Naane Varuven Movie Review: 'நானே வருவேன்' படம் எப்படி இருக்கு பார்ப்போமா?!
செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள 'நானே வருவேன்' திரைப்படம் இன்று உலகமெங்கும் ரிலீசாகி உள்ளது. கலைப்புலி எஸ் தாணு தயாரித்துள்ள இப்படத்திற்கு தனுஷ் தான் கதை மற்றும் திரைக்கதை எழுதி உள்ளார். 11 ஆண்டுகளுக்கு பின்னர் தனுஷ், செல்வராகவன் கூட்டணியில் உருவாகி உள்ள இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்து உள்ளார்.
சரி வாங்க விமர்சனத்தை பார்ப்போம்.....
மகளுக்காக எதையும் செய்யும் தந்தை ஒருவரின் இறுதிக்கட்ட போராட்டம் வென்றதா, இல்லையா என்பதுதான் படத்தின் ஒன்லைன். தனது மனைவி, மகளுடன் மகிழ்ச்சியான வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார் பிரபு (தனுஷ்). பாசக்கார தந்தையான அவருக்கு மகள் தான் உலகம்.
திடீரென ஒருகட்டத்தில் அவரது மகளின் நடவடிக்கைகளில் வழக்கத்துக்கு மாறான மாற்றங்கள் தென்படுகின்றன. இரவில் தூங்காமல் தனியாக பேசிக்கொண்டிருக்கும் தனது மகளின் வித்தியாசமான போக்கைக் கண்டு மனமுடைந்து போகும் பிரபு, அவரை அதிலிருந்து மீட்க போராடுகிறார். அப்படியான போராட்டத்தில் இறுதியில் அவர் தன் மகளை மீட்டாரா? இல்லையா? அவருக்குள் இருக்கும் பிரச்சனை தான் என்ன? என்பதை திரில்லராக சொல்லிருக்கிறார் செல்வராகவன்.......
நடிகர் தனுசின் நடிப்பை சொல்லவா வேண்டும் ரசிகர்களின் முழு கவனத்தை தன் நடிப்பால் ஈர்த்துள்ளார். 'வீரா சூரா தீரா வாடா' என்ற பாடல் ஒலிக்க ஸ்லோமோஷனில் தனுஷ் நடந்து வரும் காட்சி திரையரங்கை தெறிக்கவிடுகிறது.
ஒரு சில நிமிடமே வந்துபோனாலும் தனது மிரட்டலான தோற்றத்தால் ஈர்க்கிறார் செல்வராகவன். இரண்டாம் பாதியில் வரும் நடிகை எல்லி அவரம் மற்றும் தனுஷின் சிறுவயது வெர்ஷன்களாக வரும் சிறுவர்கள் மற்றும் அவரின் மகன்களாக நடித்திருக்கும் சிறுவர்களின் நடிப்பு கதையோட்டத்திற்கு பலம். ஓம் பிரகாஷின் ஒளிப்பதிவில் வெண்ணிற இரவும், அடர்ந்த காடுகளும், சண்டைக் காட்சிகளும் நம்மை அப்படியே... ஈர்க்கின்றன.
யோகிபாபு, பிரபு கதாபாத்திரங்களின் தேவை, திரையில் பெரிய அளவில் தேவைப்படவில்லை. இரண்டாம் பாதி கதையில் இன்னும் கவனம் செலுத்தியிருக்கலாம். கிளைமேக்ஸ் முடிவு ரசிகர்களை திருப்திப்படுத்துமா? என்பது சந்தேகம் தான்.
மொத்தத்தில் இந்த 'நானே வருவேன்' திரில்லர் கலந்த பாச போராட்டம்......
கருத்துரையிடுக