பீஸ்ட் படம் எப்படி இருக்கு? திரை விமர்சனம்
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள தீவிரவாதிகள் தலைவனை கைது செய்யும் ஆபரேஷனில், பரிதாபமாக ஒரு குழந்தை இறக்க, அதனால் வேலையை விட்டு மனநோய் பாதிக்கப்பட்டவராக சிகிச்சை பெற்று வரும் சிப்பாய் ஒருவர், விழா ஒன்றில் சந்திக்கும் இளம்பெண்ணிடம் காதலில் சிக்கி, அவர் அறிவுரையோடு தனியார் செக்யூரிட்டி நிறுவனத்தில் பணிக்கு சேர்கிறார். அந்த நிறுவனத்தின் காவல் பணியில் ஏற்பட்ட குறைபாட்டிற்காக மால் ஒன்றில் மன்னிப்பு கேட்க போகும் நேரத்தில் மால் ஹைஜாக் செய்யப்படுகிறது. தீவிரவாதிகளிடம் பிணையமாக சிக்கியுள்ள மக்களை மீட்க அரசு ஒருபுறம் காய் நகர்த்திக் கொண்டிருக்க, எதிர்பாராதவிதமாக அங்கு பிணையமாக சிக்கிய முன்னாள் சிப்பாய், தீவிரவாதியை துவம்சம் செய்து, பொதுமக்களை மீட்டாரா? இல்லையா? என்பது தான், பீஸ்ட்.
உண்மையில் இது விஜய் படம். விஜய் ரசிகர்களுக்கான படம். ‛ப்ரேம் ஃபை ப்ரேம்’ விஜய்க்காக மட்டுமே காட்சிகள் உருவாக்கப்பட்டுள்ளன. டைட்டில் கார்டில் தொடங்கி, எண்ட் கார்டு வரை விஜய் ஒருவரே படத்தை தாங்குகிறார். சீரியஸ் கதை... ஆனால், அதை எவ்வளவு ஜாலியாக நகர்த்தலாம் என்பதை நெல்சன் அறிந்திருக்கிறார். என்னதான் சீரியஸ் ஜானர் என்றாலும், தனது ஜானரை அவர் கைவிடாமல், அதையே கைபிடித்து நகர்ந்திருக்கிறார்; அது அவருக்கு கை கொடுத்திருக்கிறது என்றும் கூறலாம்.
ஓவர் ஆக்ட் உள்துறை அமைச்சரும், சீரியஸ் இல்லாத ஹைஜாக் டீம் தலைவரும் படத்திற்கு பெரிய மைனஸ். கதாபாத்திரத்தை எந்த அளவிற்கு பலவீனமாக்க வேண்டுமோ, அந்த அளவிற்கு அவர்கள் தங்கள் பணியை செய்திருக்கிறார்கள். அல்லது, இயக்குனரால் செய்ய வைக்கப்பட்டிருக்கிறார்கள். அனிருத்.... படத்தை விஜய் எந்த அளவிற்கு தாங்குகிறாரோ... அதை அளவிற்கு படத்தை தாங்கியிருக்கிறார். படத்தில் ஒரே பாடல்; படம் முடிந்த பின் இன்னொரு பாடல். மொத்தமே இரு பாடல்கள் தான். ஆனால், பின்னணி என்கிற பெயரில், விஜய் திரையை கிழிப்பதைப் விட, அனிருத் தான் அதிகம் திரையை கிழித்துள்ளார். ஒவ்வொரு முறை தீம் வரும் போது, தியேட்டரில் ரசிகர்கள் ஆர்ப்பரிக்கிறார்கள்.
விடிவி கணேஷ் வசனங்கள் அனைத்துமே கலகல. அவர் மட்டுமே காமெடிக்கு கை கொடுத்திருக்கிறார். பூஜாவின் நிச்சயிக்கப்பட்ட மாப்பிள்ளையாக வரும் சதீஷ், துவக்கத்தில் ஓவர் ஆக்டிங்காக தெரிந்தாலும், பின்னர் விட்டதை பிடித்துவிடுகிறார். செல்வராகவன், செல்லும் ராகவனாக மிளிர்கிறார். விஜய்யின் வீரராகவன் கதாபாத்திரத்தை கையாளும் அவரது விதம், நல்ல ரகம். மனோஜ் ஒளிப்பதிவு... ஒரு மாலில் என்ன காட்ட முடியுமோ... எதை காட்டலாமோ... எப்படியெல்லாம் காட்டலாமோ... அதை காட்டியிருக்கிறார். சாந்தமான ஒரு மனிதன்... மிருகமாக பிரச்சனைகளை எதிர்கொள்கிறான். அந்த மிருகத்தை பீஸ்ட் என்கிறார்கள். அரசியல் வசனங்கள், அசாதாரண சம்பவங்கள், சின்ன சின்ன வசனங்கள் என விஜய்க்கு அரசியல் ரீதியாகவும், அமைப்பு ரீதியாகவும் தற்போதைய தேவைகளை படத்திலும் கலந்திருக்கிறார்கள்.
சுமார் ரகம் என்று ஒதுக்கிவிட முடியாது... ஓஹோ ஆஹா... என்று கொண்டாடவும் முடியாது. ஒருமுறை பார்த்துவிட்டு வரலாம். அதை கடந்து பங்கம் பண்ண எதுவும் இல்லை. விஜய்-பூஜா காம்ப்னேஷன், காக்டெய்ல் தான். பார்த்தாலே போதை தான். ஹைஜாக்கை கடந்து மீண்டும் கதை, ஆக்கிரமிப்பு காஷ்மீருக்கு போவதும், அதன் பின் எண்ட் கார்டு போட்டு விட்டு, ஜாலியோ ஜிம்கானா பாடல் போடுவதும், தேவையா என்பதை ரசிகர்களின் பார்வைக்கே விட்டுவிடுவோம். சம்மரில்... சத்தத்தோடு... ஒன் மேன் யுத்தத்தை பார்க்க விரும்பினால், பீஸ்ட்... பெஸ்ட்!
Star Cast :
Thalapathy Vijay, Pooja Hegde, Selvaraghavan, Yogi Babu, Redin Kingsley, Bjorn Surrao, VTV Ganesh, Aparna Das, Shine Tom Chacko, Liliput Faruqui, Ankur Ajit Vikal & Others.
Crew:
Produced by: Sun Pictures
Directed by: Nelson Dilipkumar
Cinematography: Manoj Paramahamsa
Editing by: R. Nirmal
Art: D.R.K. Kiran
Costume Design by: V. Sai, Pallavi Singh
Makeup: P. Nagarajan
VFX: Bejoy Arputharaj, Phantom-fx
Stunt: AnbAriv
Choreographer: Jani
Publicity Designs : Gopi Prasanna
PRO : Riaz K Ahmed
கருத்துரையிடுக