'மாமன்னன்' திரை விமர்சனம்
சேலம் மாவட்டம் காசிபுரம் தனி தொகுதியில் ஆளும் கட்சியான சமத்துவ சமூக நீதி மக்கள் கழகத்தின் சார்பில் ஊரின் MLA-வாக இருக்கிறார் மாமன்னன் {வடிவேலு}. அடிமுறை தற்காப்பு கலையின் ஆசானும், பன்றி வளர்ப்புத் தொழில் செய்பவருமான அவரின் மகன் அதிவீரன் (உதயநிதி).
சிறு வயதில் தனது வாழ்க்கையில் மறக்க முடியாத அளவிற்கு ஏற்பட்ட சம்பவத்தின் காரணமாக தனது தந்தையிடம் 15 வருடங்களாக உதயநிதி பேசாமல் இருக்கிறார். அதே கட்சியின் சேலம் மாவட்டச் செயலாளராக இருக்கிறார் ரத்னவேல் (பகத் பாசில்). இந்நிலையில், கல்லூரித் தோழியான லீலாவுக்கு (கீர்த்தி சுரேஷ்) ஒரு பிரச்சனை வர, அதற்கு அதிவீரன் உதவ, அதனால் அதிவீரனுக்கும் ரத்னவேலுவிற்கும் இடையே பிரச்னை வருகிறது.
அப்பா மாமன்னன், எம்.எல்.ஏ-வாக இருந்தாலும் அவரை மாவட்டச் செயலாளர் ரத்னவேலு நடத்தும் விதம் அதிவீரனை கோபமாக்க, இந்தப் பிரச்னை ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த மாமன்னனுக்கும் மாற்று சமூகத்தைச் சேர்ந்த ரத்னவேலுக்குமான பிரச்னையாகவும், பின் இரு சமூகங்களுக்கிடையிலான பிரச்சனையாகவும் மாறுகிறது. இதன் பின் என்ன நடந்தது? ஃபகத் ஃபாசில் என்ன செய்தார்? வடிவேலு, உதயநிதி சந்தித்த எதிர்ப்புகள் என்னென்ன? என்பதே படத்தின் மீதி கதை.....
மாமன்னனாக வரும் வடிவேலு மொத்த படத்தையும் தனது தோளில் தாங்கி நிற்கிறார். இவருக்கு போட்டியாக பகத் பாசிலும் தன் நடிப்பில் சமர் செய்திருக்கிறார். தமிழ் சினிமா இது வரையில் இப்படியான வடிவேலுவை பார்த்ததில்லை என்பது படம் பார்க்கும் போது தெரியும். இயக்குனர் மாரி செல்வராஜ் மீண்டும் தனது சமூக நீதியை அழுத்தமாக மாமன்னன் மூலம் பேசியுள்ளார். நடிகை கீர்த்தி சுரேஷ் தனது மாறாத நடிப்பை வெளிபடுத்தியுள்ளார். ஏ.ஆர். ரஹ்மான் பின்னணி இசை படத்திற்கு பலம். தேனி ஈஸ்வரின் ஒளிப்பதிவு சிறப்பு.
சட்ட மன்ற உறுப்பினர் வீட்டில் எதிரிகள் சண்டைக்கு வரும் போது ஒரு காவலர்கள் கூட இருக்க மாட்டார்களா? என்று நினைக்க வைக்கிறது. கிளைமேக்ஸ் தேர்தல் களம் காட்சி யூகிக்க வைக்கிறது. வடிவேல் பாடிய பாடலை தவிர வேறு எந்த பாடலும் மனதில் பதியவில்லை....
மொத்தத்தில் இந்த 'மாமன்னன்' ரசிகர்களின் மனம் கவர்ந்தவன்......
RATING: 3.8/5
கருத்துரையிடுக