ஆந்திராவில் சென்னையை சேர்ந்த 7 பேர் பலி
சென்னை பெரம்பூர் அகரம் பகுதியில் இருந்து 15 பேர் ஆந்திர மாநிலத்தில் உள்ள கோவில்களுக்கு சுற்றுலா செல்ல முடிவு செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை அதே பகுதியை சேர்ந்த ரேவதி என்ற மூதாட்டி செய்து அனைவரையும் கடந்த சில தினங்களுக்குமுன்பு அழைத்து சென்றார்.
சென்னையில் இருந்து அனைவரும் ரெயில் மூலமாக ஆந்திராவில் உள்ள நெல்லூருக்கு சென்றனர். பின்னர் அங்கு வாடகை வேனை எடுத்துக்கொண்டு பல இடங்களை சுற்றி பார்த்தனர்.
ஆந்திராவில் பல இடங்களை சுற்றி பார்த்துவிட்டு நேற்று முன்தினம் மாலை கர்னூல் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீசைலம் மல்லிகார்ஜூன சாமி கோவிலுக்கு சென்றனர்.
அங்கு அனைவரும் பயபக்தியுடன் சாமி தரிசனம் செய்தனர். பின்னர் அந்த பகுதியில் உள்ள சில சுற்றுலாத்தலங் களுக்கு சென்று சந்தோஷமாக பொழுதை கழித்தனர்.
முக்கிய சுற்றுலாத்தலங்கள் அனைத்தையும் பார்த்து முடித்ததும் மீண்டும் ரெயில் மூலம் சென்னை திரும்ப முடிவு செய்திருந்தனர். இதனையடுத்து நேற்று முன்தினம் நள்ளிரவு வேனில் ஸ்ரீசைலத்தில் இருந்து நெல்லூர் ரெயில்நிலையம் நோக்கி புறப்பட்டனர்.
நேற்று அதிகாலை 3.30 மணியளவில் சென்னை-மும்பை தேசிய நெடுஞ்சாலையில் வேன் வேகமாக வந்து கொண்டிருந்தது. அதிகாலை நேரம் என்பதால் சாலை வெறிச்சோடி காணப்பட்டது. இதனால் டிரைவர் வேகமாக வேனை ஓட்டினார். நெல்லூர் அருகே உள்ள புஜ்ஜிரெட்டிபாளையம் பகுதியில் உள்ள தாமரமடுகு என்ற இடத்தில் சென்றபோது வேன் திடீரென நிலை தடுமாறியது.
அப்போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து வேன் தாறுமாறாக ஓடியது. உடனே டிரைவர் வேனை கட்டுப்படுத்த முயன்றார். ஆனால் அவரால் முடியவில்லை. மின்னல் வேகத்தில் சென்ற வேன் அங்குள்ள பெட்ரோல் பங்க் அருகே சாலையோரம் நின்றுகொண்டிருந்த லாரி மீது மோதியது.
அப்போது பயங்கர சத்தம் கேட்டது. கண்இமைக்கும் நேரத்தில் நடந்த இந்த கோர விபத்தால் வேனில் தூங்கிக்கொண்டிருந்தவர்கள் தூக்கி வீசப்பட்டனர்.
இந்த விபத்தில் வேனை ஓட்டிச்சென்ற டிரைவர் உள்பட 7 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
விபத்தில் சிக்கியவர்களை அக்கம்பக்கத்தினர் விரைந்து வந்து மீட்டனர். விபத்து பற்றி தகவல் கிடைத்ததும் புஜ்ஜிரெட்டிபாளையம் போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.
இந்த கோர விபத்தில் உயிரிழந்தவர்களில் 5 பேர் பெண்கள் ஆவர். அனைவரின் உடல்களையும் வரிசையாக போலீசார் அடுக்கி வைத்து அடையாளம் காணும் பணியில் ஈடுபட்டனர். இதில் உயிரிழந்தவர்கள் யார்-யார் என்ற விவரம் தெரியவந்துள்ளது.
அவர்கள் விவரம் வருமாறு:-
1.பத்மினி, 2.ரேவதி, 3.தேவி, 4.சுஜாதா, 5.ஆஷா, 6.நந்தகுமார், 7.ஜெகதீசன், 8.குருநாதரெட்டி (வேன் டிரைவர்). டிரைவர் ஆந்திராவை சேர்ந்தவர்.
விபத்தில் காயம் அடைந்த 2 பெண் குழந்தைகள் உள்பட 7 பேர் நெல்லூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
இந்த விபத்து பற்றி அகரத்தில் உள்ள உறவினர்களுக்கு உடனடியாக தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் நெல்லூருக்கு விரைந்தனர்.
உயிரிழந்தவர்களில் நந்தகுமார், பத்மினி ஆகியோர் கணவன்-மனைவி ஆவர். இவர்கள் பெரவள்ளூர் ஜி.கே.எம் காலனி முதல் தெருவை சேர்ந்தவர்கள். நந்தகுமார் ஓய்வுபெற்ற ஐ.சி.எப். ஊழியர்.
மேலும் பலியான ஜெகதீசன் ஏ.சி.மெக்கானிக்காக வேலை பார்த்து வந்தவர். இவரும் பெரவள்ளூர் காமராஜ் தெருவில் வசித்து வந்தார். உயிரிழந்த ரேவதி பெரவள்ளூர் தான்தோன்றி அம்மன்கோவில் தெருவை சேர்ந்தவர். தேவி திரு.வி.க. நகரையும், சுஜாதா பெரம்பூர் வாசுதேவன் தெருவை சேர்ந்தவர்கள்.
இந்த விபத்தில் அனைவரையும் சுற்றுலாவுக்கு அழைத்து சென்ற ரேவதியும் உயிரிழந்து விட்டார். இவர் ஆஸ்பத்திரிக்கு செல்லும் வழியில் இறந்ததால் அவரது உடல் மட்டும் நேற்று மதியம் சென்னை கொண்டு வரப்பட்டது. மற்றவர்களின் உடல் பிரேதபரிசோதனைக்கு பின்னர் உறவினர்களிடம் நேற்று மாலை ஒப்படைக்கப்பட்டது.
கருத்துரையிடுக