வைகுண்ட ஏகாதசி தரிசன சிறப்பு ஏற்பாடு!
இது குறித்து திருமலை-திருப்பதி தேவஸ்தான கூடுதல் முதன்மைச் செயல் அலுவலர் ஏ.வி.தர்மாரெட்டி கூறியதாவது:-
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருகிற 13-ந்தேதி வைகுண்ட ஏகாதசி விழா நடக்கிறது. அதையொட்டி பக்தர்களின் வசதியை கருத்தில் கொண்டு ஜனவரி மாதம் 1-ந்தேதி ஆங்கில புத்தாண்டு தரிசனம் மற்றும் 13-ந்தேதியில் இருந்து 22-ந்தேதி வரை 10 நாட்கள் வைகுண்ட ஏகாதசிக்காக சிறப்பு தரிசன ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
திருப்பதியில் மகதி கலையரங்கம், மாநகராட்சி அலுவலகம், ராமச்சந்திரா பஷ்கரணி, பைராகிபட்டிடையில் உள்ள ராமாநாயுடு பள்ளிக்கூடம், மார்க்கெட் யார்டு ஆகிய 5 இடங்களில் கவுண்ட்டர்கள் அமைக்கப்பட்டு நாள் ஒன்றுக்கு 5 ஆயிரம் வீதம் மொத்தம் 50 ஆயிரம் இலவச தரிசன டிக்கெட்டுகள் வழங்கப்படும். ஒமைக்ரான் பரவல் பாதிப்பை அடுத்து உள்ளூர் பக்தர்களுக்கு மட்டுமே இந்த இலவச டோக்கன்கள் வழங்கப்படும்.
சாதாரண பக்தர்களின் வசதிக்காக ஜனவரி மாதம் 1-ந்தேதி ஆங்கில புத்தாண்டு தரிசனம், 13-ந்தேதியில் இருந்து 22-ந்தேதி வரை வைகுண்ட ஏகாதசி தரிசனம் ஆகியவற்றில் முக்கிய பக்தர்களுக்கு வி.ஐ.பி. பிரேக் தரிசனம் வழங்கப்படும். முக்கிய பிரமுகர்கள் வழங்கும் சிபாரிசு கடிதங்கள் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது, நிராகரிக்கப்படும்.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு ஜனவரி மாதம் 11-ந்தேதி கோவில் ஆழ்வார் திருமஞ்சனம் எனப்படும் தூய்மைப்பணி நடக்கிறது.
13-ந்தேதி வைகுண்ட ஏகாதசி அன்று காலை 9 மணியில் இருந்து காலை 10 மணி வரை கோவிலின் நான்கு மாடவீதிகளில் தங்கத்தேரோட்டம் நடக்கிறது. அதில் ஸ்ரீதேவி, பூதேவி, மலையப்பசாமி எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலிப்பார்கள். வைகுண்ட துவாதசி அன்று அதிகாலை 5 மணியில் இருந்து காலை 6 மணி வரை ஏகாந்தமாக சக்கர ஸ்தானம் (சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரி) நடக்கிறது.
கொரோனா பரவலை தடுக்க கவுண்ட்டர்களிலும், கோவில் உள்ேளயும் குழாய்கள் மூலம் (ட்ரை ஓசோன்) கிருமி நாசினி தெளிக்கும் பணி மேற்கொள்ளப்படும். அலிபிரி சோதனைச் சாவடி, திருமலையில் உள்ள அறை ஒதுக்கீடு மையங்கள், வைகுண்ட கியூ காம்ப்ளக்ஸ், லட்டு கவுண்ட்டர்களில் கிருமி நாசினி தெளிக்கப்படும்.
திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய வரும் அனைத்துப் பக்தர்களும் 48 மணி நேரத்துக்கு முன்பாக எடுக்கப்பட்ட கொரோனா தொற்று இல்லை என்ற சான்றிதழ், தடுப்பூசி போட்டதற்கான சான்றிதழ் ஆகியவற்றை கட்டாயம் கொண்டு வர வேண்டும்.
பக்தர்கள் சரியாக முகக் கவசம் அணிய வேண்டும். இடைவெளியை பின்பற்றி சாமி தரிசனம் செய்ய வேண்டும். அடிக்கடி கைகளை கிருமி நாசினியால் சுத்தம் செய்ய வேண்டும்.
ரூ.300 டிக்கெட்டுகள் ஆன்லைன் மூலம் விற்பனை செய்யப்படுகிறது. திருப்பதியில் உள்ள கவுண்ட்டர்களில் உள்ளூர் பக்தர்களுக்கு நாள் ஒன்றுக்கு 5 ஆயிரம் இலவச தரிசன டிக்கெட்டுகள் வழங்கப்படுகிறது.
ஜனவரி மாதம் 1-ந்தேதி ஆங்கில புத்தாண்டு தரிசனத்துக்காக ஸ்ரீவாணி டிரஸ்ட்டுக்கு காணிக்கை வழங்கிய பக்தர்களுக்கு 1000 பிரேக் தரிசன டிக்கெட்டுகள் வழங்கப்படுகிறது. ஜனவரி மாதம் 13-ந்தேதி வைகுண்ட ஏகாதசி அன்று ஸ்ரீவாணி டிரஸ்ட் பக்தர்களுக்கு 1000 மகா லகு தரிசன (தூரத்தில் இருந்து வழிபடுதல்) டிக்கெட்டுகள் வழங்கப்படுகிறது.
ஜனவரி மாதம் 14-ந்தேதியில் இருந்து 22-ந்தேதி வரை 9 நாட்களுக்கு ஒரு நாளைக்கு 2 ஆயிரம் வீதம் லகு (மூலவருக்கு சற்று அருகில் இருந்து வழிபடுதல்) தரிசன டிக்கெட்டுகள் வழங்கப்படுகிறது. ஆர்ஜித சேவையில் ஜனவரி மாதத்துக்கு ஒரு நாளைக்கு 5 ஆயிரத்து 500 டிக்கெட்டுகள் வீதம் வழங்கப்படுகிறது.
கருத்துரையிடுக