Latest Post

'நான் மிருகமாய் மாற' திரைபடத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு 




செந்தூர் பிலிம் இன்டர்நேஷனல் தயாரிப்பில், சத்திய சிவாவின் இயக்கத்தில், சசிகுமார் நடிப்பில் உருவாகியுள்ள  'நான் மிருகமாய் மாற' திரைப்படம் வரும் நவம்பர் 18ம் தேதி அன்று திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்நிலையில்  படத்தின் குழுவினர் பத்திரிக்கையாளர்களை சந்தித்து கலந்துரையாடினர்.


படத்திலிருந்து  பிரத்யேகமாக, ஒரே டேக்கில் எடுக்கப்பட்ட சண்டைக் காட்சி திரையிடப்பட்டது. இதனைத் தொடர்ந்து படக் குழுவினர் உரையாடத் தொடங்கினர்.

படத்தின் ஒலிப் பொறியாளர் KNACK ஸ்டுடியோஸ் உதயகுமார் பேசுகையில்:

இந்தத் திரைப்படம் ஒலியை சார்ந்து எடுக்கப்படுகிறது என்பதை அறிந்ததும் மிகவும் மகிழ்ச்சியுற்றேன்.  தொடக்கத்தில், சசிகுமார் எவ்வாறு இந்த கதாபாத்திரத்திற்கு பொருந்துவார் என்ற சந்தேகம் இருந்தது. எனினும் அவர், ஒரு ஒலிப்பொறியாளரின் வாழ்க்கையை மிகவும் இயல்பாக தனது தத்ரூபமான நடிப்பின் மூலம் வெளிக்காட்டி வியப்பில் ஆழ்த்தியுள்ளார். படத்திற்கு கூடுதல் பலமாக ஜிப்ரானின் பின்னணி இசை அமைந்துள்ளது.

 படத்தின் தொகுப்பாளர் NP ஸ்ரீகாந்த் பேசுகையில்:

நான் கல்லூரியில் படித்த காலத்தில் சசிகுமாரை தூரத்தில் இருந்து பார்த்துள்ளேன். தற்பொழுது அவருடன் பணியாற்றுகிறேன் என்பது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. இந்தப் படத்தில் புதியதாக ஒரு தொகுப்பு முறையை நாங்கள் பின்பற்றியுள்ளோம்.

 படத்தின் இசை அமைப்பாளர் ஜிப்ரான் பேசுகையில்:

இயக்குனர் சத்திய சிவாவின் தன்னம்பிக்கை எனக்கு மிகவும் பிடித்திருந்தது. அவர் இந்த திரைப்படத்தின் பின்னணி இசையில் ஒரு புதுமையை கையாள எண்ணினார். அதாவது இசைக்கருவிகளை பயன்படுத்தாமல் நாம் அன்றாடம் கேட்கும் சத்தங்களை வைத்து மட்டுமே இசையை உருவாக்க வேண்டும் என நிர்பந்தம் வைத்தார். இதனைப் புரிந்து கொள்ள தொடக்கத்தில் சிரமம் இருந்தாலும், பின்னர் அவர் கூறிய வண்ணமே இசை அமைத்துக் கொடுத்தேன். படத்தின் தொகுப்பாளர் ஒரு வித்தியாசமான முறையை இப்படத்தில் கையாண்டுள்ளார். ஆரம்பம் முதலே படத்தில் ஒரு வேகம் இருக்கும். நானும் சசிகுமாரும் குட்டி புலி திரைப்படத்திற்கு பின் இப்பொழுது ஒன்றிணைகிறோம். படத்தின் வெளியீட்டிற்கு மிகவும் ஆர்வமாக உள்ளேன்.

 படத்தின் இயக்குனர் சத்ய சிவா பேசுகையில்:

இந்தத் திரைப்படத்தில் புதியதாக  சிலவற்றை நாங்கள் பின்பற்றியுள்ளோம்.  படமாக நீங்கள் அதனை பார்க்கும் பொழுது, நிச்சயம் உங்களுக்கு பிடிக்கும். படத்தில் ஒரு வடிவம் இருக்கும். ஆரம்பத்தில், அதனை நடிகர்கள் மற்றும் படக்குழுவினருக்கு எடுத்துரைப்பதில்  சிறிது சிரமம் இருந்த போதிலும், படம் தற்பொழுது உருவாகியுள்ள விதத்தைக் கண்டு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. வன்முறை காட்சிகள் அதிகமாக இருந்த போதிலும் மக்களுக்கு பிடிக்கும் என்று நம்புகிறேன்.

இந்தப்படத்தின் கதையை தொலைபேசியின் வாயிலாக கொரோனா ஊரடங்கின் போது சசிகுமாருக்கு எடுத்துரைத்த பொழுது, வித்தியாசமாக இருக்கிறது நிச்சயம் நான் நடிக்கிறேன் என்று உடனே சம்மதித்தார். தனக்குள் இருக்கும் இயக்குனரை மறந்து ஒரு நடிகராக இந்த திரைப்படத்தில் அவர் வாழ்ந்துள்ளார் என்று தான் சொல்ல வேண்டும்.

இசையமைப்பாளர் ஜிப்ரானிடம், திரைப்படத்தில் பாடல்கள் இல்லை என்று கூறியவுடன் மிகவும் மகிழ்ச்சியுற்றார். அவர் பின்னணி இசையமைப்பதில் கை தேர்ந்தவர் என்பது நாம் அனைவருக்கும் தெரிந்த ஒன்றே !  இத்திரைப்படத்திலும் அதனை நிரூபித்துள்ளார் ஜிப்ரான்.

ஒளிப்பதிவாளர் ராஜாவை பாராட்டி தான் ஆக வேண்டும். படத்தின் முக்கால்வாசி காட்சிகள் ஒன்று இரவு  நேரத்தில் அல்லது மழையில் படமாக்கப்பட்டது. இயலாது என முகம் சுளிக்காமல் முழு ஈடுபாட்டுடன் இந்த படத்தில் அவர் பணி புரிந்தார்.

நாயகி ஹரிப்ரியாவிடம் ஒரு குழந்தைக்கு தாயாக நடிக்க வேண்டும் என்று கூறியவுடன் சற்றும் தயங்காமல் கதையின் ஆழம் மற்றும் தன் கதாபாத்திரத்தின் முக்கியத்துவத்தை உணர்ந்து, உடனே சம்மதித்தார். இந்தத் திரைப்படத்தில் அவர் நாயகி என்பதனை தாண்டி, சசிகுமாரின் மனைவியாக மட்டுமே நம் கண்களுக்கு தெரிவார்.

பணியாற்றிய அனைத்து கலைஞர்களும் நான் எதிர்பார்த்தவற்றை சிறப்பாக வெளிக்கொண்டு வந்துள்ளனர். இத்திரைப்படத்திற்கு பின் விக்ராந்த், சரத் அம்பானி, சங்கரை பார்த்தால் நிச்சயம் ஒரு விதமான பயம் ஏற்படும்.

 சசிகுமார் மீது சிவப்பு சாயம் கொண்ட ஒரு வாலியை ஊற்றுவது போன்ற ஒரு காட்சி படத்தில் உண்டு! அது அவருக்கு மிகவும் சிரமமாக இருக்கும் என்ற காரணத்தினால் ஒரே நாளில் காட்சி அமைக்கலாம் என திட்டம் தீட்டினோம். எட்டு முதல் பத்து நாட்கள் வரை இதற்காக ரிகர்சல் செய்தோம். இப்படி உருவானதே அந்த சண்டை காட்சி.

 படத்தின் நாயகி ஹரிப்ரியா பேசுகையில்:

செந்தூர் பிலிம் இன்டர்நேஷனல் தயாரிப்பில் கடைசியாக 2010ல் வல்லக்கோட்டை திரைப்படம் நடித்தேன். அதன்பின் பல்வேறு கன்னட படங்களில் நடித்துள்ளேன். மீண்டும் தமிழில் நடிக்க ஒரு சரியான கதை மற்றும் குழுவிற்காக காத்திருந்தேன். அப்பொழுதுதான் இயக்குனர் சத்திய சிவா, எனது கன்னட திரைப்படமான பெல் பாட்டம் படத்தினை பார்த்து இந்த திரைப்படத்திற்காக அணுகினார். கதை மிகவும் பிடித்து போக உடன் சம்மதித்தேன். இந்தப் படத்திற்கு தமிழ்நாடு மட்டும் இல்லாமல் கர்நாடகத்திலும் மிகுந்த எதிர்பார்ப்பு உள்ளது.   ஆனந்தி என்ற கதாபாத்திரத்தில் சசிகுமாரின் மனைவியாக நடித்துள்ளேன். முதலில் என்னை அணுகும் பொழுது படத்தில் எனக்கு ஒரு ஆறு வயது குழந்தை இருப்பதாக கூறினார்கள். எப்பொழுதும் புதிதாக ஒன்றை முயற்சி செய்ய வேண்டும் என்பதே எனது நோக்கம். எனவே இந்த திரைப்படத்தில் நடிக்க ஒப்புதல் தெரிவித்தேன்.

இறுதியாக பேசிய சசிகுமார் தான் படம் நடித்து ஒரு வருடம் ஆகிவிட்டது என்பதனை தெரிவித்தார்.

 மேலும் அவர் பேசுகையில்:

காமன் மேன் என்று இந்த திரைப்படத்திற்கு முதலில் பெயர் வைக்கப்பட்டது. பின்னர் அந்த தலைப்பு மாற்றப்பட்டு நான் மிருகமாய் மாற என்று பெயர் சூட்டப்பட்டது. இந்தப் படத்தில் வன்முறை காட்சிகள் அதிகமாக இருக்கும்.  எனினும் குழந்தை, மனைவி என்று கதையில் ஒரு சராசரி மனிதனின் உணர்ச்சிகள் சரியாக பயன்படுத்தப்பட்டிருக்கும். ஜிப்ரானின் பின்னணி இசை படத்திற்கு கூடுதல் பலம் அளித்துள்ளது என்று தான் கூற வேண்டும். பாடலே இல்லாத திரைப்படத்தில் முதன்முறையாக பணியாற்றியுள்ளேன். படத்தில் நடனம் இல்லை என்பது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. 

எப்பொழுதும் ஒரு கிராமத்து கதாநாயகனாக வயலில் வேட்டியுடன் சுற்றித்திரிந்த எனக்கு ஒலிப் பொறியாளர் கதாபாத்திரம் மிகவும் வித்தியாசமாக இருந்தது. இந்த கதாபாத்திரத்திற்காக ஒலிப்பொறியாளர்கள் லட்சுமி நாராயணன் மற்றும் உதயகுமார் அவர்களை கூர்ந்து கவனித்தேன். படத்தில் அனைத்துமே புதியதாக இருக்கும். இதற்காக அனைவரும் கடினமாக உழைத்து உள்ளோம். படக்குழுவினர் அனைவரும் தங்களது முக்கியத்துவத்தை உணர்ந்து சிறப்பாக பங்களித்து பணியாற்றியுள்ளனர்.

"படம் இப்படி இருக்கு, அப்படி இருக்கு என்று சொல்லல, நீங்க பார்த்துட்டு சொல்லுங்க, படம் எப்படி இருக்குன்னு" என்று தன் பாணியில் உரையை முடித்தார். இவருக்கு அடுத்த வாரம் காரி என்ற படம் வெளியாக உள்ளது என்பதனையும் தெரிவித்தார்.


 'செஞ்சி ' படத்தின் திரை விமர்சனம்




கணேஷ் சந்திரசேகர், ரஷ்ய நடிகை கெசன்யா மற்றும் பலர் நடித்துள்ள படம் தான்  'செஞ்சி '.

கதை எழுதி,இயக்கி, தயாரித்து முதன்மைக் கதாபாத்திரத்திலும் நடித்துள்ளார் கணேஷ் சந்திரசேகர்.ஏலியன் பிக்சர்ஸ் சார்பில் இந்தப் படம் உருவாகி உள்ளது. நாளை 18-ஆம் தேதி இந்தப் படம் வெளியாக உள்ளது.

ஒரு புதையல் வேட்டை சார்ந்த கதையாக உருவாகி இருக்கும் படமாக இந்த படம் உருவாகி உள்ளது.

சரி வாங்க விமர்சனத்தை பார்ப்போம்.....  

பிரான்சிலிருந்து பாண்டிச்சேரிக்கு வரும் சோபியா தனது மூதாதையர் வீட்டை அடைகிறாள். வீட்டில் நுழையும் போதே ஒரு கெட்ட சகுனம் வருகிறது. ஆனால் அவள் அதைப்பற்றி கவலைப்படாமல் உள்ளே நுழைகிறாள்.அங்கே பழைய புராதன கலைப் பொருட்கள் ஏராளமாக இருக்கின்றன. அவற்றை ரசித்து ரசித்துப் பார்க்கிறாள் .ஆனால் அங்கே ஏதோ ஒரு அமானுஷ்யம் அவளுக்குத் தட்டுப்படுகிறது. எவ்வளவு தைரியமாக இருந்தாலும் மனதிற்குள் ஒரு பயம் வருகிறது. அங்கே ஒரு ஓலைச்சுவடியைக் கண்டெடுக்கிறாள். 

அதில் ஏதோ ரகசியம் இருப்பதாகப் படவே தொல்பொருள் ஆராய்ச்சி செய்யும் ஜாக் ஆண்டர்சனை நாடுகிறாள். அவர் வந்து அதை உற்று நோக்கிய போது அதற்குள் ஏதோ ஒரு ரகசியம் புதைந்திருப்பதாகத் தோன்றுகிறது. அது பற்றி மேலும் அறிய விரும்பும்போது அதில் ஒரு புதையலுக்கான ரகசிய குறியீடுகள் உள்ளதாக அவருக்குத் தெரிகிறது.சோபியாவுடன் இணைந்து தேட ஆரம்பிக்கிறார்.

ரகசிய குறிப்புகளை வைத்துக்கொண்டு கிடைத்த குறியீடுகளின் படி தேட ஆரம்பிக்கிறார்கள். புதையல் வேட்டைக்கான பாதையில் ஐந்து தடயங்கள் உள்ளதாகக் குறிப்புகள் கூறுகின்றன. புதையல் தேடுவதற்கான படிநிலைகளில் ஒரே நட்சத்திரத்தில் அதுவும் கேட்டை நட்சத்திரத்தில் பிறந்த ஐந்துபேர்தான் அந்தப் புதையலை எடுப்பதற்குத் தகுதியானவர்கள் என்று ஒரு நிபந்தனை வருகிறது.

புதையல் வேட்டை ஒரு பக்கம் நகரும் போது, இன்னொரு பக்கம் ஐந்து சிறுவர்கள் ஊருக்குள் அடிக்கும் லூட்டியைக் காட்டிச்  சற்று நேரம் கதை நகர்கிறது. அவர்களுக்கும் இதற்கும் என்ன சம்பந்தம் என்று யோசித்தால், இரண்டாவது பாதியில் தொடர்பு படுத்துகிறார் இயக்குநர். ஐந்தையும் ஒவ்வொன்றாக அடைந்து ஒவ்வொரு இடங்களுக்கும் சென்று இறுதியில் அந்தப் புதையலை கண்டுபிடித்தார்களா? இல்லையா? ஐந்து சிறுவர்கள் என்ன ஆனார்கள்?  என்பது தான் செஞ்சி படத்தின் கதை.

வெளிநாட்டிலிருந்து வரும் ஆங்கிலேயப் பெண்மணியாக ரஷ்ய நடிகை கெசன்யா நடித்துள்ளார். இயக்குநரை விட அந்த நடிகை  மிகச்சிறப்பாக நடித்து உள்ளார். தோற்றத்திலும் உடல் மொழியிலும் வசன உச்சரிப்பிலும் அனுபவம் தெரிகிறது. படத்தில் மூன்று பாடல்கள் தேடல் தேடு என்ற பாடல் படத்தின் ஆரம்பத்தில் டைட்டில் வரும் போது ஒலிக்கிறது. இயற்கை இடங்கள் படத்திற்கு பலம். அவ்வளவு பெரிய காட்டில்  தடயங்கள் உடனே உடனே காண்பது படத்திற்கு சோர்வு.  

மொத்தத்தில் 'செஞ்சி' வரலாற்று உணர்வை நினைவூட்டும் ஒரு வணிகப்படம்.... 


உறுதியேற்ற டாக்டர். மோகன்ஸ் நீரிழிவு சிறப்பு சிகிச்சை மையம்!




நீரிழிவு தின அனுசரிப்பையொட்டி அடுத்த தலைமுறைக்கான நீரிழிவு சிகிச்சை மீதான ஒரு சர்வே அறிக்கைடாக்டர். மோகன்ஸ் நீரிழிவு சிறப்பு சிகிச்சை மையத்தால் இன்று நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் வெளியிடப்பட்டது.  இதைத் தொடர்ந்து நீரிழிவு சிகிச்சை மற்றும் அதன் மீதான ஆராய்ச்சியில் பிரபல நிபுணர்கள் பங்கேற்ற ஒரு கலந்துரையாடல் அமர்வும் நடைபெற்றது. கலந்துரையாடலுக்கான நிபுணர்கள் குழுவில் டாக்டர். மோகன்ஸ் நீரிழிவு சிறப்பு சிகிச்சை மையத்தின் தலைவரும்தலைமை நீரிழிவு சிகிச்சை நிபுணருமான டாக்டர். வி. மோகன் மற்றும் இதன் நிர்வாக இயக்குனரும் மற்றும் சிறப்பு நிபுணருமான டாக்டர். ஆர்.எம். அஞ்சனா மற்றும் இதன் துணைத்தலைவர் டாக்டர். ரஞ்சித் உன்னிகிருஷ்ணன் ஆகியோர் இடம்பெற்றிருந்தனர். 

 

உங்களது நீரிழிவு சிகிச்சைப் பராமரிப்பிற்கு அவசியமானது என்று நீங்கள் கருதுகின்ற அதிக முக்கியமான விஷயங்கள் என்ன?” என்பது மீது இந்தியாவெங்கிலும் 1800 நீரிழிவு நோயாளிகள் பங்கேற்ற ஒரு விரிவானஆழமான சர்வே மேற்கொள்ளப்பட்டது.  நீரிழிவு பராமரிப்பில் மிக முக்கியமானமுதன்மையான அம்சமாக இருப்பது உணவுக் கட்டுப்பாடு என்று 50% நபர்கள் கருதுவதை இந்த சர்வே வெளிப்படுத்தியது.  இதைத் தொடர்ந்து உடற்பயிற்சிகுறித்த காலஅளவுகளில் மருத்துவப் பரிசோதனைகள்நல்ல உடல்நல பராமரிப்பு குழுவினர் மற்றும் மனஅழுத்தம் குறைப்பு ஆகிய அம்சங்களை முக்கியமானவைகளாக அவர்கள் குறிப்பிட்டிருந்தனர்.  நோயாளிகளது கருத்துகளுக்கு செவிமடுப்பதும் மற்றும் அவற்றை அக்கறையோடு பரிசீலிப்பதும்நோயாளிகளின் தேவைகளுக்கேற்ப சிகிச்சை திட்டத்தை பிரத்யேகமாக வழங்குவதற்கு மருத்துவர்களுக்கு உதவுகிறது. 

 

டாக்டர். மோகன்ஸ் நீரிழிவு சிறப்பு சிகிச்சை மையத்தின் தலைவர் டாக்டர். வி. மோகன் இந்நிகழ்வின்போது கூறியதாவது: 


நீரிழிவுக்கான சிகிச்சை மற்றும் அதன் மேலாண்மையில் குறித்த காலஅளவுகளில் தவறாது சிகிச்சை பெறும் விஷயத்தைப் பொறுத்தவரை நோயாளிகள் என்ன விரும்புகின்றனர் மற்றும் அவர்களுக்கு என்ன தேவைப்படுகிறது என்பது குறித்து இந்த சர்வேயின் மூலம் ஊக்கமளிக்கும் முடிவுகளையும்சிறப்பான கற்றல்களையும் நாங்கள் உண்மையிலேயே கண்டறிந்திருக்கிறோம்.”

 

டாக்டர். மோகன்ஸ் நீரிழிவு சிறப்பு சிகிச்சை மையத்தின் நிர்வாக இயக்குனரும்சிறப்பு மருத்துவருமான  டாக்டர். ஆர்.எம். அஞ்சனா இந்நிகழ்வின்போது பேசுகையில்எமது நோயாளிகளுக்கு சிறந்த சிகிச்சையைப் பரிந்துரைப்பதற்கு முன்புஅவர்களது நோய் பாதிப்பு தொடர்பான பல்வேறு வகை சிக்கல்கள்முந்தைய மருத்துவ வரலாறு மற்றும் அளவுருக்களை நாங்கள் கவனத்தில் கொள்ள வேண்டியிருப்பதால் சிகிச்சை நெறிமுறைகளும் மாறுபடுகின்றன. பல்வேறு வயது பிரிவுகளைச் சேர்ந்த நோயாளிகளுக்கும் வாழ்க்கைமுறை திருத்தங்கள்உணவுமுறை செயல்பாடுகள் மற்றும் வாழ்க்கையை மாற்றுகின்ற பிற முடிவுகள் ஆகியவற்றைப் பொறுத்தவரை வழிகாட்டலும்ஆதரவும் மற்றும் ஆலோசனையும் நிச்சயமாகத் தேவைப்படுகின்றன.  குறிப்பாக அவர்களது ஒட்டுமொத்த ஆரோக்கியத்தோடு தொடர்புடையதாக இம்முடிவுகள் இருக்கிறபோது இந்த வழிகாட்டலும்ஆதரவும் அதிக முக்கியத்துவம் பெறுகின்றன,” என்று கூறினார்.

 

டாக்டர் மோகன்ஸ் நீரிழிவு சிறப்பு சிகிச்சை மையத்தின் துணைத்தலைவர் டாக்டர். ரஞ்சித் உன்னிகிருஷ்ணன் பேசுகையில்:


நீரிழிவு தின அனுசரிப்பையொட்டி பொதுமக்களுக்கு நீரிழிவு குறித்த விழிப்புணர்வை வழங்கவும் மற்றும் அவர்களை திறனதிகாரம் பெற்றவர்களாக ஆக்கவும் வேண்டுமென்ற குறிக்கோளோடு கடந்த இரண்டு வாரங்களாக பல்வேறு சிறப்பான செயல்திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டன. மருத்துவரின் உரைகள்கலந்துரையாடல் அடிப்படையில் நோயாளிகளுக்கு கல்விஆரோக்கியமான உணவுகளை தயாரிக்கும் செய்முறை விளக்கம்வில்லுப்பாட்டுயோகா பயிலரங்குகள்சைக்கிள் ரேலி நிகழ்வுகள்வாக்கத்தான்கள்வினா விடை நிகழ்ச்சிகள் மற்றும் மெகா மருத்துவ முகாம்கள் ஆகியவை இவற்றுள் இடம்பெற்றிருந்தன,” என்று கூறினார்.

 

டாக்டர். மோகன்’ஸ் நீரிழிவு சிறப்பு சிகிச்சை மையம் குறித்து: தமிழ்நாட்டின் சென்னையில் தலைமையகத்தைக் கொண்டிருக்கும் டாக்டர். மோகன்’ஸ் நீரிழிவு சிறப்பு சிகிச்சை மையமானது, 1991-ம் ஆண்டில் நிறுவப்பட்டதாகும். இந்தியாவின் முன்னணி நீரிழிவு சிகிச்சை வழங்கல் நிறுவனமாகத் திகழும் இதுநீரிழிவு நோயாளிகளுக்கு விரிவான சேவைகளை வழங்கிவருகிறது. இந்தியாவில் 50 நீரிழிவு சிகிச்சை மையங்களைக் கொண்டு நீரிழிவு சிகிச்சையில் முழுமையான சேவைகளை இது வழங்கிவருகிறது.  இந்த சிகிச்சை மையங்களில் எட்டு இலட்சத்திற்கும் அதிகமான நீரிழிவு நோயாளிகள் இம்மையங்களில் சிகிச்சைக்காக பதிவுசெய்யப்பட்டிருக்கின்றனர் மற்றும் இதுநாள்வரை 5.5 மில்லியனுக்கும் அதிகமான மருத்துவ சிகிச்சைக்கான கலந்தாலோசனைகள் செய்து முடிக்கப்பட்டிருக்கின்றன. சென்னை கோபாலபுரத்தில் உள்ள சிகிச்சை மையம் இதன் முதன்மை மருத்துவமனையாக செயல்படுகிறது. 


இம்மையம்முழுமையான நீரிழிவு பராமரிப்புநீரிழிவில் கண்களுக்கான சிகிச்சைநீரிழிவில் பாத பராமரிப்பு சேவைகள்  நீரிழிவு சார்ந்த இதய சிகிச்சைநீரிழிவு சார்ந்த வாய்  / பற்களுக்கான சிகிச்சைமுன்தடுப்பு பராமரிப்புஉணவுமுறை ஆலோசனை மற்றும் துல்லிய நீரிழிவு சிகிச்சை ஆகியவற்றில் சிறப்பு கவனமும்நிபுணத்துவமும் கொண்டிருக்கிறது. மேற்குறிப்பிடப்பட்ட அனைத்து டிஜிட்டல் புத்தாக்க செயல்பாடுகளும் டாக்டர். மோகன்’ஸ் நீரிழிவு சிகிச்சை மையத்தின் அனைத்து கிளைகளிலும் கிடைக்கும்.  8939110000 என்ற எண்ணை அழைப்பதன் மூலம் அல்லது visit:  www.drmohans.com என்ற வலைதளத்திற்கு விஜயம் செய்வதன் மூலம் மருத்துவ ஆலோசனைக்கான சந்திப்புகளை முன்பதிவு செய்யலாம்.




ரங்கோலி திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்!



Gopuram Studios சார்பில் K.பாபு ரெட்டி & G.சதீஷ்குமார் தயாரிப்பில் இயக்குநர் வாலி மோகன் தாஸ் இயக்கத்தில் புதுமுகங்களின் நடிப்பில் தற்போதைய காலகட்ட பள்ளி வாழ்க்கையை சொல்லும் திரைப்படமாக உருவாகியுள்ள படம் “ரங்கோலி”. 

இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை இயக்குநர் லோகேஷ் கனகராஜ், நடிகர் அருண் விஜய், இயக்குநர் வெங்கட் பிரபு, நடிகர் அதர்வா, இசையமைப்பாளர் ஜீவி பிரகாஷ், நடிகர் சதீஷ் நடிகை வாணி போஜன், நவீன் சந்த்ரா கார்த்திக் ரத்னம் ஆகியோர்  இணைந்து வெளியிட்டனர். 

ஸ்கூல் படிக்கும் மாணவர்களின் வாழ்க்கையை,  அவர்களது குடும்பங்களை சுற்றிய கதைகளை நம் தமிழ் சினிமா சொல்வதே இல்லை. இப்படம் அந்த ஏக்கத்தை போக்கும் வகையில் ஒரு அருமையான குடும்பப்படமாக இப்போதைய பள்ளி மாணவர்களின் வாழ்க்கையை சொல்லும் படமாக இப்படம் உருவாகியுள்ளது. குடும்பத்தினரின் வற்புறுத்தலால் ஒரு பள்ளியில் இருந்து வேறொரு உயர்தர பள்ளிக்கு மாற்றலாகும் மாணவனின் வாழ்வில் நடக்கும் சம்பவங்களே இப்படம். 

பள்ளி மாணவர்கள் ஒன்றாக கூடி நிற்கும் இபடத்தின் ஃபர்ஸ்ட் லுக் பலரது பள்ளி ஞாபகங்களை கிளறுவதோடு, அனைவரிடத்திலும் பெரும் எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது. 

மாநகரம், தெய்வத்திருமகள் படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்த ஹமரேஷ், இப்படத்தில் நாயகனாக அறிமுகாமகிறார். பிரார்த்தனா, சாய் ஶ்ரீ, அக்‌ஷயா ஆகியோர் இப்படத்தில் முதன்மை பாத்திரங்களில் நடித்துள்ளனர். ஆடுகளம் முருகதாஸ்  முக்கிய பாத்திரமொன்றில் நடித்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை மற்றும் கடப்பா ஆகிய இடங்களில் நடைபெற்றுள்ளது. 

Gopuram Studios சார்பில் K.பாபு ரெட்டி & G.சதீஷ்குமார் தயாரிக்கும் இப்படத்தினை அறிமுக இயக்குநர் வாலி மோகன் தாஸ்  இயக்கியுள்ளார். சுந்தரமூர்த்தி KS இசையமைத்துள்ளார். I.மருதநாயகம் ஒளிப்பதிவு செய்துள்ளார். G.சத்யநாராயணன் எடிட்டிங் செய்துள்ளார். 

தற்போது இப்படத்தின் இறுதிகட்ட பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. படத்தின் டிரெய்லர் மற்றும் இசை வெளியீடு குறித்த அறிவிப்புகள் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும்.



சபரிமலை பக்தர்கள் மாலை அணிய தொடங்கிவிட்டனர்.... விரத முறைகள் பற்றி தெரிந்து கொள்ளுங்கள் 



ஒவ்வொரு வருடமும் கார்த்திகை மாதத்தின் முதல் நாளன்று சபரிமலையில் மண்டல பூஜை நடைபெறும். மண்டல பூஜை தொடங்கியதையடுத்து, ஐயப்ப பக்தர்கள், மாலை அணிந்து விரதம் மேற்கொள்ள ஆரம்பிப்பார்கள். அப்படி ஐயப்பனுக்கு மாலை அணிந்து விரதம் மேற்கொள்பவர்கள் கடைபிடிக்க வேண்டிய விரத முறைகள் என்னென்ன என்பதை பற்றி தெரிந்துக் கொள்வோம் வாங்க...

1. மாலை போட்ட நாளிலிருந்து விரதத்தை முடிக்கும் வரை முடிவெட்டுதல், சவரம் செய்வதை தவிர்க்க வேண்டும்.

2. மெத்தை, தலையணை உபயோகிக்காமல், தரையில் துணி விரித்துப் படுக்க வேண்டும்.

3. பேச்சைக் குறைத்து மவுனத்தை கடைப்பிடித்தல் வேண்டும்.

4. மற்றவர்களிடம் சாந்தமாக பழக வேண்டும். பிறர் மனம் புண்படும்படி பேசக்கூடாது.

5. விரத நாட்களில் பெண்களை சகோதரியாகவும் தாயாகவும் கருத வேண்டும். விரதகாலத்தில் பிரம்மச்சாரியத்தை கடுமையாக கடைபிடிக்கவும். மனதளவிலும் பெண்ணை நினைக்கக்கூடாது.

6. வீட்டிலிருக்கும் பெண்களுக்கு மாதவிலக்கானால் அவர்கள் தனி அறையில் ஒதுக்குப்புறமாக பார்வையில் படாதபடி இருக்க வேண்டும். அப்படி வசதி இல்லையென்றால் மாலை அணிந்தவர்கள் வேறு இடத்தில் தங்கியிருத்தல் நல்லது.

7. அணிந்திருந்த மாலை அறுந்துபோனால் அதை செப்பனிட்டு அணிந்து கொள்ளலாம். இதில் தவறில்லை. மன சஞ்சலம் அடைய வேண்டாம்.

8. மாலை போடும் சமயத்தில் பயமோ, சந்தேகமோ, குற்ற உணர்ச்சியோ இருத்தல் கூடாது. அப்படி மன சஞ்சலம் இருந்தால் மாலை போடுவதை தள்ளிப் போடுதல் நல்லது.

9. ஐயப்ப விரதத்தில் வீட்டிலிருக்கும் மனைவி மற்றும் பிற பெண்களின் தொண்டும் பக்தியும் மிகவும் உயர்வானதும் போற்றத்தக்கதும் ஆகும்.

10. இருமுடி கட்டும் வைபவத்தை தனது வீட்டிலேயே வைத்துக் கொள்ளுதல் நல்லது. வீடு சுபிட்சமாக இருக்கும். மங்கலமாகவும் இருக்கும்.

11. மாலையணிந்து சபரிமலைக்குச் செல்லும் நோக்கங்கள் மூன்று:

12. தன்னையே புனிதப்படுத்தி சத்தியமான பதினெட்டாம் படியில் ஏறி பகவான் ஐயப்பனைத் தரிசித்தல்.

13. தன் புலன்களை எல்லா வகையிலும் கட்டுப்படுத்தி நெறியான வாழ்க்கை வாழ்ந்து மனம், உடல் இவற்றை தூய்மைப்படுத்துதல்,

14. தான் சுத்தமாக இருப்பதோடு அல்லாமல், வீட்டையும் வீட்டில் உள்ளவர்களையும் சுத்தமாக இருக்க வைத்து அவர்களையும் பக்தி நெறிக்கு உட்படுத்துதல்.

15. மாலை போட்ட பின் மது, புகை, அசைவ உணவுகள் போன்றவற்றை அறவே தவிர்க்க வேண்டும். சொல்லப்போனால், புகைப்பழக்கத்தைக் கைவிட நினைப்பவர்கள் ஐயப்பனுக்கு மாலை போடுவது ஓர் சிறந்த வழியாக அமையும்.

16. எதிர்பாராமல் உங்கள் குடும்பத்தில் பிறப்பு அல்லது இறப்பு நிகழ்ந்தால், நீங்கள் அணிந்துள்ள மாலையை சுவாமி ஐயப்பன் முன் வைத்துவிடுங்கள். மேலும் ஒரு வருடம் கழித்து நீங்கள் உங்கள் யாத்திரையைத் தொடங்கலாம்.

17. ஐயப்பனுக்கு மாலை போட்டுவிட்டால், தலைக்கு எண்ணெய் வைக்கவோ அல்லது எண்ணெய் குளியலோ மேற்கொள்ளக்கூடாது.

18. ஐயப்ப பக்தர்கள் பகல் நேரத்தில் தூங்கக்கூடாது. ஒருவேளை தூங்கினால், மீண்டும் குளித்த பின்னரே எந்த ஒரு செயலையும் மேற்கொள்ள வேண்டும். ஐயப்ப பக்தர்கள் வீட்டைத் தவிர, கடைகளிலோ அல்லது வெளியிடங்களிலோ எங்கும் உண்ணக்கூடாது.

19. மாலை அணிந்தவர்கள், காலையில் சூரியன் உதிப்பதற்கு முன் பச்சைத்தண்ணீரில் குளிக்க வேண்டும். குளித்துமுடித்த பின் விபூதி இட்டு, விளக்கு ஏற்றி ஐயப்பனின் 108 சரணத்தையும் சொல்லி வணங்க வேண்டும். இதேப் போல் மாலையில் சூரிய அஸ்தமனத்திற்கு பின் குளித்து, காலையில் செய்ததைப் போலவே செய்ய வேண்டும்.

20. மாலைக்கு மதிப்பளித்து ஒரு மண்டல காலம் விரத முறைகளை நெறியாகவும் முறையாகவும் கடைப்பிடித்து, தான் என்னும் அகங்காரத்தை விட்டொழித்து, இறைவனிடம் முழு நம்பிக்கை வைத்து, முழு சரணாகதி அடைந்து, ஒருமுகமாக வழிபட்டால், இறைவனின் அருட்கடாட்சம் குறைவில்லாமல் கிடைக்கும்.

இந்த வழிமுறைகளை கடைபிடித்து விரதம் முடிந்து மலைக்கு கிளம்பும் முன் பஜனை, கூட்டு வழிபாடு, பூஜை நடத்தி பிரசாதம் தந்து உணவளிப்பது சிறப்பு. குருசாமி வீடு, கோயிலில் இருமுடிக்கட்டு பூஜை நடத்தலாம். கிளம்பும்போது ‘போய் வருகிறேன்’ எனச் சொல்லக்கூடாது. வீடு திரும்பியதும், குருசாமி மூலம் மாலை கழற்றவும். இருமுடி அரிசியை பொங்கியும், பிரசாதமாக எல்லோருக்கும் தர வேண்டும். விரதகாலம் வழங்கிய நற்பழக்கங்களை ஆயுள் முழுக்க பின்பற்றுவதே, ஐயப்பனின் பூரண அருளைத் தரும்.



உண்மை சம்பவம் 'நாடு' படத்தின் கதை- இயக்குனர் சரவணன்




ஸ்ரீ ஆர்க் மீடியா சார்பில் சக்ரா மற்றும் ராஜ் இருவரும் இணைந்து தயாரித்துள்ள படம் 'நாடு'. இன்றைக்கும் ரசிகர்கள் மனதில் இருந்து நீங்காத 'எங்கேயும் எப்போதும்' என்கிற சூப்பர்ஹிட் படத்தை கொடுத்த இயக்குனர் சரவணன் இந்த படத்தை இயக்கியுள்ளார். பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் புகழ்பெற்ற நடிகர் தர்ஷன் கதாநாயகனாக நடிக்க, அழகுச்சிலை மகிமா நம்பியார் கதாநாயகியாக நடித்துள்ளார்.

முக்கிய வேடங்களில் சிங்கம்புலி, அருள்தாஸ், ஆர்.எஸ்.சிவாஜி, இன்பா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். எங்கேயும் எப்போதும் படத்தில் இருந்து இயக்குனர் சரவணனுடன் இணைந்து பயணிக்கும் இசையமைப்பாளர் சத்யா தான் இந்த படத்திற்கும் இசை அமைத்துள்ளார். சக்திவேல் ஒளிப்பதிவை கவனிக்க, தேசிய விருது பெற்ற கலை இயக்குனர் இளையராஜா இந்த படத்தின் கலை வடிவமைப்பை கவனித்துள்ளார். பொன் கதிரேசன் படத்தொகுப்பை மேற்கொண்டுள்ளார்.

இந்தப்படத்தின் இறுதிகட்ட பணிகள் நடைபெற்று வரும் நிலையில் நேற்று மாலை இந்த படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு  சென்னை சாலிகிராமம் பிரசாத் லேபில் நடைபெற்றது.

இந்த நிகழ்வில் இயக்குனர் சரவணன் பேசும்போது:

“இப்போது சினிமாவில் வரும் பெரும்பாலான கதாபாத்திரங்கள் ரொம்பவே புத்திசாலித்தனமான, அறிவுக்கூர்மை வாய்ந்த கதாபாத்திரங்களாகவே காட்டப்படுகின்றன. நாங்கள் அதிலிருந்து விலகி எளிய மனிதர்கள் பற்றிய கதையாக இந்த படத்தை உருவாக்கியுள்ளோம். இந்த படத்தில் மலைவாழ் மக்கள் பிரச்சனையை பேசி உள்ளோம். கொல்லிமலை பகுதியில் இந்த படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றுள்ளது. பல வருடங்களுக்கு முன்பு கொல்லிமலைக்கு சென்றிருந்த சமயத்தில் நேரிலேயே நான் கண்ட ஒரு நிகழ்வு என் மனதை பாதித்தது. ரொம்ப நாட்களாக மனதில் இருந்த அந்த நிகழ்வை மையப்படுத்தி இந்த படத்தின் கதையை உருவாக்கினேன்.

இந்த படத்தில் ஹீரோவாக நடித்த தர்ஷனை அவர் ஆடிஷன் வருவதற்கு முன்புவரை நான் பார்த்ததே இல்லை.. காரணம் நான் பிக்பாஸ் நிகழ்ச்சி பார்ப்பதில்லை. ஆடிஷனுக்கு வருவதற்கு முன்பு கூட அவரது பாஸ்போர்ட் சைஸ் போட்டோவை தான் காட்டினார்கள். ஆனால் நேரில் அவரை பார்த்ததுமே இந்த கதாபாத்திரத்திற்கு அவர் சரியான நபர் என்று தோன்றிவிட்டது. உடனே அவரிடம் கதையை சொல்ல ஆரம்பித்து விட்டேன். அதேபோல இந்த படத்தின் ஒர்க்ஷாப்புக்கு வரும்போது பேண்ட் சர்ட் எல்லாம் போடாமல் லுங்கியை வாங்கி கட்டிக்கொண்டு வாருங்கள் என கூறிவிட்டேன். அதிலிருந்து இந்தக்கதையுடன் அவர் தினசரி பயணிக்க துவங்கி விட்டார். அதனால்தான் படப்பிடிப்பில் கூட அவர் ஸ்கிரிப்ட் பேப்பர் இல்லாமல் எல்லா வசனங்களையும் மனப்பாடமாக பேச முடிந்தது” என்று கூறினார்.




ஒளிப்பதிவாளர் சக்திவேல் பேசும்போது:

“கொல்லிமலை பின்னணியில் இந்தப்படத்தின் கதை நிகழ்கிறது என்று சொன்னபோது, நிச்சயமாக இதை வித்தியாசமான படமாக உருவாக்க வேண்டும் என்கிற எண்ணம் தோன்றியது. அதற்கேற்றபடி இதுவரை சினிமாவின் காலடி படாத பல இடங்களில் படப்பிடிப்பை நடத்தியுள்ளோம்” என்று கூறினார்.

கலை இயக்குனர் இளையராஜா பேசும்போது:

“இந்த படத்திற்கு நாடு என டைட்டில் வைத்திருந்ததை பார்க்கும்போது எனக்கு முதலில் ஒன்றும் புரியவில்லை. படப்பிடிப்பு நடக்கும் லொக்கேசனுக்கு சென்றபோதுதான் அங்கு 28 நாடுகளை எனக்கு காட்டினார் இயக்குனர் சரவணன். அங்குள்ளவர்கள் சமுதாயம், மொழி, இனம் என தங்களுக்குள் ஒரு நாடாக உருவாக்கி வாழ்ந்து வருகின்றனர். அதே சமயம் அவர்கள் எளிமையான மக்கள்.. அங்கே படப்பிடிப்பு நடந்த நாட்களில் நான் கவனித்த அளவில் ஆதிவாசிகள் அவர்கள் அல்ல.. இங்கே இருக்கும் நாம்தான் டெக்னாலஜி ஆதிவாசிகள் என்பதை புரிந்து கொண்டேன்” என்று கூறினார்.

இசையமைப்பாளர் சத்யா பேசும்போது:

“எனக்கு இயக்குனர் சரவணனுக்கும் அலைவரிசை ஒரே மாதிரி இருப்பதால் தான் தொடர்ந்து அவருடன் பணியாற்றி வருவது எளிதாக இருக்கிறது. இந்தப்படத்தை எடுத்து முடித்தபின் பார்த்தபோது இதற்கு பின்னணி இசை மிகப்பெரிதாக தேவைப்படுகிறது என்பதை உணர முடிந்தது. அதற்கேற்ற வேலைகளை ஆரம்பிக்க வேண்டும்” என்று கூறினார்.

படத்தொகுப்பாளர் பொன் கதிரேசன் கூறும்போது:

“இந்தப்படம் எனக்கு இரண்டாவது படம்.. ஆனால் எட்டு வருடமாக இப்படி ஒரு படத்திற்காகத்தான் நான் காத்திருக்கிறேன். இந்த படத்தை பார்க்கும்போது நிச்சயமாக படம் பார்க்கும் ஒவ்வொருவரும் அந்த இடத்திற்கே சென்றுவிட்டது போல உணர்வார்கள்” என்றார்.

படத்தின் நாயகன் தர்ஷன் பேசும்போது:

“இயக்குனர் சரவணன் என்னிடம் கதை சொன்னபோது இந்த படத்தில் நான் இருக்கிறேனா என்று முதலில் என்னால் நம்ப முடியவில்லை. கொல்லிமலையில் பிறந்து வளர்ந்த இளைஞனாக இதில் நடித்துள்ளேன். கதாநாயகி மகிமா நம்பியார் சீனியர் என்கிற ஈகோ பார்க்காமல் என்னிடம் சினிமா குறித்து பல விஷயங்களை பகிர்ந்து கொண்டார். வழக்கமாக இதையெல்லாம் நான் செய்ய மாட்டேன் என்று சொன்ன மகிமா, படப்பிடிப்பில் என்னை பலமுறை உற்சாகப்படுத்தி பாராட்டினார். இந்தப்படத்தில் என்னுடன் இணைந்து நடித்துள்ள நடிகர் இன்பாவுடன் நல்ல ஒரு நட்பு உருவானது. எங்களை பார்த்தவர்கள் திரையில் தோன்றுவதைவிட வெளியில் அவ்வளவு பிணைப்புடன் இருக்கிறீர்களே என்று ஆச்சரியப்பட்டார்கள்” என்று கூறினார்.




நாயகி மஹிமா நம்பியார் பேசும்போது:

இந்த படத்திற்குள் தான் கதாநாயகியாக நுழைந்த சுவாரசியமான விஷயத்தை பகிர்ந்து கொண்டார்.

“இந்த படம் குறித்து இயக்குனர் என்னிடம் தொலைபேசியில் 20 நிமிடம் கதை சொன்னார். அப்போதே இந்த படத்தில் நடிக்க வேண்டும் என முடிவு செய்துவிட்டேன். அதன்பிறகு நானே அவருக்கு போன்செய்து இந்த படத்தில் நான் நடிக்கிறேன் என்று கூறினேன். அவரும் பெரிய அளவில் ஆச்சரியம் காட்டாமல் அப்படியா என்று சொல்லி ஒப்புக்கொண்டார். அதை கேட்டதும் ஒருவேளை வேறு யாரிடமோ  பேசுவதற்கு பதிலாக தவறிப்போய் என்னிடம் கதைசொல்லி விட்டாரோ என்று கூட குழம்பினேன். படப்பிடிப்புக்கு சென்றபோது அவரிடம் என்னை இந்த கதாபாத்திரத்திற்கு தேர்வு செய்ய என்ன காரணம் என நேரிலேயே கேட்டு விட்டேன். அதற்கு அவர் சிம்பிளாக, இந்த கதாபாத்திரத்தில் நடிக்க சில பேரை அணுகலாம் என ஒரு பட்டியல் தயாரித்து வைத்திருந்தேன். அவர்களுக்கெல்லாம் போன்செய்து பேசியபோது அதில் எனக்கு மதிப்பளித்து திரும்பவும் பதிலளித்தவர் நீங்கள் ஒருவர் தான்.. அதனால்தான் உங்களையே கதாநாயகியாக தேர்வு செய்து விட்டேன் என்றார்..

ஒளிப்பதிவாளர் சக்திக்கு மைக்ராஸ்கோப் கண்கள்.. இதுவரை நான் நடித்த பல படங்களில் எளிமையான கிராமத்து கதாபாத்திரங்களில் நடித்து இருந்தேன் அதனால் எனக்கு மேக்கப்பும் ரொம்பவே எளிமையாகவே இருக்கும். இந்த படத்தில் கொஞ்சம் ரிச்சாக டாக்டர் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறேன். அதற்காக அழகாக மேக்கப் செய்துகொண்டு வந்தால், அவரோ, இது கிராமத்தில் இருக்கும் டாக்டர் கதாபாத்திரம்.. இதற்கு இவ்வளவு மேக்கப் தேவையில்லை என்று கூறி அவற்றை எல்லாம் கொஞ்சம் கொஞ்சமாக நீக்க வைத்துவிடுவார். இதனால் ஒவ்வொரு முறை மேக்கப் போடும்போதும் சக்தி சாருக்கு பிடிக்குமா என்று யோசிக்கும் அளவுக்கு வந்து விட்டேன். என்னை பொறுத்தவரை அவர் ஒளிப்பதிவில் நான் பயந்து பயந்து தான் வேலை பார்த்தேன்.

இந்த படத்தில் எனக்கு ஒரே ஒரு பாடல்தான் என்றாலும் திருமண விசேஷ வீடுகளில் ஒலிக்கும் விதமாக ஒரு அருமையான குத்துப்பாடல் கொடுத்துள்ளார்கள். தீனா மாஸ்டர் நடனத்தில் அது அற்புதமான பாடலாக உருவாகியுள்ளது. படத்தில் என்னைவிட தர்ஷன்-இன்பா கெமிஸ்ட்ரி நன்றாக ஒர்க்கவுட் ஆகியிருக்கிறது. ஒரு கதாநாயகன் என்கிற ஆரம்பநிலையில் இருக்கும் தர்ஷனுக்கு இப்படி ஒரு போல்டான கேரக்டர் கிடைத்திருப்பது அவரை அடுத்த கட்டத்திற்கு அழைத்துச் செல்லும்” என்று கூறினார்.

இந்த படத்தின் தயாரிப்பாளர் சக்ரா பேசும்போது:

“நாடு என்பதை இயக்குனர் சரவணன் அவரது பார்வையில் என்னவென்று சொல்லி இருக்கிறார். படம் பார்க்கும்போது உங்களுக்கே அது தெரியும்” என்றார்.

நடிகர் சிங்கம்புலி பேசும்போது:

நாடு என்று முடியும்படி தான் பெயர் வைத்திருப்பார்கள். இந்த படத்தின் இயக்குனர் சரவணனை ஏ.ஆர்.முருகதாஸிடம் உதவியாளராக பணியாற்றியபோது இருந்தே தெரியும். அவர் இயக்கிய எங்கேயும் எப்போதும் படம் பார்த்துவிட்டு இவருடன் ஒரு படத்திலாவது பணியாற்ற வேண்டும் என்று நினைத்தேன். அதன்படி இந்த வாய்ப்பு கிடைத்தபோது நான் படப்பிடிப்புக்கு சென்ற முதல்நாளே, இந்த படத்தில் நான் நடிக்க வரவில்லை.. உங்களுடன் இணைந்து சேவை செய்ய வந்திருக்கிறேன் என்று கூறினேன். அந்த அளவிற்கு அவரது சமூக அக்கறை எனக்கு பிடிக்கும்.

ஒளிப்பதிவாளர் சக்தியின் முழு திறமையை யாரும் பார்த்ததில்லை. இந்தப்படத்தில் பார்ப்பீர்கள். படப்பிடிப்பு சமயத்தில் அவருக்கென தனியாக கோழிக்குழம்பு ஸ்பெஷலாக தயாராகும்.. அதை சாப்பிடுவதற்கு ஒரு போட்டியே நடக்கும். படத்தின் நாயகன் தர்ஷன் இந்த படத்தின் படப்பிடிப்பு நடந்த பல இடங்களில் ஒரு பெண்ணை தன் தோளில் தூக்கிக்கொண்டு உயரமான இடங்களுக்கு ஓடுவார். காரணம் படப்பிடிப்பு நடக்கும் இடம் அப்படிப்பட்ட மலைப்பகுதி என்பதால். இதற்கு முன்பாக பிதாமகன், நான் கடவுள் ஆகிய படங்களில் பணியாற்றியபோது அந்த ஹீரோக்களின் கடின உழைப்பை  நேரில் பார்த்தவன் நான். அதனால் தான் அவர்கள் இன்று அந்த உயரத்தில் இருக்கிறார்கள். அதேபோன்ற ஒரு அர்ப்பணிப்பு உணர்வை தர்ஷனிடமும் பார்த்தேன்.. நிச்சயமாக அவருக்கு தமிழ் சினிமாவில் நல்ல உயரம் இருக்கு..

இந்தப்படத்தின் டப்பிங்கின்போது வசனம் பேசும் இடைவேளையில், சில வரிகள் பாடுவதை வழக்கமாக வைத்திருந்தேன்.. இதை கேட்டுவிட்டு இசையமைப்பாளர் எனக்கு ஒரு பாடல் பாட வாய்ப்பு தருவார் என நினைத்தேன். கடைசியாக இந்த படத்தில் இரண்டு வரிகள் பாட இயக்குனர் வாய்ப்பு தந்தார்” என்று கூறினார்.

நடிகர் அருள்தாஸ் பேசும்போது:

“கமர்சியல் படங்கள் நிறைய வருகின்றன. ஆனாலும் சிறிய படங்கள்தான் சினிமாவை ஒவ்வொரு காலகட்டத்திலும் அடுத்த கட்டத்திற்கு அழைத்து செல்கின்றன. இந்தப்படமும் அப்படி ஒரு இடத்தை பெறும். தங்கள் முதல் படமாக இந்த படத்தை தயாரித்த தயாரிப்பாளர்கள் உண்மையில் அதிர்ஷ்டசாலிகள் என்றே சொல்வேன். இது தமிழ்நாட்டுக்கு மட்டுமல்ல உலகம் முழுமைக்குமான ஒரு படம்.. நாயகன் தர்ஷன் மிகுந்த அர்ப்பணிப்புடன் உழைப்பை கொடுத்துள்ளார்.. நிச்சயம் அவருக்கு வெற்றி படமாக இது அமையும்.. அதேசமயம் வளர்ந்த பின்பு அவர் மாறிவிடக்கூடாது” என்று பேசினார்.

'முகுந்தன் உன்னி அசோசியேட்ஸ்'  படத்தின் திரைவிமர்சனம் 




அபினவ் சுந்தர் நாயக் இயக்கத்தில் அர்ஷா பைஜு, சுராஜ் வெஞ்சாரமூடு, தன்வி ராம் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ள படன் தான் "முகுந்தன் உன்னி அசோசியேட்ஸ்".

கேரளாவில் விபத்து நடைபெற்றால் அதற்கு நஸ்டஈடு வாங்கி தரும் வழக்கறிஞராக சுராஜ் உள்ளார். இதில் மறுபுறம் வினீத் ஸ்ரீனிவாசன் எப்படியாவது மிகப்பெரிய வக்கீல் ஆக வேண்டும் என்ற கனவோடு இருக்கிறார். ஆனால் அவருக்கு எந்த கேசும் கிடைக்காமல் உள்ளது. ஒரு கட்டத்தில் சுராஜ் செய்யும் வேலை இவருக்கு தெரிய வருகிறது. பின்பு அதே வேலையை வினீத் ஸ்ரீனிவாசனும் செய்ய தொடங்குகிறார்.பிறகு இருவருக்கும் விரிசல் எற்பட்டதா? என்ன நடந்தது? என்பது படத்தின் மீதி கதை.....   

விமல் கோபாலகிருஷ்ணன் மற்றும் அபினவ் சுந்தர் நாயக் இருவரும் சேர்ந்து இந்த கதையை எழுதி உள்ளனர். சட்டங்களை பற்றி மிகப்பெரிய ரிசர்ச் பணிகள் தேவைப்படும் இந்த கதையை கச்சிதமாக எழுதி உள்ளனர். காட்சிக்கு காட்சி சிரிப்பலைகள் அள்ளும் அளவிற்கு படம் உள்ளது. 

வினீத் ஸ்ரீனிவாசன் பாடிலாங்குவேஜ் மற்றும் நடிப்பில் ஒரு வக்கீலாகவே வாழ்ந்து உள்ளார். தனக்கு வரும் எதிர்ப்புகளை லாபகரமாக அவர் கையாளும் இடங்களில் கைதட்டல்கள் பறக்கிறது. 

ஒவ்வொரு முறையும் ஒரு பிரச்சனையில் மாட்டிகொண்டு எப்படி இதில் இருந்து வர போகிறார்? என்ற எதிர்பார்ப்பு பார்வையாளர்களுக்கும் ஏற்படுகிறது. ஹீரோ கதாபாத்திரத்தில் மட்டும் தனக்காக மற்றவர்கள் இறந்தாலும் பரவாயில்லை.... என்ற எண்ணம் ஏற்க முடியவில்லை....

மொத்தத்தில் இந்த 'முகுந்தன் உன்னி அசோசியேட்ஸ்' எழுத்தின் பலம்.... 


முன்னணி நடிகர் :  வினீத்  ஸ்ரீனிவாசன்

இதர நடிகர்கள் : சுராஜ்  வெஞ்சாரமூடு , சுதை  கோபா , அர்ஷா  பைஜூ , தன்வி  ராம் , ஜார்ஜ்  கோரா , ரியா  சாய்ரா  , சுதீஷ் .


டைரக்டர்  : அபினவ்  சுந்தர்  நாயக்

எழுத்து : அபினவ்  சுந்தர்  நாயக்  & விமல்  கோபாலகிருஷ்ணன்

ஒளிப்பதிவு : விஸ்வஜித்  ஒடுக்காதில்

இசை : சிபி  மதேவ்  அலெக்ஸ்  

நிர்வாக தயாரிப்பு  : பிரதீப்  மேனன் , அனூப்  ராஜ்  M

நிர்வாக மேற்பார்வை  : மனோஜ்  பொன்குண்ணம்

ஒலி வடிவமைப்பு : ராஜ்  குமார்  P

கலை : வினோத்  ரவீந்திரன்

சவுண்ட் மிக்ஸ் : விபின்  நாயர்

முதன்மை இணை இயக்கம் : ராஜேஷ்  அடூர்

துணை இயக்கம்  : அந்தோணி  தாமஸ்  மங்களே
  
பாடல்கள் : மனு  மஞ்சித் , எலிசா  ஆபிரகாம்

ஆடை வடிவமைப்பு   : காயத்ரி  கிஷோர்

ஒப்பனை  : ஹாசன்  வாண்டூர்

கலரிஸ்ட்   : சிரிக்க  வாரீர்

சண்டை பயிற்சி : சுப்ரீம்  சுந்தர்  & மாபியா  சசி

மக்கள் தொடர்பு - பரணி அழகிரி , திருமுருகன்




Author Name

{picture#YOUR_PROFILE_PICTURE_URL} YOUR_PROFILE_DESCRIPTION {facebook#YOUR_SOCIAL_PROFILE_URL} {twitter#YOUR_SOCIAL_PROFILE_URL} {google#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.