Articles by "கர்நாடகா"

கர்நாடகா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

டிஜிட்டல் செயல்திறன்களையும் உலகளாவிய பிணைப்பையும் வலுப்படுத்த பெங்களூருவில் இந்தியா டெலிவரி சென்டரை தொடங்கும் வெர்ஷன் 1 



பெங்களூரு:

டிஜிட்டல் மாற்றத்தில் முன்னணி நிறுவனமான வெர்ஷன் 1, பெங்களூரில் தனது அதிநவீன இந்திய டெலிவரி மையத்தை (IDC) அதிகாரப்பூர்வமாகத் திறந்துள்ளது. இது நிறுவனத்தின் சர்வதேச வளர்ச்சி மூலோபாயத்தில் ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லாகும்; தனது வாடிக்கையாளர்களுக்கு மதிப்பினை வழங்குவதற்கான அதன் உறுதிப்பாட்டை இது வலுப்படுத்துகிறது.

உலகளாவிய நிறுவனங்களுக்கான அடுத்த தலைமுறை AI, கிளவுட் மற்றும் டிஜிட்டல் மாற்ற தீர்வுகளை வழங்குவதற்கு இந்தியாவின் சிறந்த திறமைசாலிகளை இந்த மையம் பயன்படுத்தும்.

2019 முதல் இந்தியாவில் வலுவான இருப்பைக் கொண்டுள்ள வெர்ஷன் 1, தனது செயல்பாடுகளை அதிவிரைவாக விரிவுபடுத்தி, தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியிலிருந்து உலகளாவிய வாடிக்கையாளர்கள் எதிர்கொள்ளும் சிக்கலான சவால்களை நிவர்த்தி செய்யும் முழுமையான டிஜிட்டல் தீர்வுகளை வழங்குவது வரை மிகப்பெரிய வளர்ச்சியைக் கண்டிருக்கிறது. 

புனே மற்றும் அகமதாபாத் உட்பட இந்தியாவின் முக்கிய நகரங்களில் 500க்கும் மேற்பட்ட நிபுணர்களை நிறுவனம் தற்போது பணியமர்த்தியுள்ளது. மேலும் புதுமை மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சியை விரைவுபடுத்த 100க்கும் மேற்பட்ட  வேலைவாய்ப்புகள் இம்மையத்தில் தயாராக உள்ளன.

நாஸ்காம் - ன் துணைத் தலைவர் ஸ்ரீகாந்த் ஸ்ரீனிவாசன், என்டர்பிரைஸ் அயர்லாந்து நிறுவனத்தின் இந்தியா மற்றும் தெற்கு ஆசியாவிற்கான இயக்குனர் திரு. ராஸ் குர்ரான் மற்றும் IDC மற்றும் வட அமெரிக்க செயல்பாடுகளின் நிர்வாக இயக்குனர் திரு. கணேஷ் கல்யாணராமன் ஆகியோர் இந்த மையத்தின் தொடக்கவிழா நிகழ்வில் முன்னிலை வகித்தனர். 

வெர்ஷன் 1 நிறுவனத்தின் பணியாளர்கள், முக்கிய தொழில்துறை தலைவர்கள் மற்றும் தொழில்நுட்ப கூட்டாளர்கள் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.  இந்தியாவின் வளர்ந்து வரும் தொழில்நுட்ப சூழல் அமைப்பு மீது இந்நிறுவனம் கொண்டிருக்கும் ஆழமான அர்ப்பணிப்பு உணர்வை இம்மையத்தின் தொடக்கம் எடுத்துக்காட்டுகிறது.


KCC-க்கான முன்னோடித்திட்டத்தை அறிமுகம் செய்யும் பெடரல் வங்கி!



செப்டம்பர் மாத தொடக்கத்தில், தமிழ்நாட்டின் குறிப்பிட்ட சில மாவட்டங்களில் ஊரக (கிராமப்புற) நிதி வழங்கலை டிஜிட்டல் மயமாக்கும் திட்டத்தை பெடரல் வங்கியை, கூட்டாளி வங்கியாகவும் மற்றும் மாநில அரசின் தீவிர ஒத்துழைப்போடும் சேர்த்து இந்திய ரிசர்வ் வங்கி அறிவித்திருந்தது. ரிசர்வ் பேங்க் இன்னோவேஷன் ஹப்-ஆல் உருவாக்கப்பட்ட இந்த முக்கியத்துவம் வாய்ந்த முன்னெடுப்பு நடவடிக்கையின் முன்னோடித்திட்டமானது, சென்னையில் இன்று நடைபெற்ற நிகழ்வொன்றில் அறிமுகம் செய்யப்பட்டது. 

இந்திய ரிசர்வ் வங்கி, ரிசர்வ் பேங்க் இன்னோவேஷன் ஹப் மற்றும் தமிழ்நாடு அரசின் உயரதிகாரிகள் கலந்துகொண்ட ஒரு விழாவில் இன்ஸ்டன்ட் கிஸான் கிரெடிட் கார்டுக்கான (KCC) (விவசாயிகளுக்கான உடனடி கடன் அட்டை) முன்னோடித்திட்டத்தை பெடரல் வங்கி அதிகாரப்பூர்வமாக தொடங்கியிருக்கிறது. வேளாண் துறையில் நிதி வழங்கலில் முதன்முறையாக அறிமுகம் செய்யப்படுவதாக இந்த டிஜிட்டல் கடன் செயல்திட்டம் இருக்கிறது. சௌகரியம் மற்றும் இச்செயல்திட்டத்திற்காக எடுக்கக்கூடிய நேரம் ஆகிய அம்சங்களைப் பொறுத்தவரை கடன் வழங்கலில் தற்போது இருந்துவரும் பாரம்பரியமான வழிமுறையோடு ஒப்பிடுகையில் விவசாயிகளுக்கு இது ஒரு புதிய அணுகுமுறையாக இருக்கும். தொடக்கத்திலிருந்து முடிவு வரை விரிவான டிஜிட்டல் மற்றும் தாள் பயன்பாடு இல்லாத பயணத்தை ஏதுவாக்குவதற்கு சிறப்பு திறன்களை கொண்டதாக இச்செயல்தளம் உருவாக்கப்பட்டிருக்கிறது. இச்செயல்திட்டத்தில் இணைகின்ற செயல்நடவடிக்கை E-kyc  வழியாக நிகழும்; TN-eGA இணைய வாசலிலிருந்து டிஜிட்டல் மயமாக்கப்பட்ட நில பதிவுருக்கள் / ஆவணங்கள் பெறப்படுகின்றன; வழங்கப்படும் நிதி / கடனின் அளவு தானியக்க முறையில் கணக்கிடப்படுகிறது மற்றும் இதற்கான ஆவண செயலாக்கம், e-sign (மின்னியல் முறையில் கையொப்பம்) வழியாக நிகழ்கிறது. இவ்வளவு சிறப்பு வசதிகள் கொண்ட இச்செயல்திட்டமானது, சிறிய மற்றும் விளிம்புநிலை விவசாயிகளுக்கு குறைந்த மதிப்பிலான, சிறிய தொகையிலான கடன்களை வழங்குவதை இலக்காகக் கொண்டிருக்கிறது. 

மேலும், இதுவரை சேவை வழங்கப்படாத மற்றும் குறைவாக சேவை வழங்கப்படுகிற கிராமப்புற பொதுமக்களுக்கு திறன்மிக்க கடன்வசதியினை ஏற்பாடு செய்வதற்காக இந்த செயல்தளம் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. 

ரிசர்வ் பேங்க் இன்னோவேஷன் ஹப் (RBIH)-ன் தலைமை செயலாக்க அதிகாரி திரு. ராஜேஷ் பன்சால், இச்செயல்திட்டத்தின் அறிமுகம் குறித்து கூறியதாவது:

இந்தியாவில் கிராமப்புற / ஊரக நிதி / கடன் என்பது பொருளாதார வளர்ச்சியோடு நெருக்கமான பிணைப்பை கொண்டிருக்கிறது. இத்தகைய சூழலில், RBI-ன் ஒத்துழைப்போடு கிஸான் கிரெடிட் கார்டு (KCC) கடன் வழங்கல் செயல்பாட்டில் தொடக்கத்திலிருந்து இறுதிவரை டிஜிட்டல்மயமாக்கலுக்கான ஒரு முன்னோடி செயல்திட்டத்தை RBIH-ல் நாங்கள் உருவாக்கியிருக்கிறோம். தமிழ்நாடு மாநிலத்தில், மாநில அரசின் தீவிர பங்கேற்போடு பெடரல் வங்கியால் இப்போது, தொடங்கப்படுகிற இச்செயல்திட்டமானது, நமது விவசாயிகளுக்கு சிரமமில்லாமல் எளிதாக கடன் வசதி கிடைக்கப்பெறுவதற்கான சாத்தியங்களை திறந்து வைக்கிறது. இச்செயல்திட்டம் சிறப்பான வெற்றிபெறும் என்று நாங்கள் எதிர்நோக்குகிறோம் மற்றும் நாடு முழுவதும் இது அமலாக்கப்படும் என்று எதிர்பார்க்கிறோம் மற்றும் அதற்காக காத்திருக்கிறோம்.’’ 

பெடரல் வங்கியின் மேலாண் இயக்குநர் மற்றும் தலைமை செயல் அலுவலர் திரு. ஷியாம் சீனிவாசன் அவரது உரையில் கூறியதாவது : 

ரிசர்வ் பேங்க் இன்னோவேஷன் ஹப் மற்றும் தமிழ்நாடு மாநில அரசின் ஒத்துழைப்போடு, நமது விவசாயிகளின் கடன் தேவைகளைப் பூர்த்தி செய்ய உதவுகிற சிறப்பான தீர்வுகளை இப்போது வழங்க இயலும் என்பது எனக்கு பெருமகிழ்ச்சி அளிக்கிறது; தொழில்நுட்பத்தின் உதவியோடு, விவசாயிகளுக்கு முன்னேற்றத்திற்கான புதிய வாய்ப்புகளை வழங்குவதற்கு இச்செயல்திட்டம் உதவும். முறைப்படுத்தப்பட்ட வங்கி சேவை அமைப்பிலிருந்து கடன் பெறுவதற்கு எளிதான அணுகுவசதி என்ற இலக்கை நோக்கி மாறும் செயல்திட்டத்தை இந்த அறிமுகம் துரிதமாக்கும்; நமது பொருளாதாரத்தை முறைப்படுத்துதல் என்ற குறிக்கோளை நோக்கி எடுத்துவைக்கப்படும் மிக முக்கியமான மற்றும் உறுதியான நடவடிக்கைகளில் ஒன்றாக இது இருக்கிறது. நிலம் மற்றும் பிற சொத்து உரிமைத்துவ பதிவுருக்கள் மற்றும் ஆவணங்கள் அதிக எண்ணிக்கையில் பரவலாக டிஜிட்டல் முறைக்கு மாற்றப்படும்போது, நமது சமூகத்தில் அதிக தகுதியுள்ள பிரிவினரின் இல்ல கதவுகளுக்கு கடன் வசதி சென்றடைவதற்கு டிஜிட்டல் முறையில் செயல்படுத்தப்படும் திறன்கொண்ட தீர்வுகள் உதவுமென்று நாங்கள் நிச்சயமாக நம்புகிறோம். தொழில்நுட்பத்தை மானுடத்துக்கு சிறப்பாக உதவும் வகையில் மாற்றுவதற்கான எமது நிலையான மன உறுதியும், அர்ப்பணிப்பும் இத்தகைய முயற்சிகளில் தெளிவாக வெளிப்படுகிறது; புதிய மற்றும் இதுவரை வங்கிச்சேவையை முழுமையாக பெறாத சந்தைகளில் நிதி / கடன் வசதி கிடைப்பதை முன்னேற்ற வேண்டுமென்ற எமது பொறுப்புறுதியை மேலும் வலுப்படுத்துவதற்கான ஒரு சிறந்த வாய்ப்பாகவும், கௌரவமாகவும் இதனை நாங்கள் கருதுகிறோம். இதற்கான பயணம் இப்போது சிறப்பான தொடக்கத்துடன் நன்றாக நடைபெற்று வருகிறது என்று நான் நம்புகிறேன். இதுபோன்ற இன்னும் பல புத்தாக்கமான செயல்நடவடிக்கைகள் விரைவில் நிகழும் என்று நான் எதிர்பார்க்கிறேன்.’’ என்று கூறினார்.


கர்நாடகத்தில் இரவு நேர ஊரடங்கு! 



பெங்களூரு: 

கடும் எதிர்ப்புக்கு இடையே கர்நாடகத்தில் அரசு அறிவித்தப்படி இரவு நேர ஊரடங்கு நேற்றிரவு முதல் அமலுக்கு வந்தது. இதையொட்டி கடைகள், வணிக வளாகங்கள் இரவு 9.30 மணிக்கே மூடப்பட்டன. இந்த ஊரடங்கிற்கு மக்கள் ஒத்துழைக்க அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது. 

கர்நாடகத்தில் கொரோனா பரவல் கட்டுக்குள் இருந்தாலும் ஒமைக்ரான் வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதுவரை மாநிலத்தில் 39 பேருக்கு ஒமைக்ரான் பாதிப்பு உறுதியாகி உள்ளது. வரும் நாட்களில்  ஒமைக்ரான் வைரஸ் மேலும் தீவிரமாக பரவக்கூடும் என்று அரசு கருதுகிறது. இந்த ஒமைக்ரான் வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் நோக்கத்தில் புதிய கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டும் என்று அனைத்து மாநிலங்களுக்கும் மத்திய அரசு உத்தரவிட்டது. 

அந்த உத்தரவுப்படி, கர்நாடகத்தில் 28-ந் தேதி முதல் 10 நாட்களுக்கு இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று கர்நாடக அரசு கடந்த 26-ந் தேதி அறிவித்தது. இரவு 10 மணிக்கு தொடங்கி காலை 5 மணி வரை இந்த ஊரடங்கு அமலில் இருக்கும் என்று அரசு கூறியது. இதற்கு சினிமா துறையினர், ஓட்டல், உணவக உரிமையாளர்கள், வியாபாரிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதனால் தங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்று கவலை தெரிவித்தனர்.

ஆனால் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை, மக்களின் உயிர்களை காக்க வேண்டும் என்ற நோக்கத்தில் அறிவிக்கப்பட்டுள்ள இரவு நேர ஊரடங்கை எக்காரணம் கொண்டும் வாபஸ் பெற மாட்டோம் என்று திட்டவட்டமாக கூறிவிட்டார். அதன்படி கர்நாடகத்தில் இரவு நேர ஊரடங்கு நேற்று அமலுக்கு வந்தது. 

இரவு 9 மணிக்கே போலீசார் வாகனங்களில் ரோந்து வந்து கடைகளை மூடும்படி அதன் உரிமையாளர்களுக்கு அறிவுறுத்தினர். அதனால் 9.30 மணிக்கு எல்லாம் கடைகளை மூடிவிட்டு வியாபாரிகள் வீட்டுக்கு புறப்பட்டு சென்றனர். 10 மணிக்கு அனைத்து வகையான கடைகள் மட்டுமின்றி வணிக வளாகங்கள், ஓட்டல்கள் போன்றவையும் மூடப்பட்டன.

பெங்களூருவில் மேம்பாலங்களை இரும்பு தடுப்புகளை வைத்து மூடவும் போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர். இரவு நேரங்களில் செயல்படும் தனியார் நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்கள், அத்தியாவசிய சேவைகளை வழங்கும் ஊழியர்கள், மருத்துவத்துறையினர் உள்ளிட்ட அரசால் அனுமதிக்கப்பட்ட பணியாளர்களை தவிர மற்றவர்கள் இரவு 10 மணிக்கு மேல் நடமாட தடை விதிக்கப்பட்டுள்ளது. 

அதனால் போலீசார் ஆங்காங்கே நின்று சோதனையில் ஈடுபட்டனர். முதல் நாள் என்பதால், 10 மணிக்கு மேல் வெளியில் நடமாடியவர்களை எச்சரித்து அனுப்பினர். இரவு நேர ஊரடங்கு அமலுக்கு வந்தாலும், பஸ்கள், மெட்ரோ ரெயில்கள், ரெயில்கள் வழக்கம்போல் இயங்கின. அவசர தேவைகளை தவிர்த்து ஆட்டோ-வாடகை கார்கள் இயங்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

அதாவது ரெயில், பஸ், விமான நிலையங்களுக்கு செல்பவர்களை வாடகை வாகனங்கள் ஏற்றி செல்லலலாம். அதில் பயணிப்பவர்கள் அதற்கான முன்பதிவு ஆவணங்களை வைத்திருக்க வேண்டும். இரவு நேரங்களில் பஸ்கள் அட்டவணைப்படி செயல்படும். அதில் எந்த மாறுபாடும் கிடையாது.

கர்நாடத்தில் கொரோனா 2-வது அலை ஊரடங்கில் தளர்வு அறிவிக்கப்பட்டதால் சினிமா தியேட்டர்களில் தினசரி 5 காட்சிகள் திரையிடப்பட்டு வந்தன. இரவு நேர ஊரடங்கு காரணமாக மாநிலம் முழுவதும் இரவு நேர காட்சி ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்த ஊரடங்கு அமலில் இருக்கும் வரை தினசரி 4 காட்சிகள் மட்டுமே திரையிடப்படும் என்று தியேட்டர் உரிமையாளர்கள் அறிவித்துள்ளனர். 

இரவு நேர ஊரடங்கில் ஓட்டல்கள் அதாவது தங்கும் விடுதிகள் எப்போதும் செயல்படலாம். ஆனால் அங்கு கொரோனா தடுப்பு விதிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்று கூறியுள்ளது. ஒமைக்ரான் பரவல் அதிகரித்தால் மாநிலத்தில் தற்போது தொடங்கப்பட்டுள்ள இந்த ஊரடங்கு மேலும் விஸ்தரிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது. அடுத்தடுத்து வரும் நாட்களில் மேலும் பல புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட வாய்ப்பு உள்ளதாக மருத்துவ நிபுணர்கள் கூறியுள்ளனர்.

இரவு நேர ஊரடங்கையொட்டி பெங்களூரு, மைசூரு, மங்களூரு உள்பட மாநிலம் முழுவதும் போலீசார் பாதுகாப்பு பணியிலும் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். 

பெங்களூருவில் ஊரடங்கை மீறி யாராவது சாலைகளில் சுற்றித்திரிந்தால் சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீஸ் கமிஷனர் கமல்பந்த் எச்சரிக்கை விடுத்துள்ளார். 

இந்த நிலையில் இரவுநேர ஊரடங்கு குறித்து கர்நாடக சுகாதாரத்துறை மந்திரி சுதாகர் பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

கர்நாடகத்தில் இரவு நேர ஊரடங்கை அரசு அமல்படுத்தியுள்ளது. யாருக்கும் தொந்தரவு கொடுக்க வேண்டும் என்ற நோக்கத்தில் இந்த ஊரடங்கை செயல்படுத்தவில்லை. நிபுணர் குழுவினரின் பரிந்துரையின்படி, இந்த முடிவு எடுத்துள்ளோம். எந்த காரணத்திற்காக இந்த ஊரடங்கை அமல்படுத்தியுள்ளோம் என்பதை அனைத்து தரப்பு மக்களும் புரிந்துகொள்ள வேண்டும். அரசின் முடிவை எதிர்ப்பதும், விமர்சிப்பதும் சரியல்ல.

கொரோனா 2-வது அலையின்போது எதற்காக ஊரடங்கை அமல்படுத்தினோம் என்பது மக்களுக்கு தெரியும். மக்களின் உயிர்களை காக்க வேண்டும் என்ற நோக்கத்தில் அரசு முடிவு எடுத்துள்ளது. அதனால் அரசின் முடிவை எதிர்ப்பது சரியல்ல.  இரவு நேர ஊரடங்கு அமலுக்கு வருகிறது. 

இதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளோம். இதை அனைவரும் பின்பற்ற வேண்டும். பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்கினால் மட்டுமே கொரோனா பரவலை தடுக்க முடியும். இந்த 10 நாட்களில் கொரோனா பரவல் எப்படி இருக்கிறது என்பதை ஆராய்ந்த அதன் அடிப்படையில் அடுத்தக்கட்ட முடிவு எடுக்கப்படும். 

கர்நாடகத்தில் 5 பேருக்கு ஒமைக்ரான்!


பெங்களூரு: 

கர்நாடகத்தில் இதுவரை 38 பேருக்கு ஒமைக்ரான் வைரஸ் பாதிப்பு ஏற்பட்டு இருந்தது. இந்த நிலையில் மேலும் 5 பேருக்கு ஒமைக்ரான் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதன் மூலம் கர்நாடகத்தில் ஒமைக்ரானால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 43 ஆக உயர்ந்துள்ளது.

புதிதாக பாதிக்கப்பட்ட 5 பேரில் 2 பேர் அமெரிக்காவில் இருந்தும், துபாய், கானா, மும்பையில் இருந்து தலா ஒருவரும் பெங்களூரு வந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த தகவலை சுகாதார துறை மந்திரி சுதாகரும் உறுதி செய்துள்ளார். 

கர்நாடக அரசின் கட்டுப்பாட்டில் இருந்து கோவில்களுக்கு விலக்கு!


பெங்களூரு: 

கர்நாடகத்தில் கோவில்களுக்கு அரசின் கட்டுப்பாட்டில் இருந்து விரைவில் விலக்கு அளிக்கப்படும் என்றும், இதுதொடர்பான சட்டம் சட்டசபை கூட்டுக்கூட்டத்தில் கொண்டுவரப்படும் என்றும் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை அறிவித்துள்ளார்.

கர்நாடக பா.ஜனதா கட்சியின் மாநில செயற்குழு கூட்டம் உப்பள்ளியில் நேற்று நடைபெற்றது. இதில் மேலிட பொறுப்பாளர் அருண்சிங், கட்சியின் மாநில தலைவர் நளின்குமார் கட்டீல் உள்பட மந்திரிகள் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை கலந்து கொண்டு பேசியதாவது:-

பிற மதங்களின் வழிபாட்டு தலங்கள் சுதந்திரமாக செயல்படுகின்றன. ஆனால் இந்து கோவில்கள் அரசின் கட்டுப்பாட்டில் உள்ளன. சில கட்டுப்பாடுகளால் தொந்தரவை அனுபவித்து வருகின்றன. அதனால் கர்நாடகத்தில் கோவில்களுக்கு அரசின் கட்டுப்பாட்டில் இருந்து விரைவில் விலக்கு அளிக்கப்படும். 

கர்நாடக சட்டசபையின் பட்ஜெட் கூட்டத்தொடருக்கு முன்பு இதற்கான சட்டம் கொண்டு வரப்படும். கோவில் வருமானங்கள் வேறு திட்டங்களுக்கு செல்வதை தடுக்கவும், கோவில் வருமானத்தை அந்த கோவிலின் மேம்பாட்டிற்கு பயன்படுத்தும் வகையில் முடிவு எடுக்கப்படும்.

கொப்பலில் உள்ள அஞ்சனாத்திரி கோவிலை அயோத்தியில் கட்டப்படும் ராமர் கோவிலுக்கு இணையாக மேம்படுத்துவோம். அதை பிரதமர் மோடியின் கைகளால் திறந்து வைக்க நடவடிக்கை எடுப்போம். மதமாற்ற தடை சட்ட மசோதாவை சட்டசபையில் நிறைவேற்றியுள்ளோம். 

அதை வருகிற கூட்டத்தொடரில் மேல்-சபையில் நிறைவேற்றுவோம். இந்த சட்டத்தை அமல்படுத்த ஒரு செயல் படையை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு பசவராஜ் பொம்மை பேசினார்.

கர்நாடகத்தில் 34 ஆயிரத்து 558 கோவில்கள் அரசின் அறநிலையத்துறையின் கீழ் உள்ளன. இதில் ஏ பிரிவில் 132 கோவில்கள் உள்ளன. இவை ஆண்டுக்கு ரூ.25 லட்சத்திற்கும் அதிமாக உண்டியல் வருவாய் ஈட்டுகின்றன. பி பிரிவில் 180 கோவில்கள் இருக்கின்றன. 

அந்த கோவில்களில் ரூ.5 லட்சம் முதல் ரூ.25 லட்சம் வரை வருவாய் கிடைக்கிறது. 34 ஆயிரத்து 246 கோவில்களுக்கு ரூ.5 லட்சத்திற்குள் வருவாய் கிடைக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

கர்நாடகத்தில் இந்து கோவில்களை அரசின் கட்டுப்பாட்டில் இருந்து விடுவிக்க வேண்டும் என்ற கோரிக்கையை இந்து அமைப்புகள் நீண்ட நாளாக முன்வைத்து வருகின்றன. இந்த நிலையில் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


 சசிகலா உடல் நிலை?! 


பெங்களூரு:

சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்ற சசிகலா பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார். அவருடைய 4 ஆண்டு சிறை தண்டனை வரும் 27-ம் தேதி நிறைவுபெறுகிறது. 

பெங்களூரு சிறையில் இருந்து 27-ம் தேதியன்று சசிகலா விடுதலையாக இருக்கிறார் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அவருக்கு கடந்த இரு நாட்களாக லேசான காய்ச்சல், இருமல் இருந்ததாக கூறப்படுகிறது. 

நேற்று காலை திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது. உடனடியாக சிறைச்சாலை வளாகத்திலுள்ள மருத்துவர்கள் சசிகலாவின் உடல்நிலையை பரிசோதனை செய்தனர்.

அதன்பின், பெங்களூருவில் உள்ள பவுரிங் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவரது உடல்நிலை பரிசோதனை செய்யப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், பெங்களூரு மருத்துவமனையில் சாதாரண வார்டில் சிகிச்சை பெற்று வந்த சசிகலாவுக்கு நள்ளிரவில் மீண்டும் மூச்சுத்திணறல் ஏற்பட்டது. இதையடுத்து அவர் அவசர சிகிச்சை பிரிவுக்கு மாற்றப்பட்டார். அங்கு அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.


மனைவிக்கு மெழுகு சிலை: வியந்து பார்த்த சொந்தங்கள்!  

பெல்லாரி: 

காதல், அன்பு, பரஸ்பர நட்பு என்பதெல்லாம் ஒரு அழகான உணர்வு. இரண்டு நண்பர்கள், காதலர்கள், சகோதரர்கள், தம்பதிகள் என்று ஆழமான உறவுகளை வகைப்படுத்தலாம். அதுவும் மனைவி மற்றும் கணவர் இடையேயான உறவு மிகவும் புனிதமானது என்று கூறப்படுகிறது. 

உண்மையான அன்பை வெளிப்படுத்தும் விதமாக, அவர்களுக்குள் நடக்கும் பரிசு, பாராட்டு பரிமாற்றம் சில நேரங்களில் சமூகத்தில் முன் உதாரணத்தின் வௌிப்பாடாகவே உள்ளன. இன்றைய வாழ்க்கையில், சில கணவர்கள் மனைவிகளை உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் சித்திரவதை செய்யும் பல நிகழ்வுகளை நாம் கண்டிருக்கிறோம்.

ஆனால், இங்கே ஒரு நபர் தனது மனைவியிடம் மிகுந்த அன்பு வைத்திருக்கிறார். அந்த மனைவி சில ஆண்டுகளுக்கு முன்பு, சாலை விபத்தில் இறந்தார். சமீபத்தில், அவர் ஒரு புதிய வீட்டைக் கட்டினார். 

வீட்டின் புகுமனை புகுவிழாவில் தனது மனைவி இல்லையே என்ற ஏக்கம் அவருக்குள் இருந்தது. அதனால், விழாவில் தனது மனைவியை இழக்க விரும்பவில்லை. அதனால், தனது மனைவி போன்ற ஒரு மெழுகு சிலையை உருவாக்கினார். 

புகுமனை புகுவிழாவில், மனைவியின் மெழுகு சிலையை அலங்கரித்து ஷோபாவில் அமரவைத்தார். நிகழ்ச்சிக்கு வந்த அவரது குடும்ப உறுப்பினர்கள் பிரம்மிப்புடன் பார்த்துவிட்டு அவரை பாராட்டி சென்றனர்.

இந்த சம்பவம் கர்நாடகாவின் பெல்லாரிக்கு அருகிலுள்ள கொப்பல் மாவட்டத்தில் நடந்தது. இங்கு வசிக்கும் நிவாஸ் குப்தா, தனது மனைவி சத்யாமணியை கொண்டாடும் வகையில் மெழுகு சிலையை உருவாக்கி உள்ளார். 

இதுகுறித்து நிவாஸ் குப்தா கூறுகையில்:

 ‘சில ஆண்டுகளுக்கு முன் நடந்த  விபத்தில் மனைவி இறந்ததால், புதுமனை புகுவிழா நிகழ்ச்சியில் அவரும் பங்கேற்க வேண்டும் என்று  விரும்பினேன். குடும்பத்தில்  நல்லது கெட்டது என எல்லாவற்றிலும் பங்கேற்றிருந்த மனைவி, இப்போது இல்லை  என்பதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை.அதனாலே, இந்த நிகழ்ச்சியில் அவளும் இருக்க வேண்டும் என்பதால் மெழுகு சிலை வடித்து மகள்கள், உறவுகளுடன் விழா நடத்தினேன்’ என்றார். 

மனைவியின் மெழுகு சிலையுடன் கணவர் புதுமனை புகுவிழா நடத்திய விழாவை கொண்டாடும் வீடியோ, தற்போது சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.  நிவாஸ் குப்தாவை சிலர், ‘கலியுக ராமா’ என்று பதிவிட்டு பாராட்டி வருகின்றனர்.


Author Name

{picture#YOUR_PROFILE_PICTURE_URL} YOUR_PROFILE_DESCRIPTION {facebook#YOUR_SOCIAL_PROFILE_URL} {twitter#YOUR_SOCIAL_PROFILE_URL} {google#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.