சபரிமலை பக்தர்கள் மாலை அணிய தொடங்கிவிட்டனர்.... விரத முறைகள் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்
ஒவ்வொரு வருடமும் கார்த்திகை மாதத்தின் முதல் நாளன்று சபரிமலையில் மண்டல பூஜை நடைபெறும். மண்டல பூஜை தொடங்கியதையடுத்து, ஐயப்ப பக்தர்கள், மாலை அணிந்து விரதம் மேற்கொள்ள ஆரம்பிப்பார்கள். அப்படி ஐயப்பனுக்கு மாலை அணிந்து விரதம் மேற்கொள்பவர்கள் கடைபிடிக்க வேண்டிய விரத முறைகள் என்னென்ன என்பதை பற்றி தெரிந்துக் கொள்வோம் வாங்க...
1. மாலை போட்ட நாளிலிருந்து விரதத்தை முடிக்கும் வரை முடிவெட்டுதல், சவரம் செய்வதை தவிர்க்க வேண்டும்.
2. மெத்தை, தலையணை உபயோகிக்காமல், தரையில் துணி விரித்துப் படுக்க வேண்டும்.
3. பேச்சைக் குறைத்து மவுனத்தை கடைப்பிடித்தல் வேண்டும்.
4. மற்றவர்களிடம் சாந்தமாக பழக வேண்டும். பிறர் மனம் புண்படும்படி பேசக்கூடாது.
5. விரத நாட்களில் பெண்களை சகோதரியாகவும் தாயாகவும் கருத வேண்டும். விரதகாலத்தில் பிரம்மச்சாரியத்தை கடுமையாக கடைபிடிக்கவும். மனதளவிலும் பெண்ணை நினைக்கக்கூடாது.
6. வீட்டிலிருக்கும் பெண்களுக்கு மாதவிலக்கானால் அவர்கள் தனி அறையில் ஒதுக்குப்புறமாக பார்வையில் படாதபடி இருக்க வேண்டும். அப்படி வசதி இல்லையென்றால் மாலை அணிந்தவர்கள் வேறு இடத்தில் தங்கியிருத்தல் நல்லது.
7. அணிந்திருந்த மாலை அறுந்துபோனால் அதை செப்பனிட்டு அணிந்து கொள்ளலாம். இதில் தவறில்லை. மன சஞ்சலம் அடைய வேண்டாம்.
8. மாலை போடும் சமயத்தில் பயமோ, சந்தேகமோ, குற்ற உணர்ச்சியோ இருத்தல் கூடாது. அப்படி மன சஞ்சலம் இருந்தால் மாலை போடுவதை தள்ளிப் போடுதல் நல்லது.
9. ஐயப்ப விரதத்தில் வீட்டிலிருக்கும் மனைவி மற்றும் பிற பெண்களின் தொண்டும் பக்தியும் மிகவும் உயர்வானதும் போற்றத்தக்கதும் ஆகும்.
10. இருமுடி கட்டும் வைபவத்தை தனது வீட்டிலேயே வைத்துக் கொள்ளுதல் நல்லது. வீடு சுபிட்சமாக இருக்கும். மங்கலமாகவும் இருக்கும்.
11. மாலையணிந்து சபரிமலைக்குச் செல்லும் நோக்கங்கள் மூன்று:
12. தன்னையே புனிதப்படுத்தி சத்தியமான பதினெட்டாம் படியில் ஏறி பகவான் ஐயப்பனைத் தரிசித்தல்.
13. தன் புலன்களை எல்லா வகையிலும் கட்டுப்படுத்தி நெறியான வாழ்க்கை வாழ்ந்து மனம், உடல் இவற்றை தூய்மைப்படுத்துதல்,
14. தான் சுத்தமாக இருப்பதோடு அல்லாமல், வீட்டையும் வீட்டில் உள்ளவர்களையும் சுத்தமாக இருக்க வைத்து அவர்களையும் பக்தி நெறிக்கு உட்படுத்துதல்.
15. மாலை போட்ட பின் மது, புகை, அசைவ உணவுகள் போன்றவற்றை அறவே தவிர்க்க வேண்டும். சொல்லப்போனால், புகைப்பழக்கத்தைக் கைவிட நினைப்பவர்கள் ஐயப்பனுக்கு மாலை போடுவது ஓர் சிறந்த வழியாக அமையும்.
16. எதிர்பாராமல் உங்கள் குடும்பத்தில் பிறப்பு அல்லது இறப்பு நிகழ்ந்தால், நீங்கள் அணிந்துள்ள மாலையை சுவாமி ஐயப்பன் முன் வைத்துவிடுங்கள். மேலும் ஒரு வருடம் கழித்து நீங்கள் உங்கள் யாத்திரையைத் தொடங்கலாம்.
17. ஐயப்பனுக்கு மாலை போட்டுவிட்டால், தலைக்கு எண்ணெய் வைக்கவோ அல்லது எண்ணெய் குளியலோ மேற்கொள்ளக்கூடாது.
18. ஐயப்ப பக்தர்கள் பகல் நேரத்தில் தூங்கக்கூடாது. ஒருவேளை தூங்கினால், மீண்டும் குளித்த பின்னரே எந்த ஒரு செயலையும் மேற்கொள்ள வேண்டும். ஐயப்ப பக்தர்கள் வீட்டைத் தவிர, கடைகளிலோ அல்லது வெளியிடங்களிலோ எங்கும் உண்ணக்கூடாது.
19. மாலை அணிந்தவர்கள், காலையில் சூரியன் உதிப்பதற்கு முன் பச்சைத்தண்ணீரில் குளிக்க வேண்டும். குளித்துமுடித்த பின் விபூதி இட்டு, விளக்கு ஏற்றி ஐயப்பனின் 108 சரணத்தையும் சொல்லி வணங்க வேண்டும். இதேப் போல் மாலையில் சூரிய அஸ்தமனத்திற்கு பின் குளித்து, காலையில் செய்ததைப் போலவே செய்ய வேண்டும்.
20. மாலைக்கு மதிப்பளித்து ஒரு மண்டல காலம் விரத முறைகளை நெறியாகவும் முறையாகவும் கடைப்பிடித்து, தான் என்னும் அகங்காரத்தை விட்டொழித்து, இறைவனிடம் முழு நம்பிக்கை வைத்து, முழு சரணாகதி அடைந்து, ஒருமுகமாக வழிபட்டால், இறைவனின் அருட்கடாட்சம் குறைவில்லாமல் கிடைக்கும்.
இந்த வழிமுறைகளை கடைபிடித்து விரதம் முடிந்து மலைக்கு கிளம்பும் முன் பஜனை, கூட்டு வழிபாடு, பூஜை நடத்தி பிரசாதம் தந்து உணவளிப்பது சிறப்பு. குருசாமி வீடு, கோயிலில் இருமுடிக்கட்டு பூஜை நடத்தலாம். கிளம்பும்போது ‘போய் வருகிறேன்’ எனச் சொல்லக்கூடாது. வீடு திரும்பியதும், குருசாமி மூலம் மாலை கழற்றவும். இருமுடி அரிசியை பொங்கியும், பிரசாதமாக எல்லோருக்கும் தர வேண்டும். விரதகாலம் வழங்கிய நற்பழக்கங்களை ஆயுள் முழுக்க பின்பற்றுவதே, ஐயப்பனின் பூரண அருளைத் தரும்.
யோகி கி.வெங்கட்ராமன் எழுதிய ‘ஸ்ரீ போகர் சப்தகாண்டம் 7000’ என்ற புத்தகத்தை கோல்டன் புக் பப்ளிகேஷன்ஸ் சார்பில் சத்தியமூர்த்தி வெளியிட்டுள்ளார். இந்த புத்தகத்தின் வெளியீட்டு விழா (ஜூன் 21) சென்னை சாலிகிராமத்தில் உள்ள பிரசாத் லேபில் நடைபெற்றது. இதில், சிறப்பு விருந்தினராக உலக இந்து அறக்கட்டளை (World Hindu Foundation) நிறுவனr மற்றும் உலக தலைவர், விஸ்வ இந்து பரிஷத் அமைப்பின் தேசிய இணை செயலாளர் ஸ்ரீ சுவாமி விக்யானந்த் ஜி கலந்துக்கொண்டு புத்தகத்தை வெளியிட்டார்.
நிகழ்ச்சியில் ஜெம் ஷிப்பிங் சர்வீஸ் நிறுவனத்தின் இயக்குனரும் ‘குமரிக்கண்டமா சுமேரியமா’ மற்றும் ‘புகர் நகரத்து பெருவணிகன்’ ஆகிய புத்தகங்களின் ஆசிரியருமான எல்.பிரபாகரன், செண்ட்ரல் இண்ட்டியூட் ஃபார் கிளாசிக்கல் தமிழின் இயக்குனர் பேராசிரிய சந்திரசேகர், கலைமகள் ஆசிரிய ராஜன், ஸ்ரீராம் சேசாத்ரி ஆகியோரும் கலந்துக்கொண்டார்கள்.
நிகழ்ச்சியில் கலந்துக்கொண்ட சிறப்பு விருந்தினர்களுக்கு பொன்னாடை போர்த்தி மாலை அணிவித்து மரியாதை செய்த கோல்டன் புக் பப்ளிகேஷன் நிறுவனர் சத்திமூர்த்தி நினைவு பரிசு வழங்கி கெளரவிக்கவும் செய்தார்.
நிகழ்ச்சியில் சத்தியமூர்த்தி பேசுகையில், “எங்கள் அழைப்பை ஏற்று வந்திருக்கும் அனைவருக்கும் நன்றி. நான் திரைப்படங்களை விநியோகம் செய்து வந்தேன். எனக்கு இந்த புத்தகத்தை வெளியிடும் வாய்ப்பு அளித்ததற்கு யோகி கே.வெங்கட்ராமன் அவர்களுக்கு நன்றி. அவர் எழுதிய பல புத்தகங்கள் அதிகமாக விற்பனையாகி வருகிறது. அந்த புத்தகங்களை படித்து தான் நான் சித்த மருத்துவம் குறித்து அறிந்துக்கொண்டேன். ஸ்ரீ போகர் சப்தகாண்டம் 7000 புத்தகமும் நல்ல வரவேற்பு பெறும். இதுபோல் வெங்கட்ராமன் ஐயா அவர்கள் இன்னும் பல புத்தகங்களை எழுதுவார். இந்த நிகழ்வுக்கு வந்த அனைவருக்கும் மீண்டும் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.” என்றார்.
எல்.பிரபாகரன் பேசுகையில், “பெரியவர்களே தாய்மார்களே, இந்த விழாவுக்கு தலைமை தாங்கி கொண்டிருக்கின்ற தலைவர் அவர்களே, இந்த புத்தகத்தை உருவாக்கிய ஐயா அவர்களே, மேடையில் இருக்கின்ற நண்பர்களே உங்கள் அனைவருக்கும் வணக்கம். இந்தியா ஒரு ஆன்மீக பூமி. ஆன்மீகம் என்றால் ஒவ்வொரு மதமும் ஒவ்வொரு விளக்கத்தை தருகிறது. சொர்க்கத்திற்கு போவதுதான் முத்தி அது தான் முடிந்த முடிவு என்று கிறித்துவமும், இஸ்லாமும் போதிக்கின்றன. ஆனால் இந்து தர்மம் மட்டும் தான் தன்னை அறிவது ஆன்மீகம், தன்னை அறிகின்றவன் ஆன்மீகத்தை அறிகிறான் என்று கூறி சொர்க்கத்தை கீழே கொண்டு வந்து நம் மனதுக்குள் காட்டுவது இந்து தர்மம். இந்த தர்மத்திலே எல்லாவகையான வழி பாட்டு முறைகளுக்கும் வழி உண்டு. இங்கி ரிஷிகளும் உண்டு, ஞானிகளும் உண்டு, முனிவர்களும் உண்டு, வேதாந்திகளும் உண்டு. சித்தர்களும் உண்டு, இவர்ற்றை எல்லாம் கடந்த குடும்பத்தினரும் உண்டு. இதில் உயர்வு தாழ்வுக்கு இடம் இல்லை. குறிப்பாக தென்னகத்தில் 63 நாயன்மார்கள் பற்றி நாம் பெரிதாக பேசுகிறோம். இவர்களில் 57 பேர் திருமணமாகி குழந்தை குட்டிகள் பெற்றவர்கள் தான். நமது மதத்தில் பிரம்மச்சரியத்திற்கு இடம் இல்லை. நீங்கள் எந்த இடத்தில் இருந்தாலும் இறைவனை அடையாளம் என்ற போதித்த தர்மம் இந்து தர்மம். இந்த் தர்மத்தில் மட்டும் தான் இறைவன் நம்முடன் விளையாடுவான். கூலி வேலை செய்வான், பிரம்மட்ப் பௌவான், தூது போவான், நண்பனாக பழகுவான். ஆனால், மற்ற தர்மங்களில் இறைவன் எட்டா இடத்தில் இருப்பது போன்றும், நாம் அவனுக்கு பயந்து வாழ்வது போலவும் சித்தரிக்கப்பட்டிருக்கும். நம் மதத்தில் இறைவன் மிக எளியவன். மஞ்சள் பிடிச்சு வைத்தால் பிள்ளையார் வந்துவிடுவார். ஒரு பூவை அள்ளி போட்டால், ஒரு துளசி மாலையை போட்டால் கிருஷ்ணன் வந்துவிடுவிடுவார். இப்படி ஒரு எளிமையான தர்மம் தான் நமது இந்து மதம்.
நம் முன்னோர்கள் என்ன சொல்ல வந்தார்கள் என்பதை நமக்கு யாரும் சொல்லித்தர தேவையில்லை. அது பரம்பரை பரம்பரையாக நமக்கு இயல்பாகவே வருகிறது. காரணம் என்னவென்றால் நமது குடும்பத்தில் நாம் எப்படி இயல்பாக நடந்துக்கொண்டோமோ அதை நாம் ஒரு தர்மமாக மாற்றி விட்டோம். ஒரு குழந்தை பிறந்தால் சேனை தொட்டு வைக்கிறோம், ஒரு வருடத்தில் மொட்டை போடுகிறோம், வயதுக்கு வந்தால் சடங்கு செய்கிறோம், திருமணம் செய்து வைக்கிறோம் இப்படி நம் வாழ்வில் இயல்பாக நடக்கும் விஷயங்களை நாம் தர்மமாக மாற்றி விட்டோம். ஆகையால், இந்து தர்மம் மனித வாழ்க்கையில் இணைந்த தர்மம் ஆகும். ஆடி மாதம் வந்துவிட்டால் மழை வர வேண்டும் என்று திருவிழா நடத்துகிறோம் இது இயல்பாக நடப்பது தான். தை மாதம் வந்தால் அறுவடை செய்கிறோம். அதனை கொண்டாடுவதற்காக தை பொங்கல் பண்டிகை கொண்டாடுகிறோம். இது நம் வாழ்வில் இயல்பாக நடக்க கூடியவைகள். ஆனால், கிறிஸ்துமஸ் பண்டிகை நம் மண்ணிற்கானதா? இல்லை. கிறிஸ்துவத்தை ஏற்றுக்கொண்டதால் கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடுகிறோம். இதில் மதம் என்ன சொல்கிறதோ அதை நாம் செய்கிறோம். ஆனால், இந்து மதத்தில் மக்கள் செய்வதையே தர்மமாக மதம் ஏற்றுக்கொள்கிறது. இது தான் இந்து மதத்தின் அளப்பறிய மிகப்பெரிய சிறப்பு என்று நான் சொல்கிறேன்.
நினைத்த மாத்திரத்தில் எதையும் செய்யக்கூடிய வள்ளவர்கள் தான் சித்தர்கள். அவர்களுக்கு எந்தவித சட்ட திட்டங்களும் பொருந்தாது. அவர்கள் எப்படி இருப்பார்கள் என்பதை பட்டணத்து சாமி சொல்லும் போது “பேய் போல் திரிந்து, பிணம் போல் கிடந்து, இட்ட பிச்சை எல்லாம் நாய் போல் அருந்தி, சேய் போல் இருந்து நல் மாதர்களை எல்லாம் தாய் போல் நினைப்பார்கள், என்று சொல்லுவார். ஆகையால் அவர்கள் எப்படியும் இருப்பார்கள் என்று தெரிகிறது. மனிதகுலம் நன்மைக்காக சித்தர்கள் பல விஷயங்களை செய்துக்கொடுத்திருக்கிறார்கள். இந்த சித்தர்கள் காடு, மலை, குகை போன்ற இடங்களில் இருப்பார்கள். ஏன் அங்கிருக்கிறார்கள் என்றால் ஒரு நன்மை செய்தாலும் அதற்கு ஒரு பிறவி வரும். இந்த புன்னியமும், பாவமும் வேண்டாம் என்பதற்காக தான் மனிதர்கள் இல்லாத இடத்தில் அவர்கள் வாழ்ந்தார்கள். அதையும் மீற் நம் மீது இறக்கப்பட்டு ஒரு சில சித்தர்கள் நமக்கு வழங்கியது தான் வைத்தியம், வானசாஸ்திரம், ஜோதிடம் போன்ற நூல்கள். இப்போது இருக்கின்ற பல கலைகளும், விஞ்ஞானமும் சித்தர்கள் நமக்கு தருவித்தது. திருவருட்பாவில் வள்ளல் பெருமான் ஒரு கட்டுரையில் எழுதிருக்கிறார், ஒன்றில் இருந்து நூறுவரை தமிழில் எண்களை எழுதும் போது அவை உகரத்திலேயே முடிகிறது. காரணம் என்னவென்றால் வேண்டுமென்றே சித்தர்கள் அப்படி அமைத்திருக்கிறார்கள் என்று கடிதத்தில் எழுதியிருக்கிறார். இதற்கு பின்னால் இருக்கும் தத்துவங்களும், விஞ்ஞானமும் நமக்கு விளங்காது. அது நமக்கு விளங்கவில்லை என்பதற்பதற்காக அதை நாம் சிறுமை படுத்தி பேசக்கூடாது. அதை தான் இப்போது திக, திராவிட கூட்டங்கள் எல்லாம் செய்துக்கொண்டிருக்கிறார்கள்.
மிகப்பெரிய பாரம்பரியத்தில் வந்த நாம் நமது மொழி, பண்பாடு இவற்றை எல்லாம் கட்டிகாப்பத்துற பொருப்பு நமக்கு இருக்கு. நமக்கு பிறகு வரும் தலைமுறைகளுக்கும் இதை நாம் எடுத்து செல்ல வேண்டும். இந்த மகா பொக்கிஷத்தை அருளிய சித்தர்கள், அதிலும் குறிப்பாக நாம் இன்று பேசிக்கொண்டிருக்கும் போகரின் நூல்களை மேலோட்டமாக பார்க்கும் போது வரிகள் எளிமையாக இருக்கும். ஆனால், அது ஒரு மறை நூல், விஷயம் அறிந்தவர்களால் தான் அதில் இருக்கும் குறியீடுகளை புரிந்துக்கொள்ள முடியும். அப்படிப்பட்ட அறிய பணியை வெங்கட்ராமன் அவர்கள் செய்துள்ளார். அவருடைய இந்த புத்தகத்தை அனைவரும் படித்து பயன்பெற வேண்டும் என்று நான் கேட்டுக்கொண்டு விடைபெறுகிறேன், நன்றி வணக்கம்.” என்றார்.
கலைமகள் ஆசிரியர் ராஜன் பேசுகையில், “எலோருக்கும் நமஷ்காரம். இது ஒரு அறுமையான புத்தக வெளியீட்டு விழா. சொல்ல போனால் தற்போதைய காலக்கட்டத்தில், இளைஞர்களுக்கு இதுபோன்ற சித்தர்கள் பற்றிய புத்தகங்கள் மிகவும் அவசியம். சுமார் 15 வருடங்கள் ஆராய்ச்சி செய்து ஐயா இந்த புத்தகத்தை கொண்டு வந்ததாக நான் கேள்விப்பட்டேன், இது மிகப்பெரிய விஷயம் ஐயாவுக்கு வாழ்த்துகள். இதுபோன்ற ஒரு புத்தகத்தை கொண்டு வந்த வெளியீட்டாளரான இளைஞர் சத்யாவுக்கு வாழ்த்துகள். இதுபோன்ற ஆராய்ச்சி பூர்வமான புத்தகங்கள் இளைஞர்களிடம் சேர வேண்டும், இதற்கான முயற்சியில் ஈடுபட்ட அனைவருக்கும் நன்றி.” என்றார்.
பேராசிரியர் சந்திரசேகர் பேசுகையில்:
“இன்று மிக முக்கியமான தினம். உலக யோகா தினம். இந்த தினத்தில் அனைத்து நாட்டினரும், மதத்தினரும் யோகா பயிற்சி செய்து வருகிறார்கள். இப்படி ஒரு நாளில் இந்த புத்தகம் வெளியிடுவது பெருமையாக உள்ளது. இன்றைய காலக்கட்டத்திற்கு தேவையான அனைத்து தத்துவங்களையும் 9 தந்திரங்களையும் சொல்லியிருக்கும் ஒரு நூல் திருமந்திரம். அந்த வகையில் தத்துவ உலகில் தலைமையானவராக இருப்பவர் திருமூலர், போகர் எழுதிய பாடல்கள் ஏராளமானவை நமக்கு சில ஆயிரம் பாடல்கள் தான் கிடைத்திருக்கிறது. ஓலைச்சுவடிகளை படிப்பது என்பது அறியது, அதிலும் இந்த காலக்கட்டத்தில் ஓலைச்சுவடிகளை படிப்பது என்பது பெரிய விஷயம். அதை படித்து இப்படி ஒரு பெரிய புத்தகத்தை ஐயா வெங்கட்ரமன் கொண்டு வந்திருக்கிறார் அவருக்கு எனது வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன். அதை வெளிக்கொண்டு வந்த சத்யாவையும் வாழ்த்துகிறேன். இந்த காலக்கட்டத்தில் இப்படி நுலை கொண்டு வந்தது நமது அனைவருக்கும் பெருமை. இந்த போகர் நூலி என்ன இருக்கு? 18 சித்தர்கள், அவர்களில் தலைமையானவர் போகர், நமது பழனி மலையில் வாழ்ந்தவர். ஏறத்தாழ 4 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு அவர் இயற்றிய பாடல்களின் தொகுப்பு தான் இந்த போகர் 7000 நூழ். ஆன்மீகம் ஆகட்டும், மருத்துவம் ஆகட்டும் அனைத்தும் உள்ளடக்கிய இந்த பொக்கிஷத்தை இன்று கொண்டு வந்திருக்கிறார்கள். இது மனிதனை செம்மைப்படுத்த கூடிய மிக முக்கியமான் புத்தகமாகும். போகர் எழுதியதில் சுமார் 25 நூல்கள் தான் வெளியாகியிருக்கிறது. அவர் எழுதிய சோடிகள் பல இன்னம் வெளிவராமல் இருக்கிறது. அவற்றை எல்லாம் இவர்களை போன்றவர்கள் புத்தமாக கொண்டு வர வேண்டும், என்று கூறிக்க்கொண்டு விடைபெறுகிறேன் நன்றி.” என்றார்.
ஸ்ரீராம் சேசாத்ரி பேசுகையில், “போகரின் பாடல்களை இப்போதுள்ள தமிழில் மிக எளிமையாக கொடுத்ததற்கு வெங்கட்ராமன் அவர்களுக்கு முதலில் நாம் நன்றி சொல்ல வேண்டும். ஏன் என்றால் நமது சனாதான தர்மம் நமது வாழ்க்கையில் பின்னி பினைந்தது. சைவ சிந்தாந்தமாக இருக்கட்டும், வைணவ சித்தாந்தமாக இருக்கட்டும் எது இருந்தாலும் இங்கு நம் வாழ்க்கையில் நடப்பதில் ஆன்மீகத்தை சேர்த்துக்கொண்டு நாம் வாழ்ந்து வந்திருக்கிறோம். சொல்லப் போனால் கடவுள் இல்லை என்று சொல்பவனையும் இந்த சனாதனம் ஆதரித்திருக்கிறது. அப்படிப்பட்ட பல நூல்கள் நமக்கு கிடைக்காமல் போய்விட்டது. இராஜராஜ சோழன் காலத்தில் கிடைத்த பொக்கிஷங்கள் திருவாசகம், மறைகளாகட்டும், இப்போது கிடைத்திருக்கும் போகரின் பாடல்கள் கிடைத்திருக்கிறது. ஆனால், இவையும் சுமார் 23 ஆயிரம் பாடல்கள் தான் கிடைத்திருப்பதாக சொல்கிறார்கள். இன்னும் அதிகமாக இருப்பதாகவும் சொல்கிறார்கள். மதுரை திருமலை நாயக்கர் மகாலில் பார்த்தால் தமிழ் சுமார் 3 ஆயிரம் ஆண்டுகளாக எப்படி உருமாறி வந்திருக்கிறது என்பதை பார்க்கலாம். அப்படியானால் நமக்கு ஓலைச்சுவடிகள் கிடைத்தாலும் அதில் இருக்கும் தமிழ் புரிந்துக்கொள்ள முடியாதபடி இருக்கிறது. 100 ஆண்டுகளுக்கு முன்பு தமிழ் எப்படி இருந்தது என்பது கூட நமக்கு தெரியாது. எழுத்தை சீரமைக்கிறோம் என்று தமிழை கெடுத்து குட்டிச்சுவராக்கியுள்ளார்கள் கடந்த 100 ஆண்டுகளில். இதனால் 100 ஆண்டுகளுக்கு முன்பான நமது வரலாறு தெரியாமல் போய்விட்டது. அந்த காலக்கட்டத்தின் புத்தகங்களை இப்போதுள்ள மாணவர்களால் படிக்க முடியவில்லை. அப்படிப்பட்ட புத்தகங்களில் எழுதியிருப்பதை நாம் புரிந்துக்கொள்ள வேண்டுமானால் தவம் செய்து தான் புரிந்துக்கொள்ள வேண்டும். அப்படி ஒரு புத்தகத்தை தான் வெங்கட்ராமன் ஐயா கொடுத்திருக்கிறார்கள். இந்த காலக்கட்டத்தில் நாம் நம் ஆன்மீகத்தை இழந்திருக்கிறோம், பாரம்பரியத்தை இழந்து நிற்கிறோம், சனாதன தர்மம் என்று பேசுவதையே குற்றமாக பார்க்கப்படுகிறது. நாம் மற்ற மதங்களை மதிக்கிறோம், அதே சமயம் நமது மதத்தை எதிர்ப்பவர்களை தடுக்க முயற்சிப்பதை குற்றமாக பார்க்க கூடிய இடத்தில் நாம் இருந்துக்கொண்டிருக்கிறோம். அப்படி ஒரு நிலையில், நம் அடுத்த தலைமுறைக்கு இதை நாம் எடுத்து செல்லவில்லை என்றால் அது மிகப்பெரிய குற்றமாகும். அப்படி ஒரு நிலையில் இதுபோன்ற புத்தகத்தை, நமக்கு புரியும் தமிழில் கொண்டு வந்ததற்காக நான் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.” என்றார்.
புத்தகத்தை வெளியிட்ட ஸ்ரீ சுவாமி விக்யானந்த் ஜி பேசுகையில்:
“இன்று நாம் போகரை பற்றி பேச வந்திருக்கிறோம். போகரை பற்றி இந்தியாவில் மட்டும் பேசவில்லை, இலங்கையில் பேசுகிறார்கள். மேற்கிந்திய நாடுகளிலும் இதன் சித்தாந்தம் பரவியிருக்கிறது. தமிழ்நாட்டை பொருத்தவரை தமிழை ஒரு மொழியாக மட்டுமே சித்தரிக்கிறார்கள். இது வெறும் மொழி மட்டும் அல்ல இது ஒரு கலாச்சாரம். இந்த கலாச்சாரம் மிக முக்கியமானது. இதை வைத்து பார்க்கும் போது நாம் அனைவரும் மனுபுத்திரர்கள். இந்த வழியில் நாம் வந்தவர்கள். கடைசியாக வாழ்ந்த மனு தமிழகத்தை சேர்ந்தவர். அவர் தான் வாழ்ந்த ஒவ்வொரு ஜீவராசிகளின் ஒவ்வொரு சாம்பிள்களை எடுத்துக்கொண்டு இமயமலைக்கு சென்றார். வட நாட்டில் இருக்கும் ஜீன்கள் தென்னாட்டில் இருப்பதாக சொல்வார்கள். ஆனால், உண்மையில் தென்னாட்டில் இருக்கும் ஜீன்கள் தான் அதிகமாக வடநாட்டில் இருக்கிறது. திராவிடன் என்ற சொல்லே விந்திய மலைக்கு கீழே இருப்பவர்களை தான் குறிக்கிறது. முதல் திராவிடர்களாக மராட்டியர்கள் தான் பார்க்கப்படுகிறார்கள். அதை தாண்டி ஐந்த் திராவிடம் என்று செல்லக்கூடிய ஆந்திரா, கன்னடம், கேரளம், தமிழ்நாடு மற்றும் மகாராஷ்ட்டிரம் என்ற இந்த ஐந்து தேசங்கள் சேர்ந்து தான் திராவிடம். ஆனால் திராவிடம் என்பதை தமிழாக அரசியல்வாதிகள் மாற்றிவிட்டார்கள். நாம் இன்று பேசக்கூடிய மொழி என்பது சிவபெருமானின் உடுக்கை சத்தத்தில் இருந்து வந்தது. அந்த உடுக்கையில் இருந்து வந்த சொற்களில் நாம் எப்படிப்பட்ட வாக்கியங்கள் அமைக்க வேண்டும் என்ற இலக்கணத்தை இந்திரன் எழுதினார். அதில் இருந்து பிரிந்து வந்த சமஸ்கிருதத்திற்கு பானிலி இலக்கணம் அமைத்தார். அதே இலக்கணம் தான் தொல்காப்பியத்திலும் பார்க்கிறோம். ஆக இதன் மூலப்பொருள் சிவனின் உடுக்கையில் இருந்து வந்த ஐந்திரியம் என்ற இலக்கணம் தான். ஆக, தெற்கு, வடக்கு, கிழக்கு மற்றும் மேற்கு என்று நாம் பிரிவினை பார்ப்பது அர்த்தமற்றது. நாம் அனைவருக்கும் ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு தொடர்பு இருக்கிறது. அந்த தொடர்புகளை போகர் போன்ற ரிஷிகளின் நூல்கள் சொல்லியிருந்தாலும், அவை மக்களுக்கு புரியாதபடி இருந்தது. அதை மக்களுக்கு புரியும்படி எளிமையாக வெங்கட்ராமன் இந்த நூல் மூலம் கொடுத்திருக்கிறார். அவருக்கு என் வாழ்த்துகள்.” என்றார்.
நரேந்திரன் பேசுகையில்:
“இந்த காலக்கட்டத்தில் இப்படி ஒரு புத்தகம் மிகவும் அவசியமானது. இதனை மக்களுக்கு எளிமையாக புரியும்படி உருவாக்கி கொடுத்த வெங்கட்ராமன் அவர்களுக்கும், இந்த இளம் வயதில் இப்படி ஒரு புத்தகத்தை உலகத்திற்கு கொடுத்த சத்தியமூர்த்தி அவர்களுக்கும் எனது பாராட்டுகளும் நன்றிகளும். இங்கு ஆன்மீகமும் அறிவியலும் பிரித்து பார்க்கப்படுகிறது. ஆனால், இரண்டுமே ஒன்றோடு ஒன்று பினைந்திருக்கிறது என்பதை போகர் போன்ற ரிஷிகளின் படைப்புகள் நமக்கு புரிய வைக்கிறது. இவைகள் எல்லாமே பொக்கிஷம். சுமார் 3 அல்லது 4 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு போக ரிஷிஷை இவற்றை படைத்ததாக சொல்கிறார்கள், இதற்கு நாம் பெருமை பட வேண்டும். அவர் வழியில் வந்த நாம் இந்த புத்தகத்தை நமது அடுத்த தலைமுறைக்கு எடுத்துச்செல்ல வேண்டும்.” என்றார்.
ஸ்ரீ போகர் சப்தகாண்டம் 7000 புத்தகத்தின் ஆசிரியர் யோகி கி.வெங்கட்ராமன் பேசுகையில், “இந்த நிகழ்வுக்கு வந்திருக்கும் அனைவருக்கும் நன்றி. புத்தகத்தை வெளியிட்ட ஸ்ரீ சுவாமி விக்யானந்த் ஜிக்கு நன்றி. இந்த புத்தகத்தை போகர் எழுதுவதற்கு எத்தனை ஆண்டுகள் ஆனது என்பது எனக்கு தெரியாது, ஆனால் நான் இந்த புத்தகத்தை எழுத 11 ஆண்டுகள் ஆனது. அதற்கு என்ன காரணம் என்றால், மேடையில் இருக்கும் பெரியவர்கள் போல் படித்திருந்தால் விரைவாக எழுதியிருக்க முடியும். ஆனால், நான் எந்த பல்கலைக்கழகத்திலும் படிக்கவில்லை, சாதாரண எஸ்.எஸ்.எல்.சி தான் படித்திருக்கிறேன். போலீஸ் துறையில் கான்ஸ்டாபிளாக சேர்ந்து பணியாற்றினேன் பிறகு அந்த வேலையை விட்டுவிட்டு இந்த வேலையை ஆரம்பித்தேன். இதன் மீது எனக்கு அப்படி ஒரு ஆர்வம் இருந்தது. இந்து மதம் ஆகட்டும் அல்லது இஸ்லாம், கிறிஸ்தவ மதமாகட்டும் உலகத்தின் எந்த மதம் ஆனாலும், அந்த மதத்தை பற்றி தெரிந்துக்கொள்ள அந்த மத நூல்களை முதலில் புரிந்துக்கொள்ள வேண்டும். இந்த புத்தகத்தில் உள்ளதை நீங்கள் சாதாரணமாக எடுத்துக்கொண்டாலும் பரவாயில்லை. ஆனால், இதன் அடிப்படை எங்கிருந்து வருகிறது, நாம் ஏன் இன்னும் பெரியவர்களின் பேச்சை கேட்பதில்லை என்பதை புரிந்துக்கொள்ள வேண்டும்.
இந்த நூழ் எழுதிய காலம் கலியுகம் பிறந்து 80 வது ஆண்டு. இப்போது நடப்பது 1186. இந்த நூல் வழியில் பலர் பேர் நடந்திருக்கிறார்கள். இந்த இடத்தில் இந்த நூலின் பொருள் உரை அரங்கேறுகிறது. ஆனால் இந்த நூழ் எங்கு அரங்கேறியது என்ற செய்தி இதுவரை நம்ம யாருக்கும் தெரியாது. முதல் முதலில் 7000 நூல் எழுதி அப்போது இருந்த சித்தர்கள் மகான்களிடம் கொடுத்த போது அதை யாரும் அங்கீகரிக்கவில்லை. இதனால் போகர் வேதனை அடைந்தார். அவருடைய வரலாற்றை படித்தால் உங்களுக்கு தெரியும். அங்கீகாரம் கிடைக்காததால் வேதனை அடைந்த போகர், தனது குருவிடம் இந்த நூலை ஒப்படைக்க முடிவு செய்கிறார். அவருடைய குரு சீன தேசத்தில் இருக்கிறார். அவரிடம் கொடுப்பதார்காக அவர் அங்கு செல்கிறார். அப்போது போகருக்கு பனிவிடை செய்துக்கொண்டிருக்கும் புலிபானி சித்தர், யார் வேண்டுமானாலும் இந்த நூலை படிக்கலாம், அதனால் எனக்கு இந்த நூலை கொடுங்கள் என்று கேட்கிறார். உடனே போகர் அவருக்கு ஒரு நகல் கொடுப்பதற்காக ஒலைச்சுவடியை இரண்டு கட்டாக பிரிக்கிறார். சீன தேசத்துக்கு ஒன்று, நமக்கு ஒன்று கிடைக்கிறது. புலிபானி சித்தரின் பரம்பரை அந்த நூலை பாதுகாக்கிறது. அன்று அவர் வாங்கவில்லை என்றால் இன்று நமக்கு போகரையே தெரியாமல் இருந்திருக்கும். நம் பாரத தேசத்தை தவிர வேறு எந்த நாட்டிலும் ரிஷிகளின் தியான முறை கிடையாது. அமெரிக்க ஜாப்பான் போன்ற நாடுகளில் பல்வேறு ஆராய்ச்சிகள் செய்கிறார்கள், பல தொழில்நுட்பங்களை வைத்திருக்கிறார்கள் ஆனால் நம்மிடம் இருக்கும் தியானம் முறை அவர்களிடம் இல்லை. அதனால் தான் இப்போதும் பல வெளிநாட்டவர் திருவண்ணாமலைக்கு வந்துக்கொண்டிருக்கிறார்கள். உடம்பில் இருக்கும் சிறு சிறு செல்களை கூடா ஆய்வு செய்கிறார்கள் ஆனால் உயிர் எங்கிருக்கிறது என்று அவர்களால் சொல்ல முடியாது. அதை தெரிந்தவர்கள் தான் சித்தர்கள். அதனால் தான் அதை நிலை பெற வைத்து சாகாமல் இருந்தர்கள். நிறைய பேர் இந்த ஜன்மே போதும் அடுத்த பிறவி வேண்டாம் என்று சொல்வார்கள். அப்படியானால் நீங்கள் முதலில் இறக்காமல் இருக்க வேண்டும். அப்படி இறக்காமல் இருக்க என்ன செய்ய வேண்டும் என்பதை தெரிந்தவர்கள் தான் சித்தர்கள். அவர்கள் அவற்றை தான் ஓலைகளில் எழுதி வைத்திருக்கிறார்கள். அவைகள் நமக்கு ஏன் தெரியவில்லை என்றால் கல்விநிலை மாற்றம் தான். ஒரு பொருளை வாங்கும் போது அந்த காலத்தில் ஒரு குருனி என்ரு சொல்கிறார்கள். இன்று அரை கிலோ, ஒரு கிலோ என்று சொல்கிறோம். இந்த வித்தியாசம் யாருக்கும் தெரியாது. குருனி என்றால் என்ன என்பது 60 வயதுடையவர்களே தெரியாத போது, அவருடைய பேத்திக்கு எப்படி தெரியும். இப்படி ஒரு காரணத்தால் தான் இந்த நூல் இவ்வளவு காலம் எடுத்துக்கொண்டது. அந்த காலத்தின் அளவு முறையும், இந்த காலத்தின் அளவு முறைக்கும் உள்ள ஒற்றுமை என்ன என்பது இந்த புத்தகத்தில் இருக்கிறது. இது வேறு எந்த புத்தகத்திலும் உங்களுக்கு கிடைக்காது.
இந்த நூலியில் இருக்கும் செய்யூள்களுக்கு பலர் பல அர்த்தங்களை சொல்வார்கள். சிலர் தெரியாததை தெரியவில்லை என்று சொல்வார்கள், ஆனால் சிலரோ தெரியாதை சொல்ல வெட்கப்பட்டு சித்தர் பொய்யாக எழுதிவிட்டார். அதில் இருப்பதை செய்து பார்த்தேன் சரியாக வரவில்லை என்று சொல்வார்கள். ஆனால், உண்மையில் அவர்களுக்கு அதற்கான சரியான அர்த்தம் தெரியாமல் இருப்பது தான். அதனால் தான் அவர்களை போன்றவர்களுக்கு எளிமையாக எடுத்து சொல்ல வேண்டும் என்று இந்த புத்தகத்தை கொண்டு வந்தோம்.
போதி தர்மர் யார் என்பது 7 ஆம் அறிவு படம் மூலம் தெரிந்துக் கொண்டோம். அதற்கு முன்பு அவரை பற்றி யாருக்கும் தெரியாது. அதுபோல், இப்போது போகர் யார்? அகத்தியர் யார்? என்பது நமது இளைய தலைமுறைக்கு தெரியவில்லை. இதற்கு காரணம் நமது அடிப்படை கல்வி முறை தான். அவர்களுடைய சாஸ்திரங்களை புரிந்துக்கொள்ளும் அளவுக்கு நமது கல்வி முறை இப்போது இல்லை என்பது தான் உண்மை. இந்த புத்தகங்களை படித்தால், அவர்களை பற்றி நம் இளைய தலைமுறைக்கு சொல்ல வேண்டியதில்லை அவர்களே புரிந்துக்கொள்வார்கள். நமது ரிஷிகள் ஒரு முறை இரண்டு முறை சமாதியில் இருந்து எழவில்லை. பல முறை எழுந்திருக்கிறார்கள். அதுபோன்ற 48 ரிஷிகள் பற்றி இந்த நூலில் இருக்கிறது. இந்த புத்தகத்திற்கு நான் ஆசிரியர் இல்லை, நான் விளக்கம் தான் அளித்திருக்கிறேன். எழுதியவர் போகர் தான். அவர் இதை எப்படி எழுதினார் என்று சிலர் கேட்கிறார்கள். உலகத்தில் சித்தாந்தம் என்ற வாய்ப்பை கொடுத்தவர் சிவன். அவர் எழுதிய 7 லட்சம் புத்தகங்கள் உலகத்தின் 108 அண்டத்தில் இருக்கிறது அதை நீ சென்று பார்த்துவா என்று போகரின் பாட்டன் திருமூலர் சொல்கிறார். அங்கு சென்று பார்த்தால் நந்தி காலில் மிகப்பெரிய நூலகமே இருக்கிறது. அதில் இருக்கும் புத்தகங்களின் எண்ணிக்கை 38 கோடி. அதில் சிவபெருமான் எழுதிய 7 லட்சம் புத்தகங்களை எடுத்து மொத்தத்தையும் படித்து முடித்தவர், இதை ஒரு மனிதரால் எப்படி படிக்க முடியும், இதில் இருப்பதை எப்படி படித்து செய்ய முடியும். இதை சுருக்கமாக கொடுத்தால் நன்றாக இருக்குமே என்று சொல்கிறார். அப்போது நந்தி சிவபெருமான் எழுதியதை யாரால் சுருக்கி எழுத முடியும், என்று கேட்க, நான் செய்கிறேன் என்று சொல்கிறார். அந்த 7 லட்சம் ஓலை சுவடிகளை தான் 7 ஆயிரம் பாடலாக போகர் எழுதினார்.
இதில் விஞ்ஞானம் மருத்துவம் என அனைத்தும் இருக்கிறது. பல சாதனங்களை போகர் கண்டுபிடித்துள்ளார். டெலஸ்கோப் கருவியை கண்டுபிடித்ததும் போகர் தான் ஆனால் இப்போது அது வேறு ஒருவர் கண்டுபிடித்ததாக இருக்கிறது. 5 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த போகர் கண்டுபிடித்தது குறித்து இப்போதுள்ள நமது பிள்ளைகளுக்கு யார் சொல்வது, யாராலும் சொல்ல முடியாது. காரணம் அவர்களுக்கே இது பற்றி தெரியாது, புரியாது. ஆனால், அவை அனைத்தும் எளிமையாக புரியும் வகையில் போகர் 7000 புத்தகம் எழுதப்பட்டுள்ளது.
6 வகையான காலநிலை கொண்ட நம் பாரததேசத்தில் ஆன்மீக வளர்ச்சியும், கலாச்சார வளர்ச்சி, சமூக ஒழுக்கம், உயிரின் பரினாம வளர்ச்சி ஆகியவை இருக்கிறது. அப்படிப்பட்ட தேசத்தில் நாம் பிறந்திருப்பதால் நாம் அனைவரும் பெருமை அடையளாம். இந்த நூலை நான் மிக சாதாரணமாக எழுதியிருக்கிறேன். இந்த நூலை வெளியிட்ட எனது சிஷ்யர். அவர் சிஷ்யர் என்று சொல்வதில் எனக்கு தான் பெருமை சத்யமூர்த்தி அவரிடம் தான் சொன்னேன். இப்படி ஒரு நூலை எழுதிக்கொண்டிருக்கிறேன் என்று சொன்னேன். ஆனால், இந்த புத்தகத்தை வெளியிட என்னிடம் பணம் இல்லை. இது ரொம்ப தர்மான புத்தகம், அதனால் செலவும் அதிகம் ஆனது. அதனால் என்னிடம் அவ்வளவு பெரிய தொகை இல்லை என்று சொன்ன போது. இது பெரிய விஷயமா சாமி, நான் செய்கிறேன், இப்படிப்பட்ட புத்தகம் வெளியே வர வேண்டும். உலகத்தின் அனைத்து பகுதிகளுக்கும் செல்ல வேண்டும், மக்கள் இதனை படிக்க வேண்டும், அதனால் இந்த புத்தகத்தை நான் வெளியிடுகிறேன் என்று சொன்னவர் சத்யமூர்த்தி தான். அவருக்கு தான் முதலில் நான் நன்றி சொல்ல வேண்டும், அவர் இல்லை என்றால் இந்த புத்தகம் வெளியே வந்திருக்காது.
இப்படி ஒரு நிகழ்ச்சியில், இவ்வலவு பெரிய சான்றோர்கள் முன்னிலையில் இந்த புத்தகத்தம் வெளியாவது மகிழ்ச்சியளிக்கிறது. போகரின் நூலை மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் ரிஷிகளின் முன்னிலையில் அகத்தியர் வெளியிட்டது போன்ற ஒரு நிகழ்வாகத்தான் இதை நான் பார்க்கிறேன். அப்போது அங்கிருந்தவர்கள் தான் இன்று உருமாறி இங்கு வந்திருக்கிறார்கள் என்று நினைக்கிறேன். சாதாரண மனிதர்களால் இந்த புத்தகத்தை வெளியிட முடியாது. இந்த புத்தகத்தில் சிறு சிறு பிழைகள் இருந்தால் என்னை மன்னிக்கவும். இந்த புத்தகத்தை உலகம் முழுவதும் கொண்டு செல்ல இருக்கும் ஊடகத்தினருக்கும் என் நன்றிகள்.” என்றார்.
நிகழ்ச்சியின் இறுதியில் ஸ்ரீ சுவாமி விக்யானந்த் ஜி ’போகர் சப்தகாண்டம் 7000’ புத்தகத்தை வெளியிட சிறப்பு விருந்தினர்கள் அனைவரும் பெற்றுக்கொண்டார்கள்.
ஒருவரது ஜாதகத்தில் ராகுவால் ஏதேனும் தோஷம் இருந்தால் அதில் இருந்து விடுபட வெள்ளிக்கிழமை அன்றும், ராகு தசை மற்றும் ராகு புத்தி காலத்திலும் விரதம் இருந்து, ராகு பகவானுக்கு ராகு காலத்தில் மந்தாரை மலரால் அர்ச்சனை செய்து உளுந்தால் செய்யப்பட்ட பலகாரத்தை நைவேத்தியம் செய்து, ராகு காயத்ரி மந்திரத்தை 108 முறை ஜபித்து வர வேண்டும். அதோடு ராகு காலத்தில் துர்கை அம்மனையும் வழிபட்டு வந்தால் ராகு தோஷம் நீங்கும்.
கேது தோஷம்:
ஒருவரது ஜாதகத்தில் கேதுவால் ஏதேனும் தோஷம் இருந்தால் அதில் இருந்து விடுபட திங்கட்கிழமை அன்றும், கேது தசை மற்றும் கேது புக்தி காலத்திலும் விரதம் இருந்து, கேது பகவானுக்கு பல வகை மலர் கொண்டு அர்ச்சனை செய்து, சித்ரான்னம் நைவேத்தியம் செய்து, கேது காயத்ரி மந்திரத்தை 108 முறை ஜபித்து வர வேண்டும். அதோடு விநாயகப்பெருமானையும் தொடர்ந்து வழிபட்டு வர கேது தோஷம் விலகும்.
வைகாச மாதம் தேய்பிறையில் வருகின்ற ஏகாதசிக்கு வருதினி ஏகாதசி என்று பெயர். இந்த ஏகாதசி விரதம் எல்லா வகையான பாவங்களையும் போக்கி சௌபாக்கியத்தைத்தரக்கூடியது.
பிறவியைக் கடல் என்பார்கள். அந்தப் பிறவிக் கடலைக் கடக்க ஒரு தெப்பம் தேவை. அந்தத் தெப்பமே இந்த ஏகாதசி விரதம் என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன. யாரொருவர் இந்த ஏகாதசியின் பெருமைகளை படித்தாலோ அல்லது காதால் கேட்டாலோ அவர் நிச்சயமாக ஆயிரம் பசுக்களை தானம் செய்வதின் பலனை அடைவார் மற்றும் தன் எல்லா பாவ விளைவுகளினின்றும் விடுபட்டு பகவான் விஷ்ணுவின் பரமபதத்தை அடைவார்.
ஏப்ரல் / மே மாதங்களில் தேய்பிறையில் தோன்றக்கூடிய ஏகாதசியின் பெருமைகளைப் பற்றி பவிஸ்யோத்தர புராணத்தில் பகவான் கிருஷ்ணருக்கும் மகாராஜா யுதிஸ்டிரக்கும் இடையிலான உரையாடலின் விவரிக்கப்பட்டுள்ளது. பகவான் கிருஷ்ணர் பதிலளித்தார் என தருமை மன்னா, இந்த ஏகாதசியின் பெயர் வருத்தினி.
இது ஒருவருக்கு இந்த வாழ்க்கையிலும் அதற்கு பிறகும் நல்ல அதிர்ஷ்டத்தை கொடுக்கும். இந்த ஏகாதசி விரதத்தை கடைப்பிடித்தால் ஒரு ஜீவன் தன் பாவ விளைவுகளை குறைத்துக்கொண்டு, நிரந்தமான ஆனந்தத்தை அடைந்து மிகுந்த பாக்கியசாலி ஆகிறான்.
இந்த விரதத்தை கடைப்பிடிப்பதால் ஒரு துர்பாக்கியசாலியான மனைவியும் பாக்கியசாலி ஆகிறாள். ஒருவன் இப்பிறவியிலும் அதற்கு பின்னரும் ஆனந்தத்தையும் நல்ல அதிர்ஷ்டமும் அடைகிறான். அவர்கள் அனைத்து பாவ விளைவுகளும் நீங்கப்பெற்று பிறப்பு இறப்பு என்ற சூழலில் இருந்து விடுபட்டு இறைவனின் தூய பக்தி தொண்டை அடைகின்றனர். இந்த ஏகாதசி விரதத்தை சரியான முறையில் கடைபிடித்து மன்தாதா என்ற மன்னன் முக்தி பெற்றார். மேலும் துந்துமாரா போன்ற பல மன்னர்கள் இந்த ஏகாதசியை கடைப்பிடித்து முக்தி பெற்றனர்.
பத்தாயிரம் ஆண்டுகள் தவம் புரிவதன் மூலம் அடையும் பலனை ஒருவர் இந்த ஏகாதசியை கடைப்பிடிப்பதன் மூலம் எளிதில் அடைவார். சூரிய கிரகணத்தின்போது குருக்ஷேத்திரத்தில் 40 கிலோ தங்கத்தை தானமாக கொடுப்பதன் மூலம் அடையும் புண்ணியத்தை ஒருவர் சுலபமாக இந்த வருத்தினி ஏகாதசியை கடைப்பிடிப்பதன் மூலம் அடைவார். மன்னர்களில் சிறந்தவனே, ஒரு குதிரையை தானமளிப்பதைவிட ஒரு யானையை தானம் அளிப்பது சிறந்தது.
யானையை தானமளிப்பதைவிட நிலத்தை தானமளிப்பது சிறந்தது. நிலத்தை தானமளிப்பதைவிட எள் தானம் உயர்ந்தது எள் தானத்தைவிட பொன் தானம் உயர்ந்தது. பொன் தானத்தைவிட உணவு தானிய தானம் உயர்ந்தது. உணவு தானிய தானத்தைவிட உயர்ந்த தானம் எதுவும் இல்லை. ஓ, மன்னர்களில் சிறந்தோனே, உணவு தனியங்களை தானமளிப் பதன் மூலம் ஒருவர் தன் முன்னோர்களையும், தேவர்களையும் மற்றும் எல்லா ஜீவராசிகளையும் திருப்தி படுத்த முடியும்.
ஒருவர் தன் மகளை தாரைவார்த்து கொடுப்பது உணவு தானியங்களை தானமளிப்பதற்கு சமம் என கற்றறிந்த சான்றோர்கள் தெரிவிக்கின்றனர். உணவு தானிய தானத்தையும் பசுதானத்தையும் முழு முதற்கடவுளே சமபடுத்துகிறார். எல்லாவற்றிற்கும் மேலாக அனைத்து வகையான தானங்களை விட மற்றவர்களுக்கு ஞானத்தை அளிப்பதே மிக உயர்ந்ததாகும். வருத்தினி ஏகாதசியை கடைப்பிடிப்பதால் ஒருவர் எல்லா வித தானியங்களின் பலனையும் அடைவார்.
தன் மகளை விற்று வாழ்க்கை நடத்துபவன் மிகப்பெரிய பாவத்தை செய்தவன் ஆகிறான். அத்தகையவன் கடைசி பிரளயம் வரும் வரை நரகத்திலேயே வாழ வேண்டியவன் ஆகிறான். ஆகையால் ஒருவன் தன் மகளை தாரை வார்க்கும் பொருட்டு எந்த ஒரு செல்வத்தையும் ஏற்கக் கூடாது.
ஒரு குடும்பஸ்தர், பேராசையின் காரணத்தால், செல்வத்திற்காக தன் மகளை விற்றால், அடுத்த பிறவியில் அவன் ஒரு பூனை உடலை அடைகிறான். ஆனால், ஒருவன் தன் வசதிக்கேற்ப ஆபரணங்களால் தன் மகளை அலங்கரித்து, ஒரு நல்ல வரனுக்கு தாரை வார்த்து கொடுப்பதால் தான் அடையும் புண்ணியத்தை யமராஜாவின் செயலாளரான சித்திரகுப்தனாலும் கணக்கிட முடியாது.
இந்த ஏகாதசியைக் கடைப்பிடிப்பவர் வெண்கல பாத்திரத்தில் உண்ணுதல் மாமிசத்தை உண்ணுதல்,கீரை தேன் போன்றவற்றை உண்ணுதல், மற்றவர்கள் சமைத்த உணவை ஏற்றுக்கொள்ளுதல், போன்றவற்றை தவிர்க்க வேண்டும். சூதாட்டம், உறக்கம், வெற்றிலை பாக்கை சுவைத்தல், மற்றவர்களை குறை சொல்வது, பாவப்பட்ட ஒருவருடன் பேசுவது, கோபம் கொள்வது, பொய் சொல்வது ஆகியவற்றை ஏகாதசியன்று தவிர்க்க வேண்டும்.
மேலும் ஏகாதசிக்கு முன்தினத்திலிருந்தே உடலுறவை தவிர்க்க வேண்டும். ஒருவர் இந்த ஏகாதசியை விதிகளுக்குட்பட்டு கடைபிடித்தால் அவருடைய எல்லா பாவவிளைவுகளும் அழிந்து விடும், மற்றும் அவர் மிக உயர்ந்த இலக்கை அடைவார்.
ஒரு காலத்தில் இந்த பஞ்சவடியில் சித்தர்களும், முனிவர்களும் தவம் செய்து வந்தனர். பல ரிஷிகள் வேத சாஸ்திரங்களை பலருக்கும் உபதேசம் செய்தனர். இதன் அடிப்படையில் இந்த புண்ணிய இடத்தில் ஆஞ்சநேயர் கோவில் கட்ட முடிவானது. ஆஞ்சநேயர் மாபெரும் சக்தி படைத்தவர் என்பதால், மிகப்பிரமாண்டமான சிலை அமைக்கப்பட்டது. செங்கல்பட்டு அருகிலுள்ள சிறுதாமூரில் கிடைத்த 150 டன் எடை கருங்கல்லைக் கொண்டு பஞ்சமுக ஆஞ்சநேயர் சிலை உருவாக்கப்பட்டது.
ராமனுக்கும், ராவணனுக்கும் போர் நடந்த போது, ராவணன் ஆயுதங்களை இழந்தான். இதனால் அவனை மறுநாள் வரும்படி அனுப்பி விட்டார். ராமர் இவ்வாறு செய்தது தன்னை திருத்துவதற்கு என்பதை ராவணன் உணரவில்லை. மீண்டும் ராமருடன் போர் செய்ய நினைத்த ராவணன், "மயில் ராவணன்' என்ற மற்றொரு அசுரனின் துணையுடன் போருக்கு வந்தான். ராமரை அழிக்க மயில் ராவணன் கொடிய யாகம் நடத்த திட்டமிட்டான்.
இந்த யாகம் நடந்தால் ராம-லட்சுமணனின் உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்று விபீஷணன் ராமரிடம் தெரிவித்தான். அவனை அழிக்க ஆஞ்சநேயரை அனுப்பினார் ராமன். நரசிம்மர், ஹயக்கிரீவர், வராகர், கருடன், ஆகியோரை வணங்கி ஆசி பெற்ற ஆஞ்சநேயருக்கு, அந்த தெய்வங்கள் தங்களின் சக்தியை அளித்தனர். இதன்மூலம் ஆஞ்சநேயர் பஞ்சமுகம் கொண்டு விஸ்வரூபம் எடுத்து மயில் ராவணனை அழித்தார்.
ஜெயமங்கள ஆஞ்சநேயரை வழிபடுபவர்களுக்கு நரசிம்மரின் அருளால் செயல்களில் வெற்றி, லட்சுமி கடாட்சம், ஹயக்கிரீவரின் அருளால் அறிவாற்றல், ஆன்மிக பலம், வராகரின் அருளால் மனத்துணிவு, கருடனின் அருளால் நஞ்சு ஆபத்து விலகும் தன்மை, ஆஞ்சநேயர் அருளால் மன அமைதி, சகல சவுபாக்கியம் கிடைக்கும்.
12 ஏக்கர் நிலப்பரப்பில் தெற்கு பார்த்து கோவில் அமைந்துள்ளது. ராமர், சீதை, லட்சுமணன், சத்ருக்கன், பரதன் ஆகியோர் ஒரு சன்னதியில் அருள்பாலிக்கின்றனர். மூலவர் ஆஞ்சநேயருக்கு மேல் 118 அடி உயர விமானமும், அதன் மீது 5 அடி உயர கலசமும் அமைக்கப்பட்டுள்ளது. மூலவருக்கு அபிஷேகம் செய்ய லிப்ட் இருக்கிறது.
இதற்கு 1008 லிட்டர் பால் தேவைப்படும். இங்குள்ள 1200 கிலோ எடையுள்ள மணியை ஒலித்தால் 8 கி.மீ. தூரம் ஒலி கேட்கும்.பெரிய தீர்த்த கிணறும் உள்ளது. இங்கு ராமரின் பாதுகைகள் வழிபாட்டிற்காக வைக்கப்பட்டுள்ளன. இது சந்தன மரத்தால் செய்யப்பட்டது. இதற்கு 1.25 கிலோ எடையுள்ள தங்க கவசம் அணிவிக்கப்பட்டுள்ளது.
சீதையை மீட்பதற்காக ராமர், ராமேஸ்வரத்தில் இருந்து இலங்கை சென்றபோது, சேது சமுத்திரத்தில் பாலம் அமைக்கப்பட்டது. நளன், நீலன் என்ற வானர வீரர்கள் இந்த பாலப்பணியை நடத்தினர். நளன் தேவசிற்பியான விஸ்வகர்மாவின் மகன். விஸ்வகர்மா தன் மனைவிக்கு, "என்னைப்போலவே உனக்கொரு மகன் பிறப்பான். எனக்குரிய திறமை அனைத்தும் அவனிடமும் இருக்கும்,''என வரம் கொடுத்தார்.
இதனால் நளன் தன் தந்தையைப்போல் சிற்ப பணியில் சிறந்து விளங்கினான். இவனால் கடலிலும் பாலம் கட்ட முடிந்தது. இந்த மிதக்கும் கல்லின் ஒரு பகுதி இக்கோவிலில் தரிசனத்திற்கு வைக்கப்பட்டுள்ளது. எட்டு கிலோ எடையுள்ள இந்தக்கல்லை தண்ணீர் நிறைந்த ஒரு பெரிய பாத்திரத்தில் போட்டு பூக்களால் அலங்கரித்துள்ளார்கள்.
நாகை மாவட்டம் நாகூரில் உலகப்புகழ்பெற்ற தர்கா உள்ளது. இங்கு கந்தூரி விழா வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம். அதன்படி கந்தூரி விழா வருகிற 1-ந் தேதி (சனிக்கிழமை) பாய்மரம் ஏற்றும் நிகழ்ச்சியுடன் தொடங்க உள்ளது.
இதை தொடர்ந்து 4-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) கொடியேற்றம் நிகழ்வும், 13-ந் தேதி (வியாழக்கிழமை) சந்தனக்கூடு ஊர்வலமும், 14-ந் தேதி (வெள்ளிக்கிழமை) அதிகாலை நாகூர் ஆண்டவர் சமாதிக்கு சந்தனம் பூசும் நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது. இந்த விழாவில் பங்கேற்பதற்காக இந்தியாவின் பல்வேறு இடங்களில் இருந்தும் ஏராளமானோர் நாகூர் வருவார்கள்.
இந்த நிலையில் நாகூர் தர்கா கந்தூரி விழாவுக்கான முன்னேற்பாடுகள் பணிகள் குறித்து நாகை மாவட்ட கலெக்டர் அருண் தம்புராஜ், போலீஸ் சூப்பிரண்டு ஜவஹர் ஆகியோர் நேற்று நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது கொடி மற்றும் சந்தனக்கூடு ஊர்வலம் செல்லும் இடங்களை பார்வையிட்டனர். மேலும் விழா நாட்களில் தர்காவிற்கு வருபவர்களுக்காக செய்யப்பட்டுள்ள அடிப்படை வசதிகள், பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து தர்கா நிர்வாக அதிகாரிகளிடம் கலெக்டர் கேட்டறிந்தார்.
தொடர்ந்து ஆண்டவர் சமாதி, தலைமாட்டு வாசல், கால்மாட்டு வாசல், தர்கா குளம், அலங்கார வாசல், கடைத்தெரு உள்ளிட்ட பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டனர்.
விழா காலங்களில் அரசின் கொரோனா வழிகாட்டு விதிமுறைகளை பின்பற்றி முககவசம் அணிந்து சமூக இடைவெளி பின்பற்ற வேண்டும் என கலெக்டர், பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். ஆய்வின்போது நாகை நகராட்சி ஆணையர் ஸ்ரீதேவி, துணை போலீஸ் சூப்பிரண்டு சரவணன், தர்கா நிர்வாக மேலாளர் ஜெகபர்உசேன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வைகுண்ட ஏகாதசி தரிசனத்துக்காக சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
இது குறித்து திருமலை-திருப்பதி தேவஸ்தான கூடுதல் முதன்மைச் செயல் அலுவலர் ஏ.வி.தர்மாரெட்டி கூறியதாவது:-
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருகிற 13-ந்தேதி வைகுண்ட ஏகாதசி விழா நடக்கிறது. அதையொட்டி பக்தர்களின் வசதியை கருத்தில் கொண்டு ஜனவரி மாதம் 1-ந்தேதி ஆங்கில புத்தாண்டு தரிசனம் மற்றும் 13-ந்தேதியில் இருந்து 22-ந்தேதி வரை 10 நாட்கள் வைகுண்ட ஏகாதசிக்காக சிறப்பு தரிசன ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
திருப்பதியில் மகதி கலையரங்கம், மாநகராட்சி அலுவலகம், ராமச்சந்திரா பஷ்கரணி, பைராகிபட்டிடையில் உள்ள ராமாநாயுடு பள்ளிக்கூடம், மார்க்கெட் யார்டு ஆகிய 5 இடங்களில் கவுண்ட்டர்கள் அமைக்கப்பட்டு நாள் ஒன்றுக்கு 5 ஆயிரம் வீதம் மொத்தம் 50 ஆயிரம் இலவச தரிசன டிக்கெட்டுகள் வழங்கப்படும். ஒமைக்ரான் பரவல் பாதிப்பை அடுத்து உள்ளூர் பக்தர்களுக்கு மட்டுமே இந்த இலவச டோக்கன்கள் வழங்கப்படும்.
சாதாரண பக்தர்களின் வசதிக்காக ஜனவரி மாதம் 1-ந்தேதி ஆங்கில புத்தாண்டு தரிசனம், 13-ந்தேதியில் இருந்து 22-ந்தேதி வரை வைகுண்ட ஏகாதசி தரிசனம் ஆகியவற்றில் முக்கிய பக்தர்களுக்கு வி.ஐ.பி. பிரேக் தரிசனம் வழங்கப்படும். முக்கிய பிரமுகர்கள் வழங்கும் சிபாரிசு கடிதங்கள் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது, நிராகரிக்கப்படும்.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு ஜனவரி மாதம் 11-ந்தேதி கோவில் ஆழ்வார் திருமஞ்சனம் எனப்படும் தூய்மைப்பணி நடக்கிறது.
13-ந்தேதி வைகுண்ட ஏகாதசி அன்று காலை 9 மணியில் இருந்து காலை 10 மணி வரை கோவிலின் நான்கு மாடவீதிகளில் தங்கத்தேரோட்டம் நடக்கிறது. அதில் ஸ்ரீதேவி, பூதேவி, மலையப்பசாமி எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலிப்பார்கள். வைகுண்ட துவாதசி அன்று அதிகாலை 5 மணியில் இருந்து காலை 6 மணி வரை ஏகாந்தமாக சக்கர ஸ்தானம் (சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரி) நடக்கிறது.
கொரோனா பரவலை தடுக்க கவுண்ட்டர்களிலும், கோவில் உள்ேளயும் குழாய்கள் மூலம் (ட்ரை ஓசோன்) கிருமி நாசினி தெளிக்கும் பணி மேற்கொள்ளப்படும். அலிபிரி சோதனைச் சாவடி, திருமலையில் உள்ள அறை ஒதுக்கீடு மையங்கள், வைகுண்ட கியூ காம்ப்ளக்ஸ், லட்டு கவுண்ட்டர்களில் கிருமி நாசினி தெளிக்கப்படும்.
திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய வரும் அனைத்துப் பக்தர்களும் 48 மணி நேரத்துக்கு முன்பாக எடுக்கப்பட்ட கொரோனா தொற்று இல்லை என்ற சான்றிதழ், தடுப்பூசி போட்டதற்கான சான்றிதழ் ஆகியவற்றை கட்டாயம் கொண்டு வர வேண்டும்.
பக்தர்கள் சரியாக முகக் கவசம் அணிய வேண்டும். இடைவெளியை பின்பற்றி சாமி தரிசனம் செய்ய வேண்டும். அடிக்கடி கைகளை கிருமி நாசினியால் சுத்தம் செய்ய வேண்டும்.
ரூ.300 டிக்கெட்டுகள் ஆன்லைன் மூலம் விற்பனை செய்யப்படுகிறது. திருப்பதியில் உள்ள கவுண்ட்டர்களில் உள்ளூர் பக்தர்களுக்கு நாள் ஒன்றுக்கு 5 ஆயிரம் இலவச தரிசன டிக்கெட்டுகள் வழங்கப்படுகிறது.
ஜனவரி மாதம் 1-ந்தேதி ஆங்கில புத்தாண்டு தரிசனத்துக்காக ஸ்ரீவாணி டிரஸ்ட்டுக்கு காணிக்கை வழங்கிய பக்தர்களுக்கு 1000 பிரேக் தரிசன டிக்கெட்டுகள் வழங்கப்படுகிறது. ஜனவரி மாதம் 13-ந்தேதி வைகுண்ட ஏகாதசி அன்று ஸ்ரீவாணி டிரஸ்ட் பக்தர்களுக்கு 1000 மகா லகு தரிசன (தூரத்தில் இருந்து வழிபடுதல்) டிக்கெட்டுகள் வழங்கப்படுகிறது.
ஜனவரி மாதம் 14-ந்தேதியில் இருந்து 22-ந்தேதி வரை 9 நாட்களுக்கு ஒரு நாளைக்கு 2 ஆயிரம் வீதம் லகு (மூலவருக்கு சற்று அருகில் இருந்து வழிபடுதல்) தரிசன டிக்கெட்டுகள் வழங்கப்படுகிறது. ஆர்ஜித சேவையில் ஜனவரி மாதத்துக்கு ஒரு நாளைக்கு 5 ஆயிரத்து 500 டிக்கெட்டுகள் வீதம் வழங்கப்படுகிறது.