'ராஜவம்சம்' - திரைவிமர்சனம்!
கே.வி.கதிர்வேலு இயக்கத்தில் சசிகுமார், நிக்கி கல்ராணி, சிங்கம் புலி, மனோபாலா, சதீஷ், தம்பி ராமையா, விஜய குமார், ராதாரவி, யோகி பாபு, ரேகா என மிகப்பெரிய நடிகர் பட்டாளாமே இணைந்து நடித்திருக்கும் சினிமா ராஜவம்சம். இன்று இத்திரைப்படம் திரைக்கு வந்திருக்கிறது.
ஐடி துறையில் மென்பொறியாளராக வேலை செய்யும் சசிகுமாருக்கு மிகப் பெரிய ப்ராஜக்ட் வழங்கப்படுகிறது. அந்த ப்ராஜக்ட் அவர் வேலை செய்யும் நிறுவனத்தின் மதிப்பு தொடர்புடையது என்பதால் மிகுந்த கவனத்துடன் அவர் அதனை கையாள வேண்டியிருக்கிறது. இன்னொரு புறம் மிகப்பெரிய குடும்ப பின்னனி கொண்ட சசிகுமாரின் குடும்பம் அவருக்கு திருமண ஏற்பாடுகள் செய்கிறது. இவ்விரண்டுக்கும் இடையே நடக்கும் காட்சிகளின் தொகுப்பாக ராஜவம்சம் அமைந்திருக்கிறது.
நாயகனாக நடித்திருக்கும் சசிகுமார் தனக்கே உரிய பாணியில் நடித்து அசத்தி இருக்கிறார். குறிப்பாக சண்டைக்காட்சிகளில் அதகளப்படுத்தி இருக்கிறார். குடும்பம், காதல், நட்பு என நடிப்பில் ஸ்கோர் செய்து இருக்கிறார். நாயகியான நிக்கி கல்ராணி, அழகாக வந்து அளவான நடிப்பை கொடுத்து இருக்கிறார். இவருடைய சுட்டித்தனமான நடிப்பு ரசிகர்களை கவர்ந்திருக்கிறது. மாடு கன்று ஈனும் காட்சியில் உணர்சிவசப்படும் இடத்தில் நிக்கி கல்ராணி சிறப்பாக நடித்திருக்கிறார்.
யோகி பாபு, சிங்கம் புலி, சதீஷ் உள்ளிட்டோரின் காமெடி காட்சிகள் பல இடங்களில் ரசிகர்களை சிரிக்க வைக்கிறது. மற்ற கதாபாத்திரங்கள் அனைவரும் திரைக்கதை ஓட்டத்திற்கு பெரிதும் உதவி இருக்கிறார்கள். விவசாயம், ஐ.டி. சம்மந்தப்பட்ட கதையை குடும்பம் மற்றும் கமர்ஷியல் கலந்து இயக்கி இருக்கிறார் இயக்குனர் கதிர் வேலு. படத்தில் நிறைய கதாபாத்திரங்கள் இருக்கிறார்கள். அவர்கள் அனைவரையும் திறமையாக கையாண்டு இருக்கிறார் இயக்குனர். ஒரு விஷேசத்துக்கு எத்தனை பேர் வந்தாலும் நம்முடைய ரத்த உறவுகளைத்தான் கண்கள் தேடும். யாரேனும் ஒரு ரத்த உறவு இல்லை என்றாலும் மனம் வருத்தப்படும் என்பது போல் குடும்ப உறவுகளை சொல்லும் வசனங்கள் படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறது.
சாம்.சி.எஸ் இசையில் பாடல்கள் கேட்கும் ரகம். பின்னணி இசையில் வழக்கம்போல் மிரட்டி இருக்கிறார். கிராமத்து அழகை மாறாமல் படம் பிடித்து இருக்கிறார் ஒளிப்பதிவாளர் சித்தார்த். கதையில் மேலும் சில திருத்தங்கள் சேர்த்திருக்கலாம்.
ராஜவம்சம்.. குடும்ப பொழுது போக்கு சினிமா!.
கருத்துரையிடுக