'முருங்கைக்காய் சிப்ஸ்' திரை விமர்சனம்
ஷாந்தனு, அதுல்யா, பாக்யராஜ், யோகிபாபு, ஊர்வசி, முனிஷ்காந்த், மனோபாலா, மயில்சாமி, மதுமிதா என பெரிய நடிகர் பட்டாளத்தோடு களமிறங்கி இருக்கிறது 'முருங்கைக்காய் சிப்ஸ்'.
ஷாந்தனுவுக்கும், அதுல்யா ரவிக்கும் திருமணம் நடைபெறுகிறது. இவர்களின் முதலிரவுக்கு முன் சாந்தனுவின் தாத்தா பாக்யராஜ் உங்கள் இருவருக்கும் முதலிரவு நடந்தால் பரம்பரை சொத்து முழுவதையும் ஆசிரமத்துக்கு எழுதி வைத்து விடுவேன். மேலும் இருவரும் தூங்காமல் இருக்க வேண்டும் என்று கூறுகிறார்.
இன்னொரு பக்கம் அதுல்யாவிடம் அவரது அத்தை ஊர்வசி உங்கள் இருவருக்கும் முதலிரவு நடைபெறவில்லை என்றால் குழந்தை பிறக்காது என்ற தோஷம் இருப்பதாக கூறுகிறார். இறுதியில் சாந்தனுவுக்கும், அதுல்யாவுக்கும் இடையே முதலிரவு நடந்ததா? இல்லையா? என்பதே படத்தின் மீதிக்கதை.
நாயகன் சாந்தனு துறுதுறு இளைஞனாக நடித்து அசத்தி இருக்கிறார். அதுபோல் அதுல்யா ரவி துள்ளலான நடிப்பை கொடுத்து ரசிகர்களை கவர்ந்து இருக்கிறார். இவர்கள் இருவரின் காம்பினேஷன் காட்சிகள் ரசிக்க வைக்கிறது. பாக்யராஜ், ஊர்வசி, மனோபாலா, யோகி பாபு, முனிஸ்காந்த் ஆகியோர் கொடுத்த வேலையை செய்திருக்கிறார்கள்.
முதலிரவை மையக்கருவாக வைத்து படத்தை இயக்கி இருக்கிறார் இயக்குனர் ஸ்ரீஜர். படம் முழுக்க முழுக்க ஒரே இரவில் நடக்கிறது. அதுவும், ஒரே அறையில் தான் கதை நகர்கிறது. இரட்டை அர்த்த வசனங்களை அள்ளித் தெளித்திருக்கிறார் இயக்குனர்.
நகைச்சுவைக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்திருக்கிறார்கள். ஆனால், நகைச்சுவை அதிகம் எடுபடவில்லை. ஒரு சில இடங்களில் மட்டுமே சிரிக்க முடிந்தது. முதலிரவு குறித்து அட்வைஸ், பழைய படங்களில் வந்த டயலாக் ஆகியவை படத்திற்கு பலவீனமாக அமைந்திருக்கிறது.
தரண்குமார் இசையில் பாடல்கள் அனைத்தும் ரசிக்கும் விதத்தில் இருக்கிறது. குறிப்பாக ரமேஷ் சக்ரவர்த்தியின் ஒளிப்பதிவோடு பாடல்களை பார்க்கும் போது மிகவும் கலர்ப்புல்லாக இருக்கிறது. படத்திற்கு தேவையான ஒளிப்பதிவை கொடுத்திருக்கிறார் ரமேஷ் சக்ரவர்த்தி.
கருத்துரையிடுக