’கே.ஜி.எஃப்’ இயக்குநர் பிரஷாந்த் நீலுக்கு இன்று பிறந்தநாள்!
பிரஷாந்த் நீல். இன்றைய தேதிக்கு இந்திய சினிமாவின் டாப் டென் இயக்குநர்களில் தவிர்க்க முடியாத பெயர். இந்த ஒரே காரணத்துக்காக இன்றைய அவரது 41வது பிறந்த நாளை சமூக வலைதளங்களில் மக்கள் வாழ்த்து மழைகளால் பொழிந்துகொண்டிருக்கின்றனர்.
1980 ஜூன் 4ம் தேதி பிறந்த பிரஷாந்த் நீல் இன்று எட்டிப்பிடித்திருக்கும் வெறுமனே மூன்றே படங்களில் நிகழ்ந்தது என்றால் நம்புவதற்கு சற்று கடினமாகத்தான் இருக்கும். அவரது முதல் படமான ‘உக்கிரம்’ வெளியான ஆண்டு 2014. அதுவே மாபெரும் ஹிட் அடித்த நிலையில்தான் அவரை இந்தியா முழுக்க பேச வைத்த ‘கேஜிஎஃப்’ படத்தை 2018ல் இயக்கினார். அடுத்து சுமார் 50 தினங்களுக்கு முன்பு வெளியாகி அகில உலகத்தையும் அதிர வைத்த ‘கேஜி எஃப்’ 2’வின் வெற்றியும் அது ஈட்டிய 1200 கோடி தாண்டிய வசூலையும் இன்னும் வியந்துகொண்டே இருக்கிறோம்.
அடுத்து அவரது இயக்கத்தில் தயாராகும் ‘சலார்’படத்துக்கும் விண்ணைத் தொடும் எதிர்பார்ப்பு உள்ளது என்பதை சொல்லித் தெரியவேண்டியதில்லை. பிரபாஸ், ஸ்ருதிஹாசன், ஜெகபதி பாபு நடிக்கும் இந்த படமும் பெரும் பொருட்செலவில் தயாராகிக்கொண்டிருக்கிறது. இப்படத்தின் டீஸர் இன்னும் ஒரு மாதத்தில் வெளியாகவிருக்கிறது.
இவரது முதல் மூன்று படங்களையும் தாண்டிய சவாலான படமாக இப்படத்தை இயக்கி வருவதாக படக்குழுவினர் பெருமையுடன் தெரிவிக்கின்றனர்.
கருத்துரையிடுக