‘3:33’ திரைப்பட விமர்சனம்
3 என்பது தெய்வ சக்தி, அதனுடன் அசுர சக்தி 33 சேர அந்த நேரத்தில் பிறந்தவர்கள் பல நெகடிவ் தன்மை கொண்டவர்களாக அவர்களைச் சுற்றி இருப்பவர்கள் பாதிக்கப்படுவார்கள் என்ற புள்ளி விவரங்களுடன் விவரித்து திரைக்கதையமைத்திருக்கிறார் நம்பிக்கை சந்துரு. குறிப்பிட்ட டைம் நாயகனை படாது பாடு படுத்தி சிக்கலுக்கு உள்ளாக்குவதை வித்தியாசமாக அணுகுமுறையில் சொல்லி பயமுறுத்த முயற்சித்து அதில் பாதியளவு வெற்றியும் பெற்றிருக்கிறார் இயக்குனர் நம்பிக்கை சந்துரு.
நடன இயக்குனர் சாண்டி, சுருதி செல்வம், ரேஷ்மா பசுபலேட்டி , ரமா, கவுதம் வாசுதேவ் மேனன், மைம் கோபி, பருத்தி வீரன் சரவணன் நடிப்பில் நம்பிக்கை சந்துரு இயக்கி இருக்கும் படம் 3:33. நடன இயக்குனர் சாண்டி கதாநாயகனாக அறிமுகமாகி உள்ள படம். தனது தாய் மற்றும் சகோதரியுடன் புதிய வீட்டில் குடியேறுகிறார் சாண்டி. அந்த வீட்டில் அமானுஷ்ய விஷயங்கள் நடக்கின்றன. சாண்டி அதிகாலை 3:33 (மூணு முப்பத்தி மூணு) மணிக்கு பிறந்தவர் என்பதால் தினமும் அதே நேரத்தில் தாய், சகோதரி, காதலி தோற்றங்களில் பேய்கள் வந்து பயமுறுத்தி விட்டு மறைகின்றன.
பேய் விரட்டுபவர்கள் வீட்டை ஆய்வு செய்துவிட்டு, சாண்டியுடன் இருந்தால் உங்கள் உயிருக்கு ஆபத்து வெளியேறி விடுங்கள் என்று அவரது தாய், சகோதரியை எச்சரித்து செல்கின்றனர். சாண்டியை பேய்கள் ஏன் துரத்துகின்றன. அதில் இருந்து அவர் மீண்டாரா? என்பது மீதி கதை.
சாண்டி முதல் படத்திலேயே நடிப்பில் ஸ்கோர் பண்ணுகிறார். படுக்கையில் பேய் கனவில் சிக்கி கைகால்களை அசைக்க முடியாமல் தவிப்பது. அக்காவிடம் மாடியில் பேசிவிட்டு கீழே இறங்கும்போது அவர் வீட்டுக்குள் இருந்து மாடிக்கு செல்ல வருவதை பார்த்து குலை நடுக்கம் ஆவது, தன்னால் குடும்பத்துக்கு ஆபத்து வரும் என்பதை அறிந்து அவர்களை காப்பாற்ற போராடுவது என்று நடிப்பில் முத்திரை பதிக்கிறார்.
கிளைமாக்ஸ் பதற வைக்கிறது. சாண்டியின் அக்காவாக வரும் ரேஷ்மா, தாயாக வரும் ரமா, காதலியாக வரும் ஷ்ருதி செல்வம் ஆகியோர் கதாபாத்திரத்துக்கு நிறைவு செய்துள்ளனர். கவுதம் மேனன் கதையின் மர்ம முடிச்சுகளை அவிழ்க்கும் கனமான கதாபாத்திரத்தில் சிறிது நேரம் வந்து போகிறார்.
புது வீட்டுக்கு வருவதற்கு முன்பு குறிப்பிட்ட நேரத்தில் சாண்டிக்கு பேய் தொல்லைகள் கொடுக்காதது ஏன் என்ற கேள்விக்கு விளக்கம் இல்லை. பேய் கதையை வித்தியாசமான திரைக்கதையில் விறுவிறுப்பாக காட்சிப்படுத்தி கவனம் பெறுகிறார் இயக்குனர் நம்பிக்கை சந்துரு. காட்சிகளோடு சதீஷ் மனோகரன் ஒளிப்பதிவும், ஹர்ஷவர்தன் இசையும் ஒன்ற வைக்கின்றன.
கருத்துரையிடுக