Veetla Vishesham: 'வீட்ல விசேஷம்' திரை விமர்சனத்தை பார்ப்போமா?!
ஆர்.ஜே.பாலாஜி, சத்யராஜ், ஊர்வசி ஆகியோரது நடிப்பில் உருவாகியிருக்கும் ‘வீட்ல விசேஷம்’ படம் எப்படி இருக்கிறது பார்ப்போமா?
காலம் கடந்த வயதில் கர்ப்பமாகும் பெண்ணை அவரது பிள்ளைகளும் இச்சமூகமும் எப்படி பார்க்கிறது? அந்தத் தாயும், அவரது கணவரும் எதிர்கொள்ளும் சவால்கள் என்னென்ன? - இதுதான் 'வீட்ல விசேஷம்' படத்தின் ஒன்லைன்.
ரயில்வே டி.டி.ஆராக இருக்கும் சத்யராஜ் - ஊர்வசி தம்பதியினருக்கு திருமண வயதில் ஒரு மகனும், உயர்நிலைப் பள்ளியில் படிக்கும் ஒரு மகனும் உள்ளனர். இவர்களுடன் சத்யராஜின் அம்மா கேபிஏசி லலிதாவும் வாழ்கிறார். இந்நிலையில், திடீரென ஒருநாள் ஊர்வசி கர்ப்பமாக இருக்கும் செய்தி தெரியவர, தம்பதியினர் அதிர்ச்சியடைகின்றனர். இந்தச் செய்தியை தன் மகன்களிடமும், தன் அம்மாவிடமும் சத்யராஜ் எப்படி கொண்டு போய் சேர்க்கிறார், அதற்கு அவர்கள் ரியாக்ஷன்ஸ் என்ன? இதை பொதுச் சமூகம் எப்படி அணுகுகிறது என்பதையெல்லாம் நகைச்சுவை கலந்து எமோஷனலாக சொல்லும் படம் தான் 'வீட்ல விசேஷம்'.
பள்ளி ஆசிரியரான ஆர்.ஜே.பாலாஜிக்கு நகைச்சுவை காட்சிகள் நன்றாகவே பொருந்தி வருகின்றன. எமோஷனல் காட்சிகளிலும், ரொமான்ஸ் காட்சிகளிலும் நடிப்பில் வறட்சி தெரிகிறது. கூடுதல் எக்ஸ்பிரஷன்ஸ்களின் தேவையை காட்சிகள் உறுதி செய்கின்றன. அப்பாவி தந்தையாகவும், அம்மா - மனைவியுடன் சிக்கித்தவிக்கும் ஆணாகவும், குறிப்பாக க்ளைமாக்ஸ் காட்சிகளில் நம்மை சிரிக்க வைத்து ஸ்கோர் செய்கிறார் சத்யராஜ்.
மனைவியின் கர்ப்பத்தை சொல்லும் காட்சிகளில் ஈர்க்கிறார். ஊர்வசி நடிப்பில் மிரட்டுகிறார். தாய்மையை புனிதப்படுத்தும் காட்சிகளில், 'ஆம்பள தடியா' என மிரட்டிப் பேசுவது, சங்கடமான சூழல்களை எதிர்கொள்வது, கர்ப்பத்தால் உண்டான ஒருவித சோர்வை முகத்தில் சுமந்திரிப்பது என நடிப்பில் உச்சம் தொடுகிறார். க்ளைமாக்ஸ் காட்சி முழுவதுமே ஊர்வசிதான் ஆக்கிரமித்திருக்கிறார்.
படம் சொல்ல முயலும் கருத்து முக்கியமானது. ''ஒரு பொண்ணு 25 வயசுக்கு முன்னாடி குழந்தை பெற்றுக்கொள்ளவில்லை என்றாலும் தப்பா பேசுவார்கள்; 50 வயதுக்கு பின்னால் குழந்தை பெற்றுக்கொண்டாலும் தவறாக பேசுவார்கள்'', ''50 வயசுல மனைவிய கர்ப்பமாக்கின ஆண்களை ஆம்பள சிங்கம் என்றும், பெண்களை உனக்கு அறிவில்லையா, குடும்ப கௌரவம் என்னாவது'' - இப்படித்தான் இந்தப் பொதுசமூகம் பேசும் என்ற ஊர்வசியின் வசனங்கள் தெறிக்கவிடுகின்றன.
கார்த்திக் முத்துகுமாரன் ஒளிப்பதிவில் கதைக்கு தேவையானதை செய்து கொடுத்திருக்கிறார். க்ரீஷ் கோபாலாகிருஷ்ணனின் இசையில் க்ளைமாக்ஸ் பாடல் எமோஷனல் கனெக்ட்...
மொத்தத்தில் 'வீட்ல விசேஷம்' வந்து மொய் வைக்கலாம்....
கருத்துரையிடுக