‘இராவண கோட்டம்’ திரை விமர்சனம்
இயக்குநர் விக்ரம் சுகுமாறன் 8 ஆண்டுகளுக்குப் பிறகு இயக்கியுள்ள திரைப்படம் தான் ‘இராவண கோட்டம்’ இந்த படம் இன்று வெளியாகியுள்ளது. தண்ணீர் பஞ்சத்தின் மூல வேறான சீமைக் கருவேல மரக்காட்டின் ஆபத்து குறித்து படம் பேசுகிறது.
இந்த படத்தில் சாந்தனு பாக்யராஜ், பிரபு, இளவரசு, கயல் ஆனந்தி, ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
சரி வாங்க விமர்சனத்தை பார்ப்போம்:
ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூரின் ஏனாதி கிராமத்தில் உள்ள மேலத்தெரு மற்றும் கீழத்தெருவைச் சேர்ந்த மக்கள் ஒற்றுமையாக வாழ்ந்து வருகின்றனர். மேலத்தெரு மக்களுக்காக போஸும் (பிரபு) கீழத்தெருவினருக்காக சித்ரவேலும் (இளவரசு) ஊர்த் தலைவர்களாக இருந்து வழிநடத்தி கொண்டு செல்ல, சாதியைக் கடந்த நட்பு மேலோங்குகிறது. அரசியல் ஊருக்குள் வந்தால் எங்கே பிரிவினை வந்துவிடுமோ என பயந்து, அரசியல் கட்சியினரைக் கூட ஊர்மக்கள் அனுமதிப்பதில்லை. இப்படியான சூழலில் அரசியல் சுயலாபத்துக்காக ஏனாதி கிராமத்தில் உள்ள இருவேறு சமூகத்தினரிடையே பிரிவினை ஏற்படுத்தும் முயற்சிகள் தீவிரமெடுக்கின்றன. இந்நிலையில் ஹீரோ காதலிக்கும் பெண்ணை ஹீரோவின் நண்பனும் காதலிக்கிறார். பிறகு அம்மாவட்டத்தைச் சேர்ந்த அமைச்சரின் உத்தரவின் பேரில் களமிறங்கும் உள்ளூர் எம்எல்ஏ அதில் வெற்றிகண்டாரா? இல்லையா? ஹீரோவின் காதல் என்ன ஆனது? என்பதே மீதிக்கதை....
1957ஆம் ஆண்டு நிகழ்ந்த முதுகளத்தூர் கலவரத்தின் பின்னணியில், சாதீய பிரச்சினை, முக்கோணக் காதல் கதை மற்றும் சில கமர்ஷியல் அம்சங்களையும் கூட்டி கதை சொல்லியிருக்கிறார்கள். ஒற்றைக் கையிழந்த வில்லனாக வரும் நடிகர் கதைக்குத் தேவையானதை செய்து மிரட்டி கவனம் ஈர்த்துள்ளார்.
இயக்குனர் விக்ரம் சுகுமாரன் உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த படத்தை அழகான கோர்வையாக கொண்டு சென்றுள்ளார்.
சாதீய கலவரத்தால் உயிரிழந்தவர்களுக்கு சமர்ப்பணம் எனும் டைட்டில் கார்டுடன் தொடங்கினாலும், எங்க அய்யா பாடல், பிரபுவை சித்தரிக்கும் விதம் உள்ளிட்ட சில காட்சிகள் குறிப்பிட்ட சமூகத்தினருக்கான துதியாகவே மாறும் சாத்தியக்கூறுகளைக் கொண்டுள்ளன. முந்தைய படத்துக்கு எழுந்த கடும் விமர்சனங்களால் பிரபுவின் அறிமுகக்காட்சி பின்னணியில் அம்பேத்கர், பெரியார் படங்களும் இந்தப் படத்தில் இடம் பெற்றுள்ளன. ஆனால் பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் படம் ஏன் வைக்கவில்லை? என்ற கேள்வியும் எழுகிறது. காதல் காட்சி புதிதல்ல... சொல்ல வரும் தகவல் புதிது... கிளைமேக்ஸ் காட்சியில் ஹீரோ உயிர் எழுவது ரொம்ப மிகையாக உள்ளது.
மொத்தத்தில் இந்த "இராவண கோட்டம்" அரசியல் ஆட்டம்....
கருத்துரையிடுக