மூளையில் உள்ள 2 கட்டிகளை அறுவை சிகிச்சை மூலம் அகற்றி சாதனை!
சென்னை:
சென்னையில் உள்ள பன்னோக்கு மருத்துவமனைகளில் ஒன்றாக திகழும் பெரும்பாக்கத்தில் உள்ள கிளெனீகிள்ஸ் குளோபல் ஹெல்த் சிட்டி மருத்துவமனை மிகவும் சிக்கலான உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தக்கூடிய 2 மூளைக் கட்டிகளை சென்னையைச் சேர்ந்த 38 வயது நோயாளிக்கு அகற்றி சாதனை படைத்துள்ளது.
இம்மருத்துவமனையின் மிகவும் நிபுணத்துவம் வாய்ந்த நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணர்கள் குழு, மிரர் இமேஜ் பாணியில் பேச்சாற்றலைக் கட்டுப்படுத்தும் மூளையின் இடது மற்றும் வலது பக்கங்களில் உள்ள 2 கட்டிகளை திறமையாக அறுவை சிகிச்சை மூலம் அகற்றி உள்ளனர்.
பொதுவாக, இந்த அறுவை சிகிச்சையானது மிகவும் ஆபத்தானதாகும். ஏனெனில் இந்த அறுவை சிகிச்சையின்போது ஏதேனும் பிரச்சினை ஏற்பட்டால் அது நோயாளிக்கு பார்வை இழப்பை ஏற்படுத்தும். இது குறித்த பிரச்சினைகள் அவருக்கும் அவரது குடும்பத்தினரிடம் தெரிவிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட இந்த அறுவை சிகிச்சை மிகவும் வெற்றிகரமான நடந்துள்ளது. இரண்டு கட்டமாக நடைபெற்ற இந்த அறுவை சிகிச்சை மொத்தம் 10 மணி நேரம் நடைபெற்றது.
சென்னையைச் சேர்ந்த 38 வயது இளைஞர் ஒருவருக்கு மூளையின் வலது மற்றும் இடது பக்கங்களில் மிகவும் அரிதான வகையில் இரு கட்டிகள் இருந்தன. இது 5 x 7 செ.மீ. அளவு இருந்தது. இந்த கட்டிகள் மூளையின் பெருமூளைப் பகுதியில் வலது மற்றும் இடது பக்கத்தின் பார்வை சம்பந்தப்பட்ட பகுதியில் இருந்தது. இந்த இளைஞர் 3 மாதமாக பார்வை சம்பந்தப்பட்ட பிரச்சினையுடன் கடுமையான தலைவலியால் அவதிப்பட்டு வந்துள்ளார். இந்த நிலையில் அவர் சிகிச்சைக்காக கிளெனீகிள்ஸ் குளோபல் ஹெல்த் சிட்டி மருத்துவமனைக்கு வந்தார்.
அவருக்கு இம்மருத்துவமனையின் டாக்டர். நைகல் பி சிம்ஸ் மற்றும் அவரது குழுவினர் மருத்துவ பரிசோதனை மற்றும் எம்ஆர்ஐ ஸ்கேன் பரிசோதனை போன்றவற்றை மேற்கொண்டனர். அப்போது அவருக்கு மூளையின் வலது மற்றும் இடதுபுறம் கட்டி இருப்பது கண்டறியப்பட்டது. மேலும் இந்த சிக்கலான அறுவை சிகிச்சை குறித்து அவரிடமும் அவரது குடும்பத்தினரிடமும் தெரிவிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து அவருக்கு மைக்ரோநியூரோசர்ஜரி, நேவிகேஷன் மற்றும் இன்ட்ராஆபரேட்டிவ் நியூரோமோனிட்டரிங் ஆகிய உயர்நிலை தொழில்நுட்பத்தை பயன்படுத்தி அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. மேலும் இந்த அறுவை சிகிச்சையானது உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தக் கூடியது என்றும் அவருக்கு தெளிவாக எடுத்துக்கூறப்பட்டது. கட்டிகளை அகற்றுவதில் தாமதம் ஏற்பட்டு இருப்பதன் காரணமாக பார்வை மோசமடைவது மற்றும் பிற பிரச்சினைகளும் ஏற்படலாம் என்றும் தெரிவிக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட அறுவை சிகிச்சையில், முதலில் நோயாளிக்கு பெருமூளையின் வலது புறத்தில் இருந்து கட்டி அகற்றப்பட்டது. அறுவை சிகிச்சைக்குப் பிந்தைய நிலையில் அவரது உடல்நிலை சீரற்ற நிலையில் இருந்தது. பின்னர் 5 நாட்களுக்கு பிறகு அவர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். பின்னர் இரண்டு வாரங்களுக்குப் பிறகு நடத்தப்பட்ட இரண்டாம் கட்ட அறுவை சிகிச்சைக்கு அவர் தயாரான நிலையில், அவரது இடது பெருமூளையில் உள்ள கட்டி அகற்றப்பட்டது. அறுவை சிகிச்சைக்கு பிறகு நோயாளி நன்கு குணமடைந்ததோடு, மேலும் அவரது பார்வையில் 80 முதல் 90 சதவிகிதம் வரை நல்ல முன்னேற்றம் இருந்ததோடு, இரண்டு கண்களிலும் எந்தவித பிரச்சினையும் இல்லாத நிலையில் அவர் 4 நாட்களுக்கு பின் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.
இந்த வெற்றிகரமான அறுவை சிகிச்சை குறித்து கிளெனீகிள்ஸ் குளோபல் ஹெல்த் சிட்டி மருத்துவமனையின் தலைமை செயல் அதிகாரி அலோக் குல்லர் கூறுகையில், இந்த கடினமான அறுவை சிகிச்சையின் முடிவில் நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம். இது இந்தியாவின் முதல் திருப்புமுனை அறுவை சிகிச்சையாகும். மேலும் எங்கள் மருத்துவமனையில் மிகவும் ஆபத்தான இந்த அறுவை சிகிச்சையை செய்திருப்பது குறித்து நாங்கள் பெருமை அடைகிறோம். எங்கள் மருத்துவர்களின் சிறந்த அறிவு மற்றும் அறுவை சிகிச்சை திறன்கள், சமீபத்திய தொழில்நுட்ப முன்னேற்றங்கள், இந்த இளைஞரை இயல்பான வாழ்க்கைக்கு திரும்ப வைத்துள்ளது என்று தெரிவித்தார்.
இது குறித்து மூத்த ஆலோசகரும், நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணருமான டாக்டர் நைகல் பி சிம்ஸ் கூறுகையில்:
இந்த அறுவை சிகிச்சை என்பது அதிக ஆபத்தை உள்ளடக்கியது, ஏனெனில் இந்த செயல்முறையானது மண்டை ஓட்டை இருபுறமும் திறப்பது மற்றும் பார்வை சம்பந்தப்பட்ட மூளையின் பகுதியில் இருந்து கட்டியை அகற்றுவது போன்ற சிக்கல் நிறைந்த அறுவை சிகிச்சையானது நோயாளிக்கு பார்வை இழப்பை ஏற்படுத்துவதற்கான வாய்ப்புகளைக் கொண்டுள்ளன. மூளையின் முக்கியமான பகுதியில் மூளையின் இருபுறமும் உள்ள இரண்டு கட்டிகளை அகற்றுவது என்பது மிகவும் சிக்கலானதாகும். இந்த நிலையில் நாங்கள் மேற்கொண்ட இந்த அறுவை சிகிச்சையானது நிச்சயமாக எங்களுக்கான ஒரு திருப்புமுனையாக அமைந்ததோடு எங்கள் மருத்துவமனையில் உள்ள நவீன மருத்துவ தொழில்நுட்பங்களுக்கு சிறந்த எடுத்துக்காட்டாகவும் உள்ளது என்று தெரிவித்தார்.
"இது எனக்கு ஒரு புதிய ஆரம்பம், வாழ்க்கையையும் அதன் அனைத்து சாத்தியங்களையும் தழுவுவதற்கான வாய்ப்பு. திறமையான மருத்துவக் குழுவும் அவர்களின் அர்ப்பணிப்பும் இதை சாத்தியமாக்கியது, இந்த அறுவைசிகிச்சை எனக்கு வாழ்க்கையில் இரண்டாவது வாய்ப்பை அளித்துள்ளது, ," என்று நோயாளி கூறினார்.
இது குறித்து இம்மருத்துவமனையின் நரம்பியல் துறை மற்றும் கால்-கை வலிப்புக்கான மேம்பாட்டு மையத்தின் இயக்குனர் டாக்டர் தினேஷ் நாயக் கூறுகையில்:
இந்தியாவைப் பொறுத்தவரை 1 லட்சம் பேரில் 5 முதல் 10 பேருக்கு மூளையில் கட்டி ஏற்படுகிறது. மூளையின் எந்தப் பகுதி பாதிக்கப்படுகிறது என்பதைப் பொறுத்து மூளைக் கட்டியின் அறிகுறிகள் வேறுபடுகின்றன. இதற்கு முதல் மற்றும் மிகவும் பொதுவான அறிகுறி கடுமையான மற்றும் நீண்ட கால தலைவலியாக இருக்கலாம், மேலும் அடிக்கடி வாந்தி ஏற்படும். வலிப்பு, பலவீனம் அல்லது கைகால்களின் ஒருதலைப்பட்ச முடக்கம், பார்வை, செவித்திறன் பாதிப்பு அல்லது பேச்சாற்றல், நினைவாற்றல் பிரச்சினைகள் அல்லது செயல்பாடுகளில் மாற்றங்கள் ஆகியவை கூடுதல் அறிகுறிகளாகும். மூளைக் கட்டியை உறுதிப்படுத்த, நோயாளிகள் மூளையை எம்ஆர்ஐ அல்லது சிடி ஸ்கேன் செய்ய வேண்டும். கிரானியோட்டமி மற்றும் ட்யூமர் எக்சிஷன் எனப்படும் அறுவை சிகிச்சை, பல்வேறு வகையான மூளைக் கட்டிகளுக்கான முதன்மையான சிகிச்சை முறையாகும் என்று தெரிவித்தார்.
VIDEO HERE:
கருத்துரையிடுக