Articles by "சட்டம்"

சட்டம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

கொரோனா விதிகளை பின்பற்ற வேண்டும்- சென்னை உயர்நீதிமன்றம்


சென்னை: 

தேர்தல் பிரசாரங்களின் போது முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளியை கடைப்பிடித்தல் உள்ளிட்ட கொரோனா தடுப்பு விதிகளை அரசியல் கட்சிகளும், வேட்பாளர்களும் பின்பற்ற வேண்டும் என அறிவுறுத்த தேர்தல் ஆணையத்துக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை உயர்நீதிமன்றத்தில் மதுரை ஒத்தக்கடையைச் சேர்ந்த ஜலாவுதீன் என்பவர் தாக்கல் செய்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:

தமிழக சட்டசபை தேர்தலில் மக்களின் வாக்குகளை பெற அரசியல் கட்சிகள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்தாண்டு இந்தியாவில் கொரோனா நோய்த் தொற்றுப் பரவலைத் தொடர்ந்து நாடு முழுவதும் பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டது. 

தற்போது பல்வேறு தளர்வுகளுடன் பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அரசியல் கட்சியினர், கூட்டம் கூட்டமாக சென்று மக்கள் மத்தியில் பிரசாரம் செய்கின்றனர்.


இதனால் கொரோனா நோய்த் தொற்றுப் பரவல் அதிகரிக்க வாய்ப்புள்ளது. எனவே அரசியல் கட்சிகள் பிரசாரம் செய்ய அனுமதிக்க கூடாது என தமிழக அரசுக்கும், தேர்தல் ஆணையத்துக்கும் உத்தரவிட வேண்டும். அரசியல் கட்சிகள், தொலைக்காட்சி, பேஸ்புக், டுவிட்டர் மூலம் பிரசாரம் செய்யலாம். 

இவ்வாறு அந்த மனுவில் குறிப்பிட்டிருந்தார். இந்த வழக்கு, தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.

அப்போது நீதிபதிகள், ‛அண்மை காலமாக கொரோனா பரவல் அதிகரித்து வருவது, இராண்டாவது அலையாக இருக்கலாம். தேர்தல் அறிவிப்பு வெளியிடப்பட்டு, ஏப்ரல் 6ம் தேதி தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அதில் தலையிட முடியாது' எனக்கூறி பிரசாரங்களுக்கு தடை விதிக்க மறுத்து விட்டனர். 

அதேநேரம், பிரசார கூட்டங்களில் கலந்து கொள்ளும் அனைவரும் முகக்கவசம் அணிவதையும், சமூக இடைவெளியை பின்பற்றுவதை அரசியல் கட்சிகளும், வேட்பாளர்களும் உறுதி செய்ய வேண்டும். இதுதொடர்பான அறிவுறுத்தல்களை பிறப்பிக்க வேண்டும் என தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட்டு, வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டனர்.



 பள்ளிகள் திறப்பு : ஐகோர்ட் உத்தரவு 


சென்னை:


கொரோனா வைரஸ் பரவல் காரணமாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் மூடப்பட்ட பள்ளிக்கூடங்களை திறக்க உத்தரவிடக்கோரி சென்னை ஐகோர்ட்டில், தனியார் பள்ளிகள் சங்கத்தின் சார்பில் வழக்கு தொடரப்பட்டது. 

அந்த வழக்கில் கூறியிருப்பதாவது:-

கொரோனா வைரஸ் பரவலை தடுக்க கடந்த ஆண்டு மார்ச் மாதம் 16-ந்தேதி பள்ளிகள் மூடப்பட்டன. இதனால் 24 மணி நேரமும் மாணவர்கள் வீட்டில் முடங்கியுள்ளனர். 

இதுதொடர்பாக நடத்தப்பட்ட ஆய்வுகளில், 22.3 சதவீத மாணவ, மாணவியர்களுக்கு மன அழுத்தம் ஏற்பட்டுள்ளதாகவும், கொரோனா ஊரடங்கு காலத்தில் அவர்கள் தூக்கமின்மை மற்றும் ஆரோக்கிய குறைவால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

மேலும், குழந்தைகளின் நடத்தையிலும், உணர்வுகளிலும் பெரிய மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதாக 87 சதவீத பெற்றோர் கருத்து தெரிவித்துள்ளனர். இயல்பு நிலை எப்போது திரும்பும் என்ற நிச்சயமற்ற நிலையில், கல்விச்சுமையும் மாணவர்களின் மனநலத்தை பாதிக்கச் செய்துள்ளதாக அந்த ஆய்வில் தெரியவந்துள்ளது.

தற்போது கொரோனா வைரஸ் பரவல் கட்டுக்குள் வந்துள்ளதால், ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. குழந்தைகள் பொது இடங்களுக்கு செல்ல அனுமதிக்கப்படுகின்றனர். 

எனவே, மாணவர்கள் நலன் கருதி, கொரோனா தடுப்பு விதிகளை தீவிரமாக பின்பற்றி பள்ளிகளை திறக்க அரசுக்கு உத்தரவிட வேண்டும். தலா 50 சதவீத மாணவர்களுடன், இரு அமர்வுகளாக 3 மணி நேரம் வகுப்புகளை நடத்தவும் உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது பள்ளிக்கல்வித்துறை சார்பில் அரசு சிறப்பு பிளீடர் முனுசாமி ஆஜராகி, தற்போது 10 மற்றும் 12-ம் வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளன என்று கூறினார்.

இதை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், ‘‘தமிழக அரசு தான் பள்ளிகளை திறப்பது குறித்த சாத்தியக்கூறுகளை ஆய்வு செய்து முடிவு எடுக்க வேண்டும். பள்ளிகள் திறப்பது முக்கியமானது என்றாலும் எச்சரிக்கையுடன் முடிவு எடுக்க வேண்டியதுள்ளது. 

அதேசமயம் பள்ளிகள் திறப்பது தொடர்பாக, எந்த ஒரு அழுத்தமும் இல்லாமல், தமிழக அரசு சுதந்திரமாக முடிவு எடுக்க அனுமதிக்க வேண்டும். தற்போது தடுப்பூசி போடும் நடவடிக்கைகள் தொடங்கியுள்ளன. இந்த வழக்கும் முன்கூட்டியே தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக கருதுகிறோம். 

எனவே, 8 முதல் 10 வாரங்களுக்குள்பள்ளிகள் திறப்பது குறித்து தமிழக அரசு முடிவு எடுக்கவில்லை என்றால், மனுதாரர் மீண்டும் புதிதாக வழக்கு தொடரலாம். இந்த வழக்கை முடித்து வைக்கிறோம்’’ என்று உத்தரவிட்டனர்.




தேசிய கொடி அவமதிப்பு: எஸ்.வி.சேகர் மனநிலை?! 


சென்னை: 

தேசியக் கொடியை அவமதித்ததற்காக மன்னிப்பு கோரி நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தால் நடிகர் எஸ்.வி.சேகர் கைது செய்யப்பட மாட்டார் என சென்னை போலீசார் சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

எம்.ஜி.ஆர். சிலைக்குக் காவிப் போர்வை போர்த்தியது, ஈ.வே.ராமசாமி சிலை மீது காவிச் சாயம் ஊற்றப்பட்ட சம்பவம் குறித்து கருத்து தெரிவித்த முதல்வர் இபிஎஸ், தலைவர்களின் சிலைகளை களங்கம் செய்வோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.

அதற்குப் பதிலளித்த எஸ்.வி.சேகர், காவியைக் களங்கம் எனக் குறிப்பிடும் முதல்வர், களங்கமான தேசியக் கொடியைத் தான் ஆகஸ்டு 15-ம் தேதி ஏற்றப்போகிறாரா? தேசியக் கொடியில் உள்ள காவியை வெட்டிவிட்டு வெள்ளை மற்றும் பச்சை நிறம் கொண்ட கொடியை ஏற்கிறாரா? என பேசி வீடியோ வெளியிட்டார். மேலும், மூன்று நிறங்கள் குறித்த புதுவிளக்கம் ஒன்றையும் கூறினார்.

தேசியக் கொடியை அவமதித்தும், தமிழக முதல்வரின் பெயருக்குக் களங்கம் விளைவிக்கும் வகையிலும் பேசி சமூக வலைதளங்களில் வீடியோ வெளியிட்டதாக எஸ்.வி.சேகருக்கு எதிராக, சென்னை நுங்கம்பாக்கத்தைச் சேர்ந்த ராஜரத்தினம் என்பவர் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்தார்.


இந்தப் புகாரின் அடிப்படையில்:

எஸ்.வி.சேகர் மீது மத்திய குற்றப் பிரிவினர் வழக்குப் பதிவு செய்தனர். இந்த வழக்கில், தன்னைக் கைது செய்யாமல் இருக்க முன்ஜாமீன் கோரி எஸ்.வி.சேகர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். இந்த வழக்கில் பதிலளிக்க போலீசாருக்கு நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியிருந்தது.

இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. எஸ்.வி சேகர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் வெங்கடேஷ் மகாதேவன், தனது மனுதாரர் கடந்த முறை விசாரணைக்கு ஆஜராகி விளக்கம் கொடுத்த பின்னர், போலீசார் 4 பக்க கேள்விகளைக் கொடுத்துப் பதிலளிக்கக் கூறியிருந்ததனர், அவற்றிற்கு இன்று ஆஜராகி அளித்துள்ளார் . அந்தப் படிவத்தை தாக்கல் செய்து, கமிஷனர் அலுவலகத்தில் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது என தெரிவித்தார்.

சென்னை போலீசின் மத்திய குற்றப்பிரிவு சார்பில் ஆஜரான தலைமை குற்றவியல் வழக்கறிஞர் நடராஜன், தேசியக் கொடியை அவமதிக்கும் வகையில் இனி பேசமாட்டேன், இதுபோன்ற சம்பவங்கள் இனி நடைபெறாது என உத்தரவாதம் அளிக்க வேண்டும். 

நடந்தவற்றுக்கு நீதிமன்றத்தின் முன் அவர் மன்னிப்பு கோரினால் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்படாது. ஆனால், இந்த வழக்கை ரத்து செய்ய வாய்ப்பில்லை என்றும் தெரிவித்தார்.

இதனை பதிவு செய்த நீதிபதி ஜெகதீஷ்சந்திரா, இது குறித்து, மனுதாரர், தனது நிலைப்பாட்டை நீதிமன்றத்தில் தெரிவிக்க அவகாசம் அளித்து வழக்கு விசாரணையை செப்டம்பர் 2-ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.






Author Name

{picture#YOUR_PROFILE_PICTURE_URL} YOUR_PROFILE_DESCRIPTION {facebook#YOUR_SOCIAL_PROFILE_URL} {twitter#YOUR_SOCIAL_PROFILE_URL} {google#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.