'முதல் நீ முடிவும் நீ' திரைப்பட விமர்சனம்!

'முதல் நீ முடிவும் நீ' திரைப்பட விமர்சனம்!


நடிகராகவும் இசையமைப்பாளராகவும் தமிழ்ப்பட ரசிகர்களுக்கு அறிமுகமான தர்புகா சிவா முதல் நீ முடிவும் நீ படத்தின் மூலம் இப்போது இயக்குநராகவும் அறிமுகமாகியிருக்கிறார்.

11ஆம் வகுப்பு பள்ளி வாழ்க்கையை, அந்தப் பருவத்துக்கே உரித்தான குறும்பு, கிண்டல், கேலி என ஒன்று விடாமல் அனைத்தையும் படம் பிடித்துக் காட்டுகிறது முதல் நீ முடிவும் நீ திரைப்படம்.

புதிதாக தங்கள் பள்ளியில் சேர்ந்திருக்கும் மாணவிகள் சிலரின் பெயர் பட்டியலை அறிவிப்புப் பலகையில் பார்த்துவிட்டு சில மாணவர்கள், தங்கள் ஆசைகளையும் எதிர்பார்ப்புகளையும் வெளிப்படுத்தும் காட்சியுடன் துவங்குகிறது படம்.

அனு, கேத்ரின், சைனீஸ், வினோத், துரை, பிரான்சிஸ், ரேகா, ரிச்சர்ட் ஆகிய நண்பர்கள்தான் படத்தின் பிரதான பாத்திரங்கள். இவர்கள் அனைவருமே புதுமுகங்களாக இருப்பது படத்துக்கு மிகப்பெரிய பலமாக அமைந்து விட்டது. இடைவேளைவரை கதை பெரிதாக நகரவில்லை என்றாலும், காட்சியாக்கப்பட்டிருக்கும் ஓவ்வொரு சம்பவமும் மிகவும் சுவாரஸ்யமாக இருப்பதால் நன்கு ரசிக்க முடிகிறது.

குறிப்பாக சைனீஸ் தன் காதலை வெளிப்படுத்த ஒரு பெண் பெயரின் முதல் எழுத்தை ரத்தம் சொட்ட சொட்ட கையில் பதித்துக்கொண்டு அவளிடம் சென்று காட்ட, அந்தப் பெண் அவன் காதலை நிராகரிக்க, கையிலிருக்கும் எழுத்தையே சற்று மாற்றி வேறு ஒரு எழுத்தாக்கி அந்தப் பெயரில் துவங்கும் பெண்ணிடம் சென்று காதலை சொல்ல, அவளும் மறுக்க விடாக்கண்டனாக மீண்டும் அந்த எழுத்தை மாற்றி வேறு ஒரு பெண்ணிடம் சென்று காதல் யாசகம் பெற முயலும்போது நம்மை அறியாமல் வாய்விட்டு சிரித்து விடுவோம்.

வினோத் என்ற வேடத்தில் வரும் கிஷன் தாஸ்தான் படத்தின் நாயகன் என்றாலும் நடிப்பில் ஸ்கோர் பண்ண அதிக வாய்ப்பு சைனீஸ் வேடம் ஏற்ற ஹரீஷ் கே. என்ற புதுமுகத்துக்குத்தான். 

முதல் பாதியில் வரும் இவரது பாத்திரப்படைப்பு எவ்வளவு விளையாட்டுத்தனமாக இருக்கிறதோ, அதற்கு நேர் மாறாக இரண்டாம் பாதியில் முதிர்ச்சியான வேடத்தில் வருகிறார். இரண்டு வேடங்களிலும் நடித்தவர் வேறு இரண்டு நபர்களோ என்று நினைக்கும் அளவுக்கு வித்தியாச்ப்படுத்தி தன் நடிப்புத்திறனை அருமையாக வெளிப்படுத்தியிருக்கிறார். சைனீஸ் என்ற பட்டப் பெயர் இவருக்கு வந்த கதைகூட சுவாரஸ்யமானது தான்.

பதின் பருவ ஈர்ப்பு என்பதையும் மீறி சில பள்ளிப் பருவ காதல்களும் முதிர்ச்சியாக இருப்பதுண்டு. அப்படிப்பட்ட ஒரு காதல் வினோத் அனு பாத்திரங்கள் மூலம் அழகாக ஒரு கவிதைபோல் திரையில் வடிக்கப்பட்டதற்காகவே இயக்குநர் தர்புகா சிவாவுக்கு தனியாக ஒரு சபாஷ் சொல்லலாம். 

இசைக் கலைஞனாக விரும்பும் வினோத் ஆசைப்படும் கிடாரை வாங்கி அவனுக்கு பரிசளிப்பதும், நான் படித்து வேலைக்குப் போய் எல்லாவற்றையும் நான் பார்த்துக்கொள்கிறேன். நீ கவலைப்படாமல் இரு என்று அனு அவனிடம் சொல்வதும் மனதைத் தொடும் காட்சிகள்.

அனுவாக வரும் அம்ரிதா முகத்தில் எப்போதும் ஒரு மலர்ச்சி இருப்பதும், தனக்குப் பிரியமான வினோத்துடன் பேசும்போது அது இன்னும் பிரகாசமாக இருப்பதும் இருவரும் நிஜமான காதலர்களோ என்று எண்ணும் அளவுக்கு இருவருக்குமிடையே கெமிஸ்ட்ரி பிரமாதமாக படத்தில் ஓர்க் அவுட் ஆகியிருக்கிறது.

இரண்டாம் பாதியில் வேறு தடத்தில் பயணிக்கத் துவங்கும் கதையில் விறு விறுப்பு அதிகமாவதுடன் நாம் எதிர்பாராத சில விஷயங்களும் திரைக்கதையில் உண்டு. தர்புகா சிவா இசையில் உருவான முதல் நீ முடிவும் நீ பாடல் நெஞ்சை வருடுகிறது. வழக்கமான மசாலா படங்களைப் பார்த்து சலித்துப் போன ரசிகர்களுக்கு கண்டிப்பாக இது ஒரு மாறுபட்ட திரை விருந்து.

லேபிள்கள்:

கருத்துரையிடுக

[blogger][facebook][disqus]

Author Name

{picture#YOUR_PROFILE_PICTURE_URL} YOUR_PROFILE_DESCRIPTION {facebook#YOUR_SOCIAL_PROFILE_URL} {twitter#YOUR_SOCIAL_PROFILE_URL} {google#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.