஆர். ரகுநந்தன் இசையமைத்திருக்கிறார்.
தமிழகம் முழுவதும் சக்தி பிலிம் ஃபேக்டரி சார்பில் பிரபல விநியோகஸ்தர் சக்திவேலன் வெளியிடும் இத்திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இதன் போது பட குழுவினருடன் ‘ மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி, தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி, நடிகர் ரியோ ராஜ், இயக்குநர் ஹரிஹரன் ஆனந்த் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். இதனைத் தொடர்ந்து படத்தின் இசையை விஜய் சேதுபதி வெளியிட, தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி மற்றும் படக்குழுவினர் இணைந்து பெற்றுக் கொண்டனர்.
தயாரிப்பாளர் மேத்யூ பேசுகையில், ”மிகவும் உணர்வுபூர்வமான மேடை இது. 23 வருஷம் எனக்கு மட்டுமே உரிமையான சொத்தை எழுதிக் கொடுப்பது போன்றது. 23 வருஷம் வரைக்கும் எனக்கு அண்ணனாக இருந்த ஏகன்- செப்டம்பர் 20ம் தேதிக்கு பிறகு ஏராளமானவர்களுக்கு அண்ணனாகி விடுவார். அந்த அளவிற்கு படத்தில் நன்றாக நடித்திருக்கிறார். நான் அவனை என்றுமே பாராட்டியதில்லை. அவனும் என்னை எப்பொழுதும் பாராட்டியதில்லை. இதுதான் என்னுடைய முதல் பாராட்டாக இருக்கும். படத்தை நான் பார்த்து விட்டேன். பார்த்ததால் தான் இப்படி பேசுகிறேன்.
எங்கள் அழைப்பை ஏற்று இங்கு வருகை தந்த ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி, யோகி பாபு, தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி, நடிகர் ரியோ ராஜ், இயக்குநர் ஹரிஹரன் என அனைவருக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
படத்தில் பணியாற்றிய தருணத்திலிருந்து இதுவரை படத்திற்காக யோகி பாபு வழங்கி வரும் ஆதரவு மிகப்பெரியது. அதற்காக அவருக்கு இந்த தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். யோகி பாபு நடித்தது படத்திற்கு மிகப்பெரிய விளம்பரத்தை கொடுத்தது.
எங்களுக்கு சரியான ஆலோசனை வழங்கிக் கொண்டிருக்கும் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சிக்கும், ‘ஜோ’ படத்திற்கு பிறகு இந்த படத்தில் இணைந்திருக்கும் சக்தி பிலிம் ஃபேக்டரி சக்திவேலனுக்கும் நன்றி. இந்தத் திரைப்படத்தையும் வெற்றிப்படமாக ஆக்கித் தருமாறு பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
இந்த திரைப்படம் நிச்சயமாக பெரிய வெற்றியை பெறும். ஏனெனில் அனைவரும் தங்களின் கடுமையான உழைப்பை வழங்கி இருக்கிறார்கள் அதிலும் குறிப்பாக இயக்குநர் சீனு ராமசாமி. ‘வாழ்க்கை என்பது முடிவை நோக்கி செல்வது’ என்பதை இந்தப் படத்தில் சீனு ராமசாமி சொல்லித்தான் எனக்குத் தெரிந்தது. அதனை மிக அழுத்தமாக பதிவு செய்திருக்கிறார். இந்த திரைப்படத்தில் மிகப்பெரிய செய்தியும் இருக்கிறது. அதனை இப்போதே நான் சொல்ல விரும்பவில்லை. ஆனால் இந்த படத்தின் மூலம் நான் ஒரு மிகப்பெரிய பாடத்தை கற்றுக் கொண்டேன். இதற்காக இயக்குநர் சீனு ராமசாமிக்கு இந்த தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
இன்று தம்பியாக என்னை என் அண்ணன் ஏகன் பெருமை படுத்தி விட்டார். இன்று எங்கு சென்றாலும் ஏகனின் தம்பி என்று என்னை அடையாளப்படுத்தி அழைக்கிறார்கள். இதுவும் எனக்கு பெருமிதமாக இருக்கிறது. 20ம் தேதிக்கு பிறகு தமிழ்நாட்டில் நிறைய பேர் ஏகனை அண்ணனாக கொண்டாடுவார்கள்,” என்றார்.
நடிகர் யோகி பாபு பேசுகையில்:
”மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. முதலில் தயாரிப்பாளர் அருளானந்து அவர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். என்னுடைய பிறந்த நாளின் போது என்னை சந்தித்து ‘நல்லதொரு கதை. நடித்துக் கொடுக்க வேண்டும்’ என கேட்டுக்கொண்டார்.
தேசிய விருது பெற்ற இயக்குநர் சீனு ராமசாமியுடன் நிறைய நேரம் பேசி இருக்கிறேன். அவருடன் பேசும் போது இணைந்து பணியாற்றுவது குறித்தும் பேசி இருக்கிறேன். அவரும் சரியான தருணம் அமையட்டும் என சொன்னார். இந்த திரைப்படத்தில் நல்லதொரு வேடம் இருக்கிறது, வாருங்கள் என அழைத்தார். ஒரு ஜிப்பாவும் வேஷ்டியும் வந்தது. அவரிடம் வேடிக்கையாக இதை யார் போட்டு கொண்டிருந்தது என கேட்டேன். அவரும் வி கே ராமசாமி என்றார்.
இந்தப் படத்தில் ஏகன் சொன்னது போல் மிக முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறேன். ஏகனுடைய பெரியப்பா வேடத்தில் நடித்திருக்கிறேன். படங்களில் நான் லோக்கலாக ‘கவுன்டர்’ அடித்து கொண்டிருப்பேன். ஆனால் இந்த படத்தில் ஒரு இடத்தில் கூட என்னை ‘கவுன்டர்’ அடிக்க விடாமல் முழுவதுமாக கட்டுப்படுத்தி விட்டார் இயக்குநர் சீனு ராமசாமி. படமாக பார்க்கும் போது மிகவும் சந்தோஷமாக இருக்கிறது.
அதன் பிறகு தம்பி ஏகன்- படப்பிடிப்பு தளத்தில் நடித்துக் கொண்டு இருக்கும் போது காட்சி நிறைவடைந்த உடன், ‘நான் நன்றாக நடித்தேனா..!’ என என்னிடம் கேட்பார். அவரிடம், ‘நானே சரியாக நடித்தேனா.. இல்லையா..! என தெரியாது. அமைதியாக இருந்து விடு’ என்றேன். ஏனெனில் இயக்குநர் எந்த தருணத்தில் எந்த வசனத்தை எப்படி மாற்றுவார் என்று யாருக்கும் தெரியாது.
அதனால் இதெல்லாம் ஆண்டவன் கட்டளை என அவரிடம் சொல்வேன். யார் என்ன சொன்னாலும் யாரை எந்த உயரத்திற்கு அழைத்துச் செல்ல வேண்டும் என்பது அந்த ஆண்டவனுக்கு மட்டும்தான் தெரியும். படத்தில் நடித்திருக்கும் அனைவருக்கும் பணியாற்றிய அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். ‘ஆண்டவன் கட்டளை’ படத்திலிருந்து நானும் விஜய் சேதுபதியும் தொடர்ந்து பயணிக்கிறோம். அந்தப் பயணம் தற்போது வரை இனிமையாகத்தான் சென்று கொண்டிருக்கிறது. அவருக்கு இந்த தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்,” என்றார்.
‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி பேசுகையில்:
”சகோதரன் ஏகனுக்கு முதலில் வாழ்த்துகள். இதுபோன்ற மேடையில் 11 ஆண்டுகளுக்கு முன் நிற்கும்போது உங்கள் அளவிற்கு எனக்கு தைரியம் இல்லை. நான் மிகவும் நடுக்கத்துடன் தான் இருந்தேன். ஆனால் உங்கள் முகத்தில் நல்லதொரு நம்பிக்கை தெரிகிறது. பாடல்களிலும் காட்சிகளிலும் உங்களுடைய நடிப்பு நன்றாக இருக்கிறது.
தயாரிப்பாளர் மேத்யூ. 21 வயது தான் ஆகிறது. ஆனால் மேடையில் தெளிவாக பேசுகிறார். நான் மேடையில் பேசுவதற்கு இன்றும் தடுமாறிக் கொண்டுதான் இருக்கிறேன். இதற்காக அவருடைய தந்தையான தயாரிப்பாளர் அருளானந்திற்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
ஏகன் பார்ப்பதற்கு லட்சணமாகவும் நம் மண்ணின் மைந்தனாகவும் இருக்கிறார். இந்தப் படத்தில் நடித்த அனைவரும் திரையில் அழகாக இருக்கிறார்கள். படத்தின் கதையும் அழகாக இருக்கிறது.
சீனு ராமசாமியிடம் எனக்கு மிகவும் பிடித்தது… எத்தனை முறை இந்த தேனியில் அவர் படம் எடுத்தாலும், அவர் நூறு படம் எடுத்தாலும் ஒவ்வொரு படத்திலும் தேனியை வித்தியாசமான கோணங்களில் காண்பிப்பார். புதிதாக காண்பது போல் இருக்கும். அதுதான் அவருடைய பலம்.
கதை சொல்லும் போதும் அதை படமாக்கும் போதும் எந்த தருணத்திலும் அவர் சிறிது யோசித்தோ அல்லது தடுமாறியோ நான் பார்த்ததே இல்லை. தன்னை நம்பி ஒரு தயாரிப்பாளர் பணத்தை முதலீடு செய்தால் அதனை எவ்வளவு சிக்கனமாக செலவு செய்து படத்தின் தரத்தை குறைக்காமல் ரசிகர்களுக்கு தெளிவாக புரியும் வகையில் படத்தை நிறைவு செய்ய முடியுமோ, அதனை நேர்த்தியாக செய்யக்கூடியவர் சீனு ராமசாமி. அந்த வகையில் நான் பார்த்து வியந்த இயக்குநர் சீனு ராமசாமி.
இதுவரை அவரது இயக்கத்தில் நான் நான்கு படங்களில் நடித்திருக்கிறேன். ‘தென்மேற்கு பருவக்காற்று’ படத்திலிருந்து ‘மாமனிதன்’ வரை அவருடன் இணைந்து பணியாற்றும் போது எங்களுக்கான பட்ஜெட் அதிகமாக கிடைத்தாலும் படத்திற்கு என்ன தேவையோ அதை பொறுப்புணர்ந்து செயல்படுபவர் சீனு ராமசாமி. அதனால் சீனு ராமசாமி போன்ற ஒரு இயக்குநர் மூலம் ஏகன் அறிமுகமாவதற்கு ஏகன் அதிர்ஷ்டம் செய்திருக்க வேண்டும்.
நேரம் கிடைக்கப்போதெல்லாம் தான் கற்றுக் கொண்ட விஷயத்தை நண்பர்களிடம் பகிர்ந்து கொள்ளக்கூடியவர் சீனு ராமசாமி. நிச்சயம் படப்பிடிப்பு தளத்தில் அவர் ஏகனுக்கு நிறைய விஷயங்களை கற்றுக் கொடுத்திருப்பார்.
இசையமைப்பாளர் என் ஆர் ரகுநந்தனுக்கு என்னுடைய வாழ்த்துகள். அண்ணன்-தங்கை இடையேயான பாடலில் புல்லாங்குழல் இசை மிக இனிமையாக இருந்தது.
இந்த விழாவிற்கு என்னை அழைத்தமைக்காக நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இந்த விழா எப்படி இருக்கிறது என்றால்… நான் இருந்த இடத்தில் என்னுடைய ‘பாஸ்ட்’ டும், ‘பிரசென்ட்’டும் இருப்பது போல் இருக்கிறது. ஆனால் உங்களுடைய ‘ஃபியூச்சர்’ என்னை விட சிறப்பாக இருக்க வேண்டும் என ஏகனுக்கு வாழ்த்து தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்தத் திரைப்படத்தை விநியோகிக்கும் சக்தி ஃபிலிம் ஃபேக்டரி சக்தி வேலனுக்கு நன்றி. ஒரு திரைப்படத்தை சக்திவேலன் பார்த்து நன்றாக இருக்கிறது என ரசித்தால் அந்த திரைப்படத்தை தமிழக மக்களும் ரசிக்கிறார்கள். ‘கில்லி’ திரைப்படத்தை மறு வெளியீடு செய்து வெற்றி பெற செய்தவர் நீங்கள். என்னைப் பொருத்தவரை திரைத்துறையில் நீங்கள் தான் கில்லி. உங்களுடைய சக்தி இந்த படத்திற்காக மொத்தமாக இறங்கட்டும்.
இந்தப் படத்தில் நடித்த நடிகர்கள், நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் அனைவருக்கும் இந்த தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்,” என்றார்.
தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி பேசுகையில், ”தயாரிப்பாளர் அருளானந்து தொழில் ரீதியாகவும் குடும்ப ரீதியாகவும் வெற்றி பெற்று இருக்கிறார். அவருடைய இரண்டு மகன்களும் மேத்யூ, ஏகன் என இருவரும் வெற்றி பெற்று இருக்கிறார்கள். ‘ஜோ’ திரைப்படத்தை நான் பார்க்கும் போது அதில் நடித்திருந்த ஏகன் தன்னுடைய நடிப்பின் மூலம் தனித்து காணப்பட்டார். திரையில் அவர் இயல்பாக நடித்திருந்தார்.
விஷன் சினிமா ஹவுஸ் சார்பில் தயாரிப்பாளர் அருளானந்து தயாரித்த முதல் படமான ‘ஜோ’ பெரிய வெற்றியை பெற்றது. அந்தப் படத்தை வெளியான பிறகும் சிறந்த முறையில் விளம்பரப்படுத்தினார்கள். இதன் காரணமாக அப்படத்தில் நடித்த நடிகர் ரியோ ராஜ் ஒரு சந்தை மதிப்புள்ள நட்சத்திர நடிகராக உயர்ந்திருக்கிறார். இந்த தருணத்தில் இங்கு வருகை தந்திருக்கும் நடிகர் ரியோ ராஜிற்கும் என்னுடைய வாழ்த்துகள். அந்தப் படத்தை இயக்கிய இயக்குநருக்கும் என்னுடைய வாழ்த்துகள்.
சீனு ராமசாமியை பற்றி இயக்குநர் பாலா குறிப்பிட்டு பேசும் போது, ”சீனு உணர்வுபூர்வமான விஷயத்தை நேர்த்தியாக ரசிகர்களுக்கு கடத்துவதில் வல்லவன்” எனக் குறிப்பிடுவார். அதேபோல் இயக்குநர் சீனு ராமசாமி மிகவும் உணர்வுபூர்வமான மனிதர். சிறிய விஷயம் என்றாலும் அதில் தன்னுடைய பார்வையை உடனடியாக தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு கொட்டி தீர்த்து விடுவார்.
ஆனால் நல்ல மனிதர். பாலு மகேந்திரா பட்டறையில் இருந்து வெளிவந்த சிறந்த படைப்பாளி. பல தேசிய விருதுகளை பெற்றிருக்கிறார். அவர் உணர்வுகளையும், உறவுகளுக்கு இடையேயான பாசப் போராட்டத்தையும் மையப்படுத்தி தொடர்ந்து படைப்புகளை வழங்கி வருகிறார்.
அவருக்கும், விஜய் சேதுபதிக்கும் இடையேயான நட்பை அவர்கள் இருவரும் இன்று வரை தக்க வைத்துக் கொண்டிருக்கிறார்கள். அவர் தற்போது ஏகனை அறிமுகப்படுத்தி இருக்கிறார். தம்பி ஏகனும் விஜய் சேதுபதியை போல் இயக்குநர் சீனு ராமசாமியுடனான நட்பையும், உறவையும் பாதுகாக்க வேண்டும் என அறிவுறுத்துகிறேன்.
இந்தத் திரைப்படத்தில் பணியாற்றிய நடிகர்கள், நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்கள் அனைவருக்கும் என்னுடைய வாழ்த்துகள் மற்றும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்தப் படத்திற்கு இசையமைத்த என் ஆர் ரகுநந்தனுக்கு பாராட்டுகள் . அவருடைய இசையில் வெளியான இந்தப் படத்தின் பாடல் முப்பது ஆண்டுகளுக்கு பின்னரும் ரசிகர்களின் மனதில் நிற்கும்.
இந்தப் படம் ஒரு குடும்பக் கதை. இந்தப் படத்தை பார்க்கும் போது நம் வாழ்க்கையை நாம் மீண்டும் ஒருமுறை திருப்பி பார்ப்பது போல் இருக்கும். செப்டம்பர் 20ம் தேதி அன்று வெளியாகும் இந்த திரைப்படத்தை அனைவரும் திரையரங்கத்திற்கு வருகை தந்து வெற்றி பெற செய்ய வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்” என்றார்.
நடிகர் ரியோ ராஜ் பேசுகையில், ”என்னுடைய குடும்ப நிகழ்ச்சிக்கு வருகை தந்திருக்கும் அனைவருக்கும் முதலில் என்னுடைய நன்றி. ‘கோழிப்பண்ணை செல்லத்துரை’ படத்திற்கு வாழ்த்துகள். இந்த படத்தின் மூலம் அறிமுகமாகும் நாயகன் ஏகன் மென்மேலும் வெற்றி பெற வாழ்த்துகிறேன். ‘கனா காணும் காலங்கள்’ தொடரிலிருந்து மற்றொரு நடிகர் திரைத்துறையில் நாயகனாக அறிமுகமாக இருக்கிறார். இது எனக்கு மகிழ்ச்சியை அளிக்கிறது. ‘கனா காணும் காலங்கள்’ என்பது ஒரு பள்ளிக்கூடம் போன்றது. அங்கிருந்து ஏராளமான நடிகர்கள் நாயகராகி இருக்கிறார்கள். அங்கிருந்து வந்த ஏராளமானவர்கள் வெற்றி பெற்றிருக்கிறார்கள். தொடர்ந்து வெற்றி பெற்றுக் கொண்டும் இருக்கிறார்கள். ஏகன் என்னுடைய உடன் பிறந்த சகோதரர் போன்றவர். படத்தில் அவர் நன்றாக நடித்திருக்கிறார் அவருடைய கடின உழைப்பு திரையில் தெரிகிறது. திரையில் நன்றாக அழுது நடித்திருக்கிறார்.
‘ஜோ’ படத்தில் பணியாற்றிய அனைவரும் தற்போது வெவ்வேறு தளங்களில் வெற்றிகரமாக பணியாற்றிக் கொண்டிருக்கிறார்கள். இதற்கு அடித்தளமிட்ட தயாரிப்பாளர் அருளானந்துக்கு இந்த தருணத்தில் மீண்டும் ஒரு முறை நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
‘ஜோ’ படத்தை தொடங்கும் போது தயாரிப்பாளரிடம் ‘இந்த திரைப்படம் நம் அனைவருக்கும் ஒரு சிறந்த முகவரி’ என்று உறுதியளித்தோம். அதனை தயாரிப்பாளர் நம்பி வாய்ப்பளித்தார்.
கோழிப்பண்ணை செல்லத்துரை படத்தின் முழு திரைக்கதையும் அவர் கைக்கு சென்ற பிறகு, இந்த திரைப்படத்தை உருவாக்குவதற்கு முழு சுதந்திரம் அளித்திருக்கிறார். இந்தப் படத்திற்கு என்ன தேவையோ அவை அனைத்தையும் தயாரிப்பாளர் கொடுத்திருக்கிறார். இந்தத் திரைப்படம் தங்கச்சிகளுக்கும் அண்ணன்களுக்கும் நெருக்கமான படைப்பாக இருக்கும்.
இயக்குநர் சீனு ராமசாமி நம்முடைய மண் மணத்தை திரையிலிருந்து ரசிகர்களுக்கு நேர்த்தியாக கடத்துபவர். இவர் மூலமாக ஏகன் திரைத்துறையில் நாயகனாக அறிமுகமாவதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
‘ஜோ’ படத்தை ரசிகர்களாகிய நீங்கள் எப்படி வெற்றி பெற செய்தீர்களோ, அதைவிட பெரிய வெற்றியை ‘கோழிப்பண்ணை செல்லத்துரை’க்கு அளிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். இந்த திரைப்படத்தில் நடித்திருக்கும் அனைவருக்கும் என்னுடைய வாழ்த்துகள்,” என்றார்.
இசையமைப்பாளர் என் ஆர் ரகுநந்தன் பேசுகையில்:
”இந்தப் படத்திற்கு வாய்ப்பளித்த தயாரிப்பாளர்களுக்கு நன்றி. இயக்குநர் சீனு ராமசாமி என் குருநாதர். ‘தென்மேற்கு பருவக்காற்று’, ‘நீர்ப்பறவை’, ‘இடி முழக்கம்’, ‘கோழிப்பண்ணை செல்லத்துரை’ என நான்காவது முறையாக அவருடன் இணைந்து பணியாற்றுகிறேன். அவருடைய படத்தில் இசையமைக்கும் போது நிறைய நேரமும், சுதந்திரமும் அளிப்பார். அவர் எப்போதும் ஒவ்வொரு பாட்டையும் உருவாக்கும் போது.. அந்தப் பாடல் ஆகச் சிறந்த பாடலாக வரவேண்டும். அதற்காக நன்றாக நேரமெடுத்துக் கொண்டு சிந்தித்து மெட்டுகளை உருவாக்கு என்பார்.
அதனால்தான் அவர் படத்தில் இடம் பிடித்த பாட்டுகள் வெற்றி பெற்றிருக்கிறது. இந்தத் திரைப்படத்தில் இடம் பிடித்திருக்கும் ஐந்து பாடலும் ஒவ்வொன்றும் ஒவ்வொரு வகையாக இருக்கும். வைரமுத்து சிறப்பாக பாடல்கள் எழுதிக் கொடுத்தார். இந்தப் படம் பின்னணி இசைக்காக வரும்போது பார்த்து வியந்து இருக்கிறேன். இந்தத் திரைப்படம் ‘முள்ளும் மலரும்’, ‘கிழக்குச் சீமையிலே’, ‘பாசமலர்’ போல ஒரு அழகான உணர்வுபூர்வமான அண்ணன்- தங்கை இடையேயான உறவை பேசுகிறது. இயக்குநர் சீனு ராமசாமியின் திரைப்படத்தில் உணர்வு ரீதியான காட்சிகள் மேலோங்கி இருக்கும்.
ஏகன் நடித்த ‘ஜோ’ திரைப்படத்தை நான் பார்த்திருக்கிறேன். ஆனால் இந்த படத்தில் அவர் வேறு ஒரு பரிணாமத்தில் அற்புதமாக நடித்திருக்கிறார். இந்தப் படத்தில் அவரை ஏகனாக பார்க்க முடியாது. செல்லத்துரையாக தான் பார்க்கலாம். அவர் திரையில் செல்ல துரையாக வாழ்ந்திருக்கிறார்.
யோகி பாபு, பிரகிடா, சத்யா, லியோ சிவகுமார், குட்டி புலி தினேஷ் என ஒவ்வொரு நடிகர்களும் திரைப்படத்தில் கதாபாத்திரமாகவே வாழ்ந்திருக்கிறார்கள்.
இந்தத் திரைப்படத்தை பார்க்கும் போது நீங்கள் அந்த ஊருக்குச் சென்று ஒரு குடும்பத்தை நேரில் சந்தித்தது போன்ற உணர்வு ஏற்படும். இதுதான் சீனு ராமசாமியின் மேஜிக். மேலும் இந்த திரைப்படத்தில் பணியாற்றிய அனைவருக்கும் இந்த தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்,” என்றார்
நடிகை சத்யா பேசுகையில்:
”இந்தத் திரைப்படத்தில் நடிப்பதற்கு எனக்கு வாய்ப்பளித்த இயக்குநர் சீனு ராமசாமிக்கும், தயாரிப்பாளர்களுக்கும் முதலில் என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
இப்போதுள்ள தலைமுறையினர் சொல்வது போல்.. ‘கிரின்ஞ்’, ‘ கிளிஷே’ என சொல்லிக்கொண்டு சென்டிமென்ட்டான விஷயங்களை கடந்து போக வேண்டியதாக இருக்கிறது. ஆனால் இந்த ‘கோழிப்பண்ணை செல்லத்துரை’ திரைப்படம் இவற்றையெல்லாம் கடந்து ஒரு ஜீவனுள்ள படைப்பாக பார்வையாளர்களுடன் தொடர்பு கொள்ளும்.
‘தந்தையன்பு கிடைச்சதில்ல.. தாயன்பு இனிச்சதில்ல.. இது இரண்டும் கலந்த தாயாகவும் தந்தையாகவும் நீ இருக்கிறாய் அண்ணே..!’ என இந்தப் படத்தின் பாடலின் வரிகள் இடம் பிடித்திருக்கும். இந்த வரிகளை நான் மிகவும் ரசித்தேன். இந்த படத்தின் ஒட்டுமொத்த விஷயத்தையும் இரண்டே வரிகளில் கவிப்பேரரசு வைரமுத்து ஐயா குறிப்பிட்டிருப்பார். இதற்காக வைரமுத்துக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்
படப்பிடிப்பு தளத்தில் அனைவரும் இயல்பாக ஒரு குடும்பமாக பழகினார்கள். மேலும் என்னுடன் பணியாற்றிய அனைவருக்கும் இந்த தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்,” என்றார்.
படத்தின் நாயகி நடிகை பிரிகிடா பேசுகையில்:
”நான் மிகவும் மகிழ்ச்சியாகவும், பரவசமாகவும் இருக்கிறேன். ஒன்றரை ஆண்டுகளுக்குப் பிறகு நான் கதாநாயகியாக நடித்த ‘கோழிப்பண்ணை செல்லத்துரை’ திரைப்படம் வெளியாகிறது.
அனைவரும் சினிமா ஒரு முறை தான் வாய்ப்பு அளிக்கும் என சொல்வார்கள். ஆனால் இரண்டாவது வாய்ப்பு கிடைத்திருக்கிறது. இரண்டாவது வாய்ப்பு எப்போது என்று உறுதியாக சொல்ல முடியாது என்பார்கள். ஆனால் எனக்கு இவ்வளவு விரைவாக வாய்ப்பு கிடைத்தது மகிழ்ச்சியாக கருதுகிறேன். முதலில் இந்தத் திரைப்படத்தில் என்னை செந்தாமரைசெல்வியாக வாழ செய்த இயக்குநர் சீனு ராமசாமிக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
அவருடைய இயக்கத்தில் ‘இடி முழக்கம்’ படத்திற்காக ஆடிஷனில் தேர்வு செய்யப்பட்டிருந்தேன். ஆனால் எனக்கு பொருத்தமான கதாபாத்திரம் இல்லை என்பதால் வாய்ப்பு கிடைக்கவில்லை. இதற்காக நான் மிகவும் வருந்தினேன். ஏனெனில் நான் அப்போது ‘இரவின் நிழல்’ படத்தை நிறைவு செய்துவிட்டு வாய்ப்பிற்காக காத்திருந்த தருணம் அது. அந்த தருணத்தில் நல்ல கதாபாத்திரத்திற்காக பொறுமையாக காத்திருக்க வேண்டும் என நினைத்தேன். அதுபோன்ற தருணத்தில் தான் என்னை நினைவில் வைத்துக் கொண்டு இயக்குநர் சீனு ராமசாமி அழைப்பு விடுத்து இந்த படத்தில் வாய்ப்பு கொடுத்தார். இதற்காகவே அவருக்கு நான் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
ஏகனும் நானும் சென்னை லயோலா கல்லூரியில் படித்தவர்கள். அவர் பணியாற்றிய பிளாக் ஷீப் குடும்பத்திலிருந்து தான் நானும் இங்கு வருகை தந்திருக்கிறேன். அவருக்கும் எனக்குமான புரிதல் ஒன்றாகத்தான் இருக்கிறது. இந்த நிகழ்ச்சிக்காக விஜய் சேதுபதி வருகை தந்தது ஒரு குடும்பமாக என்னை உணர வைக்கிறது.
‘தர்மதுரை’ படத்தில் விஜய் சேதுபதியை பிடித்திருக்கிறது என்பதை ஐஸ்வர்யா ராஜேஷ் தனது கண்களாலேயே உணர்த்தியிருப்பார். இவ்வளவு நுட்பமாக காதலை படம் பிடித்த இயக்குநர் சீனு ராமசாமியின் இயக்கத்தில் நடிப்பதை பெருமிதமாக கருதுகிறேன்.
இந்த திரைப்படத்தில் என்னுடன் பணியாற்றிய நடிகர்கள், நடிகைகள், எனக்கு வாய்ப்பளித்த தயாரிப்பாளர்கள் ஆகியோருக்கு இந்த தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்,” என்றார்.
தயாரிப்பாளர் அருளானந்து பேசுகையில்:
”மிகவும் மகிழ்ச்சியான தருணம் இது. இந்தத் திரைப்படம் ஒரு இயற்கை. அதாவது இந்த படத்தில் அனைத்தும் இயற்கையாகவே அமைந்தது. இரண்டு ஆண்டுகளுக்கு முன் இயக்குநர் சீனு ராமசாமியை எனக்குத் தெரியாது. இயக்குநர் ஒருவர் மூலமாக அவர் எனக்கு அறிமுகமாகிறார். அதன் பிறகு நடைபெற்ற ஒரு சந்திப்பின்போது ஐந்து நிமிடத்திற்குள் ஒரு கதையின் சிறிய பகுதியை மட்டும் விவரித்தார். அதன் பிறகு கதையை முழுவதுமாக விவரித்தார். அந்தக் கதையை நான், ஏகனின் நண்பர்கள் என ஒரு குழுவாக கேட்டோம்.
நாங்கள் கடந்த பத்து ஆண்டுகளாக திரைத்துறையில் தான் பணியாற்றிக் கொண்டிருக்கிறோம். ஏகன் அவருடைய ஆறாவது வயதில் இருந்தே சினிமாவுக்காக தயாராகிக் கொண்டிருந்தான். பாண்டியன் மாஸ்டர், கலா மாஸ்டர், ஜெயந்தி மாஸ்டர் என ஒவ்வொருவரிடமும் சினிமாவுக்கு தேவையான விஷயங்களை கற்றுக் கொண்டிருந்தான். இதைத்தொடர்ந்து 2017ம் ஆண்டில் பிளாக் ஷீப் யூடியூப் சேனலை தொடங்கினோம். இது ஏகனுக்காக தொடங்கப்பட்டது. சினிமாவுக்கு தேவையான அனைத்தையும் கற்றுக் கொண்டே இருந்தார்.
முதலில் கடவுளுக்கு நன்றி. இது போன்றதொரு மனைவி, பிள்ளைகள், மாமனார், மாமியார், உறவுகள் என அனைத்தும் நல்லவிதமாக அமைத்துக் கொடுத்ததற்கு கடவுளுக்கு நன்றி. என்னுடைய மகிழ்வான தருணங்களை நினைத்து பெருமிதம் கொண்டிருக்கிறேன். இப்போதும் என் வாழ்க்கை மகிழ்ச்சியாகத்தான் சென்று கொண்டிருக்கிறது. இந்த தருணத்தில் தான் இயற்கையாக சீனு ராமசாமி எங்களை சந்தித்தார். அதன் பிறகு இந்த ‘கோழிப்பண்ணை செல்லத்துரை’ திரைப்படத்தை தேனியில் படப்பிடிப்பு நடத்திக் கொடுத்தார்.
நான் இந்த திரைப்படத்தை கிட்டத்தட்ட ஆயிரம் நபர்களுக்கு திரையிட்டு காண்பித்திருக்கிறேன். அவர்கள் கூறும் விமர்சனத்தையும், கருத்தினையும் இயக்குநரிடம் எடுத்துரைத்து, இந்த படத்தை சிறப்பாக செதுக்கி இருக்கிறோம். இப்படத்தில் இறுதி நாற்பது நிமிட காட்சிகள் மிகச் சிறப்பானதாக இருக்கும். அறுவடைக்கு முன் செழித்து நிற்கும் கதிர்களை போல் இப்படத்தின் இறுதி நாற்பது நிமிட காட்சிகள் இருக்கிறது. இந்தத் திரைப்படம் குடும்பமாக திரையரங்கத்திற்கு வருகை தந்து பார்த்து ரசிக்க வேண்டிய படம். இந்த திரைப்படம் வெளியான பிறகு இப்படத்தில் நடித்த குட்டி புலி தினேஷ் என்பவருக்கு சிறந்த அங்கீகாரம் கிடைக்கும்.
எங்கள் நிறுவனத்தின் சார்பில் அடுத்தடுத்து தொடர்ந்து திரைப்படங்களை தயாரிக்க திட்டமிட்டு இருக்கிறோம். தற்போது இரண்டு திரைப்படங்களுக்கான திட்டமிடலை உறுதி செய்திருக்கிறோம். இது தொடர்பான அறிவிப்பு விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியாகும்.
இந்தத் திரைப்படத்திற்காக இயக்குநர் சீனு ராமசாமி கடுமையாக உழைத்திருக்கிறார். ஒளிப்பதிவாளர் அசோக் ராஜ், இசையமைப்பாளர் என். ஆர். ரகுநந்தன் என அனைவரும் தங்களுடைய பங்களிப்பை வழங்கி இருக்கிறார்கள். இதற்காக அனைவருக்கும் இந்த தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்,” என்றார்.
நடிகர் ஏகன் பேசுகையில்:
”விஜய் சேதுபதி வருகை தந்து என்னைப் பற்றி இங்கு குறிப்பிட்ட வார்த்தைகள் எனக்கான சுமையை அதிகரித்து விட்டது என நினைக்கிறேன். அவர் தனக்கான பொறுப்புணர்வை என்னிடம் திருப்பி விட்டு சென்றுவிட்டார். அதனால் அவர் என்னிடம் கொடுத்த பொறுப்பை நேர்த்தியாக செய்து அவரது பெயரை காப்பாற்றுவேன் என உறுதி அளிக்கிறேன். எனக்காக இங்கு வருகை தந்தமைக்கும், வாழ்த்தியதற்கும் நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
அவர் இங்கு வருகை தந்த உடன் என்னுடைய பதற்றத்தையும், பரபரப்பையும் பார்த்துவிட்டு ‘பழகிக்கோ’ என ஆறுதல் படுத்தினர். அந்த ஆறுதல் தான் இந்த மேடையில் என்னை இயல்பாக நிற்க வைத்திருக்கிறது.
யோகி பாபு- கல்லூரியில் படிக்கும் போது நமக்கு ஒரு சீனியர் இருப்பார். அவர் சீனியர் என்று நமக்கு தெரியாது. எப்போதும் நம்முடனேயே இருப்பார். அதேபோல் தான் யோகி பாபு. படப்பிடிப்பு தளத்தில் தன்னுடைய சீனியாரிட்டியை ஒருபோதும் வெளிப்படுத்திக் கொள்ளாமல் இயல்பாகவும், மகிழ்ச்சியாகவும் உடன் இருந்து வழி நடத்தினார். இதற்காக யோகி பாபுவிற்கு இந்த தருணத்தில் நான் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்த திரைப்படத்தில் திரைப்படத்தை விநியோகஸ்தர் சக்திவேலன் பார்த்துவிட்டு படத்தில் இருக்கும் எமோஷன் நிறைவாகவும், சரியானதாகவும் இருக்கிறது, இது ரசிகர்களிடத்தில் பேசப்படும் என்றார். இந்தப் படத்தை அவர் தமிழகம் முழுவதும் விநியோகம் செய்வதால் வெற்றி நிச்சயம் என்ற நம்பிக்கையை எனக்கும் ஏற்படுத்தி இருக்கிறது. இதற்காக அவருக்கு இந்த தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்தத் திரைப்படம் மிகவும் உணர்வுபூர்வமான படைப்பு. இந்தத் திரைப்படத்தை பார்க்கும் போது ஏதாவது ஒரு கதாபாத்திரம் ரசிகர்களுடன் தொடர்பு கொள்ளும். இந்த தொடர்பை தன்னுடைய இசை மூலம் பலப்படுத்தியவர் இசையமைப்பாளர் என். ஆர். ரகுநந்தன். அவருக்கும் இந்த தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
ஒரு மந்தையிலிருந்து இரண்டு ஆடுகள் என்ற பாணியில் தான் நானும் படத்தின் நாயகி பிரிகிடாவும். பிளாக் ஷீப் எனும் யூட்யூப் சேனலில் ஒன்றாக பணியாற்றிக் கொண்டிருந்தோம். நான் ‘கனா காணும் காலங்கள்’ எனும் தொடரில் நடித்து, அதன் பிறகு இங்கு வந்திருக்கிறேன். அவர் சினிமாவில் நடித்துவிட்டு என்னுடன் இணைந்து இருக்கிறார். படப்பிடிப்பு தளத்தில் என்னை பதற்றமடையச் செய்யாமல் இயல்பாக வைத்துக் கொண்டதில் அவருடைய பங்களிப்பும் அதிகம்.
இந்த படத்தின் மூலம் எனக்கு ஒரு தங்கை கிடைத்திருக்கிறார். அவர் தான் சத்ய தேவி. அவருடனான பயணமும் இனிமையாக இருந்தது. இவருடைய உறவும், நட்பும் இயக்குநர் சீனு ராமசாமி மூலமாக எனக்கு இந்த திரைப்படத்தில் கிடைத்த சிறப்பு பரிசு என்றே சொல்லலாம். அவருக்கும் இந்த தருணத்தில் நான் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
செல்லதுரை யார் என்றால், நம் எல்லோருடைய வாழ்விலும் ஒருவர் இருப்பார். நம்முடைய குடும்பத்திற்காக அவர் கஷ்டப்படுவார், அனைத்தையும் இழப்பார். அவருக்கு என்ன வேண்டும் என்பதை சிந்திக்க மாட்டார். ஆனால் குடும்பத்திற்கு என்ன வேண்டுமோ அதை மட்டுமே யோசிப்பார்.
என்னை எடுத்துக் கொண்டால்.. எனக்கு என் தந்தை இருக்கிறார். எனக்கு என்ன வேண்டுமோ அதனை நேரடியாக வழங்காமல்.. அதனை பெறுவதற்காக என்னை உழைக்க தூண்டுவார். அதன் மூலமாக நான் விரும்பியதை அடையச் செய்வார்.
என் சகோதரன் மேத்யூ, வியாபாரத்தில் ஈடுபட்டிருக்கிறார். எனக்கான வேலையையும் அவனே செய்து கொண்டிருக்கிறான். நான் எப்போதெல்லாம் சோர்வடைகிறேனோ அப்போதெல்லாம் நம்பிக்கை ஊட்டுபவர்கள் என் தாய்- சகோதரன்- தந்தை.
நான் பிளாக் ஷீப் எனும் யூட்யூப் சேனல் மூலமாகத்தான் சினிமாவை கற்கத் தொடங்கினேன். அதன் பிறகு டிஸ்னி பிளஸ் ஹாட் ஸ்டாரின் ‘கனா காணும் காலங்கள்’ இணைய தொடரில் நடிக்க தொடங்கினேன். அதன் பிறகு ‘ஜோ’ திரைப்படத்தில் முக்கிய வேடத்தில் நடித்திருந்தேன். தற்போது சீனு ராமசாமி எனும் பல்கலைக்கழகத்திலிருந்து கோழிப்பண்ணை செல்லத்துரையாக அறிமுகமாகிறேன். அவரிடமிருந்து ஏராளமான விஷயங்களை கற்றுக் கொண்டேன். அத்துடன் அவருக்கு நான் என்றென்றும் நன்றிக் கடன் பட்டிருக்கிறேன். மேலும் இந்தப் படத்தில் என்னுடன் பணியாற்றிய நடிகர்கள், நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் அனைவருக்கும் இந்த தருணத்தில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்,” என்றார்.
இந்நிகழ்வில் இயக்குநர் சீனு ராமசாமி பேசுகையில், ”சினிமாவின் வளர்ச்சிக்கு மிக முக்கியமான தேவை என்ன என்பது குறித்து நான் எப்போதும் சிந்தித்துக் கொண்டே இருப்பேன். ஒரு திரைப்படம் தயாராகிறது, திரையரங்கத்தில் திரையிடப்படுகிறது, வசூல் செய்கிறது. அதன் பிறகு அந்த திரைப்படத்தை மக்கள் மறந்து விடுகிறார்கள். அப்படி என்றால் இது வணிகம் மட்டும் தானா..! இது சந்தை மதிப்புள்ள பொருள் மட்டும் தானா..! இந்தக் கேள்வி.. எனக்குள் நீண்ட நாட்களாக இருக்கிறது. இதற்கு மாற்றாக என்ன செய்யலாம், என்ன மாதிரியான விஷயங்களை முன்னிலைப்படுத்தலாம் என நான் சிந்திக்கும்போது எனக்கு இருப்பது நிலம், அது என் நிலம், என் ஊர், என் மண், நான் வாழ்ந்த வாழ்க்கை. நான் வாழ விரும்பும் ஒரு வாழ்க்கை. கதை என்றால் அது என் நிலம் தான். என் மண்ணுடன் தொடர்புடையது.
சினிமா உண்மையிலேயே ஒரு மாற்றத்தை சந்திக்க வேண்டும் என்றால் இடைவேளை என்ற ஒரு விஷயத்தை நீக்கிவிட வேண்டும். இது மிக முக்கியமான கருத்து. உடனடியாக திரையரங்குகளில் பாப்கார்ன் உள்ளிட்ட பொருட்களை விற்பனை செய்பவர்கள் என் மீது கோபம் கொள்ளக்கூடாது. ஏனெனில் பாப்கார்ன் சாப்பிடுபவர்கள் எப்போது வேண்டுமானாலும் அதனை சாப்பிடுவார்கள்.
அந்தக் காலத்தில் நாடகத் துறையில் இருந்து சினிமா வந்தது. சம்பூர்ண ராமாயணம் – மூன்றரை மணி நேரம் திரைப்படமாக வந்தது. அதனை ஒரே தருணத்தில் தொடர்ச்சியாக திரையிட முடியாது என்பதற்காக இரண்டு முறை இடைவேளைகள் அளிக்கப்பட்டன. இது நாளடைவில் ஒரு இடைவேளையாக மாற்றம் பெற்றிருக்கிறது.
இணையத் தொடர்கள் அறிமுகமாகி இருக்கிறது. ஆனால் அதற்கு தமிழில் பெரிய அளவில் வரவேற்பு இல்லை. ஆனால் மேற்கத்திய நாடுகளில் இணைய தொடர்களுக்கு பெரும் வரவேற்பு இருக்கிறது. ஏனெனில் அவர்கள் முழு நீள திரைப்படத்தை பார்த்து பழக்கப்பட்டவர்கள். அவர்கள் பாகம் பாகமாக படைப்பை பார்ப்பதை விரும்புகிறார்கள். ஆனால் நாம் இரண்டு பாகமாகத்தான் பார்த்துக் கொண்டிருக்கிறோம். முதல் பாதி – இரண்டாம் பாதி என இரண்டு பாகமாகத்தான் நாம் பார்த்துக் கொண்டிருக்கிறோம். அதனால் தான் கூடுதலாக மூன்று அல்லது நான்கு பாகங்கள் இணைத்தால் நமக்கு பிடிப்பதில்லை.
சினிமா என்பது முழு உடல். அதனை அரை மணி நேரம் பார்த்துவிட்டு அப்படியே நிறுத்திவிட்டு, இதற்கு முன் எப்படி இருக்கும் எனக் கேட்பது தவறு. முழு உடல், முழு தரிசனம். அப்படி ஒரு முழு தரிசனம் இந்த ‘கோழிப்பண்ணை செல்லதுரை’யில் கிடைக்கும்.
நான் இயக்குநராக இருந்தாலும் இரண்டு பெண் குழந்தைகளுக்கு தந்தை. ஆனாலும் நான் இதுவரை தயாரிப்பாளர் அருளானந்து போன்றதொரு தந்தையை சந்தித்ததில்லை. அவரை ஒப்பிட்டுப் பேசுவதற்கு உதாரணத்திற்கு கூட காவியத்தில் எனக்குத் தெரிந்த அளவில் யாரும் இல்லை. நான் இதை மிகையாக கூறவில்லை. காவியத்தில் கூட இவ்வளவு பாசத்துடன் ஒரு தந்தை இருப்பாரா..! என்பது சந்தேகம்தான். மிகவும் அன்புடனும், தெளிவான திட்டமிடலுடனும் ஒரு செயலை முன் நகர்த்திச் செல்லும் ஒரு தந்தையை நான் இதுவரை சந்திக்கவே இல்லை. இந்த படத்திற்காக முதலில் என்னை அழைத்தது அவர் தான். இயக்குநர் ஒருவர் மூலமாக அவர் என்னை அழைத்தார். முதலில் தொலைபேசி மூலமாகவே பேச தொடங்கினோம். அப்போது அவர் என் மகனை நாயகனாக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார். அப்போது அவரிடம் நீங்கள் தயாரிக்கிறீர்கள் என்பதற்காக நான் ஒரு படத்தினை இயக்க முடியாது. என் கதைக்கு அவர் பொருத்தமானவரா, தகுதியானவரா என்ற என பரிசோதனை செய்த பிறகு ,அவர் சரியானவர் தான், பொருத்தமானவர் தான் என உறுதிப்படுத்திக் கொண்டு தான் படத்தை இயக்க ஒப்புக் கொள்வேன் என்றேன். ஏனெனில் என்னிடம் இருக்கும் ஒரே அஸ்திரம் அது ஒன்றுதான். என்னுடைய கதாபாத்திரத்திற்கான நடிகர் தேர்வு விஷயத்தில் ஒருபோதும் சமரசம் செய்து கொள்வதில்லை.
“கோழிப்பண்ணை செல்லத்துரை’ படத்தை தந்தை தயாரிப்பாளர் என்பதற்காக இந்த படத்தை உருவாக்கவில்லை. ஏகன் ஏற்கனவே சின்னத்திரையில் அறிமுகமானவர். அத்துடன் நடனம், உடற்பயிற்சி, நடிப்பு என அனைத்து தகுதிகளையும் பெற்றிருந்தார். அவரின் திறமையை உணர்த்தும் பல காணொலிகளை எனக்கு அனுப்பி கொண்டிருந்தார். அதன் பிறகு தான் அவர் ஒரு சினிமா வெறியன், சினிமா காதலன், சினிமாவிற்காக தன்னை அர்ப்பணித்துக் கொண்ட ஒரு மாணவன் என்பதை அறிந்து கொண்டேன். நான் அவரை ஆடிஷனுக்காக வரவழைத்தேன். ஆனால் ஏகனை நான் ஆடிஷன் செய்யவில்லை. அவரை வரும்போது கவனித்தேன். உட்காரும்போதும் கவனித்தேன். பேசும் போதும் அவனுடைய கண்களை கவனித்தேன். அவ்வளவுதான். அவனை அனுப்பி வைத்து விட்டேன். இந்த இளைஞன் எதிர்காலத்தில் மிகச் சிறந்த நடிகனாக வருவான் என்று எனக்கு அப்போதே தெரிந்து விட்டது. சரியான வாய்ப்பிற்காக காத்திருக்கிறார் என்பதையும் நான் புரிந்து கொண்டேன்.
சிறந்த நடிப்பு என்றால் என்ன? நான் நடிப்பை சொல்லி கொடுக்கும் ஆசிரியர் அல்ல. நடிப்பை வாங்கும் ஆசிரியர். இசைஞானி இளையராஜா மிகச்சிறந்த இசைக் கலைஞர்களை தேர்வு செய்கிறார். அவர்களிடமிருந்து சிறந்த முறையில் ராகங்களை வாசிக்க செய்து அதனைப் பெற்றுக் கொள்கிறார். அதைப்போல் ஏகன் என்னிடம் வரும்போது ஒரு நடிகருக்கான முழு தகுதியுடன் வருகை தந்த ஒரு இளைஞன்.
என்னுடைய பங்களிப்பு என்னவென்றால், படப்பிடிப்பு தளத்தை பதற வைக்க மாட்டேன். எப்போதும் இயல்பாகவும், அமைதியாகவும் வைத்திருப்பதில் கவனம் செலுத்துவேன். எனக்குள் பதற்றம் இருந்தாலும் அதனை நடிகர்களிடம் ஒரு போதும் வெளிப்படுத்த மாட்டேன். படப்பிடிப்பு முழுவதும் ஏகனை ஒருபோதும் ஏசியதில்லை. அவரை மட்டுமல்ல, படப்பிடிப்பு தளத்தில் யாரையும் நான் திட்டியதில்லை.
நீங்கள் கயிறுகளை ஆட்டிக் கொண்டிருந்தால் பறவைகள் ஒருபோதும் அமராது. அனைவரும் படப்பிடிப்பு தளத்தில் அமைதியாக இருக்கும் போது அவர்களின் இயல்புணர்ச்சி வெளிப்படும். அந்த இயல்புணர்ச்சியை தூண்ட வேண்டும். என்னுடைய வேலையே நடிகர்களிடம் இருக்கும் இயல்புணர்ச்சியை தூண்டுவது தான். அதற்காகத்தான் நான் எப்போதும் படப்பிடிப்பு தளத்தை அமைதியாக வைத்திருப்பேன். அதனால் தான் நான் யாரையும் அறிமுகப்படுத்தினேன் என ஒருபோதும் நினைப்பதில்லை. ஏகனுக்கு ஒரு ஒளிமயமான எதிர்காலம் இருக்கிறது. இதற்கு முக்கியமான காரணம் அவருடைய தந்தை என்றாலும் ஏகன் நன்றாக வளர வேண்டும் என அவருடைய தாயாரும் தொடர்ந்து பிரார்த்தனை செய்து கொண்டிருக்கிறார்.
தயாரிப்பாளர் மேத்யூ நான் வியந்து பார்த்த இளைஞன். இந்த இளம் வயதிலேயே பொறுப்புணர்ச்சியுடன், கடமையுணர்ச்சியுடன் பணியாற்றுகிறார். இவருக்கும் இவருடைய தந்தை சிறந்த முன்னுதாரணமாக இருக்கிறார்.
மேலும் இந்த திரைப்படத்தில் பணியாற்றிய நடிகர்கள் நடிகைகள் தொழில்நுட்ப கலைஞர்கள் என அனைவருக்கும் இந்த தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
‘கோழிப்பண்ணை செல்லத்துரை’ திரைப்படம் ஒரு முக்கியமான விஷயத்தை பேசி இருக்கிறது. வாழ்க்கை என்னை கைவிட்டு விட்டது, இந்த வாழ்க்கையை வாழவே பிடிக்கவில்லை, இந்த வாழ்க்கையில் எனக்கென்று யாரும் இல்லை என்று யாராவது நினைத்தால் அவர்களுக்கு இந்த படத்தில் ஒரு செய்தி இருக்கிறது. இந்த பிரபஞ்சம் எந்த ஒரு தனி மனிதனையும் கைவிடுவதில்லை. ஏதேனும் ஒரு ரூபத்தில் வருகை தந்து உங்களை அரவணைத்து காக்கும்.
யோகி பாபு கதையை கேட்காமல் என்னை நம்பி வந்து இந்த திரைப்படத்தில் ஏகனின் பெரியப்பாவாக பெரியசாமி எனும் கதாபாத்திரத்தில் அற்புதமாக நடித்திருக்கிறார். ஏகன்-யோகி பாபு கூட்டணியில் படத்தில் இடம் பெறும் காட்சி ஒன்று இருக்கிறது. உணர்வுபூர்வமாகவும், மௌனமாகவும் இருக்கும் இந்த காட்சியில் ஏகன் மற்றும் யோகி பாபுவின் நடிப்பு ரசிகர்களை வெகுவாக கவரும். இந்த காட்சியில் ஏகனின் நடிப்பை பார்த்து பார்வையாளர்கள் வியப்படைவார்கள். அந்த வகையில் ஏகனுக்கு தேசிய மற்றும் சர்வதேச விருதுகள் காத்திருக்கிறது.
இந்தத் திரைப்படம் எதிர்வரும் 18ம் தேதி அன்று அமெரிக்காவில் உள்ள ஆக்லாந்து சர்வதேச திரைப்பட விழாவில் திரையிட தேர்வு செய்யப்பட்டிருக்கிறது. இந்த விழாவிற்கு வருகை தந்து சிறப்பு சேர்த்த ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதிக்கு என்னுடைய நன்றி.
மேலும் இந்த திரைப்படத்தில் தமிழக முதல்வர் ஸ்டாலின் மகளிருக்கு வழங்கிய இலவச பேருந்து பயண சலுகைகள், அரசு மருத்துவமனைகளின் பலன்கள் குறித்து காட்சிகள் இடம்பெற்றிருக்கிறது. இந்தப் படம் ரசிகர்களை நிச்சயம் ஏமாற்றாது.
இந்தத் திரைப்படம் உள்ளூர் மக்களையும் ரசிக்க வைக்கிறது. உலக மக்களிடமும் சென்றடையும். ‘கோழிப்பண்ணை செல்லத்துரை’ உள்ளூர் மக்களுக்கும் மட்டுமல்லாமல் உலக மக்களுக்கும் பிடித்த செல்லதுரையாகவும் இருக்கும்,” என்றார்.