ஜூலை 2020

ஆன்லைன் வகுப்புக்கு செல்போன் இல்லை: மாணவர் தற்கொலை!  


ஆன்லைன் வகுப்புக்காக பெற்றோர்கள் செல்போன் வாங்கித்தர தாமதித்ததால் பள்ளி மாணவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் கடலூர் மாவட்டத்தில் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது.

கொரோனா வைரஸ் தொற்றைவிட அதன் தாக்கத்தால் ஏற்படும் உயிரிழப்புகள் நாளுக்குநாள் அதிகரித்து வருகின்றன. கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அனைத்து பள்ளி மாணவர்களுக்கும் ஆன்லைன் முறையில் பாடம் நடத்தப்பட்டு வருகின்றன. 

அதனால் கொரோனாவால் வேலையிழந்து, வருமானமின்றி தவிக்கும் பெரும்பான்மையான நடுத்தரவர்க்கத்தினர், தங்கள் பிள்ளைகளுக்கு ஆண்ட்ராய்டு செல்போன்களை வாங்க வழியில்லாமல் தவித்து வருகின்றனர். அதனால் விரக்தியடையும் மாணவர்கள் தற்கொலை செய்துகொள்ளும் சம்பங்கள் தொடர்ச்சியாக அரங்கேறி வருகின்றன.


பள்ளிகள் கொடுக்கும் இந்த அழுத்தங்களால் பெற்றோர்கள் மட்டுமல்லாமல் குழந்தைகளும் மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர். அப்படி மன உளைச்சலுக்கு ஆளான தனியார் பள்ளி மாணவர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டிருக்கிறார். 

கடலூர் மாவட்டம் பண்ருட்டியை அடுத்திருக்கும் சிறுதொண்டமாதேவி கிராமத்தைச் சேர்ந்த விஜயகுமார் என்பவரின் மகன் விக்னேஷ், வயது 14. கடலூர் மாவட்டம் கொள்ளுக்காரன் குட்டையில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் படித்த விக்னேஷ் இந்த ஆண்டு 10-ம் வகுப்புக்குத் தேர்ச்சி பெற்றிருக்கிறார்.

பள்ளிகள் திறக்கப்படாததால் 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு ஆன்லைனில் பாடங்களை நடத்திவருகிறது, அந்த தனியார் பள்ளி. அதனால் தனக்கு ஆண்ட்ராய்டு செல்போன் வாங்கித்தருமாறு பெற்றோர்களிடம் கேட்டிருக்கிறார் விக்னேஷ். 

அதற்கு அவரது அப்பா, ’இப்போது என்னிடம் பணம் இல்லை. ரெண்டு மூனு நாள் வெயிட் பண்ணு. நம்மிடம் உள்ள முந்திரிக்கொட்டைகளை எப்படியாவது விற்று செல்போன் வாங்கித் தருகிறேன்’ என்று கூறியிருக்கிறார்.


ஆண்ட்ராய்டு செல்போன்

தனது அப்பாவின் வார்த்தைகளை விக்னேஷ் ஏற்றுக்கொண்டாலும், அவர் படிக்கும் தனியார்பள்ளி நிர்வாகம் அதனைக் ஏற்கத் தயாராக இல்லை. ’செல்போனுடன் ஆன்லைன் வகுப்பில் கலந்துகொள். இல்லையென்றால் டி.சி வாங்கிக் கொண்டு எதாவது அரசுப் பள்ளிக்குச் சென்றுவிடு’ என்று எச்சரித்ததாக கூறப்படுகிறது. 

அதில் மனம் உடைந்துபோன மாணவர் விக்னேஷ், நேற்று முன் தினம் தனது தாயின் புடவையைக்கொண்டு வீட்டிலேயே தூக்கு போட்டுக்கொண்டார்.

அதனைப் பார்த்து அலறித்துடித்த விக்னேஷின் பெற்றோர்கள், அவரை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். ஆனால், அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனர்.





பிரபல வில்லன் அனில் முரளி காலமானார்! 


கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் பிறந்தவர் நடிகர் அனில் முரளி. சின்னத்திரையில் பணியாற்றிய அவர், பின்னர் 1993-ம் ஆண்டு வெளியான  ‘கன்னியாகுமரியில் ஒரு கவிதா’ என்ற மலையாள படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார். 

பின்னர் ஏராளமான மலையாள படங்களில் வில்லன், குணச்சித்திர நடிகராகவும் நடித்துள்ளார். அனில் முரளி, மலையாளம் மட்டுமின்றி தமிழ், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளிலும் 200க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். 

தமிழில் 6 கேண்டில்ஸ், நிமிர்ந்து நில், தனி ஒருவன், அப்பா, கொடி, கணிதன், தொண்டன், மிஸ்டர் லோக்கல், நாடோடிகள் 2 ஆகிய படங்களில் நடித்துள்ளார். அவரது நடிப்பில் தமிழில் கடைசியாக வெளியான படம் வால்டர். 

இதனிடையே கல்லீரல் குறைபாட்டால் பாதிக்கப்பட்டிருந்த நடிகர் அனில் முரளி, கொச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். 

இந்நிலையில் இன்று காலை சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். அவருக்கு மனைவியும், இரண்டு குழந்தைகளும் உள்ளனர். திரைத்துறையினர் பலரும் அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.




ஆகஸ்ட் 31  வரை ஊரடங்கு: கடைகள் 1 மணி நேரம் நீட்டிப்பு! 


தமிழகத்தில் நாளையுடன் ஊரடங்கு நிறைவடையும் நிலையில் கொரோனா நிலவரம் குறித்தும் மருத்துவ நிபுணர் குழுவுடன் முதலமைச்சர் பழனிசாமி இன்று ஆலோசனை நடத்தினார்.

இதையடுத்து தமிழகத்தில் ஊரடங்கை ஆகஸ்ட். 31 வரை நீட்டித்து தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். 



இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
 
* ஆகஸ்ட் மாதத்தில் உள்ள அனைத்து ஞாயிற்றுகிழமைகளிலும் தளர்வுகளற்ற ஊரடங்கு  அமல்படுத்தப்படும்

* நடைமுறையில் உள்ள பல்வேறு கட்டுப்பாடுகளுடனும், தளர்வுகளுடனும் ஆக.31 வரை மேலும் நீட்டிக்கப்பட்டுள்ளது.

* சென்னையில் உணவகங்களில் காலை 6 மணி முதல் இரவு 7 மணி வரை உணவருந்த அனுமதி

* சென்னையில் ஆக.1 முதல் தனியார் தொழில் நிறுவனங்கள் 75 சதவீத பணியாளர்களுடன் இயங்கலாம்

* சென்னையில் உணவகங்களில் 50 சதவீத இருக்கைகளை பயன்படுத்தி வாடிக்கையாளர்கள் அமர்ந்து சாப்பிட அனுமதி

* நகராட்சி, பேரூராட்சி பகுதிகளில் ரூ.10 ஆயிரத்திற்கு குறைவான ஆண்டு வருமானம் உள்ள கோவில்களில் தரிசனத்திற்கு அனுமதி

* மாநகராட்சி பகுதிகளில் உள்ள கோவில், மசூதி, தேவாலங்களில் வழிபாட்டுக்கு அனுமதி இல்லை

* தமிழகத்தின் பிற மாவட்டங்களில் பேரூராட்சி, நகராட்சிகளில் சிறிய கோவில்கள், மசூதிகள், தேவாலங்களை திறக்க அனுமதி

* பொது இடங்களில் 5 நபர்களுக்கு மேல் கூடக்கூடாது என்ற உத்தரவு தொடர்ந்து அமலில் இருக்கும்

* பிற மாவட்டங்களில் ஆண்டு வருமானம் ரூ.10,000க்கு குறைவான வருமானம் கொண்ட கோவில், தேவாலயம், மசூதிகளை திறக்கலாம்

* மாவட்டம் விட்டு மாவட்டம் செல்பவர்கள், வருபவர்கள் இ பாஸ் பெறுவது ஆகஸ்ட் மாதத்தில் கட்டாயம்

* நோய்க்கட்டுப்பாட்டு பகுதிகளில் எவ்வித தளர்வுகளும் இன்றி ஊரடங்கு தொடரும்

* மாநிலங்களுக்குள் மற்றும் மாநிலங்களுக்கு இடையிலான பொது மற்றும் தனியார் பேருந்து போக்குவரத்திற்கான தடை தொடரும்

* திரையரங்குகள், ஜிம்கள், நீச்சல் குளங்கள், பூங்காக்கள் மறு உத்தரவு வரும் வரை மூடப்பட்டிருக்க வேண்டும்

* மெட்ரோ ரெயில், மின்சார ரெயில்களுக்கான தடை மறு உத்தரவு வரும் வரை தொடரும்

* ரெயில், விமானப் போக்குவரத்து விஷயத்தில் தற்போதைய நடைமுறை தொடரும்

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.



மீண்டும் ஊரடங்கு: முழு விபரம்  


சென்னை:

தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

கொரோனா வைரஸ் நோய்த்தொற்றை தடுப்பதற்காக தேசிய பேரிடர் மேலாண்மைச் சட்டத்தின் கீழ், 31.7.2020 முடிய தற்போதுள்ள ஊரடங்கு உத்தரவு, ஏற்கனவே நடைமுறையில் உள்ள பல்வேறு கட்டுப்பாடுகளுடனும், தளர்வுகளுடனும், 31.8.2020 நள்ளிரவு 12 மணி வரை தமிழ்நாடு முழுவதும் மேலும் நீட்டிப்பு செய்யப்படுகிறது. 

மேலும், ஆகஸ்ட் மாதத்தில் உள்ள அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளிலும் (2.8.2020, 9.8.2020, 16.8.2020, 23.8.2020 மற்றும் 30.8.2020) எவ்வித தளர்வுகளும் இன்றி, தமிழ்நாடு முழுவதும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும். 


ஏற்கனவே நடைமுறையில் உள்ள கீழ்காணும் செயல்பாடுகளுக்கான தடைகள், மறு உத்தரவு வரும் வரை தொடர்ந்து அமலில் இருக்கும்:

* மாநகராட்சிப் பகுதிகளில் உள்ள அனைத்து வழிபாட்டுத்தலங்களிலும் மற்றும் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து பகுதிகளிலும் உள்ள பெரிய வழிபாட்டு தலங்களிலும் பொதுமக்கள் வழிபாடு.

• அனைத்து மதம் சார்ந்த கூட்டங்கள்.

• நீலகிரி மாவட்டத்திற்கும், கொடைக்கானல், ஏற்காடு போன்ற அனைத்து சுற்றுலா தலங்களுக்கும், வெளியூர் சுற்றுலா பயணிகள் செல்ல தடை தொடரும்.

• தங்கும் வசதியுடன் கூடிய ஹோட்டல்கள், ரிசார்ட்டுகள், பிற விருந்தோம்பல் சேவைகளுக்கு தடை தொடரும். எனினும், மருத்துவத் துறை, காவல் துறை உள்ளிட்ட அனைத்து அரசு அலுவலர்கள் மற்றும் வெளி மாநிலத்தவர்களை தனிமைப்படுத்துவதற்கு மட்டும் விலக்கு அளிக்கப்படுகிறது.

• வணிக வளாகங்கள்

• பள்ளிகள், கல்லூரிகள், பயிற்சி நிறுவனங்கள், ஆராய்ச்சி நிறுவனங்கள் மற்றும் அனைத்துக் கல்வி நிறுவனங்கள். எனினும், இந்நிறுவனங்கள் இணைய வழிக் கல்வி கற்றல் தொடர்வதுடன், அதனை ஊக்குவிக்கலாம்.

• மத்திய உள்துறை அமைச்சகத்தால் அனுமதிக்கப்பட்ட பணிகளைத் தவிர சர்வதேச விமான போக்குவரத்திற்கான தடை நீடிக்கும்.

• மெட்ரோ ரயில் / மின்சார ரயில்.

• திரையரங்குகள், உடற்பயிற்சிக் கூடங்கள், நீச்சல் குளங்கள், கேளிக்கைக் கூடங்கள், மதுக்கூடங்கள், பெரிய அரங்குகள், கூட்ட அரங்குகள், கடற்கரை, சுற்றுலாத் தலங்கள், உயிரியல் பூங்காக்கள், அருங்காட்சியகங்கள் போன்ற பொது மக்கள் அதிகம் கூடும் இடங்கள். 

• அனைத்து வகையான சமுதாய, அரசியல், விளையாட்டு, பொழுதுபோக்கு, கலாச்சார நிகழ்வுகள், சமய, கல்வி, விழாக்கள், கூட்டங்கள் மற்றும் ஊர்வலங்கள்.

• மாநிலங்களுக்குள் உள்ள பொது மற்றும் தனியார் பேருந்து போக்குவரத்து மற்றும் மாநிலங்களுக்கு இடையேயான பொது மற்றும் தனியார் பேருந்து போக்குவரத்து.

மேற்கண்ட கட்டுப்பாடுகளில், தொற்றின் தன்மைக்கேற்றவாறு, படிப்படியாக தளர்வுகள் அளிக்கப்படும்.  அரசு அமல்படுத்தி வரும் ஊரடங்கு மற்றும் நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில் தீவிர பரிசோதனை மூலம் நோய்த்தொற்று அதிகரிக்கும் வேகம் குறைந்திருந்தாலும், நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை கணிசமாக உள்ள நிலையில் மக்களைக் காக்க தற்போதுள்ள ஊரடங்கு  நடைமுறையை மேலும் தொடர வேண்டிய நிலையில் அரசு உள்ளது. 

இதனால் நோய்ப்பரவலை மேலும் கட்டுப்படுத்த இயலும். எனவே, பொதுமக்கள் அரசின் முயற்சிகளுக்கு ஒத்துழைப்பு நல்க கேட்டுக் கொள்கிறேன். 

நோய் தொற்றின் போக்கு தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு, பொதுமக்களின் ஒத்துழைப்பையும், நோய் தொற்றின் நிலையையும் கருத்தில் கொண்டு அவ்வப்போது படிப்படியாக தளர்வுகள் வழங்கப்படும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.





கொரோனா நோயாளியின் கழிப்பறை?!  


புதுச்சேரி: 

கதிர்காமம் மருத்துவ கல்லூரியில் உள்ள கொரோனா வார்டில் அனைத்து படுக்கைகளும் நிரம்பின. ஒரு கழிவறையை 50 பேர் பயன்படுத்தும் அவலநிலை உள்ளது. எனவே, புதுவை அரசு உடனடியாக மாற்று நடவடிக்கையை எடுக்காவிடில் கடுமையான பாதிப்புகளை சந்திக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. 

நாடு முழுவதும் கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. இதனால் கொரோனா தொற்றை பேரிடராக மத்திய அரசு அறிவித்துள்ளது. இதனை கட்டுப்படுத்த 3 மாதத்திற்கும் மேலாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இருப்பினும், தொற்றின் தாக்கம் குறைந்தபாடில்லை. 

இந்நிலையில் புதுச்சேரியில் ஊரடங்கு அமலில் இருந்தவரை கொரோனா தொற்று கட்டுக்குள் இருந்தது. ஆனால், ஜூன் 1ம் தேதி ஊரடங்கு தளர்த்தப்பட்ட பின்னர் படிப்படியாக பாதிப்பு அதிகரிக்க துவங்கியது.

சென்னையில் கடந்த ஜூன் மாதம் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. இதன் காரணமாக, அங்கிருந்து ஏராளமானோர் முறையான அனுமதியின்றி புதுச்சேரிக்குள் நுழைந்தது, மேட்டுப்பாளையத்தில் விதிகளை கடைப்பிடிக்காத மாஸ்க் கம்பெனி போன்ற காரணங்களால் தொற்று பரவல் அதிகரித்தது. 


மேலும், ஊரடங்கு தளர்வுக்கு பிறகு காய்கறி கடைகள், இறைச்சிக் கடைகளில் சமூக இடைவெளியை கடைப்பிடிக்காததால், அவை தொற்று பரவும் மையங்களாக மாறின. 

இதன் காரணமாக, தினமும் சராசரியாக 60 பேர் முதல் 80 பேர் பாதிக்கப்பட்டு வந்தனர். இதையடுத்து, கொரோனா நோயாளிகளை அனுமதிப்பதற்காக, கதிர்காமம் இந்திரா காந்தி மருத்துவ கல்லூரியை கோவிட் மருத்துவமனையாக அரசு அறிவித்தது. இங்கு அவசர சிகிச்சை பிரிவு, தீவிர சிகிச்சை பிரிவு (ஐசியூ), 7 கோவிட் வார்டுகள், தனிமைப்படுத்தப்பட்ட வார்டு ஒன்று, 10 அறைகள் கொண்ட சிறப்பு வார்டு என 600 படுக்கை வசதிகள் உள்ளன.

இதேபோல், ஜிப்மரிலும் 500 படுக்கை வசதிகளுடன் தனியாக கோவிட் மருத்துவமனை இயங்கி வருகிறது. ஆரம்பத்தில் கொரோனா தொற்று கட்டுக்குள் இருந்ததால் நோயாளிகளுக்கு தரமான சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் கடந்த சில வாரங்களாக கொரோனா தொற்றால் தினமும் 100 முதல் 150 பேர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். 

தற்போது கதிர்காமம் மருத்துவ கல்லூரி மற்றும் ஜிப்மரில் உள்ள அனைத்து படுக்கைகளும் நிரம்பி வழிகின்றன. இதனால் அனைவரையும் மருத்துவர்கள், செவிலியர்கள் தொடர்ந்து கண்காணிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. 

இதனால் மருத்துவ சிகிச்சையின் தரம் குறைந்ததுடன், அதனால் ஏற்படும் உயிரிழப்பும் அதிகரித்துள்ளது. இதேநிலை நீடித்தால் அடுத்த வாரம் முதல் தினமும் 200 முதல் 250 பேர் வரை பாதிக்கப்படுவர். அதன்பிறகு நோயாளிகளை அனுமதிக்க இடமில்லாத நிலை ஏற்படும்.


புதுவையில் தொடர்ந்து நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், கதிர்காமம் மருத்துவ கல்லூரியை சுகாதாரமாக பராமரிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மேலும், அங்கு கழிவறைகள், குளியலறைகள் போதிய அளவு இல்லை. தற்போது ஒரு கழிவறையை 50 நோயாளிகள் பயன்படுத்தும் அவலநிலை உள்ளது. 

இதனால் அங்கு செல்லவே மக்கள் யோசிக்கின்றனர். இதன் காரணமாக, தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் பரிசோதனை செய்ய முன்வருவதில்லை. இதேநிலை நீடித்தால் தொற்று மேலும் பரவும் சூழல் ஏற்படும். இப்பிரச்னையில் அரசு தீவிர கவனம் செலுத்த வேண்டும். நோயாளிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப நடுமாடும் கழிவறை வசதிகளை ஏற்படுத்திதர வேண்டும். மேலும், உப்பளம் துறைமுக வளாகத்தில் உள்ள குடோன்கள் புதுப்பிக்கப்பட்டுள்ளன.

அவற்றை தற்காலிக மருத்துவமனையாக மாற்றலாம். அதேபோல், பாரதி பூங்கா அருகில் உள்ள இயற்கை வாழ்வியல் முறை மையத்தையும் தற்காலிக மருத்துவமனையாக மாற்றலாம். இதுபோன்ற மாற்றுத்திட்டங்களை புதுவை அரசு  விரைவாக முன்னெடுக்கவில்லை என்றால், கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும். தற்போது 100 பேருக்கு பரிசோதனை செய்ததில் 20 முதல் 22 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 

ஆகஸ்ட் மாத இறுதியில் தொற்றால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை 10 ஆயிரத்தை கடக்கும் என்று வல்லுநர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இதனால் சுமார் 5 ஆயிரம் படுக்கைகள் வரை தேவைப்படும். ஆந்திரா போன்ற பல மாநிலங்களில் தனியார் மருத்துவமனைகளை அரசு எடுத்து நடத்தி வருகிறது. 

எனவே, புதுவை அரசு காலதாமதம் செய்யாமல் போர்க்கால அடிப்படையில் தனியார் மருத்துவமனைகளை சிறிது காலத்துக்கு அரசே எடுத்து நோயாளிகளை அனுமதித்து சிகிச்சை அளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்போதுதான் கொரோனா தொற்று பேரிடர் சமளிக்க முடியும். 

இதற்கான நடவடிக்கையை அரசு துரிதமாக எடுக்க வேண்டும் என்பதே அனைவரது எதிர்பார்ப்பாக உள்ளது.










ரஜினிக்கு அபராதமா? டிரைவருக்கா?!  


சீட் பெல்ட் அணியாமல் கார் ஓட்டிச் சென்ற ரஜினிக்கு 100 ரூபாய் ஃபைன் போடப்பட்ட விவகாரம் சமீபத்தில் சர்ச்சையானது. இதில் சம்மந்தப்பட்ட காவல்துறை இன்ஸ்பெக்டர் பழனி என்பவர், ரஜினியை தொடர்பு கொண்டு வருத்தம் தெரிவித்திருப்பதுதான் தற்போதைய ஹை-லைட்! 

சீட் பெல்ட் அணியாமல் ரஜினி கார் ஓட்டிச் சென்றாரா? 

 

லாக் டவுன் காலத்தில் சென்னை போயஸ் கார்டன் வீட்டிலிருந்து, கேளம்பாக்கத்தில் உள்ள தனது பண்ணை வீட்டிற்கு சென்று வருவதை வழக்கமாக வைத்திருக்கிறார் ரஜினி. பண்ணை வீட்டுக்கு சென்று வருவதையும், அங்கு தியானம் மற்றும் உடற்பயிற்சி செய்து வருவதாக தகவல்கள் வெளிவருகிறது. 


அப்படி செல்கிறபோது ரஜினியின் காரை அவரது டிரைவர்தான் ஓட்டிச் செல்வார். அப்படி ஒரு முறை செல்கிறபோது தாழம்பூர் சிக்னல் அருகே ரஜினியின் கார் மறிக்கப்பட்டது. டிரைவர் சீட் பெல்ட் அணியாமல் இருந்ததை கேள்வி எழுப்பினார் இன்ஸ்பெக்டர் பழனி.

 

காரை விட்டு கீழே இறங்கிய டிரைவர், சீட் பெல்ட் அணியாததற்கு மன்னிப்பு கேட்டுக்கொண்டிருந்தார். கார் யாருடையது என்பது குறித்து இன்ஸ்பெக்டர் கேட்டபோது எந்த பதிலையும் சொல்லாமல் இருந்தார் டிரைவர். 




அதேசமயம், இன்ஸ்பெக்டருக்கு தூரத்தில் இருந்த பெண் போலீஸ் ஒருவர், ஆர்.டி.ஓ. அலுவலகத்துடன் இணைந்துள்ள தனது கையில் இருந்த எலெக்ட்ரானிக் சாதனத்தில் காரின் நெம்பரையும், 100 ரூபாய் ஃபைனையும் டைப் செய்ய காரின் உரிமையாளர் ரஜினிகாந்த் என்றும், காரின் மற்ற விபரங்களையும் சொன்னது. 


அந்த ரசிதை அப்படியே பிரிண்ட் எடுத்து இன்ஸ்பெக்டரிடம் நின்றிருந்த டிரைவரிடம் தந்தார் அந்த பெண் போலீஸ். அவரும் 100 ரூபாயை கட்டி விட்டு காரை எடுத்துக்கொண்டு புறப்பட்டார்.

 

இதுதான் நடந்ததே தவிர, சீட் பெல்ட் அணியாமல் ரஜினி கார் ஓட்டவில்லை. அவரது டிரைவர்தான் சீட் பெல்ட் போடாமல் காரை ஓட்டிச் சென்று ஃபைன் கட்டியுள்ளார். இது சர்ச்சையானதும் மிகவும் வருத்தப்பட்டிருக்கிறார் தாழம்பூர் இன்ஸ்பெக்டர் பழனி. இந்த நிலையில், ரஜினியின் வீட்டிற்கு தொடர்புகொண்ட பழனி, தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டு விட்டு, “சாரிடம் பேச வேண்டும்” என சொல்ல, ரஜினிக்கு லைன் கொடுக்கப்பட்டிருக்கிறது.

 

ரஜினியிடம் பேசிய பழனி, தனது வருத்தத்தை தெரிவித்திருக்கிறார். ரஜினியோ, “உங்களின் டூட்டியை செய்திருக்கிறீர்கள். இதில் வருத்தப்பட ஒன்றுமில்லை” என சொல்லி இன்ஸ்பெக்டரை பெருமைப்படுத்தியுள்ளார் என கூறப்படுகிறது.


 



லட்சத்தை தாண்டியது கொரோனா பாதிப்பு: முழு விபரம்!  



தமிழகத்தில் இதுவரை இல்லாத வகையில் ஒரேநாளில் 6,988 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.  தமிழகத்தில் 3வது நாளாக 6 ஆயிரத்தை கடந்து கொரோனா பாதிப்பு பதிவாகி உள்ளது. இதனையடுத்து கொரோனா தொற்றால் பாதிப்படைந்தோர் எண்ணிக்கை 2,06,737 ஆக உயர்ந்துள்ளது.

தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் மேலும் 89 பேர் உயிரிழந்துள்ளனர். 56வது நாளாக தொடர்ந்து இரட்டை இலக்க எண்ணிக்கையில் உயிரிழப்பு பதிவாகி உள்ளது.  தமிழகத்தில் உயிரிந்தவர்களின் எண்ணிக்கை 3,409ஆக அதிகரித்துள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் கொரோனாவிலிருந்து குணமடைந்த மேலும் 7,758 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். கொரோனாவிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 1,58,813 ஆக அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோரை விட குணமடைந்தோர் எண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ளது.  தமிழகத்தில் கொரோனாவுக்கு 52,273 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

சென்னையில் மேலும் 1,329 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. சென்னையில் 22வது நாளாக 2 ஆயிரத்திற்கும் கீழ் கொரோனா பாதிப்பு பதிவாகி உள்ளது.

சென்னையில் மட்டும் கொரோனா பாதிப்பால் மேலும் 20 பேர் உயிரிழந்துள்ளனர். சென்னையில் மொத்த உயிரிழப்பு 1989 ஆக உயர்ந்துள்ளது.



இன்று மாவட்டம் வாரியாக கொரோனா பாதிப்பு  விவரம்

அரியலூர் 4    
செங்கல்பட்டு 449
சென்னை 1329
கோயம்புத்தூர் 270
கடலூர் 89
தருமபுரி 30
திண்டுக்கல் 100
ஈரோடு 22
கள்ளக்குறிச்சி 104
காஞ்சிபுரம் 442
கன்னியாகுமரி    269
கரூர் 27
கிருஷ்ணகிரி 31
மதுரை 301
நாகப்பட்டினம் 10
நாமக்கல் 51
நீலகிரி 40
பெரம்பலூர்    25
புதுக்கோட்டை  110
ராமநாதபுரம் 86
ராணிப்பேட்டை 244
சேலம் 112
சிவகங்கை 84
தென்காசி 99
தஞ்சாவூர் 162
தேனி 235
திருப்பத்தூர் 86
திருவள்ளூர் 385    
திருவண்ணாமலை 152
திருவாரூர் 100
தூத்துக்குடி 317
திருநெல்வேலி 212
திருப்பூர் 51
திருச்சி 199  
வேலூர் 212
விழுப்புரம் 157
விருதுநகர் 376  

விமான நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் 11
விமான நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் (உள்நாட்டுப் பயணம்)  5
ரெயில் நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் 0

மொத்தம் 6,988 





ஜெயலலிதா வீடு எங்களுக்கு- தீபா  


சென்னை:

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் இல்லத்தை (வேதா நிலையம்) நினைவு இல்லமாக மாற்றுவதற்கு தமிழக அரசு முடிவு செய்து அதற்கான நடவடிக்கைகளை விரைவு படுத்தியது. 

இந்த நடவடிக்கைக்கு எதிராக ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா, அண்ணன் மகன் தீபக் ஆகியோர் வழக்கு தொடர்ந்துள்ளனர். 

இந்த வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில், ஜெயலலிதா நினைவு இல்லம் அமைப்பதற்கான நிலம் கையகப்படுத்த இழப்பீட்டு தொகையை சென்னை 
சிவில் நீதிமன்றத்தில் தமிழக அரசு செலுத்தி உள்ளது.  24 ஆயிரத்து 322 சதுர அடி பரப்பு கொண்ட வேதா நிலையத்திற்கு இழப்பீட்டு தொகையாக ரூ.67.9 கோடியை நீதிமன்றத்தில் தமிழக அரசு டெபாசிட் செய்தது.

இழப்பீட்டு தொகையை செலுத்தியதால் போயஸ் கார்டன் இல்லம் அரசுடைமை ஆக்கப்பட்டுவிட்டதாக தமிழக அரசு கூறி உள்ளது. 

இழப்பீட்டு தொகையை சம்பந்தப்பட்டவர்கள் சிட்டி சிவில் நீதிமன்றத்தில் பெற்றுக்கொள்ளலாம் என்றும் கூறியுள்ளது. 

மேலும், போயஸ் கார்டன் இல்லத்தின் ஒரு பகுதியை முதல்வரின் முகாம் அலுவலகமாக மாற்ற சாத்தியம் இல்லை என்றும் அரசு தெரிவித்துள்ளது.

இந்நிலையில், வேதா இல்லம் அரசுடமையாக்கப்பட்டதற்கு மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் ஜெ.தீபா கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து செய்தியாளர்கள் சந்திப்பில் ஜெ.தீபா பேசியதாவது:-

* வேதா இல்லம் அரசுடைமையாக்கப்படுவதில் எங்களுக்கு உடன்பாடு இல்லை.

* முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் குடும்ப நிகழ்ச்சிகள் அனைத்தும் வேதா இல்லத்தில் தான் நடைபெற்றன.

* பூர்வீக சொத்தை அரசு எடுத்துக்கொள்வதில் எங்களுக்கு உடன்பாடில்லை

* வேதா இல்லம் எங்களுடைய பூர்வீக சொத்து

* ஜெயலலிதாவின் வாரிசாக எங்களை நீதிமன்றமே அறிவித்துள்ள நிலையில் வேதா இல்லத்தில் எங்களுக்கே உரிமை உள்ளது

* தமிழக அரசின் நடவடிக்கை அத்துமீறிய செயல். வீட்டின் மதிப்பை நிர்ணயித்ததை ஏற்றுக்கொள்ள மாட்டோம்.

* வேதா இல்லத்திற்கான மதிப்பீடு தொகை ரூ.68 கோடி என்பது தவறானது

* எந்த அடிப்படையில் வேதா இல்லத்தின் மதிப்பு நிர்ணயிக்கப்பட்டது?

* இழப்பீடு என்று அரசு கூறியுள்ள தொகையை ஏற்றுக்கொள்ள முடியாது.

* வேதா இல்லத்திற்குள் இருக்கும் பொருட்களின் விவரங்களை அரசு வெளியிடாதது ஏன்..?

* ஜெயலலிதாவால் வாங்கப்பட்ட கடனுக்கு நாங்கள் தான் 
பொறுப்பேற்றுள்ளோம்

* இல்லம் அரசுடமையாக்குவதை எதிர்க்கிறோம். இது தொடர்பாக சட்ட ரீதியாக மேல்முறையீடு செய்வோம்

என அவர் தெரிவித்தார்.



சவுதி அரேபிய மன்னர் மருத்துவமனையில் அனுமதி
சவுதி அரேபிய மன்னர் சல்மான் பின் அப்துல் அஸீஸ் என்பவர் திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள்ளார்.

84 வயதான சவுதி அரபிய மன்னர் சல்மான் பின் அப்துல் அஸீஸ் என்பவர்  சற்று முன்னர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அவருக்கு பித்தப்பை வீக்கம் இருக்கும் காரணத்தினால் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் அந்நாட்டு செய்தி நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

சட்டவிரோதமாக மணல் திருடிய கும்பலை கைது செய்து, 6 வாகனங்கள் மற்றும் பணம் ரூ. 55 ஆயிரத்தை பறிமுதல் செய்த, மதுரை மாவட்ட எஸ் பி தனிப்பிரிவு போலீஸார்
21.07.2020. மதுரை மாவட்டம். செக்கானூரணி, பெருமாள் கோவில்பட்டி அருகே மதுரை மாவட்ட SP தனிப்பிரிவு போலீசார் ரோந்து சென்றபோது, அங்கே சட்டத்திற்குப் புறம்பாக மணல் திருடி கொண்டிருந்த, அலெக்ஸ் பாண்டியன் உட்பட 10 நபர்களை கைது செய்து, அவர்களிடமிருந்து ஜேசிபி இயந்திரம், 5 லாரிகள், 3 இரு சக்கர வாகனங்கள் பணம் 55-ஆயிரத்தை பறிமுதல் செய்து செக்கானூரணி காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். மேற்படி நபர்கள் மீது செக்கானூரணி போலீசார் வழக்கு பதிவு செய்து, நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினர்…

சிறப்பான பணி; நேர்மையான அதிகாரி!’- பிரதமர் அலுவலகத்தில் தமிழக பெண் அதிகாரி

பிரதமர் அலுவலகத்தில் புதிதாக 16 இணை செயலாளர்களை நியமனம் செய்து மத்திய அமைச்சரவையின் பணியாளர் நியமன செயலாளர் உத்தரவிட்டுள்ளார். இதில் தமிழகத்தை சேர்ந்த ஐஏஎஸ் அதிகாரி அமுதா ஒருவர்.

1994-ம் ஆண்டு ஐஏஎஸ் பயிற்சி முடித்த அமுதா தற்போது உத்தரகாண்டில் உள்ள முசோரி ஐ.ஏ.எஸ் அகாடமியில் விரிவுரையாளராக பணியாற்றி வருகிறார். தமிழகத்தில் உணவு பாதுகாப்புத்துறை ஆணையராகவும், தருமபுரி மாவட்ட கலெக்டராகவும் பணியாற்றியுள்ள அமுதா, நேர்மையான அதிகாரி என பெயர் பெற்றவர். 2015ல் தமிழகத்தில் ஏற்பட்ட வெள்ளத்தின்போது களமிறங்கிய அவர், ஒவ்வொரு மக்களை பாதுகாப்பாக வெளியேற்றினார். இவரின் இந்த செயல் அனைவராலும் பாராட்டப்பட்டது.

முன்னாள் குடியரசு தலைவர் அப்துல் கலாம், மறைந்த முதல்வர் ஜெயலலிதா, முன்னாள் முதல்வர் கருணாநிதி ஆகியோரின் இறுதிச்சடங்கு ஏற்பாடுகளை பொறுப்பாக செய்து முடித்தவர் அமுதா.

நீங்கள் சந்தித்த நண்பருக்கோ, அக்கம்பக்கத்திலோ கொரோனா பாசிடிவ் என்றால் உடனடியாக என்ன செய்யவேண்டும்?

நேற்று இயல்பாக பேசிக் கொண்டிருந்தவருக்கு இன்று கொரோனா பாசிடிவ் என சொல்லி தனிமைப் படுத்துகின்றனர். எனவே தெரிந்த நெருக்கமான உறவுகள், நண்பர்களுடன் பேசுவதற்குக் கூட தயக்கமாக உள்ளது என்பதே மக்களின் புலம்பலாக உள்ளது.



Advertisement

Author Name

{picture#YOUR_PROFILE_PICTURE_URL} YOUR_PROFILE_DESCRIPTION {facebook#YOUR_SOCIAL_PROFILE_URL} {twitter#YOUR_SOCIAL_PROFILE_URL} {google#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.