'நெஞ்சுக்கு நீதி' திரைப்பட விமர்சனம்
தயாரிப்பாளர் போனி கபூர் வழங்கும், ZEE STUDIOS & BAYVIEW PROJECTS உடன் ROMEO PICTURES இணைந்து தயாரிக்க, அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில், உதயநிதி ஸ்டாலின் நடித்துள்ள திரைப்படம் “நெஞ்சுக்கு நீதி”.
இந்திய அரசியலமைப்புச் சட்டம் 1950 பிரிவு 15-ன் படி, சாதி, மதம், இனம், பாலினம், குடிவழி, பிறப்பிடம், வாழ்விடம் அடிப்படையில் எந்தப் பாகுபாடும் காட்டப்படக் கூடாது என்பது தான் 'நெஞ்சுக்கு நீதி'....
நேர்மையாக இருக்கும் ASP விஜயராகவன் (உதயநிதி ஸ்டாலின்) பணிமாற்றம் செய்யப்பட்டு பொள்ளாச்சிக்கு வருகிறார். அவர் பணியேற்ற சில நாட்களில், அங்கு மூன்று சிறுமிகள் காணாமல் போகிறார்கள். அதில் இரண்டு சிறுமிகள் கொலை செய்யப்பட்டு ஊரின் நடுவே உள்ள மரத்தில் தூக்கில் தொங்கவிட படுகிறார்கள்.
இந்த வழக்கை விசாரணை செய்யும் உதயநிதி ஸ்டாலினுக்கு அடுத்தடுத்து பல அதிர்ச்சியளிக்கும் விஷயங்கள் தெரியவருகிறது. இரண்டு சிறுமிகளையும் கற்பழித்து கொலை செய்துள்ளார்கள் என்று கண்டுபிடிக்கிறார் உதயநிதி. ஆனால், அவரை சுற்றி இருக்கும் சில காக்கி சட்டையும், சில கரை வேட்டியும் இந்த வழக்கை நேர்வழியில் உதயநிதியை நடத்தவிடாமல், முடிவுக்கு கொண்டுவர சூழ்ச்சி செய்கிறார்கள்.
இவர்கள் செய்யும் சூழ்ச்சியில் இருந்த தப்பித்து, பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதியை வாங்கி கொடுத்தாரா உதயநிதி? அந்த மூன்றாவது சிறுமிக்கு என்னவானது? இறுதியில் சட்டம் நீதியின் பக்கம் நின்றதா? என்பதே படத்தின் மீதி கதை.....
காவல் துறை அதிகாரியாக வரும் உதயநிதி சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். சட்டத்தை கடைபிடிக்கும் விதம், பாதிக்கப்பட்டவர்களுக்காக போராடும் தன்மை, அனைவரும் சமம் பேசும் வசனங்கள் என அனைத்திலும் ஸ்கோர் செய்கிறார். அம்பேத்கர் பற்றி உதயநிதி பேசிய ஒவ்வொரு வசனத்திற்கும் தனி க்ளாப்ஸ். கதாநாயகியாக வரும் தான்யா, குறைந்த காட்சியில் வந்தாலும் கதைக்கு தேவையானதை செய்துள்ளார்.
இன்ஸ்பெக்டர் கதாபாத்திரத்தில் நடித்துள்ள சுரேஷ் சக்ரவர்த்தி நடிப்பில் மிரட்டுகிறார். தங்களை தாழ்த்த நினைக்கும் அதிகாரவர்கத்தை எதிர்த்து போராடும் ஆரியின் நடிப்பு, சிறப்பு. நடிகர் இளவரசு, மயில்சாமியின் நடிப்பு படத்திற்கு பலம் சேர்க்கிறது. தனது இரண்டாவது படமாக இருந்தாலும், கொடுத்த கதாபாத்திரத்தில் தனித்து நிற்கிறார் நடிகை ஷிவானி ராஜசேகர். அப்துல் அலி, ராட்சசன் சரவணன், ரமேஷ் திலக், சாயாஜி சிண்டே தங்களுக்கு கொடுத்த கதாபாத்திரத்தை கச்சிதமாக செய்துள்ளனர்.
தினேஷ் கிருஷ்ணனின் ஒளிப்பதிவு தனித்து நிற்கிறது. திபு நினன் தாமஸ் இசை படத்திற்கு பலம். ரூபனின் எடிட்டிங் சூப்பர். யுகபாரதியின் வரிகள் வலிமை. தமிழரசனின் வசங்கள் நெஞ்சை தொடுகிறது. குறிப்பாக 'இங்கு நம்மை எரிக்க தான் விடுவார்கள், எரிய விடமாற்றங்கள்' என்று அவர் எழுதியுள்ள வசனம் கண்கலங்க வைக்கிறது.
இந்தியில் வெளியான 'ஆர்டிக்கிள் 15' படத்தை அப்படியே ரீமேக் செய்யாமல், தமிழுக்காக ஒரு சில காட்சிகளை சேர்த்தும், சிலவற்றை நீக்கியும் படமாக்கியிருக்கிறார் அருண்ராஜா காமராஜ். சத்துணவு சமைக்கும் பெண் ஒருவர் பட்டிலியன சாதி என்பதால் புறக்கணிக்கப்பட்டு அவமானப்படுத்தியது, பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை சம்பவங்கள், கூண்டுக்குள் அடைக்கப்பட்டிருக்கும் பெரியார், அம்பேத்கர் சிலைகள், உண்மைச் சம்பவங்களை ஆங்காங்கே காட்சிப்படுத்தியிருப்பது சிறப்பு.
'நெஞ்சுக்கு நீதி' தலைப்பு பொருந்தும்....
கருத்துரையிடுக