கொரோனா நோயாளியின் கழிப்பறை?!

கொரோனா நோயாளியின் கழிப்பறை?!  


புதுச்சேரி: 

கதிர்காமம் மருத்துவ கல்லூரியில் உள்ள கொரோனா வார்டில் அனைத்து படுக்கைகளும் நிரம்பின. ஒரு கழிவறையை 50 பேர் பயன்படுத்தும் அவலநிலை உள்ளது. எனவே, புதுவை அரசு உடனடியாக மாற்று நடவடிக்கையை எடுக்காவிடில் கடுமையான பாதிப்புகளை சந்திக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. 

நாடு முழுவதும் கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. இதனால் கொரோனா தொற்றை பேரிடராக மத்திய அரசு அறிவித்துள்ளது. இதனை கட்டுப்படுத்த 3 மாதத்திற்கும் மேலாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இருப்பினும், தொற்றின் தாக்கம் குறைந்தபாடில்லை. 

இந்நிலையில் புதுச்சேரியில் ஊரடங்கு அமலில் இருந்தவரை கொரோனா தொற்று கட்டுக்குள் இருந்தது. ஆனால், ஜூன் 1ம் தேதி ஊரடங்கு தளர்த்தப்பட்ட பின்னர் படிப்படியாக பாதிப்பு அதிகரிக்க துவங்கியது.

சென்னையில் கடந்த ஜூன் மாதம் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. இதன் காரணமாக, அங்கிருந்து ஏராளமானோர் முறையான அனுமதியின்றி புதுச்சேரிக்குள் நுழைந்தது, மேட்டுப்பாளையத்தில் விதிகளை கடைப்பிடிக்காத மாஸ்க் கம்பெனி போன்ற காரணங்களால் தொற்று பரவல் அதிகரித்தது. 


மேலும், ஊரடங்கு தளர்வுக்கு பிறகு காய்கறி கடைகள், இறைச்சிக் கடைகளில் சமூக இடைவெளியை கடைப்பிடிக்காததால், அவை தொற்று பரவும் மையங்களாக மாறின. 

இதன் காரணமாக, தினமும் சராசரியாக 60 பேர் முதல் 80 பேர் பாதிக்கப்பட்டு வந்தனர். இதையடுத்து, கொரோனா நோயாளிகளை அனுமதிப்பதற்காக, கதிர்காமம் இந்திரா காந்தி மருத்துவ கல்லூரியை கோவிட் மருத்துவமனையாக அரசு அறிவித்தது. இங்கு அவசர சிகிச்சை பிரிவு, தீவிர சிகிச்சை பிரிவு (ஐசியூ), 7 கோவிட் வார்டுகள், தனிமைப்படுத்தப்பட்ட வார்டு ஒன்று, 10 அறைகள் கொண்ட சிறப்பு வார்டு என 600 படுக்கை வசதிகள் உள்ளன.

இதேபோல், ஜிப்மரிலும் 500 படுக்கை வசதிகளுடன் தனியாக கோவிட் மருத்துவமனை இயங்கி வருகிறது. ஆரம்பத்தில் கொரோனா தொற்று கட்டுக்குள் இருந்ததால் நோயாளிகளுக்கு தரமான சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் கடந்த சில வாரங்களாக கொரோனா தொற்றால் தினமும் 100 முதல் 150 பேர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். 

தற்போது கதிர்காமம் மருத்துவ கல்லூரி மற்றும் ஜிப்மரில் உள்ள அனைத்து படுக்கைகளும் நிரம்பி வழிகின்றன. இதனால் அனைவரையும் மருத்துவர்கள், செவிலியர்கள் தொடர்ந்து கண்காணிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. 

இதனால் மருத்துவ சிகிச்சையின் தரம் குறைந்ததுடன், அதனால் ஏற்படும் உயிரிழப்பும் அதிகரித்துள்ளது. இதேநிலை நீடித்தால் அடுத்த வாரம் முதல் தினமும் 200 முதல் 250 பேர் வரை பாதிக்கப்படுவர். அதன்பிறகு நோயாளிகளை அனுமதிக்க இடமில்லாத நிலை ஏற்படும்.


புதுவையில் தொடர்ந்து நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், கதிர்காமம் மருத்துவ கல்லூரியை சுகாதாரமாக பராமரிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மேலும், அங்கு கழிவறைகள், குளியலறைகள் போதிய அளவு இல்லை. தற்போது ஒரு கழிவறையை 50 நோயாளிகள் பயன்படுத்தும் அவலநிலை உள்ளது. 

இதனால் அங்கு செல்லவே மக்கள் யோசிக்கின்றனர். இதன் காரணமாக, தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் பரிசோதனை செய்ய முன்வருவதில்லை. இதேநிலை நீடித்தால் தொற்று மேலும் பரவும் சூழல் ஏற்படும். இப்பிரச்னையில் அரசு தீவிர கவனம் செலுத்த வேண்டும். நோயாளிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப நடுமாடும் கழிவறை வசதிகளை ஏற்படுத்திதர வேண்டும். மேலும், உப்பளம் துறைமுக வளாகத்தில் உள்ள குடோன்கள் புதுப்பிக்கப்பட்டுள்ளன.

அவற்றை தற்காலிக மருத்துவமனையாக மாற்றலாம். அதேபோல், பாரதி பூங்கா அருகில் உள்ள இயற்கை வாழ்வியல் முறை மையத்தையும் தற்காலிக மருத்துவமனையாக மாற்றலாம். இதுபோன்ற மாற்றுத்திட்டங்களை புதுவை அரசு  விரைவாக முன்னெடுக்கவில்லை என்றால், கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும். தற்போது 100 பேருக்கு பரிசோதனை செய்ததில் 20 முதல் 22 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 

ஆகஸ்ட் மாத இறுதியில் தொற்றால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை 10 ஆயிரத்தை கடக்கும் என்று வல்லுநர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இதனால் சுமார் 5 ஆயிரம் படுக்கைகள் வரை தேவைப்படும். ஆந்திரா போன்ற பல மாநிலங்களில் தனியார் மருத்துவமனைகளை அரசு எடுத்து நடத்தி வருகிறது. 

எனவே, புதுவை அரசு காலதாமதம் செய்யாமல் போர்க்கால அடிப்படையில் தனியார் மருத்துவமனைகளை சிறிது காலத்துக்கு அரசே எடுத்து நோயாளிகளை அனுமதித்து சிகிச்சை அளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்போதுதான் கொரோனா தொற்று பேரிடர் சமளிக்க முடியும். 

இதற்கான நடவடிக்கையை அரசு துரிதமாக எடுக்க வேண்டும் என்பதே அனைவரது எதிர்பார்ப்பாக உள்ளது.










லேபிள்கள்:

கருத்துரையிடுக

[blogger][facebook][disqus]

Author Name

{picture#YOUR_PROFILE_PICTURE_URL} YOUR_PROFILE_DESCRIPTION {facebook#YOUR_SOCIAL_PROFILE_URL} {twitter#YOUR_SOCIAL_PROFILE_URL} {google#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.