Maamanithan Review: "மாமனிதன்" எப்படி இருக்கு?!
விமர்சனத்தை பார்ப்போமா?
சீனு ராமசாமி இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி, காயத்ரி, அனிகா, மானஸ்வி, குரு சோமசுந்தரம், கஞ்சா கருப்பு நடிப்பில் வெளியாகி இருக்கும் படம் "மாமனிதன்"
தேனி மாவட்டம் பண்ணைபுரம் கிராமத்தில் ஆட்டோ ஓட்டுனராக இருக்கக்கூடிய ராதாகிருஷ்ணன் (விஜய் சேதுபதி) , தன்னுடைய மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளுடன் அழகான வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கிறார். அந்த சமயத்தில் மாதவன் என்கிற ரியல் எஸ்டேட் புரோக்கர் அவருடைய நிலத்தை விற்பதற்காக வருகிறார்.
தன்னுடைய குழந்தைகளை நல்ல பள்ளிக்கூடத்தில் படிக்க வைக்க வேண்டும் என ஆசைப்படும் ஆட்டோ ஓட்டுனரான ராதாகிருஷ்ணன், டக்குனு ரியல் எஸ்டேட் புரோக்கராக மாறி, அந்த ஊரில் இருக்கும் மக்களிடம் பேசு நான் உங்களுக்கு இந்த நிலத்தை விற்று தருகிறேன் என மாதவனிடம் கூறுகிறார். அதற்காக தனக்கு கமிஷன் தர வேண்டும் என்றும் மாதவனிடம் டீல் பேசிக் கொள்கிறார் ராதாகிருஷ்ணன்.
அதற்கு மாதவனும் ஒத்துக்கொள்கிறார். தன்னுடைய குழந்தைகளை நல்ல பள்ளிக்கூடத்தில் படிக்க வைக்க வேண்டும் என்கிற ராதாகிருஷ்ணனின் முயற்சி வெற்றி கண்டதா? இல்லையா?. ராதாகிருஷ்ணன் எப்படி மாமனிதன் ஆனார் என்பதை உணர்வுப்பூர்வமான திரைக்கதை உடன் விளக்கி உள்ள படம் தான் இந்த மாமனிதன்.
நடிகர் விஜய் சேதுபதி ஆட்டோ ஓட்டுனர் ராதாகிருஷ்ணன் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இரண்டு குழந்தைகளுக்கு தந்தையாக ஒரு நல்ல முதிர்ச்சியான நடிப்பை அவர் வெளிப்படுத்தி இருக்கிறார். அவருடைய மனைவியாக சாவித்ரி கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் காயத்ரி. அவர் தனது கதாபாத்திரத்தின் தன்மை உணர்ந்து கச்சிதமாக நடித்துள்ளார்.
சிக்கந்தர் பாய் ஆக குரு சோமசுந்தரம் வழக்கம்போல் கலக்கி இருக்கிறார். மாதவனாக வரும் ஷாஜிசேன், கஞ்சா கருப்பு, கேபிஏசி லலிதா. விஜய் சேதுபதியின் மகள்களாக வரும் அனிகா மற்றும் மானஸ்வி, ஜுவல் மேரி என அனைவரும் எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளனர். சுகுமாரின் ஒளிப்பதிவு நேர்த்தியாக அமைந்துள்ளது. யுவன் சங்கர் ராஜா மற்றும் இளையராஜா என இரண்டு இசை அரசர்கள் இப்படத்திற்கு இசையமைத்து இருந்தாலும், பாடல்களோ பின்னணி இசையோ மனதில் பதியும்படி இல்லாதது படத்திற்கு பின்னடைவாக தெரிகிறது.
மொத்தத்தில் "மாமனிதன்" குடும்ப மனிதன்....
கருத்துரையிடுக