இசைஞானி இளையராஜாவை சந்தித்து வாழ்த்து பெற்றார் இசைவாணி.!
இயக்குநர் பா.இரஞ்சித்தின் “தி கேஸ்ட்லெஸ் கலெக்டிவ்” இசைக்குழுவின் பாடகி இசைவாணி. சமீபத்தில் இவரை உலகின் சிறந்த 100 பெண்களில் ஒருவராக BBC தேர்வு செய்திருந்தது. பெண்கள் கால்பதிக்கத் தயங்கும் கானா இசைத்துறையில் சிறந்து விளங்கி வருவதற்காக இந்த அங்கீகாரம் அவருக்கு கிடைத்தது. இந்தியாவில் இருந்து இப்பட்டியலில் இடம்பிடித்த ஒரே பெண் இசைவாணி தான்.
இந்த தகவலை அறிந்த இசைஞானி இளையராஜா, இசைவாணியை நேரில் அழைத்து தனது வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் தெரிவித்துள்ளார். இசைவாணியை பாடச்சொல்லி பொருமையாக ரசித்துக் கேட்டிருக்கிறார்.
இசைஞானியின் இசையில் வெளிவந்த பாடல்களான “ஆராரோ பாட வந்தேனே, ஆவாரம் பூவின் செந்தேனே” மற்றும் “கானக் கருங்குயிலே” ஆகிய பாடல்களை பாடிக் காண்பித்திருக்கிறார் இசைவாணி. மேலும், “ஒரு தமிழ்ப் பெண்ணுக்கு இந்த அங்கீகாரம் கிடைத்திருப்பது எனக்கு பெருமையாக இருக்கிறது” என்று கூறி மகிழ்ந்திருக்கிறார் இசைஞானி.
இன்னும் இதுபோல் பல சாதனைகள் படைக்க இசைவாணிக்கும், தி கேஸ்ட்லெஸ் கலெக்டிவ் இசைக்குழுவினருக்கும் வாழ்த்துக்களை கூறியதாகவும் மிகுந்த உற்சாகத்தோடு கூறினார் இசைவாணி.
கருத்துரையிடுக