Suzhal Review: 'சுழல்' விமர்சனத்தை பார்ப்போமா?!
சமூகத்தில் ஓய்வில்லாமல் தொடர்ந்து சுழன்றுகொண்டேயிருக்கும் ஓர் அவலத்தை அழுத்தமான த்ரில்லர் கதையின் மூலம் சொல்லவரும் படைப்புதான் 'சுழல்'.
மலைப்பிரதேச கிராமமான சாம்பலூரில் சிமென்ட் தொழிற்சாலை ஒன்று இயங்கிக்கொண்டிருக்கிறது. தொழிற்சாலையின் யூனியன் லீடரான சண்முகம் (பார்த்திபன்) பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் ஒன்றை நடத்துகிறார். அதே சமயம், காவல்துறை அதிகாரிகளைக் கைக்குள் போட்டுக்கொண்டு போராட்டத்தை அலட்சியமாக டீல் செய்கிறார் திரிலோக் வட்டே (ஹரிஷ் உத்தமன்). அந்த இரவில் தொழிற்சாலை தீப்பற்றி எரிய, யூனியன் லீடர் சண்முகத்தின் இளைய மகள் காணாமல் போகிறார். மயானக் கொள்ளைக்கான 9 நாள்கள் கொண்டாட்டத்தில் ஊரே லயித்திருக்க, பல்வேறு சம்பவங்கள் அடுத்தடுத்து நிகழ்கின்றன. பாவம் ஒரு பக்கமும், பழி ஒரு பக்கமும் விழுகிறது.
ஏற்கெனவே முட்டிக்கொண்டு நிற்கும் நபர்களின் கொம்புகள் சீவி விடப்படுகின்றன. காணாமல் போனவர்கள் குறித்தத் தேடுதல் படலமும், இதற்கு முன்பு அதே ஊரில் அப்படி நடந்த ஒரு சம்பவமும் எல்லோரின் நினைவுக்கும் வருகிறது. யார் நம்மவர், யார் எதிரி என்னும் குழப்பங்கள் சமநிலையை சீர்குலைக்கின்றன. இறுதியில் யார் எல்லாவற்றுக்கும் காரணம் என்பதைச் சுற்றிச் சுழற்றி சொல்லியிருக்கிறது இந்தச் 'சுழல்'.
சாம்பலூர் இன்ஸ்பெக்டர் ரெஜினாவாக ஸ்ரேயா ரெட்டி. ஸ்ரேயா ரெட்டியை தமிழ்ச் சூழலில் பார்த்தே சில ஆண்டுகள் ஆகிவிட்டன. இன்னமும் அதே 'திமிரு'டன் மிரட்டியிருக்கிறார். கோபம், பாசம், ஏக்கம், அழுகை என எல்லா உணர்வுகளையும் கடத்த வேண்டிய கதாபாத்திரம், பிரமாதப்படுத்தியிருக்கிறார். ஒரு ஊரில் இருக்கும் அனைவரையும் நன்கு அறிந்திருந்தாலும், நாம் அறியா பக்கங்கள் எல்லோரிடமும் இருக்கத்தான் செய்யும். இந்த உண்மையை உணர்ந்து குற்றவாளியைத் தேடும் நபராக சப் இன்ஸ்பெக்டர் வேடத்தில் கதிர். ஒரு கட்டத்தில் எல்லா பொறுப்பும் தனக்கு வந்துவிட, தவறு செய்துவிட்ட குற்றவுணர்வுடன் அடுத்து அடுத்து நகரும் காட்சிகளில் கவனம் ஈர்க்கிறார்.
சண்முகத்தின் மூத்த மகள் நந்தினியாக ஐஷ்வர்யா ராஜேஷ், இளைய மகள் நிலாவாக கோபிகா ரமேஷ். ஒரு பெண்ணுக்குத் தன் சிறு வயதில் நடக்கும் பிரச்னைகள் அவளை எந்த அளவுக்கு மன அழுத்தத்தில் தள்ளும் என்பதை கண்முன் கொண்டுவருகிறார் ஐஷ்வர்யா ராஜேஷ். ஹரீஷ் உத்தமன், இளங்கோ குமாரவேல், லதா ராவ், பிரசன்னா பாலச்சந்திரன், சில காட்சிகள் மட்டும் ஈஸ்வரனாக வரும் பழநி முருகன் எனத் தொடரில் வரும் ஒவ்வொரு கதாபாத்திரத்துக்கும் முக்கியத்துவம் கொடுத்து எழுதப்பட்டிருக்கிறது.
தொடரின் பெரும்பலம் சாம் சி.எஸ்-ஸின் பின்னணி இசை. தொடர் பார்த்து முடிந்தும் அது சொல்லும் நீதியும், சாமின் பின்னணி இசையும் இன்னமும் ஒலித்துக்கொண்டே இருக்கின்றன. முகேஸின் ஒளிப்பதிவில் டிரோன் காட்சிகள், சுடுகாட்டில் இருந்து திருவிழாவைப் பார்க்கும் விதம் போன்றவை பிரமிக்க வைக்கின்றன. மயானக் கொள்ளை தொடர்பான காட்சிகள், ஃபேக்டரி, இடுகாடு எனத் தொடர் முழுக்கவே கலை இயக்கத்துக்கும், ஒப்பனைக்கும் பெரிய வேலை இருந்திருக்கக்கூடும்.
மொத்தத்தில் 'சுழல்' கதை களத்தை சுழல வைத்துள்ளது.....
கருத்துரையிடுக