கர்நாடகத்தில் இரவு நேர ஊரடங்கு!

கர்நாடகத்தில் இரவு நேர ஊரடங்கு! 



பெங்களூரு: 

கடும் எதிர்ப்புக்கு இடையே கர்நாடகத்தில் அரசு அறிவித்தப்படி இரவு நேர ஊரடங்கு நேற்றிரவு முதல் அமலுக்கு வந்தது. இதையொட்டி கடைகள், வணிக வளாகங்கள் இரவு 9.30 மணிக்கே மூடப்பட்டன. இந்த ஊரடங்கிற்கு மக்கள் ஒத்துழைக்க அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது. 

கர்நாடகத்தில் கொரோனா பரவல் கட்டுக்குள் இருந்தாலும் ஒமைக்ரான் வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதுவரை மாநிலத்தில் 39 பேருக்கு ஒமைக்ரான் பாதிப்பு உறுதியாகி உள்ளது. வரும் நாட்களில்  ஒமைக்ரான் வைரஸ் மேலும் தீவிரமாக பரவக்கூடும் என்று அரசு கருதுகிறது. இந்த ஒமைக்ரான் வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் நோக்கத்தில் புதிய கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டும் என்று அனைத்து மாநிலங்களுக்கும் மத்திய அரசு உத்தரவிட்டது. 

அந்த உத்தரவுப்படி, கர்நாடகத்தில் 28-ந் தேதி முதல் 10 நாட்களுக்கு இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று கர்நாடக அரசு கடந்த 26-ந் தேதி அறிவித்தது. இரவு 10 மணிக்கு தொடங்கி காலை 5 மணி வரை இந்த ஊரடங்கு அமலில் இருக்கும் என்று அரசு கூறியது. இதற்கு சினிமா துறையினர், ஓட்டல், உணவக உரிமையாளர்கள், வியாபாரிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதனால் தங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்று கவலை தெரிவித்தனர்.

ஆனால் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை, மக்களின் உயிர்களை காக்க வேண்டும் என்ற நோக்கத்தில் அறிவிக்கப்பட்டுள்ள இரவு நேர ஊரடங்கை எக்காரணம் கொண்டும் வாபஸ் பெற மாட்டோம் என்று திட்டவட்டமாக கூறிவிட்டார். அதன்படி கர்நாடகத்தில் இரவு நேர ஊரடங்கு நேற்று அமலுக்கு வந்தது. 

இரவு 9 மணிக்கே போலீசார் வாகனங்களில் ரோந்து வந்து கடைகளை மூடும்படி அதன் உரிமையாளர்களுக்கு அறிவுறுத்தினர். அதனால் 9.30 மணிக்கு எல்லாம் கடைகளை மூடிவிட்டு வியாபாரிகள் வீட்டுக்கு புறப்பட்டு சென்றனர். 10 மணிக்கு அனைத்து வகையான கடைகள் மட்டுமின்றி வணிக வளாகங்கள், ஓட்டல்கள் போன்றவையும் மூடப்பட்டன.

பெங்களூருவில் மேம்பாலங்களை இரும்பு தடுப்புகளை வைத்து மூடவும் போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர். இரவு நேரங்களில் செயல்படும் தனியார் நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்கள், அத்தியாவசிய சேவைகளை வழங்கும் ஊழியர்கள், மருத்துவத்துறையினர் உள்ளிட்ட அரசால் அனுமதிக்கப்பட்ட பணியாளர்களை தவிர மற்றவர்கள் இரவு 10 மணிக்கு மேல் நடமாட தடை விதிக்கப்பட்டுள்ளது. 

அதனால் போலீசார் ஆங்காங்கே நின்று சோதனையில் ஈடுபட்டனர். முதல் நாள் என்பதால், 10 மணிக்கு மேல் வெளியில் நடமாடியவர்களை எச்சரித்து அனுப்பினர். இரவு நேர ஊரடங்கு அமலுக்கு வந்தாலும், பஸ்கள், மெட்ரோ ரெயில்கள், ரெயில்கள் வழக்கம்போல் இயங்கின. அவசர தேவைகளை தவிர்த்து ஆட்டோ-வாடகை கார்கள் இயங்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

அதாவது ரெயில், பஸ், விமான நிலையங்களுக்கு செல்பவர்களை வாடகை வாகனங்கள் ஏற்றி செல்லலலாம். அதில் பயணிப்பவர்கள் அதற்கான முன்பதிவு ஆவணங்களை வைத்திருக்க வேண்டும். இரவு நேரங்களில் பஸ்கள் அட்டவணைப்படி செயல்படும். அதில் எந்த மாறுபாடும் கிடையாது.

கர்நாடத்தில் கொரோனா 2-வது அலை ஊரடங்கில் தளர்வு அறிவிக்கப்பட்டதால் சினிமா தியேட்டர்களில் தினசரி 5 காட்சிகள் திரையிடப்பட்டு வந்தன. இரவு நேர ஊரடங்கு காரணமாக மாநிலம் முழுவதும் இரவு நேர காட்சி ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்த ஊரடங்கு அமலில் இருக்கும் வரை தினசரி 4 காட்சிகள் மட்டுமே திரையிடப்படும் என்று தியேட்டர் உரிமையாளர்கள் அறிவித்துள்ளனர். 

இரவு நேர ஊரடங்கில் ஓட்டல்கள் அதாவது தங்கும் விடுதிகள் எப்போதும் செயல்படலாம். ஆனால் அங்கு கொரோனா தடுப்பு விதிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்று கூறியுள்ளது. ஒமைக்ரான் பரவல் அதிகரித்தால் மாநிலத்தில் தற்போது தொடங்கப்பட்டுள்ள இந்த ஊரடங்கு மேலும் விஸ்தரிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது. அடுத்தடுத்து வரும் நாட்களில் மேலும் பல புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட வாய்ப்பு உள்ளதாக மருத்துவ நிபுணர்கள் கூறியுள்ளனர்.

இரவு நேர ஊரடங்கையொட்டி பெங்களூரு, மைசூரு, மங்களூரு உள்பட மாநிலம் முழுவதும் போலீசார் பாதுகாப்பு பணியிலும் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். 

பெங்களூருவில் ஊரடங்கை மீறி யாராவது சாலைகளில் சுற்றித்திரிந்தால் சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீஸ் கமிஷனர் கமல்பந்த் எச்சரிக்கை விடுத்துள்ளார். 

இந்த நிலையில் இரவுநேர ஊரடங்கு குறித்து கர்நாடக சுகாதாரத்துறை மந்திரி சுதாகர் பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

கர்நாடகத்தில் இரவு நேர ஊரடங்கை அரசு அமல்படுத்தியுள்ளது. யாருக்கும் தொந்தரவு கொடுக்க வேண்டும் என்ற நோக்கத்தில் இந்த ஊரடங்கை செயல்படுத்தவில்லை. நிபுணர் குழுவினரின் பரிந்துரையின்படி, இந்த முடிவு எடுத்துள்ளோம். எந்த காரணத்திற்காக இந்த ஊரடங்கை அமல்படுத்தியுள்ளோம் என்பதை அனைத்து தரப்பு மக்களும் புரிந்துகொள்ள வேண்டும். அரசின் முடிவை எதிர்ப்பதும், விமர்சிப்பதும் சரியல்ல.

கொரோனா 2-வது அலையின்போது எதற்காக ஊரடங்கை அமல்படுத்தினோம் என்பது மக்களுக்கு தெரியும். மக்களின் உயிர்களை காக்க வேண்டும் என்ற நோக்கத்தில் அரசு முடிவு எடுத்துள்ளது. அதனால் அரசின் முடிவை எதிர்ப்பது சரியல்ல.  இரவு நேர ஊரடங்கு அமலுக்கு வருகிறது. 

இதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளோம். இதை அனைவரும் பின்பற்ற வேண்டும். பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்கினால் மட்டுமே கொரோனா பரவலை தடுக்க முடியும். இந்த 10 நாட்களில் கொரோனா பரவல் எப்படி இருக்கிறது என்பதை ஆராய்ந்த அதன் அடிப்படையில் அடுத்தக்கட்ட முடிவு எடுக்கப்படும். 

லேபிள்கள்:

கருத்துரையிடுக

[blogger][facebook][disqus]

Author Name

{picture#YOUR_PROFILE_PICTURE_URL} YOUR_PROFILE_DESCRIPTION {facebook#YOUR_SOCIAL_PROFILE_URL} {twitter#YOUR_SOCIAL_PROFILE_URL} {google#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.