"ஆன்டி இந்தியன்" திரை விமர்சனம்
எப்படி பட்ட இயக்குனர்களின் படமாக இருந்தாலும் தனது உண்மையான கருத்துக்களை முன் வைப்பவர் தான் ப்ளூ சட்டை மாறன்.
அவரது வீடியோக்களை பார்த்து பலரும் அவரை திட்டிதீர்த்தவர்களும் உண்டு. படம் இயக்கினால் தான் அதனுடைய கஷ்டம் தெரியும் என்று பலரும் அவரை குறை கூறியதை பார்த்து, தானாகவே படம் இயக்கி இசையும் அமைத்துள்ளார் மாறன்.
இவரது படமான ஆன்டி இந்தியன் படம் திரையரங்குகளில் வெளிவந்து பலதரப்பட்ட கருத்துக்களை பெற்று வருகிறது .ப்ளூ சட்டை மாறன் இயக்கிய ஆன்டி இந்தியன் படத்தை வெளியிட கூடாது என்று பலரும் பல சிக்கல்களை உண்டாக்கிய நிலையில், அணைத்து பிரச்சினைகளையும் சமாளித்து இன்று ஒரு இயக்குனராக உருவெடுத்துள்ளார்.ஒருவர் இறந்தால், அவரது இறப்பை வைத்து என்னென்ன பிரச்சனை வருகிறது. இறந்த சடலத்தை வைத்து என்னென்ன செய்கிறார்கள் என்பதை எதார்த்தம் கலந்த சுவாரஸ்யமான கதையாக கூறியுள்ளார் மாறன்.
இறந்தவருக்கு செய்யும் சம்பிரதாயங்களை, செய்வதற்கு முன்பு கோஷ்டி தகறாறு செய்து பல பேர் இறக்கின்றனர்.கடைசியாக என்ன தான் நடக்கிறது, இறந்த சடலத்தை என்ன செய்தார்கள் என்பது தான் முழு படத்தின் கதை.இப்படத்தை பார்த்த பல பிரபலங்களும் இவரை பாராட்டி வருகின்றனர் ஒரு பக்கம்.
ப்ளூ சட்டை மாறன் தனது எல்லா விமர்சனங்களிலும் ஒரு முக்கியமான விஷயத்தை கிண்டலாக கூறுவதுண்டு. (லூசு ஹீரோயின், வேலை வெட்டி இல்லாத ஹீரோ) இப்படிப்பட்ட இரண்டு கதாபாத்திரங்கள் பல தமிழ் சினிமாக்களில் வந்த வண்ணம் இருந்ததால் அதை குறிப்பிட்டு பல முறை சொல்லியும் பல இயக்குனர்கள் அதை மாற்றிக் கொள்ளவில்லை. இவருடைய ஆன்ட்டி இந்தியன் படத்தில் அந்தத் தவறை செய்யாமல் பெரிய ஹீரோ பெரிய பட்ஜெட் என்று எதுவும் எடுத்துக் கொள்ளாமல் தனது மனதில் மிகவும் ஆழமாக பதிந்த ஒரு கதையை முழு நம்பிக்கையுடன் திரைக்கதை அமைத்து வடிவம் கொடுத்துள்ளார்.
ப்ளூ சட்டை மாறன் படத்தின் மிகப்பெரிய பலமே எடுத்துக் கொண்ட கதைதான். மூன்று வித்தியாசமான மதங்கள், குறிப்பாக இந்து முஸ்லிம் கிறிஸ்டியன் என்று அவர்கள் கடைபிடிக்கும் சம்பிரதாயங்கள் அதில் ஏற்படும் சிக்கல்கள் என்று வரிசைப்படுத்தி சமுதாயத்தில் இருக்கும் பல பிரச்சனைகளை ஒரு சாட்டையடியாக வசனங்கள் மூலமாகவும் காட்சிகள் மூலமாகவும் விளக்கியுள்ளார் இயக்குனர் மாறன்.
படத்தின் முதல் காட்சி ப்ளூ சட்டை மாறன் முகத்தில் ஒரு க்ளோஸ் அப் ஷாட் , படத்தின் கிளைமாக்ஸ் காட்சி அதே முகம் அதே க்ளோஸ் அப் ஷாட். ஆனால் இந்த இரண்டு காட்சிகளுக்கு நடுவே காட்டப்படும் இந்த சமுதாயத்தின் பிரச்சினைகளும் அதை கையாளும் அரசியல்வாதிகளும் காவல் அதிகாரிகளும் என்னவெல்லாம் செய்கிறார்கள் என்பதை திரைக்கதை மூலம் சொல்லியுள்ளார் மாறன் .
நாம் பார்க்கும் மத மோதல்களுக்கும், கலவரங்களுக்கும் எப்படி எங்கிருந்து தொடங்குகிறது, அதனை மிக எளிதாக தடுக்க முடிந்தும் தடுக்க யாருமே முயற்சி எடுக்காதது ஏன்? அரசாங்கமும், அதிகாரமும் மத மோதல்களை எப்படி தங்களின் சுயலாபத்துக்காக பயன்படுத்திக் கொள்கிறது போன்ற விஷயங்களை பட்டியலிட்டுக் காட்டியிருக்கும் ஆன்டி இண்டியன், நிச்சயமாக கண்டு களிக்க வேண்டிய திரைப்படம்.பெரிய தொழில்நுட்ப குழு இல்லை, பிரபலமான நடிகர் நடிகைகள் இல்லை, பிரமாண்டமான லொகேஷன் இல்லை.
ஆனால் ஆழமான ஒரு கதையை மிக தெளிவாக திரைக்கதை மூலம் படமாக்கினால் போதும் என்று நிரூபித்து உள்ளார் இளமாறன் .
படத்தின் மைனஸ் என்று சொல்லப்போனால் இரண்டாம் பாதியில் கொஞ்சம் ட்ரிம் செய்து இருக்கலாம் . இன்னொன்று கேமரா தொழில் நுட்பத்தில் இன்னமும் கொஞ்சம் மெனக்கெட்டு இருந்திருந்தால் மேலும் படம் பாராட்டுகளை பெற்று இருக்கும். இருந்தாலும் கூட படத்தை பலரும் பாராட்டி வருகின்றனர் என்பது தான் நிதர்சனமான உண்மை.
மொத்தத்தில் "ஆன்டி இந்தியன்" உண்மையான இந்தியன்.
கருத்துரையிடுக