‘குதிரைவால்’ திரைப்பட விமர்சனம்

‘குதிரைவால்’ திரைப்பட விமர்சனம்



பா. ரஞ்சித் யாழி ஃபிலிம்ஸ் விக்னேஷ் சுந்தரேசன் இணைந்து தயாரித்துள்ள ‘குதிரைவால்’ இன்று தியேட்டர்களில் வெளியாகியுள்ளது. இதன் திரைவிமர்சனத்தை பார்க்கலாம் வாங்க.... 

வங்கி காசாளராக பணிபுரியும் சரவணன் (கலையரசன்) ஒருநாள் தனது கனவில் வால் இல்லாத குதிரையையும், சூரியன் மற்றும் சந்திரன் என இரண்டையும் ஒரே நேரத்தில் வானத்தில் காண்கிறார். உறக்கத்தில் இருந்து எழும்போது அவருக்கு குதிரைவால்  முளைத்துள்ளது. இதன்பின் தனது பெயரை மறந்து தன்னைத் தானே ஃபிராய்ட் என அடையாளப்படுத்திக்கொண்டு வால் முளைத்த காரணத்தை தேடி அலைவதே 'குதிரைவால்' படத்தின் கதையும் திரைக்கதையும்.

சரவணன் கேரக்டரில் கலையரசன். குதிரைவாலோடு உறக்கத்திலிருந்து விழிக்கும் முதல் காட்சியில் தொடங்கி, நீலியிடம் சென்று தன்னை ஃபிராய்ட் என அறிமுகப்படுத்தும் இறுதிக் காட்சி வரை இத்தனை வருட தனது நடிப்பு பசிக்கு ஏற்ப உழைப்பை கொடுத்துள்ளார். குதிரைவாலோடு இருக்கும் நபராக, அதன் அசைவுகளுக்கு ஏற்றாற்போல் உடல்மொழியிலும் தனி கவனம் செலுத்தியுள்ளார்.

அவரை தவிர்த்து அஞ்சலி பாட்டீல், சேத்தன், ஆறுமுக வேல், லட்சுமி பாட்டி என மற்ற பாத்திரங்களில் வரும் அனைவரும் தேவையான உழைப்பை கொடுத்துள்ளனர். குழந்தை நட்சத்திரங்களாக வரும் பேபி மானசா, மாஸ்டர் பரிதி ஆகியோரின் நடிப்புகூட சிறப்பு.

கார்த்திக் முத்துக்குமாரின் ஒளிப்பதிவுதான் இந்தப் படத்தின் தூணாக உள்ளது. ஒவ்வொரு கதாபாத்திரமும் அவரின் கேமரா கண்களால் வண்ணத்தால் நிரம்பி வழிகின்றன. பெரும்பாலும், சிங்கிள் ஷாட் மற்றும் வைட் ஷாட்கள் என கைவண்ணம் காண்பித்துள்ளார். அதைவிட உளவியல் ரீதியான உணர்வுகளை காட்சிகள் ரீதியாக கடத்துவதில் முக்கியப் பங்குவகித்துள்ளார்.



பாடகர் பிரதீப் குமாரின் இசையமைப்பாளர் அவதாரம் இங்கே கவனிக்கப்பட வேண்டியது. தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக முக்கிய இடம்பிடிக்க நிறைய வாய்ப்புள்ளது. அவரின் பாடல்களும், மார்ட்டின் விஸ்ஸர்ன் பின்னணி இசையும் திரை அழகியலை கண்களுக்கு மட்டுமில்லாமல் காதுகளுக்கும் விருந்தளிக்கின்றன.

கதை, திரைக்கதை, வசனம் எழுதியுள்ளார் இராஜேஷ். அவரின் எழுத்துகளை காட்சிப்படுத்தியுள்ளனர் மனோஜ் லியோனல் ஜாக்சன் மற்றும் ஷியாம் சுந்தர் என்ற இரட்டை இயக்குநர்கள். குதிரைவாலுக்கான தேடலை திரைக்கதையாக்கி இருக்கிறார்கள். ஆனால், கூர்ந்து கவனித்தால், அதனுள் சொல்லப்பட்டு இருக்கும் கனவுத்தன்மை, கற்பனை உலகம், காட்சியமைப்புகளில் சொல்லப்பட்டிருக்கும் நுண் அரசியல் குறியீடுகள் என ஒவ்வொரு விஷயங்களும் நம்மை யோசிக்க வைக்கிறது.

இதேபோல் நாட்டுப்புறக் கதைகள், புனைவுகள் கிளைக்கதைகளாக படம் நெடுகிலும் வருகின்றன. அந்த ஒவ்வொரு புனைவுகளும் சாதிய கட்டமைப்புகள் உட்பட சமகால மற்றும் முன்கால விஷயங்கள் பலவற்றை கேள்விக்கு உள்ளாகியுள்ளது. இதன் திரைக்கதையும் மேக்கிங்கும் தமிழ் சினிமாவின் பிரதான காட்சி மற்றும் கதை சொல்லும் இலக்கணங்களைத் தகர்த்துள்ளன. 

படத்தின் முதல் பாதியில் நிறைய காட்சிகள் குழப்பினாலும், இரண்டாம் பாதியில் அவை ஒவ்வொன்றும் ஒவ்வொரு புள்ளியாக இணைப்பதால் பார்ப்பவர்கள் குதிரைவாலுக்கு ஏற்றாற்போல் செட் ஆக முடிகிறது. அதேநேரம், பாபுவாக வரும் சேத்தன் ஏன் இவ்வளவு விசித்திரமான முறையில் கொல்லப்பட்டார் என்பது போன்ற சில கேள்விகளுக்கு பதில் இல்லாமல் தொங்கி நிற்கிறது. 

படம் முடிந்த பிறகும் சில கேள்விகள் நமக்குள் அப்படியே இருக்கிறது. அதனை பார்வையாளர்களின் யூகத்திற்கே விட்டிருக்கிறார்கள் இயக்குநர்கள். படத்தின் மெதுவாக நகரும் தன்மையும் ஒருசிலருக்கு சலிப்பை ஏற்படுத்தலாம். இருப்பினும் வித்தியாசனமான படங்களை எதிர்பார்ப்பவர்கள் நிச்சயம் இந்த குதிரை வால் படத்தை முயற்சிக்கலாம். 

மொத்தத்தில் இந்த 'குதிரைவால்' மாறுபட்ட நீளம்.... 




லேபிள்கள்:

கருத்துரையிடுக

[blogger][facebook][disqus]

Author Name

{picture#YOUR_PROFILE_PICTURE_URL} YOUR_PROFILE_DESCRIPTION {facebook#YOUR_SOCIAL_PROFILE_URL} {twitter#YOUR_SOCIAL_PROFILE_URL} {google#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.