'அயலி' ஒவ்வொரு பெண்களும் பார்க்க வேண்டிய கதை!
S.குஷ்மாவதி தயாரிப்பில் முத்துக்குமார் இயக்கத்தில் உருவாகியிருக்கும் ‘அயலி’ தொடர், ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது. இதில் அறிமுக நடிகை அபி நக்சத்ரா முக்கிய பாத்திரத்தில் நடிக்க அனுமோல், அருவி மதன், லிங்கா மற்றும் சிங்கம்புலி உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
1990 -ல் புதுக்கோட்டை மாவட்டத்திற்கு அருகில் உள்ள ஒரு கிராமத்தில் அயலி என்ற தெய்வம் இருக்கிறது. அந்த கிராமத்தில் ஒருசில வழிபாடுகள் உள்ளன. அது என்னவென்றால் பெண்கள் வயதுக்கு வந்த உடனேயே திருமணம் செய்துவைக்க வேண்டும். தமிழ்செல்வி என்ற பெண்ணுக்கு படித்து டாக்டர் ஆக வேண்டும் என்ற ஆசை இருக்கிறது, ஆனால் ஊர் கட்டுப்பாட்டை மீற முடியாது.
அதனால் தமிழ் செல்வி தான் வயதுக்கு வந்த விஷயத்தை மறைத்துவிட்டு படிக்க ஆரம்பிக்கிறார், ஆனால் இதற்கிடையில் இவருக்கு பல பிரச்சனைகள் வருகிறது. அதனை தனது அம்மாவின் உதவியுடன் எப்படி சமாளிக்கிறார் என்பதும், இவை அனைத்தையும் தாண்டி தமிழ் செல்வி டாக்டர் ஆனாரா ? இல்லையா ? என்பதுதான் படத்தின் மீதி கதை…
பொதுவாக வெப்சீரிஸ் என்றாலே ஒரு படத்தின் கதையை இழுத்துச் சொல்வது என்ற தவறான இலக்கணத்தை விட்டொழித்து, ஒரு தொடருக்குத் தேவையான பாணியில் திரைக்கதை அமைத்த வீணை மைந்தன், சச்சின் மற்றும் முத்து குமாருக்குப் பாராட்டுகள்.
அதை எங்கும் தொய்வில்லாமல் நகர்த்த, ஆங்காங்கே கதைக்குள்ளாகவே காமெடியைக் கலந்தது சிறப்பு. இரண்டு கிழவிகள் இடைவிடாது சக்களத்தி சண்டை போட்டாலும் அவர்களில் ஒருவருக்கு உடல்நிலை சரியில்லை என்றவுடன் நடக்கும் அந்த நெகிழ்வான உபசரிப்பு, மாதவிடாய் ரத்தத்தை மறைப்பதற்காக தமிழ்ச்செல்வி சிவப்பு மையுடன் ஊர் முழுக்க நடந்துபோவது, ஒரு கட்டத்தில் யதார்த்தம் புரிந்து மகளுக்கு அப்பாவே ஆதரவளிப்பது எனப் பல ரசிக்கத்தகுந்த காட்சிகள் மேலும் சிறப்பு.ராம்ஜியின் ஒளிப்பதிவு அந்தக் கிராமத்தின் வெயிலையையும், அதன் மனிதர்களின் இயல்பையும் யதார்த்தம் குறையாமல் காட்சிப்படுத்தியிருக்கிறது. ஒவ்வொரு பெண்களும் பார்க்க வேண்டிய கதை இது.
மொத்தத்தில் இந்த ‘அயலி’ தொடர் சுவாரஸ்யம்....
கருத்துரையிடுக