'மாநாடு' திரைப்பட வெற்றி விழா கொண்டாட்டம்!

'மாநாடு' திரைப்பட வெற்றி விழா கொண்டாட்டம்! 


சிலம்பரசன் நடித்த ‘மாநாடு’ திரைப்படம் கடைசி நேரத்தில் குழப்பத்திற்கு பிறகு நவம்பர் 25-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. பல தியேட்டர்களில் அதிகாலை மற்றும் முதல் காட்சிகள் ரத்து செய்யப்பட்ட பிறகும் ரசிகர்கள் உற்சாகத்துடன் திரையரங்குகளில் குவிந்தனர்.

இதனால், மாநாடு, மாநிலம் முழுவதும் நல்ல ஓபனிங் பெற்று, பாக்ஸ் ஆபிஸில் நல்ல வசூலை ஈட்டியது.  மாநாடு படம் தொடக்க நாளில் மட்டும் உலகம் முழுவதும் ரூ 8.40 கோடி வசூலித்தது. இதன் காரணமாக ‘அண்ணாத்த’, ‘மாஸ்டர்’, மற்றும் ‘கர்ணன்’ படங்களுக்குப் பிறகு, இந்த ஆண்டின் 4வது சிறந்த ஓப்பனிங் டே பாக்ஸ் ஆபிஸாக மாநாடு இடம்பிடித்தது.

பல நாட்களைத் தாண்டியும் தற்போதுவரை பல திரையரங்குகளில் படம் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இதை முன்னிட்டு, இன்று சென்னையில் மாநாடு படத்தின் வெற்றிவிழா கூட்டம் நடந்தது. அதில் இயக்குநர் வெங்கட் பிரபு, படத்தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி, எஸ்.ஜே சூர்யா உட்பட அனைவரும் கலந்து கொண்டனர். ஆனால் சிம்பு மட்டும் விழாவில் பங்கேற்கவில்லை. அவர் வேறொரு பட ஷூட்டிங்கில் பிஸியாக இருப்பதாகக் கூறப்படுகிறது.  

இதனிடையே இந்த விழாவில் கலந்து கொண்ட இயக்குனர், தயாரிப்பாளர் மற்றும் நடிகர் எஸ்.ஏ. சந்திரசேகரன் பேசுகையில்:

ஒரு படத்தின் வெற்றி கடைசியில் அந்தப் படத்தின் ஹீரோவுக்குத்தான் போய்ச் சேரும். ஒரு நல்ல கதை, நல்ல திரைக்கதை யாரையும் உச்சத்துக்குக் கொண்டு சேர்த்துவிடும். இந்தப் படம் இதன் ஹீரோவை ரொம்ப நாட்களுக்குப் பிறகு உயரத்தில் கொண்டுபோய் அமர வைத்திருக்கிறது. இந்தப் படம் அவருக்கு ஒரு பெரிய திருப்பம். இந்த மகிழ்ச்சியை நம்மோடு அவர் இங்கு வந்து கொண்டாடியிருக்க வேண்டும். அவரை நம்பி தயாரிப்பாளர் எவ்வளவு முதலீடு செய்திருக்கிறார்? அப்படிப்பட்ட ஒரு வெற்றியைக் கொண்டாட அந்த கதாநாயகன் இங்கே இருக்கவேண்டும். படப்பிடிப்பின்போது எப்படி இருந்தோமோ வெற்றிக்குப் பின்பும் அப்படியே இருக்கவேண்டும். அப்போதுதான் இன்னொரு வெற்றி கிடைக்கும். வெற்றி வந்தபிறகு தலைகணம் இருக்ககூடாது என்று சிம்புவை கண்டிக்கும் விதமாக பேசினார். படத்துக்கு படம் பிளாக்பாஸ்டர்களை கொடுத்த சிம்பு, ஒருகட்டத்தில் எதுவுமே இல்லாமல் இருந்தார். எந்த சினிமாவில், தனது சிறுவயதிலிருந்து ஒரு பகுதியாக இருந்தாரோ அதிலிருந்து விலக்கப்பட்டார். பெரிய இடைவெளி மற்றும் போராட்டங்களுக்கு பிறகு இப்போதுதான், சிம்பு தனது கடந்த கால தவறுகளை மீண்டும் செய்யாமல் இருக்க அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறார்.  ஷூட்டிங் இல்லாமல் இருந்தபோது பெற்ற உடல் எடையை குறைப்பதில் இருந்து, சரியான நேரத்தில் படப்பிடிப்பை முடித்துக் கொடுக்கும்வரை, அவர் சரியான பாதையில் சென்று கொண்டிருக்கிறார்.  என்று கூறினார். 

இந்த நிகழ்வில் நடிகர் எஸ்.ஜே.சூர்யா பேசும் போது:

“சமீபகாலமாக ஓடிடி வந்துவிட்டது, கொரோனா வந்துவிட்டது, மழை வந்தால் கூட்டம் வராது என்றெல்லாம் பலவிதமான எதிர்மறை வார்த்தைகளாகவே பேசப்பட்டு வருகின்றது. ஆனால் இவை அனைத்தையும் மாநாடு திரைப்படத்தின் வெற்றி தகர்த்து விட்டது. நல்ல படம் வந்தால் மக்கள் குடையை பிடித்துக்கொண்டு கூட கூட்டம் கூட்டமாக வருவார்கள் என்பதை இந்தப்படம் நிரூபித்துவிட்டது. செத்துக்கிடக்கிற செல்கள் எல்லாம் மீண்டும் உயிர் பெற்றது போல ஒரு உணர்வு ஏற்படுகிறது. ஒரு ஜூனியர் ஆர்டிஸ்டாக நடிப்பதற்காக சினிமாவில் நுழைந்து டைரக்டராக மாறி, ஜெயித்து, தோற்று, காணாமல் போய், மீண்டும் திரும்பி வந்து, தற்போது வெற்றி முன்பின் வந்தாலும் என் பயணத்தைத் தொடர்ந்து கொண்டு இருக்கும் இந்த வேளையில் மாநாடு மூலம் மிகப்பெரிய திருப்புமுனை வெற்றி எனக்கு கிடைத்திருக்கிறது. ஜப்பானில் இந்தப் படத்தைப் பார்த்த பெண்மணி என் நடிப்பு பிடித்திருக்கிறது என பாராட்டுவதை பார்க்க முடிகிறது. குழந்தைகள் இந்தப்படத்தில் நான் பேசிய வசனங்களை என்னைப் போல பேசுகின்ற வீடியோக்களையும் பார்க்கும்போது சந்தோஷமாக இருக்கிறது” என்று கூறினார்.

தயாரிப்பாளர் அம்மா கிரியேஷன்ஸ் டி.சிவா பேசும்போது:

“இந்த படத்தின் வெற்றிக்கு காரணம் என்னவென்றால் பார்த்தான்.. புடிச்சது.. ரிப்பீட்டு.. பார்த்தான்.. புரியல.. ரிப்பீட்டு என்று சொல்லலாம்.. பிடித்தவர்கள் திரும்ப திரும்பப் பார்த்தார்கள்.. முதல் தடவை படம் பார்த்து புரியாதவர்கள் இரண்டாம் முறை அது என்ன என்று புரிந்து கொள்வதற்காக திரும்பவும் பார்த்தார்கள்.. அதுதான் இந்த படத்தின் மிகப்பெரிய காரணமாக அமைந்தது.கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா தாக்கம் உள்ளிட்ட பல பிரச்சனைகளால் நலிவடைந்து கிடந்த விநியோகஸ்தர்கள் இந்த படத்தை வாங்கியதால் மீண்டும் உயிர் பெற்று இதன்மூலம் சம்பாதித்திருக்கிறார்கள் என்றால் அதுதான் மாநாடு படத்தின் உண்மையான வெற்றி.. தயாரிப்பாளர் சங்கிலி முருகனுக்கு அடுத்து சரியான திட்டமிடலுடன் கண்டிப்புடனும் ஒரு படத்தை தயாரிக்கிறார் என்றால் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சியைத்தான் நான் சொல்வேன்.அதேபோல இயக்குனர் வெங்கட்பிரபு 80 நாட்களில் இந்த படத்தை எடுத்து தருவதாக கூறி, 68 நாட்களிலேயே படப்பிடிப்பை முடித்து தயாரிப்பாளருக்கு பக்கபலமாக இருந்துள்ளார்.. அதுமட்டுமல்ல இந்த கோவிட் காலகட்டத்தில் தயாரிப்பாளரின் சுமையை குறைக்கும் விதமாக தனது சம்பளத்தில் 30 சதவீதத்தையும் விட்டுக் கொடுத்துள்ளார்” என்றார்.

நடிகர் ஒய்.ஜி.மகேந்திரன் பேசும்போது:

“சினிமாவிற்கு வந்து ஐம்பது வருடங்களாக நடித்து வருகிறேன்.. கிட்டத்தட்ட ஓய்வு பெறும் நிலையில் இருக்கும் இந்த சமயத்தில் தான், உனக்கு ரிட்டயர்மென்ட் இல்லை.. இன்னும் பதினைந்து வருடங்கள் நீ நீடிக்கலாம் என இந்த மாநாடு படம் எனக்கு புரோமோஷன் கொடுத்துள்ளது. இவ்வளவு வருடங்களாக நான் நடித்து வந்தாலும், மாநாடு படத்தை பார்த்துவிட்டு பலரும், இவ்வளவு நல்லா நடிக்கிறீர்களே என்று கேட்கிறார்கள். காதலிக்க நேரமில்லை படத்தில் நாகேஷ் கதை சொல்லும் காட்சி போல திருவிளையாடலில் தருமி வரும் காட்சி போல இந்தப் படத்தில் சிம்பு எஸ்.ஜே.சூர்யா ஆகியோருடன் நான் இணைந்து நடித்த காட்சி, ரசிகர்கள் மத்தியில் ரொம்பவே பிரபலம் ஆகிவிட்டது கிட்டத்தட்ட முரட்டுக்காளை படத்தில் நடித்த காலகட்டத்திற்கே என்னை அழைத்துச் சென்று விட்டது போல எனக்கு ஒரு புத்துணர்ச்சி ஏற்பட்டுள்ளது.. இசைஞானி இளையராஜாவே போன் செய்து, “பின்னிட்ட” என்று பாராட்டியது எனக்கு ரொம்ப பெருமையாக இருந்தது” என்று கூறினார்

தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி பேசும்போது:

“இந்த படத்திற்கு ஆரம்பத்திலிருந்தே பக்கபலமாக இருந்தவர்கள் உத்தம்சிங் மற்றும் திருப்பூர் சுப்பிரமணியம் இருவரும் தான்.. இந்த படம் தொடங்கிய சமயத்தில் எங்களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக மீடியாக்களில் செய்திகள் வெளியாகின. அந்த கருத்து வேறுபாடுகள் எல்லாமே படத்திற்காக தானே தவிர, எங்களுக்குள் பர்சனலாக எந்த பிரச்சனையும் ஏற்பட்டதில்லை. சிம்புவுக்கும் எனக்கும் ஆயிரம் பிரச்சனைகள் இருந்தாலும் அவரை நான் எப்போதும் எங்கேயும் விட்டுக்கொடுக்க மாட்டேன். அதேபோல இந்த படத்தின் கதையைக் கேட்டதுமே, எஸ் ஜே சூர்யா இந்த படம் ஹிந்தியில் கூட நல்ல விலைக்குப் போகும்.. அதனால் எனக்கு சம்பளம் தவிர எக்ஸ்ட்ராவாக லாபத்தில் கொஞ்சம் சதவீதம் கொடுங்கள் என தமாஷாக கூறினார். அந்த அளவுக்கு இந்த படத்தின் மீது அவர் நம்பிக்கை வைத்திருந்தார். யுவன் சங்கர் ராஜாவின் இசை இந்த படத்தை தாங்கி பிடித்தது. இளையராஜா சாருக்கு இசைஞானி என பெயர் வைத்துவிட்டு, இவருக்குத்தான் இளையராஜா என பெயர் வைத்திருக்க வேண்டும்.. இந்த படம் தாமதமானாலும் எல்லாமே பாசிட்டிவாக தான் அமைந்தது” என்று கூறினார்.
லேபிள்கள்:

கருத்துரையிடுக

[blogger][facebook][disqus]

Author Name

{picture#YOUR_PROFILE_PICTURE_URL} YOUR_PROFILE_DESCRIPTION {facebook#YOUR_SOCIAL_PROFILE_URL} {twitter#YOUR_SOCIAL_PROFILE_URL} {google#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.