'மட்டி' படத்திற்கு பிரபலங்கள் வாழ்த்து
மட்டி படத்தின் முன்னோட்ட வெளியீடு சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில் மூத்த தயாரிப்பாளரும், நடிகருமான கே ராஜன், இயக்குநர் பேரரசு, நடிகையும், பிக்பாஸ் பிரபலமுமான வனிதா விஜயகுமார், இசையமைப்பாளர் ரவி பஸ்ரூர், தமிழ்ப் பதிப்பிற்கு வசனம் எழுதியுள்ள ஆர். பி. பாலா, படத்தை இயக்கியிருக்கும் இயக்குநர் டாக்டர் பிரகபல் மற்றும் படக்குழுவினர் கலந்து கொண்டனர்.
பிரேமா கிருஷ்ணதாஸின் பிகே 7 கிரியேஷன்ஸ் பட நிறுவனம் சார்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் ‘மட்டி’ . இப்படத்தை டாக்டர் பிரகபல் இயக்கியுள்ளார்.
இதில் அறிமுக நடிகர் யுவன் கிருஷ்ணா, ரிதன் கிருஷ்ணா, அனுஷா சுரேஷ், அமித் சிவதாஸ் நாயர் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். கே. ஜி. ரதீஷ் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த படத்திற்கு, ‘கே. ஜி. எஃப்’ புகழ் இசையமைப்பாளர் ரவி பஸ்ரூர் இசையமைத்திருக்கிறார். ‘ராட்சசன்’ புகழ் ஷான் லோகேஷ் படத்தொகுப்பு செய்துள்ளார். தமிழ் , மலையாளம்,தெலுங்கு, ஹிந்தி, கன்னடம், ஆங்கிலம் என ஆறு மொழிகளில் உருவாகியுள்ள இந்தப் படத்திற்குத் தமிழில் ஆர். பி. பாலா வசனம் எழுதியிருக்கிறார். 'மட்டி' டிசம்பர் 10ஆம் தேதியன்று வெளியாகிறது.
வசனகர்த்தா ஆர். பி. பாலா பேசுகையில்:
''கரணம் தப்பினால் மரணம் என்ற பழமொழிக்கு ஏற்ப இப்படத்தின் இயக்குநர் டாக்டர் பிரகபல் படப்பிடிப்பு இடங்களில் உயிரைப் பணயம் வைத்து பல காட்சிகளைப் படமாக்கியிருக்கிறார். இந்தப்படத்தில் பல தொழில்நுட்பக் கலைஞர்கள் பணியாற்றி இருந்தாலும், அனைவரும் இயக்குநர் பிரகபலின் வழிகாட்டலுடன் பணியாற்றினர். இயக்குநராக இவர் அறிமுகமாகும் முதல் படத்திலேயே காட்சி அமைப்பு, அதன் படமாக்குவதற்கான ஒருங்கிணைப்பு எனத் தெளிவாக திட்டமிட்டுப் படப்பிடிப்பை நடத்தி இருக்கிறார். படத்திற்கு ஆர்வமுடன் உழைக்கும் தொழில்நுட்பக் கலைஞர்களை தேர்ந்தெடுத்துப் பணியாற்றுவதற்கு வாய்ப்பளித்திருக்கிறார். ‘கே ஜி எஃப்’ என்ற பிரமாண்ட வெற்றிப் படத்திற்கு இசையமைத்த இசையமைப்பாளர் ரவி பஸ்ரூர், ‘மட்டி’ படத்திற்கும் தன்னுடைய உழைப்பை நேர்த்தியாக வழங்கியிருக்கிறார். இந்தப் படத்திற்கான பின்னணி இசை அமெரிக்காவில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உருவாக்கப்பட்டு சென்னையில் இறுதி வடிவம் கொடுக்கப்பட்டிருக்கிறது. தரமான படைப்பை ரசிகர்களுக்கு வழங்க வேண்டும் என்பதற்காக இயக்குநர் நான்கு ஆண்டுகாலம் கடினமாக உழைத்து, ‘மட்டி’யை உருவாக்கியிருக்கிறார். இந்த படத்தின் வெற்றி, படத்தை இயக்கிய இயக்குநர் டாக்டர் பிரகபல் அவர்களை மட்டுமே சேரும். '' என்றார்.
இசையமைப்பாளர் ரவி பஸ்ரூர் பேசுகையில்:
''முதன்முதலாக தமிழ் படத்திற்கு இசை அமைத்திருக்கிறேன். தொழில்நுட்பக் கலைஞர்கள், ரசிகர்கள் விரும்பும் தரமான படப்பை வழங்க வேண்டும் என்றுதான் பணியாற்றுவார்கள். டீசர் மற்றும் ட்ரெய்லருக்கு மில்லியன் கணக்கான ரசிகர்கள் வழங்கிய பாராட்டு எங்களை உற்சாகப்படுத்தி இருக்கிறது. கர்நாடகம், தமிழ்நாடு, கேரளம் என மூன்று மாநிலத்தில் உள்ள தொழில்நுட்ப கலைஞர்கள் இப்படத்திற்காக ஒன்றிணைந்து பணியாற்றி இருக்கிறார்கள். இந்தப்படத்தின் பின்னணி இசைக்காக மட்டும் ஒன்றரை ஆண்டுகாலம் உழைத்திருக்கிறோம். பத்துக்கும் மேற்பட்ட வடிவங்களில் பணியாற்றிய பிறகு தான் இசையின் இறுதி வடிவத்தை உறுதிப்படுத்தி இருக்கிறோம். '' என்றார்.
இயக்குநர் பிரகபல் பேசுகையில்:
''மட்டி என்னுடைய முதல் படம். முதல் படத்தில் வித்தியாசமான கதையும், களமும் இடம் பெற வேண்டும் என விரும்பினேன். இதுவரை மட் ரேஸ் எனப்படும் மண் சாலை கார் பந்தயம் தொடர்பாகத் திரைப்படம் வெளியாகவில்லை என்பதை அறிந்தேன். அதன் பிறகு தான் மட்டியின் திரைக்கதையை எழுதத் தொடங்கினேன். படப்பிடிப்புக்கான இடங்களைத் தேடுவதற்கு ஓராண்டு காலம் செலவழித்தேன். நான் புதுமுக இயக்குநர் என்பதாலும், படத்தில் தொழில்நுட்ப கலைஞர்களின் ஒத்துழைப்பு அவசியம் என்பதாலும் என்னுடன் இணக்கமான தொழில்நுட்பக் கலைஞர்களைத் தேர்ந்தெடுப்பதற்குச் சிறிது காலம் ஆனது. அதன் பிறகு படத்தில் நடிக்கும் நடிகர்களைத் தேடினேன். தேர்வு செய்து அவர்களுக்கு இரண்டு ஆண்டு காலம் பயிற்சி கொடுத்த பிறகுதான் படப்பிடிப்புத் தளத்திற்கு அழைத்துச் சென்றேன்.
‘மட்டி’ என்பது துணிச்சலும் சாகசமும் கலந்த கார் பந்தயம் என்பதால் இதற்கான மன வலிமை கொண்ட நடிகர்களைத் தேர்ந்தெடுப்பதில் கவனம் செலுத்தினேன். தேசிய அளவில் மண் சாலை கார் பந்தயம் ஆண்டுதோறும் நடைபெறும். அங்கு படப்பிடிப்பு குழுவினருடன் சென்று காட்சிகளைப் படமாக்குவது குறித்து விவாதித்தோம். அதனால் ‘மட்டி’ தனிப்பட்ட கலைஞர் ஒருவரால் உருவானதல்ல. ஒட்டு மொத்த படக்குழுவினரின் திரைப்படம். மட் ரேஸ் எனப்படும் கார் பந்தய காட்சிகளை மட்டும் விதவிதமான கோணங்களில் 32 மணிநேரம் படமாக்கி இருந்தோம். அனைத்தையும் பொறுமையாகப் பார்வையிட்டு, படத்திற்குத் தேவையான காட்சிகளை மட்டும் படத்தொகுப்பாளர் ஷான் லோகேஷ் எடுத்துக்கொண்டு படத்தொகுப்பு செய்துள்ளார்.
படத்தின் பின்னணி இசை சிறப்பாக வரவேண்டும் என்பதற்காக பல்வேறு பணி நெருக்கடிகள் இருந்தாலும், இசையமைப்பாளர் ரவியை, படப்பிடிப்புத் தளத்திற்கு வரவழைத்து, படப்பிடிப்பைப் பார்வையிடச் செய்தோம். அவரும் விருப்பத்துடன் வந்து காட்சிகள் படமாக்குவதை வியந்து பார்த்தார். ஒளிப்பதிவாளர், நடிகர்கள் இசை அமைப்பாளர், படத்தொகுப்பாளர், வசனகர்த்தா என ஒவ்வொருவரும் இப்படத்திற்காகத் தங்களது அர்ப்பணிப்புடன் கூடிய உழைப்பை வழங்கினார்கள். ரசிகர்களைத் திரையரங்கில் வரவழைத்து வியப்பான அனுபவத்தை வழங்கும் படமாக மட்டி உருவாகி இருக்கிறது. '' என்றார்.
இயக்குநர் பேரரசு பேசுகையில்:
''மட்டி படத்தின் டீசர், டிரைலர், படமாக்கல் காட்சிகளை பார்த்தவுடன் மனது நிறைந்தது. தயாரிப்பாளர் கே ராஜன், சின்ன பட்ஜெட் படங்களுக்கு அரணாக இருக்கிறார். என்னைப் பொறுத்தவரை அவர் சினிமா சீர்திருத்தவாதி. சில நேரங்களில் சினிமாவின் தீவிரவாதி. இங்கு நேர்மையாகப் பேசினால், அவர் பிரச்சினைக்குரியவர் என்ற முத்திரையை குத்தி விடுவார்கள். இவ்விழாவிற்கு வருகை தந்திருக்கும் வனிதா விஜயகுமாருக்கும் இது பொருந்தும்.
மட்டி படத்தின் டீசரை பார்த்த மிரட்சியிலிருந்து நான் இன்னும் மீளவில்லை. இது போன்ற பிரம்மாண்டமான ,மிரட்டலான ஒரு படத்தின் டீசரைப் பார்த்து நீண்ட நாளாகிவிட்டன. நான் சிறிய வயதில் 70 எம்எம் திரையில் ‘ஷோலே’ படத்தின் ட்ரைலரைப் பார்த்துப் பிரமித்தேன். அதேபோல் தமிழில் ‘ஊமை விழிகள்’ படத்தின் டிரைலரைப் பார்த்து வியந்திருக்கிறேன். அதன்பிறகு‘ மட்டி’ படத்தின் ட்ரெய்லரைப் பார்த்து மிரண்டேன்.
மட்டி என்றால் மண் என்றார்கள். இது மண் அல்ல வைரம், வைடூரியம், பிளாட்டினம்.. என எப்படி வேண்டுமானாலும் சொல்லலாம். இது போன்ற படங்கள்தான் அதிகம் வர வேண்டும். ஏனெனில் இது போன்ற பிரம்மாண்டமான படங்களை யாரும் ஓ டி டி தளத்தில் பார்க்க விரும்ப மாட்டார்கள். இதனைத் திரையரங்கில் பார்த்தால் தான் மன திருப்தி கிடைக்கும். இதுபோன்ற படங்கள் அதிகமாக வெளியாகும்போது ஓ டி டி தளத்தை மக்கள் விரும்ப மாட்டார்கள்.
மட்டி படத்தில் தமிழ் மண், கேரள மண், கர்நாடக மண், ஆந்திர மண், என எல்லாம் மண்ணும் கலந்து இருக்கிறது. ஆனால் இந்த படம் எந்த மண்ணையும் நம்பி எடுக்கவில்லை. சினிமா மண் என்ற ஒன்றை மட்டுமே நம்பி எடுத்திருக்கிறார்கள். சினிமா மண் இந்தப் படத்திற்குப் பிரமாண்டமான வரவேற்பைத் தரும்.
மட்டி ஐந்து அல்லது ஆறு மாதங்களில் எடுக்கப்பட்ட படம் அல்ல. ஐந்து வருடங்களுக்கு மேல் திட்டமிட்டு எடுக்கப்பட்ட திரைப்படம். கிட்டத்தட்ட ஒரு மாநிலத்தின் ஆட்சிக் காலம் போல் எடுக்கப்பட்டிருக்கிறது. அதாவது ஒரு ஆட்சிக்காலத்தை ஒரு படமாக தயாரித்திருக்கிறார்கள். கண்டிப்பாக இந்த ஆட்சி ஆளுங்கட்சியாக மக்களிடத்தில் வெற்றி பெறும்.
இயக்குநர் பிரகபலின் உருவத்திற்கும், இந்த படத்திற்கும் தொடர்பே இல்லை. பார்ப்பதற்கு பால்வடியும் முகம் போல் இருக்கிறது. ஆனால் திரையில் பிரமிப்பான மாயாஜாலத்தை நிகழ்த்தியிருக்கிறார். இது ஒரு ட்ரெண்ட் செட் படம். இதனை ஒரு சாதாரண படமாகக் கடந்து சென்றுவிட முடியாது. இது போன்ற படங்கள் மிகப்பெரிய பிரம்மாண்டமான வெற்றியைப் பெறவேண்டும். எல்லா மொழிகளிலும் பெரிய வெற்றியைப் பெறும். '' என்றார்.
நடிகை வனிதா விஜயகுமார் பேசுகையில்:
''மட்டி படத்தின் டீசர் மற்றும் டிரைலரைப் பார்த்தேன். பிரமித்துப் போனேன். படத்தின் தொழில்நுட்பக் கலைஞர்களின் பங்களிப்பு அசாதாரணமாக இருந்தது. ஆனால் அவர்களுக்கான அங்கீகாரம் குறைவு. திறமையான தொழில்நுட்பக் கலைஞர்களுக்கு உரிய அங்கீகாரம் கிடைப்பதில்லை. ‘மட்டி’ படம் வெளியான பிறகு இப்படத்தில் பணியாற்றிய அனைத்து தொழில்நுட்பக் கலைஞர்களுக்கும், அவர்களின் கடுமையான உழைப்பிற்கான அங்கீகாரம் கிடைக்கும். லகான், தங்கல் போன்ற இந்திப் படங்களுக்கு இணையாக தென்னிந்திய கலைஞர்களால் இந்த ‘மட்டி’ படம் உருவாக்கப்பட்டிருக்கிறது. படத்தில் இடம்பெறும் மண் சாலை கார் பந்தயம் தொடர்பான காட்சிகளை இயக்குநர் வடிவமைத்திருந்தார் எனக் கேள்விப்பட்டவுடன் ஆச்சரியப்பட்டேன். அவர் எங்கு? எப்போது? இதனை கற்றார் என எனக்குத் தெரியாது. இருந்தாலும் காட்சிகளில் ஒரு சர்வதேச தரம் இருந்தது. ஓ டி டி தளங்களைக் கடந்து மக்கள் மீண்டும் திரையரங்கத்திற்கு வருகை தரவேண்டும். இதற்கு மட்டி திரைப்படம் சிறந்த சான்றாக இருக்கும்.'' என்றார்.
தயாரிப்பாளர் கே. ராஜன் பேசுகையில்:
''கேரளாவிலிருந்து வருகை தந்திருக்கும் இயக்குநர் , தயாரிப்பாளர் பிரகபலை தமிழ்த் திரையுலகம் சார்பில் வரவேற்கிறேன். மட்டி படத்தின் டீஸர் என்னை மிரட்டி விட்டது. என்னை அலற வைத்து விட்டது. மிரள வைத்து விட்டது. மட்டி படத்தின் டீசர், ட்ரெய்லரைப் பார்த்த அந்த பத்து நிமிடங்கள் நான் நானாக இல்லை. இது பிரம்மாண்டமான பட்ஜெட் படம். இது தமிழ்ப் படமோ.... மலையாளப் படமோ ...அல்ல. ஆங்கிலப் படம். இந்த படத்திற்குப் பிறகு இயக்குநர் பிரகபலின் புகழ் உலக அளவில் பரவும்.
இசையமைப்பாளர் ரவி பஸ்ரூரை ‘கே ஜி எஃப்’ படத்தில் அவரது உழைப்பைப் பார்த்து வியந்தோம். இந்தப்படத்தில் அவர் அதை விட ஐந்து மடங்கு கூடுதலாக உழைத்து இருப்பதைப் பார்க்கிறோம். இசைக்காகச் சர்வதேச அளவில் இந்தப் படம் பேசப்படும். பல சர்வதேச விருதுகள் இந்தப் படத்திற்குக் கிடைக்கும்.
நடிகர்களுக்கு இரண்டாண்டு பயிற்சி, லொக்கேஷனுக்காக ஓராண்டு தேடல், படப்பிடிப்பின்போது 13 கேமராக்கள் பயன்படுத்தப்பட்டது, இதெல்லாம் ஆங்கிலப் படங்களில் தான் நடைபெறும். இதுவரை தமிழ்ப் படங்களில் இப்படிப்பட்ட திட்டமிடல், உருவாக்கம் நடைபெற்றதாக வரலாறு இல்லை. 'மட்டி' படத்திற்குப் பிறகு இயக்குநர் பிரகபல் கதாநாயகனாக நடிக்க வேண்டும் என வேண்டுகோள் விடுக்கிறேன்.
சிறிய பட்ஜெட் படங்களைத் தயாரிக்கும் தயாரிப்பாளர்களை நடிகர்களும், தொழில்நுட்பக் கலைஞர்களும் சிக்கனமாகச் செலவு செய்ய ஒத்துழைத்துக் காப்பாற்ற வேண்டும். இதனால் தயாரிப்பாளர்கள் காப்பாற்றப்படுவார்கள். அவர்கள் தொடர்ந்து திரைத்துறையை ஆரோக்கியமாக வைத்துத் தொழிலாளிகளை வாழ வைப்பார்கள். தொழில்நுட்பக் கலைஞர்களுக்கும் தொடர்ந்து வாய்ப்பு அளிப்பார்கள்.
தயாரிப்பாளர்களுக்கு ஒரு வேண்டுகோளை முன்வைக்கிறேன். நீங்கள் படம் தயாரித்து ஓ டி டி தளத்திற்கு வழங்குகிறீர்கள். இதனால் தொழிலாளர்களும், தொழில் நுட்பக் கலைஞர்களும் பயன்பெறுகிறார்கள். இது மகிழ்ச்சியை அளிக்கிறது. உண்மை தான். ஆனால் திரையரங்க உரிமையாளர்கள், திரையரங்கத்தை நம்பியிருக்கும் தொழிலாளர்கள், விநியோகஸ்தர்கள், இடைத்தரகர்கள்.. ஆகியோரின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி விடுகிறது. அதனால் படங்களை ஓ டி டி தளங்களுக்குத் தருவதற்கு முன் திரையரங்கத்தில் வெளியிட முன்னுரிமை தர வேண்டும். இரண்டு அல்லது நான்கு வார காலம் அவகாசம் வழங்கினால்.., திரையரங்கும், அதனை நம்பி இருக்கும் தொழிலாளர் குடும்பங்களும் வாழும். டாக்டர், மாநாடு ஆகிய படங்கள் திரை அரங்குகளில் வெளியாகி வசூல் செய்தது. அத்துடன் ஓ டி டி தளங்களிலும் நல்ல விலைக்கு விற்பனையாகி இருக்கிறது.எனவே இதனைக் கருத்தில் கொள்ள வேண்டும்."என்று கூறி படக்குழுவினர் வாழ்த்தினார்.
நிகழ்ச்சியின் நிறைவாக பத்திரிகையாளர்கள் முன்னிலையில் 'மட்டி' படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டது.
கருத்துரையிடுக