நடிகர் மோகன் பிறந்த நாள் மற்றும் 'ஹரா' திரைப்பட இசை வெளியீட்டு விழா!

நடிகர் மோகன் பிறந்த நாள் மற்றும் 'ஹரா' திரைப்பட இசை வெளியீட்டு விழா!




சென்னை:

தமிழ் திரையுலகில் அதிக எண்ணிக்கையில் வெள்ளிவிழா படங்கள் தந்தவரும் தமிழகமெங்கும் மிகப்பெரும் ரசிகர் பட்டாளத்தைக் கொண்டவருமான நடிகர் மோகனின் பிறந்த நாளில், அவர் நடிப்பில் உருவாகியிருக்கும் 'ஹரா' படத்தின் இசை வெளியீட்டு விழா ரசிகர்கள் மத்தியில் படக்குழுவினர் மற்றும் திரைப்பிரபலங்கள் கலந்துகொள்ள கோலாகலமாகக் நடைபெற்றது. ரஷாந்த் அர்வின் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். 


திரைத்துறையிலிருந்து பல பிரபலங்கள் கலந்துகொண்டு நடிகர் மோகனுக்கு பிறந்த நாள் வாழ்த்துகளை தெரிவித்தனர். 


ரசிகர் மன்றம் சார்பில் நடிகர் மோகன் தனது கையால் பல ஏழை பள்ளி மாணவர்களுக்கு பள்ளிக்கு தேவையான பை,  நோட்டுப் புத்தகம் உள்ளிட்ட பொருட்களை  வழங்கினார். மேலும் பல ஏழைப் பெண்களுக்குத் தையல் மெஷின் முதலான உதவிப் பொருட்களை வழங்கினார். 


கோயம்புத்தூர் எஸ் பி மோகன்ராஜ் மற்றும் ஜி மீடியா ஜெய ஶ்ரீ விஜய் தயாரித்துள்ள 'ஹரா' திரைப்படத்தை ஜூன் 7ம் தேதி தமிழகம் எங்கும் எல்மா பிக்சர்ஸ் வெளியிடுகிறது. ரசிகர்கள் மத்தியில் திரைப் பிரபலங்கள் முன்னிலையில் இவ்விழாவில் 'ஹரா' படத்தின் இசைத்தட்டு வெளியிடப்பட்டது. 


இந்நிகழ்வினில்...


நடிகர்-இயக்குநர் பாக்யராஜ் பேசியதாவது… 


இனிய நண்பர் மோகனுக்கு பிறந்த நாளான இன்று 'ஹரா' படத்தின் இசை விழாவை கொண்டாடுகிறார்கள். ரசிகர்கள் இங்கே குழுமியிருப்பது சந்தோஷம். மோகனுக்கும் எனக்கும் ரசிகர்களாகிய நீங்கள் தான் கடவுள். மோகன் பற்றி யாருக்கும் தெரியாத ஒரு விஷயம் ஒன்று உள்ளது. சினிமாவுக்கென சில பழக்கங்கள் இருக்கும், சம்பிரதாயங்கள் இருக்கும் ஆனால் அதில் எதிலும் மோகன் கலந்துகொள்ள மாட்டார். எப்போதும் தன் வேலையில் மட்டுமே கண்ணும் கருத்துமாக இருப்பார். இன்றும் பாருங்கள் அவர் உடலை கட்டுக்கோப்பாக வைத்துள்ளார்.  பாடல்கள் தான் அவரது பலம், இளையராஜா முதல் டி ஆர் வரை பலர் இசையில் அவர் பாடல்கள் பல வெற்றி பெற்றுள்ளன.  எத்தனையோ இசையமைப்பாளர்கள் இசையில் எத்தனையோ பேர் நடித்திருந்தாலும், மோகன் நடிக்கும் போது மட்டுமே பாடலை அவரே பாடுவது போல் இருக்கும். இந்த குணத்தை நான் நடிகர் திலகம் சிவாஜியிடம் பார்த்திருக்கிறேன், ஒரு ஹிந்தி நடிகரிடமும் பார்த்திருக்கிறேன். அவர்களுக்குப் பிறகு மோகன் தான் அதில் தன்னை நிரூபித்துள்ளார். இயக்குநர் விஜய் ஶ்ரீ ஜி வித்தியாசமான படங்கள் செய்து வருகிறார். சாருஹாசனை நாயகனாக்கி ஜெயித்தவர், நிகிலை நாயகனாக்கினார். இப்போது மோகனை மீண்டும் திரைக்குக் கொண்டுவந்துள்ளார்.  இந்தப் பாடல்களை பார்க்கும் போது படத்தில் மோகன் பட்டையைக் கிளப்புவார் எனத் தெரிகிறது. மோகனுக்குக் கண்டிப்பாக இப்படம் திருப்புமுனைப் படமாக இருக்கும். இந்த இசை விழாப் போல இந்தப்படத்தின் வெற்றி விழாவும் மிகப் பிரமாண்டமாக நடக்கும். அனைவருக்கும் என் வாழ்த்துகள். நன்றி. 


இயக்குநர் விஜய் ஶ்ரீ ஜி பேசியதாவது...


இந்த விழா இவ்வளவு சிறப்பாக நடக்கக் காரணம் மோகன் சார் ரசிகர்கள் தான். அனைவருக்கும் என் நன்றிகள். இந்தப்படம் எதைப்பற்றிப் பேசுகிறது என்பது அடுத்த சில  மாதங்களில் ரசிகர்களுக்குத் தெரிந்துவிடும். இந்தப்படத்தில் உழைத்த அனைத்து கலைஞர்களும் தங்கள் உயிரைத் தந்து முழு அர்ப்பணிப்புடன் பணியாற்றி உள்ளார்கள். இந்தப் படத்திற்காக யாரைக் கூட்டி வந்தாலும், மோகன் சார் அவர்கள் பிரபலமானவர்களா என்றெல்லாம் பார்க்க மாட்டார், அவர்களின் திறமையை மட்டுமே பார்ப்பார். இந்தப் பாடல்கள் எல்லாம் கடினமான சூழ்நிலைகளுக்கு இடையில் தான் உருவானது. இந்தப் படம் அவரை வேறு மாதிரியாகக் காட்டும். நான் விபத்தில் இருந்து திரும்பி வந்ததே அவரால் தான். ஆக்ஸிடெண்டுக்கு பிறகு எனக்காக ஒரு ஷெட்யூல் ரெடி செய்தார். அந்த மனது அவருக்குத் தான் வரும். முழுக்க முழுக்க எனக்காக அதைச் செய்தார். மோகன் சாரின்  வெற்றிக்குக் காரணம் அவரது நடிப்பு தான், அதைத் திரும்ப ரசிகர்களுக்குக் கொண்டு சேர்க்க வேண்டுமென்று நினைத்துத் தான் இப்படத்தை எடுத்தேன். :ஹரா' வெல்லும், அதற்கு மிகப்பெரிய காரணம் மோகன் சார் ரசிகர்கள் தான். அனைவருக்கும் நன்றி. 




நடிகர் மோகன் பேசியதாவது….


எத்தனை தடவை ரசிகர்களுக்கு நன்றி சொல்வது எனத் தெரியவில்லை. உங்களுக்கு நான் காலமெல்லாம் கடன் பட்டிருக்கிறேன். நான் நடித்தாலும், இல்லையென்றாலும் என் மீது அன்பு செலுத்தும் என் ரசிகர்களுக்கு நன்றி. ஏன் நடிக்கவில்லை எனப் பலரும் கேட்கிறார்கள். என்னைத் தெரிந்தவர்களுக்குத் தெரியும், எனக்குக் கதை பிடித்தால் மட்டுமே நான் நடிப்பேன். விஜய் ஶ்ரீ ஜி 7 முறை கதையைத் திருத்திய பிறகு தான் இந்தப்படம் ஒத்துக்கொண்டேன். இந்தப்படத்திற்குக் கோவை மக்கள் கொடுத்த ஒத்துழைப்பு வியப்புக்குரியது, அத்தனை மக்களுக்கும் எங்கள் நன்றி. இந்தப்படத்தில்  வேலை பார்த்த அனைவரும் பிரமாதமாகச் செய்துள்ளார்கள். இன்றைய 2கே கிட்ஸ் முதல் அனைவருக்கும் பிடிக்கும் படி , விஜய் ஶ்ரீ ஜி படத்தை உருவாக்கியுள்ளார். இன்றைய நாயகன் இசையமைப்பாளர் ரஷாந்த் அர்வின். அருமையான பாடல்களை அவர் தந்துள்ளார். மகளைப் பற்றிய பாடல் உங்கள் அனைவருக்கும் பிடிக்கும். நேர்மையாக உண்மையாக ஒரு படத்தை உருவாக்கினால், எந்த காலத்திலும் வியாபாரம் இருக்கும் என்பதை இப்படம் நிரூபித்துள்ளது. டீசர் பார்த்துப் படத்தை வாங்க கோவை பிரதர்ஸ் முன் வந்துள்ளார்கள், மிகவும் பெருமையாக உள்ளது. உங்கள் ஆசீர்வாதத்தில் இந்தப்படம் ஜூன் 7ம் தேதி திரைக்கு வரும். கோவை பிரதர்ஸ் இப்படத்தை விநியோகிக்கிறார்கள். இந்தப்படம் எல்லோரையும் திருப்திப்படுத்தும் விதத்தில் இருக்கும், நன்றி.


'ஹரா' திரைப்படத்தில் அனு மோல், 'காலங்களில் அவள் வசந்தம்' புகழ் கௌஷிக், 'பவுடர்' நாயகி அனித்ரா நாயர், யோகி பாபு, சாருஹாசன், சுரேஷ் மேனன், வனிதா விஜயகுமார், மொட்டை ராஜேந்திரன், சிங்கம்புலி, தீபா, மைம் கோபி, சாம்ஸ் மற்றும் சந்தோஷ் பிரபாகர் உள்ளிட்ட ஏராளமான நடிகர்கள் நடித்துள்ளனர். ஒளிப்பதிவு: பிரகத் முனியசாமி, படத்தொகுப்பு: குணா.


லேபிள்கள்:

கருத்துரையிடுக

[blogger][facebook][disqus]

Author Name

{picture#YOUR_PROFILE_PICTURE_URL} YOUR_PROFILE_DESCRIPTION {facebook#YOUR_SOCIAL_PROFILE_URL} {twitter#YOUR_SOCIAL_PROFILE_URL} {google#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.