கொரோனா தீவிரம்: மக்கள் நிலை?!

கொரோனா தீவிரம்: மக்கள் நிலை?!  


நாடு முழுவதும் கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் கொரோனா தொற்று பரவத் தொடங்கியது. தமிழகத்திலும் கொரோனா வேகமாக பரவியது.

தமிழகத்தில் கொரோனா தொற்றை தடுக்க அரசு தீவிர தடுப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதுவரை 2 கோடியே 3 லட்சத்து 54 ஆயிரத்து 41 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

இதில் 9 லட்சத்து 47 ஆயிரத்து 129 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்களில் 5 லட்சத்து 71 ஆயிரத்து 717 பேர் ஆண்கள், 3 லட்சத்து 75 ஆயிரத்து 376 பேர் பெண்கள், 36 பேர் மூன்றாம் பாலினத்தவர்கள்.

இந்தியாவில் கொரோனாவை தடுப்பதற்காக மத்திய-மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக கோவேக்சின், கோவிஷீல்டு ஆகிய தடுப்பூசிகள் போடும் பணி கடந்த ஜனவரி மாதம் 16-ந்தேதி தொடங்கப்பட்டது.

முதல்கட்டமாக மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதாரப் பணியாளர்கள், போலீசார் உள்ளிட்ட முன்கள பணியாளர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டது. அடுத்தகட்டமாக மார்ச் 1-ந்தேதி முதல் 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடும் பணி தொடங்கியது. கூடவே 45 வயதுக்கு மேற்பட்ட இணை நோய் பாதிப்பு உள்ளவர்களுக்கும் தடுப்பூசி போடப்பட்டது.

அதனைத்தொடர்ந்து கடந்த 1-ந்தேதி முதல் 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடும் பணி தொடங்கியது. தமிழகத்தில் தினமும் 1 லட்சத்து 63 ஆயிரம் பேர் தடுப்பூசி போட்டு வருகிறார்கள்.

இந்தநிலையில் கடந்த மாதம் முதல் நாடுமுழுவதும் கொரோனா 2-வது அலை வேகமாக பரவி வருகிறது. தினசரி பாதிப்பு எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. தற்போது தினசரி பாதிப்பு 1 லட்சத்து 60 ஆயிரத்தை கடந்துவிட்டது. 

எனவே தடுப்பூசி போடும் பணிகளை விரைவுபடுத்த பிரதமர் மோடி திட்டமிட்டார். இதற்காக மத்திய அரசு சார்பில் தடுப்பூசி திருவிழாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. தடுப்பூசி தொடர்பாக பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தி அனைவரையும் தடுப்பூசி போட வைப்பதே இந்த தடுப்பூசி திருவிழாவின் நோக்கம் ஆகும்.

அதன்படி இந்தியாவில் 4 நாள் தடுப்பூசி திருவிழா கடந்த 11-ந்தேதி தொடங்கியது. இதில் பொதுமக்கள் ஏராளமானோர் ஆர்வமுடன் தடுப்பூசி போட்டு வருகிறார்கள். மத்திய அரசின் தடுப்பூசி திருவிழா இன்றுடன் நிறைவு பெறுகிறது.

இந்தநிலையில் தடுப்பூசி திருவிழாவை நடத்துமாறு மாநில அரசுகளை மத்திய அரசு கேட்டுக்கொண்டது. அதன் அடிப்படையில் தமிழகத்தில் தடுப்பூசி திருவிழா நடத்தி அதிகம் பேருக்கு தடுப்பூசி போட வைக்க தமிழக சுகாதாரத்துறை ஏற்பாடு செய்தது.

அதன்படி தமிழகத்தில் இன்று முதல் 16-ந்தேதி வரை 3 நாட்கள் தடுப்பூசி திருவிழா நடக்கிறது. இன்று காலை தமிழகத்தில் தடுப்பூசி திருவிழா தொடங்கியது. இந்த தடுப்பூசி திருவிழாவில் பொதுமக்கள் ஆர்வமாக பங்கேற்று தடுப்பூசி போட்டு வருகிறார்கள்.


தமிழகத்தில் தற்போது தினமும் 1.63 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வரும் நிலையில் இந்த எண்ணிக்கையை 2 லட்சமாக உயர்த்த சுகாதாரத்துறை திட்டமிட்டு இருக்கிறது.

தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவமனைகள், மருத்துவ கல்லூரிகள், மாவட்ட தலைமை மருத்துவமனைகள், நகர்ப்புற மற்றும் கிராமப்புற அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், 1900 மினி கிளினிக்குகள் மற்றும் தடுப்பூசி செலுத்த அனுமதி பெற்ற தனியார் மருத்துவமனைகள் என 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மையங்களில் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.

இந்த இடங்களில் இருக்கும் கட்டமைப்பின் படி தினமும் சுமார் 4 லட்சம் பேருக்கு தடுப்பூசி போட முடியும். ஆனால் தற்போது 1.63 லட்சம் பேர் மட்டுமே தடுப்பூசி போட்டுக்கொள்கிறார்கள். எனவே தடுப்பூசி திருவிழாவுக்கென்று தனியாக மையங்கள் எதுவும் திறக்கப்படவில்லை. தற்போது போடப்பட்டு வரும் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மையங்களிலேயே தடுப்பூசி திருவிழாவும் நடைபெற்று வருகிறது.

தடுப்பூசி திருவிழா தொடர்பாக சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியதாவது:-

தமிழகத்தில் இதுவரை 39 லட்சத்து 44 ஆயிரம் பேர் கொரோனா தடுப்பூசி போட்டுள்ளனர். கொரோனா தடுப்பூசி பற்றிய விழிப்புணர்வை பொதுமக்கள் மத்தியில் வேகமாக கொண்டு செல்லும் முயற்சியாகவே இந்த தடுப்பூசி திருவிழா நடந்து வருகிறது.

தடுப்பூசி போட பொதுமக்கள் அதிக ஆர்வத்துடன் வருகிறார்கள். எனவே தடுப்பூசி திருவிழாவில் தினமும் 2 லட்சம் பேருக்கு தடுப்பூசி போட இலக்கு நிர்ணயித்துள்ளோம். தடுப்பூசி திருவிழா முடிந்த பிறகும் தினமும் 2 லட்சம் பேர் தடுப்பூசி எடுத்துக்கொள்வார்கள் என்று நம்புகிறோம்.

கோவேக்சின் முதல் தவணை தடுப்பூசி போட்டு 4-வது வாரத்துக்குள் 2-வது தவணை போட வேண்டும். கோவிஷீல்டு தடுப்பூசி முதல் தவணை போட்ட பிறகு 8 வாரங்களுக்குள் 2-வது தவணை தடுப்பூசி போடப்படுகிறது. தற்போதைய நிலவரப்படி 45 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம். பொதுமக்கள் முக கவசம் அணிந்து, சமூக இடைவெளியை கடைபிடிப்பதுடன் கட்டாயம் தடுப்பூசியும் போட்டுக்கொள்ள வேண்டும்.

18-வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி போட அனுமதிக்குமாறு மத்திய அரசிடம் கேட்டுள்ளோம். அதற்கான அனுமதி விரைவில் கிடைக்கும் என்று எதிர்பார்க்கிறோம்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

லேபிள்கள்: ,

கருத்துரையிடுக

[blogger][facebook][disqus]

Author Name

{picture#YOUR_PROFILE_PICTURE_URL} YOUR_PROFILE_DESCRIPTION {facebook#YOUR_SOCIAL_PROFILE_URL} {twitter#YOUR_SOCIAL_PROFILE_URL} {google#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.