'பாயும் ஒளி நீ எனக்கு' திரை விமர்சனம்
விக்ரம் பிரபு நடிப்பில், கார்த்திக் அத்வைத் இயக்கத்தில் உருவாகியுள்ள பாயும் ஒளி நீ எனக்கு படத்தில் வாணி போஜன், தனஜெயன், வேலூர் ராமமூர்த்தி, விவேக் பிரசன்னா ஆகியோர் நடித்துள்ளனர்.
ஸ்டார்அப் ஒன்றை தனது நண்பருடன் இணைந்து நடத்திக் கொண்டிருக்கிறார் அரவிந்த் (விக்ரம் பிரபு). சிறு வயதில் நிகழ்ந்த விபத்தின் காரணமாக அவரால் குறைந்த ஒளியில் பார்க்க முடியாது. அதீத வெளிச்சம் இருந்தால் மட்டுமே இயல்பான பார்வை தெரியும். இல்லையெனில், பார்வையில் தெளிவிருக்காது. தனக்கு இந்த மாதிரியான பார்வைக் குறைபாடு இருப்பதை நினைத்து கவலைப்படவோ வருத்தப்படவோ இல்லாமல் பாசிட்டிவிட்டியோடு இருக்கிறார். இப்படியான பிரச்சினையை எதிர்கொண்டு வரும் அவர், ஒரு நாள் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்படும் பெண் ஒருவரை ரவுடிகளிடமிருந்து மீட்கிறார்.
அதன் எதிரொலியாக அவரை பழிவாங்க ஒரு கூட்டம் திட்டம் தீட்ட, மறுபுறம் அவரது சித்தப்பா கொலை செய்யப்படுகிறார். அங்கே தொடங்குகிறது பிரச்னை. இன்னொரு பக்கம், அரசியலில் பயங்கர செல்வாக்கு உடையவராக இருக்கும் வேல ராமமூர்த்தி. அவருக்குக் கிடைக்கும் மதிப்பும் மரியாதையும் தனக்குக் கிடைக்க வேண்டுமென நினைக்கும் அவரது அரசியல் வாரிசு தனஞ்செயா. இப்படி தன்னை சுற்றி பிரச்சனைகள் சுழல.... தனது இழப்புக்கு எப்படி பழிதீர்க்கிறார் என்பதே படத்தின் கதை.....
வெளிச்சம் கிடைக்க வேண்டி நாயகன் எடுக்கும் முயற்சிகள் கவனிக்க வைக்கின்றன. க்ளைமாக்ஸில் பார்வை குறைபாடு உள்ள போது சண்டைக்காட்சியில் வில்லனை கையாண்ட விதம் அருமையாக இருந்தது. மேலும் படத்திற்கு ஒளிப்பதிவு கூடுதல் வலு சேர்த்துள்ளது. ஸ்ரீதர் ஒளிப்பதிவு சிறப்பு. சண்டைக் காட்சிகளில் மிரட்டுகிறார் ஸ்டன்ட் இயக்குநர் தினேஷ் காசி.
ஹீரோவுக்கு நிகழும் பேரிழப்புக்கான காரணம் அழுத்தமில்லாமல் இருப்பது படத்திற்கு சற்று பின்னடைவு. பாடல்கள் பெரிய அளவில் ஈர்க்கவில்லை. கதாநாயகி இல்லாமலே படத்தை எடுத்திருக்கலாம் என நினைக்க வைக்கிறது.
மொத்தத்தில் இந்த 'பாயும் ஒளி நீ எனக்கு' பிரகாசம் குறைவு....
RATING: 2.5/5
கருத்துரையிடுக