Latest Post

“அகமொழி விழிகள்” இசை வெளியீட்டு விழா!


சென்னை:

 
சச்சுஸ் கிரியேஷன்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் பவுலோஸ் ஜார்ஜ் தயாரிப்பில், சசீந்திரா கே. சங்கர் இயக்கத்தில் மாறுபட்ட கதைக்களத்தில், அட்டகாசமான திரில்லராக உருவாகியுள்ள திரைப்படம் “அகமொழி விழிகள்”. வரும் மே மாதம் 9 ஆம் தேதி திரைக்கு வரவுள்ள இப்படத்தின் இசை வெளியீட்டு விழா, படக்குழுவினருடன் திரை பிரபலங்கள் கலந்துகொள்ள, பத்திரிகை ஊடக நண்பர்கள் முன்னிலையில் நடை பெற்றது. 
 
இந்நிகழ்வினில் 
 
தயாரிப்பாளர் பவுலோஸ் ஜார்ஜ் பேசியதாவது… 
 
சச்சு கிரியேஷன்ஸ் சார்பில் அனைவரையும் வரவேற்கிறேன். இந்த திரைப்படம் மே மாதம் 9 ஆம் தேதி திரைக்கு வரவுள்ளது. நீங்கள் அனைவரும் ஆதரவு தர வேண்டும், இப்படத்தைத் திரையரங்குகளில் வந்து பாருங்கள், அனைவருக்கும் நன்றி. 
 
சிறு முதலீட்டு தயாரிப்பாளர் ஆர் கே அன்பழகன் பேசியதாவது… 
 
உண்மையில் அழகாகத் தெளிவான தமிழில், ஒரு டைட்டில் வைத்ததற்கே இந்த குழுவினரை பாராட்ட வேண்டும். தமிழே தெரியாமல் எழுதி வைத்துப் படிக்கிறார் தயாரிப்பாளர். தமிழை நம்பி வந்த  இந்த தயாரிப்பாளரை நாம் தான் வளர்த்து விட வேண்டும். நம் சூப்பர்ஸ்டார் கூட தமிழ் தெரியாமல் வந்தவர் தான். யாராக இருந்தாலும் நாம் ஆதரிக்க வேண்டும், இந்த படத்திற்குப் பெரிய வெற்றியைத் தர வேண்டும். சில நாட்கள் முன் தேவயானி மேடம் ஒரு விழாவில் சின்ன படங்களுக்கு 4 நாட்களாவது திரையரங்குகள் தர வேண்டும் எனப் பேசினார். இதை அனைத்து சங்கங்களும் ஆதரிக்க வேண்டும். அஜித் படம் ஓடி முடிந்து விட்டது, இனி அவர் எப்போது கால்ஷீட் தருவார் எனத் தெரியவில்லை. வருடத்தில்  நான்கைந்து பெரிய படங்கள் தான் ஓடுகிறது, இந்த நிலை மாற வேண்டுமானால் நாம் சின்ன படங்களுக்கு ஆதரவு தர வேண்டும்.  நாம் ஒழுங்காகப் படமெடுப்பதில்லை, நல்ல படம் எடுத்தால் ஓடும். இந்தப்படம் ஓட வாழ்த்துக்கள் நன்றி. 
 
தமிழ்நாடு அரசு இயல் இசை நாடக மன்ற உறுப்பினர்  மங்கை ராஜன் பேசியதாவது.. 
 
அகமொழி விழிகள் விஷுவல்ஸ் பார்க்க அழகாக உள்ளது. தயாரிப்பாளர் வேறு மொழியிலிருந்து வந்து இப்படத்தைத் தயாரித்துள்ளார். இங்கு தமிழில் பேச நினைத்த அவரது முயற்சிக்கு வாழ்த்துக்கள். நாயகன் நாயகி இருவரும் மிக நன்றாக நடித்துள்ளனர். இப்போதெல்லாம் படமெடுத்தால் வட இந்தியா ரைட்ஸ் வாங்குபவர்கள் இங்கிலீஷ் டைட்டில் வைக்கக் கோருகிறார்கள். ஆனால் இந்த தயாரிப்பாளர் வேறு மொழியிலிருந்து வந்தாலும் தமிழில் மிக அழகாக அகமொழி விழிகள் என வைத்துள்ளார். அதற்காகவே இப்படத்தை ஆதரிக்க வேண்டும். இப்படம் வெற்றி பெற என் வாழ்த்துக்கள். 
 
தமிழ் நாடு திரையரங்கு சங்க செயலாளர் திருச்சி ஶ்ரீதர் பேசியதாவது.. 
 
அகமொழி விழிகள் படம்,  பாட்டு விஷுவல்ஸ் மிக நன்றாக உள்ளது. படம் மிக நன்றாக வந்துள்ளது.  திரையரங்குகளில் கூட்டம் மிகக் குறைவாக உள்ளது, 84 படங்கள் இந்த ஆண்டு வெளியாகியுள்ளது ஆனால் 4 படங்கள் தான் வெற்றி பெற்றுள்ளது, இந்த நிலை நீடித்தால் திரையரங்குகள் அழியும், எல்லோரும் திரையரங்கில் வந்து படம் பாருங்கள். ஓடிடியிலும் யாரும் படம் வாங்குவது இல்லை, பெரிய படங்கள் மட்டுமே வாங்குகிறார்கள். இந்த நிலை மாற சின்னப்படங்கள் ஓட வேண்டும். இப்படம் வெற்றி பெற என் வாழ்த்துக்கள். 
 
நாயகி நேஹா ரத்னாகரன் பேசியதாவது…
 
மிக மகிழ்ச்சியாக உள்ளது. பவுலோஸ் சாருக்கு தான் முதல் நன்றி. இந்த மேடை வரை இந்தப்படம் வர அவர் தான் காரணம். அவருக்கு நன்றி. இயக்குநர் சசீந்திரா சார் ஒவ்வொரு சீனும் எனக்குச் சொல்லித் தந்து, என்னை மிக நன்றாகப் பார்த்துக் கொண்டார். என் கோ ஸ்டார் ஆடம் மிகப்பெரிய ஒத்துழைப்பு தந்தார். இப்படத்திற்கு உங்கள் ஆதரவைத் தாருங்கள் நன்றி. 
 
நாயகன் ஆதம் ஹசன் பேசியதாவது… 
 
இந்த விழாவில் கலந்துகொண்டுள்ள திரை பிரபலங்களுக்கு நன்றி. இந்த படம் 2,3 ஆண்டுகளாக எடுத்தோம். நான் கத்தாரில் வேலை பார்த்துக் கொண்டிருந்தேன், இங்கு வந்து போகும் இடைவேளையில் தான் இந்தப்படம் எடுத்தார் இயக்குநர். இயக்குநர் மிக கண்டிப்பாக இருப்பார், ஒவ்வொரு டயலாக்கும் சரியாக வரும் வரை விட மாட்டார். ஒரு லாங் டயலாக் ஷாட் எடுக்கும் போது பல டேக் போனது, எனக்கே நம்பிக்கை போய்விட்டது. என்னை மாற்றிவிடுவார் என நினைத்தேன் ஆனால் மறுநாள் முதல் ஷாட்டில் ஓகே ஆனது அப்போது தான் நம்பிக்கை வந்தது. படம் நன்றாக வந்துள்ளது.  இந்தப்படத்திற்கு உங்கள் அனைவரது ஆதரவையும் தாருங்கள் நன்றி. 
 
தயாரிப்பாளர் கே ராஜன் பேசியதாவது…
 
மிக மிக மகிழ்ச்சியாக உள்ளது. கேரளா நண்பர்கள்  இந்தப்பட விழாவிற்கு அழைத்தார்கள். மலையாள பட டப்பிங் என நினைத்துத் தான் வந்தேன். ஆனால் மிக அழகான தமிழ்ப் படமாகச் செய்துள்ளார்கள். அவ்வளவு அழகாக எடுத்துள்ளார்கள். டிரெய்லர்,  மூணு பாடல் எல்லாமே அவ்வளவு சிறப்பாக இருந்தது. குழுவினருக்கு என் வாழ்த்துக்கள். இந்த வருடம் வெறும் 4 படம் வெற்றி. போன வருடம் 220 படங்களில் 8 படம் தான் வெற்றி. சின்ன படங்களில் 15 படம் வெற்றி. பெரிய ஹீரோ பின்னால் போனால் படம் ஓடாது. கதை நன்றாக இருந்தால் மட்டும் தான் ஓடும். நல்ல கதையைத் தேர்ந்தெடுத்து, இந்த மாதிரி புது நாயகன் நாயகியைப் போட்டுப் படமெடுத்தால் படம் ஓடும். அகமொழி விழிகள் என்ன அழகான டைட்டில்.  அஜித் எப்போதும் தமிழ் டைட்டில் வைப்பார் ஆனால் இயக்குநர் எவனோ குட் பேட் அக்லி என டைட்டில் வைத்து விட்டான். இப்போது சிவக்குமார் மகன் சூர்யா ரெட்ரோ என டைட்டில் வைத்துள்ளார். தமிழ் தலைப்பில் படம் வருவது குறைந்து விட்டது. கேரள சகோதரர் தமிழில் டைட்டில் வைக்கிறார் தமிழனுக்குத் தமிழில் டைட்டில் வைக்கத் தெரியவில்லை. நல்ல மனம் குளிர்ந்து மகிழ்ந்து அகமொழி விழிகள் ஜெயிக்க வாழ்த்துகிறேன். அனைவருக்கும் என் உளம் கனிந்த நன்றி.  
 
ஸ்டண்ட் மாஸ்டர் ஜாக்குவார் தங்கம் பேசியதாவது…. 
 
அகமொழி விழிகள் கண் தெரியாத இருவரைப் பற்றிய படம்.  இப்படி ஒரு படத்தைத் தயாரித்த தயாரிப்பாளருக்கு என் நன்றிகள். நாயகன் நாயகி இருவரும் அற்புதமாக நடித்துள்ளனர். பாடல் எல்லாம் மிக அழகாக உள்ளது. நம் தமிழ் சினிமா வந்தாரை வாழ வைக்கும். எந்த மொழியும் அதைச் செய்வதில்லை. இங்கு தமிழில் ஒழுங்காகப் படமெடுப்பதில்லை எனக் குறை சொன்னார்கள். ஆனால் எம் ஜி ஆர், ரஜினி, கமல் என அத்தனை பேரை உருவாக்கியது தமிழ் சினிமா தான். தமிழ் சினிமாவை குறை சொல்லாதீர்கள். தமிழில் தலைப்பு வைத்த இந்தப்படம் வெற்றி பெற வாழ்த்துக்கள் நன்றி. 
 
இயக்குநர் பேரரசு பேசியதாவது…
 
அகமொழி விழிகள் பெயரே மிக அழகாக உள்ளது. தமிழ்த் தெரியாத தயாரிப்பாளர் தனது மொழியில் தமிழை எழுதி வைத்துப் படிக்கிறார். தமிழ் மீதான அவரது மரியாதை வியக்க வைக்கிறது. நான் சிவகாசி படமெடுத்த போது அப்படம் தெலுங்கில் ரீமேக் செய்யப்பட்டது அப்போது தெலுங்கில் நடந்த விழாவில் நான் கலந்து கொண்டு பேச கஷ்டப்பட்டேன், இப்போது தான்  புரிகிறது, நான் தமிழில் எழுதி வைத்துப் படித்திருக்கலாம். இப்படம் பாடல் விஷுவல்ஸ் எல்லாமே நன்றாக இருக்கிறது. தமிழ் சினிமா அழிந்து வருவதாகச் சொல்கிறார்கள். அதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஒரு தியேட்டரில் டிக்கெட் எவ்வளவு விற்க வேண்டும் என  நிர்ணயிக்கும் போது, பாப்கார்னும் இந்த விலைக்குத் தான் விற்க வேண்டும் என நிர்ணயிக்க வேண்டும். ஏன் இதை அரசாங்கம் செய்யக் கூடாது. மக்களுக்காகத் தானே அரசாங்கம். எப்போதும் கதையை நம்பி படமெடுங்கள். என் மகன் நடிக்க வேண்டும், தம்பி மியூசிக் போட வேண்டும் எனப் படமெடுக்காதீர்கள், அப்படிப் படமெடுத்தால் ஓடாது. இந்தப்படம் சின்ன பட்ஜெட்டில் அசத்தியுள்ளார்கள். விஷுவல் பார்க்க பெயிண்டிங் மாதிரி உள்ளது. அத்தனை உழைத்துள்ளார்கள்.  இது மாதிரி படம் வெற்றி பெற வேண்டும் இப்படம் வெற்றி பெற என் வாழ்த்துக்கள். நன்றி. 
 
இயக்குநர் சசீந்திரா கே. சங்கர் பேசியதாவது … 
 
இங்கு எங்களை வாழ்த்த வந்த அனைவருக்கும் நன்றி. திரைப்படத்தை, மனிதனை அரசியலை தூக்கிப் பிடிக்கும் மீடியா நண்பர்களுக்கு நன்றி. என் தயாரிப்பாளருக்கு என் முதல் நன்றி. என் கனவை புரிந்து நான் சொன்ன கதையை நம்பி இந்தப்படத்தை எடுக்க ஒரு தயாரிப்பாளர் முதலீடு செய்ய வேண்டுமெல்லவா, அது முக்கியம். ஒரு தயாரிப்பாளர் இல்லாமல் இங்கு எதுவும் இல்லை. சினிமா தான் நம் இணைப்புக்கு ஊண்டுகோலாக இருக்கிறது. நான் மலையாளி ஆனால் என் பாட்டி தமிழ் தான். என் வேர் தமிழ் தான். மலையாளம் கன்னடம் தெலுங்கு எல்லாம் தமிழில் இருந்து வந்த மொழிகள் தான். வந்தாரை வாழ வைக்கும் தமிழ் மொழி. இந்த படத்தை உங்கள் கையில் கொடுத்து விட்டோம் வாழ வையுங்கள். என்னை இயக்குநராக்கியது தமிழ் தான். நான் இங்கு தான் பல ஆண்டுகளாக வேலை பார்த்தேன். இந்த மொழி வாழ வைக்கும் என நம்பிக்கையில் தான் இருக்கிறேன். அகமொழி விழிகள் உங்கள் எல்லோரையும் மகிழ்விக்கும் நன்றி.
 
இசை கச்சேரிகளில் பாடல் பாடும் ஒரு இளைஞன், தன் காதலிக்கு ஒரு பிரச்சனை ஏற்பட, அதற்கெதிராக களமிறங்குகிறான். பார்வையில்லாத அவன் எதிரிகளை எப்படி பழி தீர்க்கிறான் என்பதை,   முற்றிலும் மாறுபட்ட கதைக்களத்தில், பரபர திருப்பங்களுடன் சொல்லி, ரசிகர்களை இருக்கை நுனியில் வைக்கும் அட்டகாசமான திரில்லராக இப்படம் உருவாகியுள்ளது. இப்படத்தில் ஆதம் ஹசன், நேஹா ரத்னாகரன் நாயகன் நாயகியாக நடித்துள்ளனர் இவர்களுடன், தர்மஜன், நவேதயா ஷாஜூ, குலப்புலி லீலா, ராஜீவ் கண்ணன் , சி.கே.ஆர், ஹரிதா, ராஷீ, தீபு ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். 
 
சச்சு கிரியேஷன்ஸ் நிறுவனம் சார்பில் பவுலோஸ் ஜார்ஜ் தயாரிக்கும் “அகமொழி விழிகள்” படத்தினை சசீந்திரா கே. சங்கர் இயக்கியுள்ளார். இசையமைப்பாளர் எஸ்.பி. வெங்கடேஷ் பின்னணி இசையைக் கையாண்டுள்ளார். மே மாதம் 9ஆம் தேதி தமிழகமெங்கும் இப்படத்தினை திரைக்குக் கொண்டுவர படக்குழு திட்டமிட்டுள்ளது. 

'சுமோ' விமர்சனம் 



வேல்ஸ் நிறுவனம் ஐசரி கே. கணேஷ் தயாரிப்பில் சிவா நடிப்பில் எஸ்.பி. ஹோசிமின் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் தான் 'சுமோ'

சரி வாங்க விமர்சனத்தை பார்ப்போம்:

விடிவி கணேஷ் நடத்தி வரும் ரெஸ்டாரண்ட் யில் வேலை பார்த்து வரும் கதாநாயகன் சிவா, கடலில் சர்ஃபிங் செய்வதை தொழிலாக கொண்டுள்ளார். ஒருநாள் கடலுக்கு சர்ஃபிங் செய்யப்போகும் சிவா, எதேச்சையாக கடலோரம் அலைகளில் அடித்துவரப்பட்ட யோஷினோரி தஷிரோ-வை பார்க்கிறார்.  அவர் இறக்கவில்லை உயிருடன் தான் இருக்கிறார் என முதலுதவி செய்து காப்பாற்றுகிறார். கண் விழிக்கும் யோஷினோரி தஷிரோ, தனது உயிரை காப்பாற்றிய சிவாவை ஒரு கடவுளாக பார்க்கிறார். 

சிவாவை விட்டு எந்நேரமும் பிரியாமல் இருக்கிறார்.  ஒரு கட்டத்தில், இவன் ஒரு சுமோ வீரர் என கண்டுபிடிக்கும் சிவா, இவனை மீண்டும் ஜப்பானுக்கு அனுப்பவேண்டும் என முடிவு செய்து அதற்கான முயற்சியில் ஈடுபடுகிறார். யோஷினோரி தஷிரோ ஒரு குழந்தை போலவே நடந்து கொள்கிறார். இவரால் பண நஷ்டம் சிவாவிற்கு ஏற்படுகிறது. பிறகு யோஷினோரி தஷிரோ ஜப்பான் போனாரா? இல்லையா? என்பதே கதை...

சிவா வழக்கமான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். நாயகியாக நடித்து இருக்கும் பிரியா ஆனந்த் அழகாக வந்து அளவான நடிப்பை கொடுத்து இருக்கிறார். யோஷினோரி தஷிரோ குழந்தை போல் முகபாவனை வைத்தும், மல்யுத்த வீரராகவும் நடித்து கவர்ந்து இருக்கிறார்.  நிவாஸ் கே பிரசன்னா இசையில் பாடல்கள் ரசிக்க வைக்கிறது. விடிவி கணேஷ், யோகிபாபு ஆகியோர் கொடுத்த வேலையை செய்து இருக்கிறார்கள். 

காமெடியில் கவனம் தேவை.... எடிட்டிங் சரியாக இல்லை என்றே சொல்லலாம்....

மொத்தத்தில் இந்த சுமோ சுமார் தான்.

RATING: 2.8/5


ட்ரீம் கேர்ள் படத்தின் முன்னோட்டம் மற்றும் பாடல்கள் வெளியீட்டு விழா!



சென்னை:

ட்ரீம் கேர்ள் படத்தின் முன்னோட்டம் மற்றும் பாடல்கள் வெளியீட்டு விழா சென்னை பிரசாத் லேப் திரையரங்கில் நடைபெற்றது.

 
ஒளிப்பதிவாளர் பி.சி. ஸ்ரீராம் இயக்கிய ‘மீரா’ படத்தின்  கதாசிரியரும் ‘அழியாத கோலங்கள் 2’ படத்தின் இயக்குநருமான எம் .ஆர் .பாரதி இயக்கத்தில் புதுமுகங்கள் ஜீவா, ஹரிஷா, பிரபு சாஸ்தா, இந்திரா மற்றும் பலர் நடிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம்  ‘ட்ரீம் கேர்ள்’. இப்படத்திற்கு சாலமன் போஸ் ஒளிப்பதிவு செய்துள்ளார். இளமாறன் இசையமைத்துள்ளார்.  வசனம் ஹேமந்த் செல்வராஜ். கலை இயக்கம் கலை. படத்தொகுப்பு .கே.பி. அஹமத் . சாருலதா பிலிம்ஸ் தயாரித்துள்ளது.பாடல்களை சரிகம வெளியிட்டுள்ளது. 
 
இப்படத்தின் முன்னோட்டம் மற்றும் பாடல்களைப் பிரபல ஒளிப்பதிவாளர் பி.சி. ஸ்ரீராம் வெளியிட்டார். விழாவுக்கு வந்திருந்த சிறப்பு விருந்தினர்கள் பெற்றுக் கொண்டனர். விழாவில் ஏராளமான இயக்குநர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் கலந்து கொண்டனர்.
 
விழாவில் படத்தின் ஒளிப்பதிவாளர் சாலமன் போஸ் பேசும்போது,
 
“முதலில் வாய்ப்பு கொடுத்த எம். ஆர். பாரதி அவர்களுக்கு நன்றி.நான் இயக்குநர் எம் .ஆர். பாரதியைச் சந்தித்து படம் பற்றிப் பேசிக் கொண்டிருந்தபோது  அவர் சென்னையில்   எடுக்கலாமென்றார். நான்தான் ஊட்டியில் எடுக்கலாம் என்று கூறினேன். வைடுஷாட், லாண்ட்ஸ்கேப் எடுத்துக் கொண்டு வா, இருவர் நடப்பது மாதிரி போனிலேயே எடுத்துக் கொண்டு வா என்றார். அடுத்த நாளே எடுத்து அனுப்பினேன். அதை அவர் பார்த்துவிட்டு அவர் ஊட்டியில் தான் நாம் படப்பிடிப்பு நடத்துகிறோம் என்றார். ஊட்டியின் காலநிலையும் வண்ணங்களும் மிகவும் சிறப்பாக இருந்தன.ஒரு சிறிய குழுவாகச் சென்று சிறப்பாகச் எடுத்து முடித்திருக்கிறோம்” என்றார்.
 
படத்தின் நாயகன் ஜீவா பேசும்போது,
 
“இந்தப் படத்தில் நடித்தது மறக்க முடியாத அனுபவம். உடன் நடித்தவர்களுக்கு நன்றி. இயக்குநர் மிகவும் அன்பானவர்,அவர் ஒரு குழந்தையைப் போன்றவர். எப்போதும் நேர் நிலையாக சிந்திப்பவர். அனைவருக்கும் நம்பிக்கை அளிப்பவர். இந்தப் படம் வெற்றி பெற வாழ்த்துங்கள்” என்றார்.
 
படத்தில் நடித்துள்ள பிரபு சாஸ்தா பேசும் போது,
 
“இந்தப் படத்தில் நான் அரவிந்த் என்ற ஒரு பாத்திரத்தில் நடித்திருக்கிறேன்.  இயக்குநர் மனதில் ஒரு உலகம் இருந்தது.  அந்த உலகத்தில் உள்ள கதாபாத்திரத்திற்கு என்னை தேர்ந்தெடுத்ததற்கு நன்றி. அவர் மிகவும் அன்பானவர் .அதிகம் பேச மாட்டார் , நேர்நிலை எண்ணம் கொண்டவர். ஒளிப்பதிவாளர் சாலமன் போஸ் ஒளிப்பதிவில் காதல் மொழி இருக்கிறது.அவர் ஒரு நிறத்தைத் தேர்ந்தெடுத்து அதில் நம்மை நிற்க வைத்தால் அது மிகவும் சிறப்பாக இருக்கும். மணிவண்ணன் சார் போல வசனங்களை ஹேமந்த் சிறப்பாக எழுதியிருக்கிறார்.படத்தில் என்னுடன் பணியாற்றிய அனைவருக்கும் நன்றி.பார்ப்பதற்கு எளிதாகத் தோன்றலாம் .ஆனால்  மிகவும் கடினமான இடங்களில் சிரமப்பட்டு  படப்பிடிப்பு நடத்தி இருக்கிறோம்” என்றார்.
 
 
எழுத்தாளர், இயக்குநர் அஜயன் பாலா பேசும் போது,
 
“தமிழ்நாட்டில் கனவுகளைக் காட்சியாக்கிக் கொடுத்த பி. சி. ஸ்ரீராம் அவர்கள் இங்கே வந்திருக்கிறார். நான் அண்ணன் எம். ஆர் .பாரதியிடம் உதவி இயக்குநராகச் சேர்ந்தேன். அவர் எப்போதோ  இயக்குநராக இருக்க வேண்டியது. சற்று தாமதம் ஆகிவிட்டது.எனக்கு ஒரு நல்ல சகோதரராக நண்பராக இருக்கிறார். நாங்கள் 30 ஆண்டு கால நட்புடன் இருக்கிறோம். நான் சென்னை வந்த போது சென்னையில் ஒரு நம்பிக்கை நீரூற்றாக அவர் தான் இருந்தார். அவரே தனக்கான இடத்தை சிரமப்பட்டு தேடி அமைத்துக் கொண்டுள்ளார்.இருந்தாலும் பலருக்கும் நம்பிக்கை தருபவராக இருந்தார். பல விளம்பரப் படங்கள் எடுத்துள்ளார். எப்போதும் போராடிக் கொண்டிருப்பவர் தான் . அது மட்டுமல்ல மற்றவர்களுக்கு எப்போதும் நம்பிக்கையைத் தருபவர். ஒரு நல்ல வரியைக் கூறினால் ஒரு அழகான காட்சியைக் கூறினால் கூட குழந்தையைப் போல ரசிப்பார்.
 
உலக அளவில் திரைப்படங்கள் பார்ப்பவர். உலக சினிமாக்களை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்துபவர். அவர் எப்போதும் ஒரு ரசிகராகவே தன்னை உணர்வர் அந்த ரசிக மனம் தான் அவரை உயிர்ப்போடு வைத்துள்ளது.அவர் ஒரு ட்ரீம் பாய் அவரது கனவு தான் இந்தப் படம்.இப்போது எவ்வளவோ தொழில்நுட்பம் வளர்ந்துள்ளது, ‘ஏ.ஐ’ என்கிறார்கள் அழகியலை எந்த ‘ஏஐ’ யாலும் உருவாக்க முடியாது. அந்த அழகியல் உள்ளவரை உலகம் அழியாது. இந்தப் படத்தின் பாடல்கள் அனைவரின் பிளே லிஸ்டிலும் இருக்கும். இது  கனவைப் பற்றிப் பேசுகிற படம். இதைத் தனது கனவுப் படம் என்று அவர் உருவாக்கி இருக்கிறார். படம் வெற்றி பெற வாழ்த்துக்கள்” என்றார்
 
 
இயக்குநர் நந்தா பெரியசாமி பேசும்போது,
 
“எனது நண்பர்களில் பாரதிக்கு சிறப்பான இடம் உண்டு.ஒரு நாள் ஒரு கதை இருக்கிறது பேசலாம் என்று எங்களை அழைத்தார். நாங்கள் லிங்குசாமி,பாலாஜி சக்திவேல், பிருந்தா சாரதி  ஆகியோர் அவர் அழைத்த இடத்திற்குச் சென்றோம். சேலையூரில் ஒரு ரிசார்ட்டில் எங்களை அழைத்து கதை பற்றிப் பேசாமல் மனம் குளிர சாப்பாடு போட்டார். கதை பற்றிப் பேசுவது இவ்வளவு சுகமானதா என்று நினைத்தோம்.
 
அவர் தனது உழைப்பால் தனது பதிப்பகத் துறையில் பல சாதனைகள் படைத்திருக்கிறார் .நான் கிராமத்திலிருந்து சென்னை வந்த போது எனக்கு, சாதாரண வணிகப் படங்களை மட்டுமே பார்த்து வந்த எனக்கு, ஆன்டன் செகாவையும் அகிரா குரோசாவையும் அறிமுகப்படுத்தியவர் அவர்.இவர்களெல்லாம் சினிமாவில் இருக்கிறார்களா என்று ஆச்சரியப்படுத்தியவர். அவர் நல்ல ரசிகர். நல்ல கவிதை சொன்னால்  500 ரூபாய் பரிசு கொடுப்பார் .எங்களது வாசிப்பை விரிவு படுத்தியவர்.அவரது ஒரு வரிக் கதை இந்த அற்புதமான படமாக வந்திருக்கிறது .படம் வெற்றி பெற வாழ்த்துக்கள்” என்றார்.
 
படத்தின் நாயகி ஹரிஷா பேசும்போது ,
 
“இங்கே பெரிய பெரிய ஜாம்பவான்கள் வந்திருக்கிறார்கள்.அவர்கள் அமர்ந்திருக்கும் இப்படிப்பட்ட மேடையைப் பகிர்ந்து கொள்வது மகிழ்ச்சியாக இருக்கிறது.வாய்ப்பு கொடுத்ததற்கு நன்றி.இயக்குநர் பாரதி சார் நடிப்பவர்களைத் தேர்வு செய்த போது என்னை அழைத்தார்.பார்த்துவிட்டு நீ தான் என் ட்ரீம் கேர்ள் என்றார். எனக்கு மகிழ்ச்சியாக இருந்தது. 25 நாட்கள் படப்பிடிப்பு நடந்தது. மிகவும் மகிழ்ச்சிகரமான அனுபவமாக இருந்தது .நாங்கள் அழகாக இருப்பதே இந்தப் படத்தைப் பார்த்த பிறகுதான் தெரிந்தது. படம் வெற்றி பெற வாழ்த்துங்கள்” என்றார்.
 
இயக்குநரும் கதை வசன கர்த்தாவுமான பிருந்தா சாரதி பேசும் போது ,
 
“பத்திரிகையில் இருந்து இந்த இடத்திற்கு வந்திருக்கிறார் இயக்குநர் எம் ஆர் பாரதி. 1992 இல் இருந்து அவர் எனக்குப் பழக்கம். ‘மீரா’ படத்திற்குப் பிறகு ‘அழியாத கோலங்கள் 2 ‘ எடுத்து ஆச்சரியப்படுத்தினார். இப்போது இந்தப் படத்தை எடுத்திருக்கிறார். சினிமா வாய்ப்பு இல்லை என்றாலும் டிவி உலகத்தில் ஒரு வெற்றியாளராக இருந்தார். தொலைக்காட்சிகளுக்கு வெற்றியாளர்களின் கதைகளை எடுத்து நிகழ்ச்சி தயாரித்துக் கொடுத்தார். பல விளம்பரப் படங்களும் எடுத்துள்ளார் அப்போது நான் உதவி இயக்குநராக பணிபுரிந்தேன் .அதற்காகப் பல ஊர்களுக்கு அவருடன் சென்று இருக்கிறேன். அதன் மூலம் சொற்ப வருமானம்தான் வந்தாலும் தொடர்ந்து இயங்கிக் கொண்டே இருந்தார். இவரது மனைவி ஒரு பொறியியல் பேராசிரியர்.  பொறியியல் கல்லூரிக்காக அவர் எழுதிய புத்தகத்தை கல்லூரிகளின் பாடத்தில் துணைப்பாடத்தில் சேர்த்து விட வேண்டும் என்று முதலில் இவர் தேடி அலைந்தார். ஆனால் அது பெரிய வெற்றி பெற்று இன்று பெரிய வெற்றிகரமான பதிப்பாளராக இருக்கிறார்.
 
அவரை முதலில் சந்தித்தபோது பிடித்த படத்தைக் கேட்ட போது நான் ‘மூன்றாம் பிறை’ என்றேன் அதிலிருந்து அவர் இணக்கம் ஆகிவிட்டார். எனக்குப் பிடித்த படங்கள்  ‘மௌன ராகம்’,’முதல் மரியாதை’, ‘உதிரிப்பூக்கள்’ என்றிருந்தது. அவர்தான் எனக்கு உலக சினிமாவை அறிமுகப்படுத்தினார்.’சாருலதா’  என்ற படத்தைப் பற்றி அவர்தான் முதலில் பேசினார்.அகிரா குரோசோவா போன்ற மேதைகளை அறிமுகப்படுத்தினார். சிறந்த ரசனை உள்ளவர். நீண்ட இடைவெளிக்குப் பிறகு ‘அழியாத கோலங்கள் 2’ என்று அற்புதமான படத்தை இயக்கினார் .திரைப்பட உருவாக்கத்தில் இப்படியும் செய்யலாமா என்று யோசிக்க வைத்தார்.
 
ஒவ்வொரு மனிதனுக்கும் உள்ள கனவு இருக்கும் . அந்தக் கனவு தான் இந்தப் படம். இங்கே வந்திருக்கும் பி.சி ஸ்ரீராம் அவர்களை நான் பிலிமாலயா பத்திரிகைக்காக பேட்டி எடுக்க வேண்டும் என்று அவரிடம் எப்படி பேசுவது என்ன கேள்வி கேட்பது என்று எனக்குக் தெரியவில்லை .பி சி ஸ்ரீராம்  உருவான கதை எப்படி என்று கேட்டேன்.அப்போது அவரது சித்தி பிரபல மொழிபெயர்ப்பாளர் எழுத்தாளர் சரஸ்வதி ராம்நாத் என்றார். அவரைச் சந்திக்க வரும் பல எழுத்தாளர்களை இவர் பார்த்து இலக்கியம் பற்றி ஆர்வம் வந்திருக்கிறது.ஒரு நாள் ஒரு கூட்டத்துக்கு அழைத்துச் சென்றாராம் .அது ஜே. கிருஷ்ணமூர்த்தி பேசிய கூட்டம் . அப்போது அவர் ‘உன் கண்களால் உலகைப் பார் ‘என்று கூறியதை மனதில் எடுத்துக்கொண்டு அப்படி உலகம் பார்க்கும் கண்களால் பார்க்காமல் உன் கண்களால் உலகத்தை பார் என்று அவர் பார்க்க ஆரம்பித்தார். அந்தக் காட்சிகள் எல்லாம் நமக்கு வேறு விதமாக அழகாகத் தெரிந்தன. இந்தப் படம் வெற்றி பெற வாழ்த்துக்கள்” என்றார்.
 
 
 
இயக்குநர் கதிர் பேசும்போது,
 
“நான் கல்லூரியில் படித்த போதே எம்.ஆர். பாரதி எனக்கு பழக்கம் .அப்போது பல படங்களுக்கு நான் டிசைனராக பணியாற்றி இருக்கிறேன். எல்லாமே சின்ன சின்ன படங்கள். ‘வேலியில்லா மாமரம்’ என்ற படத்தில் அவர் உதவி இயக்குநராக பணிபுரிந்தார்.அப்போதிலிருந்து எனக்கு அவர் பழக்கம். அவர் நல்ல புத்தக வாசிப்பு கொண்டவர். எனது புத்தக அறிவுக்குக் காரணம் அவர் தான். அவர் வீட்டில் ஏராளமான புத்தகங்கள் இருக்கும். அவர் வீட்டுக்குச் சென்றால் ரஷ்ய நாவல்கள் நிறைய படிப்போம். அவற்றை மீண்டும் மீண்டும் அங்கே போய் படிப்போம்.
எழுத்து என்பது சினிமாவுக்கு மிகவும் அத்தியாவசியம்.  சினிமாவுக்கே எழுத்துதான்  அஸ்திவாரம் அது இல்லாததால் தமிழ் சினிமா இன்று சீர்கெட்டுப் போயிருக்கிறது.யாரும் படிப்பதில்லை .ஆனால் புத்தகம் எழுத்தை ஆயுதமாகக் கொண்டு பாரதி இங்கே இயக்குநராக இருக்கிறார்.அவருக்கு எனது வாழ்த்துக்கள். படம் கவிதை போல வந்திருக்கிறது. வெற்றி பெற வாழ்த்துகிறேன்” 
என்றார்.
 
திரைப்படக் கல்லூரி முதல்வரும் ஓவியருமான கலைமாமணி ட்ராட்ஸ்கி மருது பேசும்போது ,
 
“சென்னை வந்த காலத்தில் இருந்து  பாரதியை எனக்குத் தெரியும் . அப்போது பழக்கமான பல நண்பர்கள் இங்கே வந்திருக்கிறார்கள். பாரதி என் நல்ல நண்பர். இந்தப் படம் வெற்றி பெற வாழ்த்துகிறேன்” என்றார்.
 
இயக்குநர் வசந்தபாலன் பேசும்போது,
 
“‘மீரா’ படத்தில் நான் உதவி எடிட்டராக பணியாற்றினேன். அப்போது எடிட்டர் லெனின் – விஜயனைப் பார்க்க அடிக்கடி பிசி ஸ்ரீராம் சார் அங்கே வருவார். அவர் ஒளிப்பதிவில் எடுக்கப்பட்ட படத்தின் காட்சிகளைப் பார்த்து எனக்கு வியப்பாக இருக்கும். இசைஞானி இளையராஜாவுக்கு சற்றும் குறைவில்லாத பெருமைக்குரியவர் ஒளிப்பதிவு  மேதை பி. சி.. ஸ்ரீராம் அவர்கள் .
 
இவர் படத்தில் இவரது ஒளிப்பதிவில்தான் நாம் அதுவரை பார்த்த சாதாரண வீடு கூட அழகாகத் தெரிந்தது. வீடு இவ்வளவு அழகாக இருக்கிறது என்று இவரது ‘மௌன ராகம் ‘படத்தைப் பார்த்து தான் தெரிந்து கொண்டேன் .ஒரு காட்டன் புடவையைக் கூட அழகாகக் காட்ட முடியுமா என்று நான் வியந்தேன். ‘திருடா திருடா ‘படத்தின்  ‘தீ தீதித்திக்கும் தீ  ‘ பாடலில் நாம் இதுவரை பார்த்த எழும்பூர் மியூசியத்தைக் கூட அவ்வளவு அழகாக காட்டியிருப்பார். கமலா தியேட்டரில் அந்தப் படத்தை பார்த்தேன்.அந்தப் பாடலில் விளக்குகள் அணைந்து எரியும்போது அந்த அவரது ஒளி ஜாலத்தைப் பார்த்து திரையரங்க ரசிகர்கள் கைதட்டினார்கள். மீண்டும் பார்த்தபோது அதே காட்சியில் கைதட்டினார்கள்.
 
வசனங்கள் ,நடிப்பு எல்லாவற்றையும் கடந்து ஒளிப்பதிவுக்குக் கைத்தட்டல் பெற்றவர் இந்த ஒளிப்பதிவு மேதை.அப்படி தனது ஒளிப்பதிவின் மூலம் சிறப்பு சேர்த்தவர் இங்கே வந்திருக்கிறார் .இன்று இந்தியாவின் தலைசிறந்து விளங்கும் பல ஒளிப்பதிவாளர்கள் அவர்  மூலம் வந்தவர்கள். அவர் ஒளி அமைப்பின் மூலம் கவிதை எழுதியவர் .அதன் மூலம் ஒரு மாயாஜாலம் நிகழ்த்தியவர் .ஒளியாலும் கதை சொல்ல முடியும் என்று நிரூபித்தவர் .அவரது ‘குருதிப்புனல்’ ,’அக்னி’ நட்சத்திரம் போன்ற படங்கள் எந்த ஏஐ-யும் இல்லாத அந்தக் காலத்திலேயே 35 எம் எம் பிலிமில் அசத்தியவர் .
 
‘அலைபாயுதே’, ‘ஓகே கண்மணி’, ‘சீனி கம் ‘ வரை அவர் தனது மேதைமையான ஒளிப்பதிவைக் காட்டியவர்.பெரிய மாயாஜாலம் நிகழ்த்தியவர். இவர் தமிழ் சினிமாவால் கொண்டாடப்பட வேண்டிய ஒருவர்.சினிமா மேதைகளைக் கொண்டாட வேண்டும். விரைவில் இவருக்கான விழா எடுக்க வேண்டும் என்றும் இந்த மேதை கொண்டாடப்பட வேண்டும் என்றும் இதன் மூலமாக வேண்டுகோள் விடுக்கிறேன். 
 
கவனிப்பாரற்று கிடந்த எம்ஜிஆர் திரைப்படக் கல்லூரிக்கு டிராட்ஸ்கி மருது அவர்கள்  பொறுப்பேற்ற போது நான் மிகவும் மகிழ்ச்சி அடைந்தேன். கல்லூரிக்காக 10 கோடி ரூபாய் ஒதுக்கி இருக்கும் செய்தியை அறிந்து மிகவும் மகிழ்ச்சி அடைந்தேன். இனி திரைப்படக் கல்லூரிக்கு ஒளிமயமான எதிர்காலம் இருக்கும் என்று நம்புகிறேன். பாரதி இயக்கியிருக்கும் இந்தப் படம் வெற்றி பெற வேண்டும்” என்று கூறி படக் குழுவினரை வாழ்த்தினார்.  
 
 
பிரபல ஒளிப்பதிவாளர் பி .சி. ஸ்ரீராம் பேசும் போது,
 
“இங்கே பாரதி பற்றி எல்லாரும் புகழ்ந்து பேசுவதைப் பார்த்தபோது ,ஒரே கருத்தை எல்லோரும் கூறிய போது எனக்கு சிலிர்ப்பாக இருந்தது. நான் வேறு விதமான விழாக்களில் கலந்து கொண்டுள்ளேன். சினிமா ஆடியோ விழாவில் கலந்து கொள்வது இதுவே முதல்முறை. பாரதி அழைத்தால் மறுப்பு சொல்ல முடியுமா? அவர் தனது நட்பின் மூலம் உயர்ந்திருக்கிறார்.எனக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது.
 
எங்களுக்குள் நீண்ட நாள் நட்பு உண்டு.எங்களுக்குள் பல கதைகள் உண்டு.  அவரது திருமணத்திலிருந்து பல கதைகள் உண்டு. நான் சொன்ன ஒரு வரிக் கதையை அவர் திரைக்கதையாக்கிக் கொடுத்தார். சுவாரசியமாக மாற்றி இருந்தார். நன்றாக இருந்தது.அது வழக்கமான படமாக இருக்காது. அவர் இது மாதிரி அர்த்தமுள்ள சிறிய பட்ஜெட் படங்கள் செய்தாலே போதும். பல கோடி ரூபாய் பெரிய பட்ஜெட் படங்கள் எல்லாம் வேண்டாம். இந்தப் படம் நன்றாக வர வேண்டும் .பாரதிக்கு வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்” என்றார்.
 
இயக்குநர் எம் .ஆர் .பாரதி பேசும் போது,
 
“நான் சினிமாவுக்கான உதவி இயக்குநர் வாய்ப்பு தேடிய போது சரியான படம் அமைய வில்லை. சின்ன சின்ன படங்களில் நான் உதவி இயக்குநராக வேலை பார்த்தேன்.’நெஞ்சமெல்லாம் நீயே’ என்ற படத்தில் பணியாற்றினேன். அதுதான் உருப்படியான ஒரு படம் .
 
‘மீரா’ படத்திற்கு பிறகு பல ஆண்டுகள் கழித்து 12 நாளில்  ‘அழியாத கோலங்கள் 2 ‘படத்தை எடுத்தோம். அந்த பட முயற்சியில் இறங்கிய போது அர்ச்சனா தயாரிக்க முன் வந்தார். நான் பொருளாதார சிக்கலில் மாட்டிக் கொள்ளக் கூடாது என்று அர்ச்சனா தயாரிக்க முன் வந்தார். அப்போது ரேவதியை இயக்குநராக ஆக்கலாமே படத்துக்கு ஒரு மதிப்பு கிடைக்கும் என்றேன். உன் கனவு இது.நீதான் இயக்க வேண்டும் என்று கூறினார். அப்படி அந்தப் படத்தை 12  நாட்களில்  எடுத்தோம்.யூட்யூபில் லட்சக்கணக்கான பேர் பார்த்துள்ளார்கள்.
 
இந்த ‘ட்ரீம் கேர்ள்’ படத்திற்கு நான்கு காட்சிகள்  எடுப்பது போல்  திட்டத்தோடு சென்றோம். ஆனால் முழுப் படத்தையும் முடித்து விட்டு வந்திருக்கிறோம். 16 நாட்களில் பெரும்பாலான காட்சிகளை எடுத்து விட்டோம். சினிமா என்பது கஷ்டம் கிடையாது .தேவையில்லாமல் சிரமப்படக்கூடாது. சரியாக வாய்ப்புகள் அமையவில்லை என்றால் அதிலிருந்து ஒரு பிரேக் கொடுத்துவிட்டு மீண்டும் செல்லலாம். சற்று விலகி இருந்து பார்த்தால் நமக்கு ஒரு திறப்பு கிடைக்கும்.
 
நான் சினிமாவில் வாய்ப்பு கிடைக்க வேண்டும் என்று சிரமப்பட்டதில்லை .சினிமா நம்ப வேண்டும் நேசிக்க வேண்டும். சிறிய பட்ஜெட்டில் சிக்கனமாகப் படம் எடுக்கக் தெரிந்தால் நம்மை அது காப்பாற்றி விடும். சிக்கனமாக எடுத்தால் இழப்பும் குறைவாக இருக்கும். முதலில் நான் ‘மீரா’ படத்திற்கு கதை வசனம் எழுதினேன். பி சி சார் இயக்கினார். அதன் பிறகு சினிமாவை நான் நேசித்ததால் அதற்குள்ளேயே எப்போதும் இருப்பது போல் பார்த்துக் கொண்டேன்.
 
ராஜ் டிவிக்காக நிறைய விளம்பரங்கள், விளம்பர படங்கள் தயாரித்தேன். கல்லூரிகளுக்கு புத்தகம் போட்டேன். முதலில் இக்னோ எனப்படும் இந்திராகாந்தி திறந்தவெளி பல்கலைக்கழகத்திற்காக ஒரு சிறு புத்தகம் போட்டோம். இந்தியா முழுக்க ஒரே பாடத்திட்டம் இருந்ததால் அந்தச் சிறிய புத்தகம் பெரிய வெற்றி பெற்றது. அதற்குப் பிறகு அந்த துறையில் நுழைந்து வெற்றிகரமாக 26 ஆண்டுகளாக சாருலதா பப்ளிகேஷன் நடத்தி வருகிறேன். எனக்குள் இருந்த சினிமா கனவை அழிக்காமல் இருந்ததால் அதற்குப் பிறகும் ‘அழியாத கோலங்கள் 2 ‘எடுக்க முடிந்தது.இந்தப் படம் வெற்றி பெற ஒத்துழைப்பு கொடுங்கள்” என்றார்.
 
நடிகை இந்திரா வரவேற்புரையாற்றினார். தொலைக்காட்சித் தொகுப்பாளர் சுமயா தொகுத்து வழங்கினார்.

நடிகைகளில் சகலகலாவல்லி என்றால் அது நடிகை தேவயானி தான்- பேரரசு 



சென்னை:

 
தர்ஷன் பிலிம்ஸ் சார்பில் ஜோதி சிவா தயாரிப்பில் உருவாகியுள்ள திரைப்படம். ‘நிழற்குடை’. சிவா ஆறுமுகம் கதை திரைக்கதை எழுதி இயக்குகிறார், இவர் இயக்குநர் கே.எஸ் அதியமானிடம் உதவியாளராக பணியாற்றியவர்..
 
தேவயானி முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கும் இந்த படத்தில் விஜித் கதாநாயகனாகவும் கண்மணி கதாநாயகியாகவும் மற்றும் முக்கிய வேடங்களில் இளவரசு, ராஜ்கபூர் மனோஜ்குமார் வடிவுக்கரசி, நீலிமா இசை, நிஹாரிகா, அஹானா என இரு குழந்தைகள் நடித்துள்ளனர் மேலும் தர்ஷன் சிவா என்ற புதுமுகம் மிரட்டலான கதாபாத்திரத்தில் அறிமுகமாகிறார்.
 
தமிழ்நாடு மற்றும் புதுவையின் திரையரங்க வெளியீட்டு உரிமையை பிளாக்பஸ்டர் புரடெக்க்ஷன் நிறுவனம் பெற்றுள்ளது. உலகமெங்கும் வரும் மே மாதம் 9ம் தேதி நிழற்குடை வெளியாகிறது.
 
இதனையடுத்து ‘நிழற்குடை’ படத்தின் இசை மட்டும் ட்ரைலர் வெளியீட்டு விழா நேற்று இரவு சென்னை சாலிகிராமம் பிரசாத் லேபில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களாக இயக்குநர் கே.பாக்யராஜ், நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், இயக்குநர் பேரரசு, தயாரிப்பாளர் டி.சிவா, பெப்சி தலைவர் இயக்குனர் ஆர்.கே செல்வமணி, நடிகை வனிதா விஜயகுமார், நமீதா, தயாரிப்பாளர் மதியழகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
 
இந்த நிகழ்வில் இயக்குநர் சிவா ஆறுமுகம் பேசும்போது,
 
“இந்த படத்தில் இன்றைக்கு தேவையான கருத்தை ஆறிலிருந்து அறுபது வயது வரை உள்ளவர்களுக்கு பிடிக்கும் விதமாக நான் அழுத்தமாக சொல்லியிருக்கிறேன். இந்த படத்திற்கு நானே தான் தயாரிப்பாளர். இந்த காலகட்டத்தில் ஒரு சின்ன படத்தை தயாரிப்பதற்கு எவ்வளவு போராட்டங்கள் என்பது அனைவருக்கும் தெரியும். இப்படிப்பட்ட சூழ்நிலையில் இந்த படத்தில் நடித்த நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் தான் எனக்கு மிகப்பெரிய ஒத்துழைப்பு தந்து ஆதரவாக இருந்தனர்” என்று கூறினார்.
 
நாயகன் விஜித் பேசும்போது,
 
“கடந்த வருடம் நான் நடித்த ஒயிட் ரோஸ் என்கிற படம் வெளியானது. அதை தொடர்ந்து எனக்கு கே/எஸ் அதிகமான் அலுவலகத்தில் இருந்து அழைப்பு வந்தது/ கதை சொல்ல வேண்டாம் என்று கூறினாலும் கூட, அரை மணி நேரம் சொன்னார்கள். கதை பிடித்து இருந்தது. எப்போது சார் தேதிகள் வேண்டும் என கேட்டபோது கொஞ்சம் வெயிட் பண்ணுங்கள் சொல்கிறோம் என்று சொன்னதும் எனக்கு இந்த படத்தில் நாம் நடிக்கிறோமா, எதற்காக நம்மை அழைத்தார்கள், என்ன கதாபாத்திரம் பண்ண போகிறோம் என சிறிய குழப்பமும் சந்தேகமும் வந்தது. ஆனால் ஒரு வாரம் கழித்து மீண்டும் எனக்கு அழைப்பு வந்தபோது இந்த படத்தில் நான் நடிப்பதை உறுதி செய்தார்கள். அது மட்டுமல்ல என்னுடைய மகளுக்கும் இந்த படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தை கொடுத்தார்கள். தேவயானி இந்த படத்தில் நடிக்கிறார்கள் என்று சொன்னதும் கொஞ்சம் எனக்கு படபடப்பாகத்தான் இருந்தது. ஆனால் முதல் நாள் படப்படிப்பிலிருந்து அவர் என்னை எளிதாக உணர வைத்து விட்டார், இந்தப்படத்தில் நான் நடித்தது எல்லாமே பல சீனியர் நடிகர்களுடன் தான்” என்று கூறினார்.
 
நாயகி கண்மணி பேசும்போது, 
 
“இந்த படத்தில் நடிப்பதற்கு முன்னதாக சின்னத்திரையில் தான் நடித்து வந்தேன். அதேசமயம் இந்த படத்தில் நடிக்க வந்தபோது எப்படி ஒரு பெரிய நடிகையை நடத்துவார்களோ அதேபோல முறையாக, நல்ல விதமாக நடத்தினார்கள். என்னுடைய முதல் மேடை இது. சின்னத்திரைக்கு வந்த இந்த நான்கு வருடங்களில் எனக்கு நீங்கள் கொடுத்து வந்த அதே அன்பையும் ஆதரவையும் வெள்ளித்திரையிலும் கொடுப்பீர்கள் என நம்புகிறேன். படம் சிறிய படமாக இருந்தாலும் நாங்கள் அனைவருமே இதற்கு மிகப்பெரிய கடின உழைப்பை கொடுத்திருக்கிறோம். ஒரு நல்ல ஃபீல் குட் படமாக இது இருக்கும்” என்று கூறினார்.
 
நடிகர் ராஜ்கபூர் பேசும்போது,
 
“இப்போது வரும் படங்களில் எல்லாமே துப்பாக்கியை தூக்கிக்கொண்டு அலைகிறார்கள் ஆனால் இது எண்பதுகளில் வந்தது போன்று குடும்ப அம்சத்தை வலியுறுத்தும் படமாக உருவாகியுள்ளது. வெளிநாட்டிற்கு சென்று வேலை வாய்ப்பு தேடும் ஒரு தம்பதியினரின் சிரமத்தை இது சொல்கிறது. எல்லோரும் வெளிநாட்டுக்கு சென்று தான் வேலை பார்க்க வேண்டுமா என்கிற கேள்வியையும், பெற்றோர்கள் குழந்தைகளை எப்படி வளர்க்க வேண்டும் என்கிற படிப்பினையையும் இந்த படம் கொடுக்கும் என நம்புகிறேன்” என்று கூறினார்.
 
நடிகர் ரவிமரியா பேசும்போது,
 
“எனக்கும் இந்த படத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. இந்த படத்தின் இயக்குநர் இந்த நிகழ்வில் கலந்து கொள்ள வேண்டும் என்று வற்புறுத்தினார். அதற்கு முன்பு இந்த படத்தின் சிறப்பு காட்சி ஒன்றை திரையிட்டார்கள். அதை என்னால் பார்க்க முடியவில்லை. ஆனால் பார்த்தவர்கள் எல்லோரும் இந்த படத்தை பார்க்காமல் நீங்கள் மிஸ் பண்ணி விட்டீர்கள், அருமையான பீல் குட் படம் என்று சொன்னார்கள். படத்தின் கதையைக் கேட்டதும் அதை உணர்ந்தேன்” என்று கூறினார்.
 
நடிகை வனிதா விஜயகுமார் பேசும்போது,
 
“தேவயானியின் மிகப்பெரிய ரசிகை நான். எல்லோருக்கும் காதல் கோட்டை தேவயானியை பிடிக்கும் என்றால் எனக்கு கல்லூரி வாசல் படத்தில் நடித்த அந்த பப்ளியான தேவயானியை ரொம்ப பிடிக்கும். ரொம்பவே எளிமையான நல்ல இதயம் கொண்டவர். அவரை  இந்த திரை உலகின் தேவசேனா இன்று தாராளமாக சொல்லலாம். விஜய் சொன்னது போல 20 வயதில் ஒரு பெண் ஹீரோயினாக இருப்பது அதிசயம் அல்ல. ஆனால் 40 வயதிலும் கதாநாயகியாக நிற்பது தான் பெரிய விஷயம். மனோரமா ஆச்சி, ஊர்வசி போல அவரும் ஒரு இடத்தை பெறுவார், தற்போதைய சூழலில் ஒரு பெண் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்து ஒரு படம் திரையரங்கு ரிலீசுக்கு வருவதே சாதனை என்று தான் சொல்ல வேண்டும். சின்ன படம்  என்று சொல்வதில் எனக்கு உடன்பாடு இல்லை நல்ல படம் என்று சொல்லலாம்” என்று கூறினார்.
 
நடிகர் நகுல் பேசும்போது,
 
“இயக்குனர் கே.எஸ் அதியமான், சிவா ஆறுமுகம் ஆகியோர் இணைந்திருப்பதால் இந்த படம் நிச்சயம் ஒரு கருத்துள்ள படமாக வந்திருக்கும் என்று நம்புகிறேன். கண்மணி பாடல் மனதை தொடும் விதமாக இருக்கிறது. இந்த படத்தைப் பார்த்து கற்றுக்கொள்ள சில விஷயங்கள் இருக்கின்றன. கே.எஸ் அதியமான் எங்கள் குடும்பத்தில் ஒருவர். அவரால் தான் நாங்கள் சினிமாவுக்கு வந்தோம். தமிழர்களாகவே மாறிவிட்டோம். அதனால் இது எங்களுடைய குடும்ப நிகழ்ச்சி போல தான், என்னுடைய அக்காவின் கடின உழைப்பை சிறு வயதில் இருந்து பார்த்து வருகிறேன். இப்போது என் அம்மா இல்லை என்றாலும் அக்கா உருவில் அம்மாவை பார்க்கிறேன். இந்த கதை கூட அக்காவை கொஞ்சம் தொடர்புபடுத்தும் விதமாகத்தான் இருக்கும்” என்று கூறினார்.
 
தயாரிப்பாளர் மதியழகன் பேசும்போது,
 
“நாயகன் விஜித் என்னை அழைத்து இந்த படத்தை பார்க்கச் சொன்னார். ஒரு நாயகன், நாயகி மட்டுமல்ல, நடிகை தேவயானி இந்த படத்தை தூக்கி நிறுத்தும் ஒரு கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த படம் நிச்சயம் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும். இந்த படத்தை வெளியிட முன் வந்த பிளாக் பஸ்டர் நிறுவனத்திற்கு நன்றி. சின்ன படம், பெரிய படம் என்று பட்ஜெட்டை வைத்து சொல்வதை விட ஓடும் படம், பெரிய படம், ஓடாத படம் சின்ன படம் என்று தான் நான் சொல்வேன்” என்று கூறினார்.
 
இயக்குநர் ராஜகுமாரன் பேசும்போது,
 
“இந்த நிழற்குடை எல்லோருக்கும் பிடிக்கும் ஒரு படமாக, எல்லோரும்  பார்க்கும் ஒரு நல்ல படமாக இருக்கும். நல்ல படங்களை காண்பது என்பதே அரிதாக இருக்கிறது. தன்னை 30 வருடத்திற்கு முன்பு அறிமுகப்படுத்திய அதே குழுவினருடன் மீண்டும் தேவயானி இணைந்து நடிப்பதும் மீண்டும் ஒரே குழுவினராக அவர்கள் இங்கே அமர்ந்திருப்பதும் ஒரு மேஜிக் என்று தான் சொல்ல வேண்டும். நம்முடைய நீண்ட நெடிய பயணத்தில் எவ்வளவோ நிழல்கள் நம் பயணத்திற்கு துணையாக இருந்திருக்கின்றது. நிழல் இல்லாத நேரத்தில் கூட சற்றென்று ஒரு குடையாக எத்தனையோ நல்ல உள்ளங்கள் வந்திருக்கிறார்கள். எல்லோரும் திரும்பி பார்க்கும் ஒரு விஷயமாக இந்த நிழற்குடை இருக்கும் என்று நம்புகிறேன்” என்று கூறினார்.
 
நடிகை நமீதா பேசும்போது,
 
“இந்த படத்தில் சொல்லப்பட்டுள்ள விஷயம் இப்போது நாட்டில் நடக்கக்கூடிய ஒரு நிஜம் தான். இந்த சமயத்தில் என் வீட்டில் இருக்கும் என் மாமியார், மற்றும்  ஆயாம்மாக்கள் இருவருக்கும் நன்றி சொல்லணும். ஆயாம்மா பணிக்கு இப்போது நல்ல மதிப்பும் சம்பளமும் இருக்கிறது. அம்மா இல்லாத இடத்தில் அவர்தான் அம்மா. இந்த படத்தில் அதை கொஞ்சம் திரில்லிங் அம்சங்கள் சேர்ந்து காட்டி இருக்கிறார்கள். படம் பார்ப்பவர்கள் பல இடங்களில் தங்களுடன் அதை தொடர்பு படுத்திக் கொள்வார்கள்” என்று கூறினார்.
 
தயாரிப்பாளர் டி.சிவா பேசும்போது,
 
“இந்த படத்தை பார்த்ததும் மனம் நெகிழ்ந்து போனேன். இன்று சிறிய படங்களின் நிலைமை மிக கேவலமான சூழ்நிலையில் இருக்கிறது. இந்த சமூகத்திற்கு தேவையான ஒரு நல்ல கருத்தம்சம் கொண்ட இந்த படத்தை தயாரித்து இயக்கியதற்காக இயக்குநர் சிவா ஆறுமுகத்தை பாராட்ட வேண்டும். இந்த படத்தின் மூலம் நடிகர் விஜித் ஒரு அற்புதமான நடிகராக தமிழ் சினிமாவிற்கு கிடைத்திருக்கிறார். இதையெல்லாம் தாண்டி தமிழ் சினிமாவின் ஒரு பொக்கிஷமாக, இன்னொரு நடிகர் திலகமாக இருக்கும் தேவயானி இந்த படத்தில் இந்த கதாபாத்திரமாகவே வாழ்ந்துள்ளார். அவருடைய இயல்பான குணமாகவே அது இருப்பதால் அவருக்கு அது எளிதாக போய்விட்டது. அவருக்கு இந்த படம் நிறைய விருதுகளை கொண்டு வந்து சேர்க்கும்” என்று கூறினார்.
 
இயக்குநர் பேரரசு பேசும்போது,
 
“நடிகைகளில் சகலகலாவல்லி என்றால் அது நடிகை தேவயானி தான்.. நடிகை, சமூக சேவை, டீச்சர், தயாரிப்பாளர், இப்போது இயக்குநர் என பல முகங்கள் காட்டுகிறார். விரைவில் அவர் இயக்குநர் சங்கத்தில் உறுப்பினராக வேண்டும். 100 படம் நடித்திருக்கிறார். வீட்டிலேயே கணவர் இருக்கிறார். ஆனாலும் அதையெல்லாம் தாண்டி ஒரு டைரக்சன் கோர்ஸ் படித்துவிட்டு குறும்படத்தை இயக்கியிருக்கிறார். இந்த காலகட்டத்திற்கு மிக அவசியமான படம் தான் இந்த நிழற்குடை. குழந்தையை வளர்த்து விடுவது என்பது வேறு.. குழந்தை வளர்ப்பு என்பது வேறு. குழந்தையை பெற்றால் மட்டும் போதாது. வளர்க்க வேண்டும். அதைத்தான் இந்த நிழற்குடை சொல்கிறது. குழந்தைகளுடன் பெற்றோர் செலவிடும் நேரம் குறைவாக இருக்கிறது. அவர்களை அன்பு காட்டி அரவணையுங்கள். குழந்தையை நீங்கள் ஒழுங்காக வளர்த்தால் தான் நாளை அதனுடைய வாழ்க்கை நன்றாக இருக்கும்” என்று கூறினார்.
 
நடிகை தேவயானி பேசும்போது,
 
“என்னுடைய குடும்ப விழா இது. இந்த மேடையில் 30 வருடங்களுக்கு முன்பு என்னை அறிமுகம் செய்த இயக்குநர் கே.எஸ் அதியமானுருக்கு நான் நன்றி சொல்ல விரும்புகிறேன். எனக்கு திரை உலகில் திருப்புமுனை கொடுத்த படம் காதல் கோட்டை என்றாலும் திரையுலகில் என்னை முதன்முறையாக அறிமுகம் செய்து இந்த தமிழ்நாட்டிற்குள் அழைத்து வந்ததே இயக்குநர் கே.எஸ் அதியமான் தான். அவருக்கு எங்கேயுமே நான் நன்றியை வெளிப்படையாக சொன்னது இல்லை. இதுதான் அவருக்கு நன்றி சொல்லும் முதல் மேடை. 30 வருடங்களுக்குப் பிறகு இதுவரை மாறாமல் இருக்கும் அவரது குழுவுடன் மீண்டும் இணைந்து பணியாற்றி இருக்கிறேன். அது எவ்வளவு பெரிய ஒரு ஆசீர்வாதம். அது எனக்கு கிடைத்திருக்கிறது. மறுபடியும் இதுபோன்ற ஒரு அற்புதமான படத்தில் எனக்கு வாய்ப்பு கொடுத்து இருக்கிறார்கள். சின்ன படம், பெரிய படம் என்பதைவிட நல்ல படம் என்று சொல்லலாம். இது ஒரு அழகான கருத்துள்ள, இன்றைக்கு இருக்கக்கூடிய, பெற்றோர்களுக்கு தேவையான ஒரு படம். இந்தப் படத்தை வெளியிடும் பிளாக் பஸ்டர் விநியோக நிறுவனத்திற்கு நன்றி. இந்த படத்திற்கு நிறைய தியேட்டர்களை கொடுத்து கொஞ்சம் பொறுமையாக காத்திருந்து படம் பிக்கப் ஆகும் வரை படத்தை நீக்காமல் ஒத்துழைக்கும்படி கேட்டுக்கொள்கிறேன். முன்பு எல்லாம் படம் வெளியாகி ஒரு வாரம் கழித்து கூட பிக்கப் ஆகி ஓடி இருக்கிறது” என்று கூறினார்.
 
தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி பேசும்போது,
 
எனக்கும் இது ஒரு குடும்ப விழா தான். இயக்குநர் கே.எஸ்.அதியமான்  என்னுடைய ஊர்க்காரர். தற்போது அவர் இயக்கி வரும் படத்தை நான் தயாரித்து வருகிறேன். பாதி பட வேலைகள் முடிந்து விட்டன. இந்த படத்தில் பிரிவியூ காட்சி திரையிட்ட போதும் சரி, இந்த நிகழ்வின் போதும் சரி.. நடிகை தேவயானி தனது சொந்த விசேஷம் போல அனைவரையும் வரவேற்று உபசரிப்பதை பார்க்க முடிந்தது. இன்றைக்கு இருக்கும் கதாநாயகிகள், தாங்கள் நடித்த படத்தின் புரமோஷன் நிகழ்ச்சிக்கே வர தயங்குகிறார்கள். திரையரங்குகளில் படம் பிக்கப் ஆகும் வரை தூக்காமல் ஓட்டுவது நம் கையில் இல்லை. அதற்கு வேண்டுமென்றால் நாம் டைம் டிராவல் செய்து 90 க்கு தான் செல்ல வேண்டும். இன்று அது தியேட்டர்காரர்களின் கையில் தான் இருக்கிறது. ஒரு காட்சி நன்றாக ஓடவில்லை என்றாலே அடுத்த காட்சியில் படத்தை மாற்றி விடுகிறார்கள்” என்று கூறினார்.
 
பெப்சி தலைவரும் இயக்குநருமான ஆர்.கே செல்வமணி பேசும்போது, 
 
இந்த படத்தை இன்னும் நான் பார்க்கவில்லை. ஆனால் பாடலை பார்க்கும்போது மகிழ்ச்சியாக கண்களுக்கு இனிமையாக இருந்தது. அதற்கு ஒளிப்பதிவாளருக்கு தான் முதல் வாழ்த்து சொல்ல வேண்டும். நடிகர் விஜயத்தை பார்க்கும்போது கார்த்திகை பார்த்தது போல இருந்தது. தமிழ் சினிமாவில் நல்ல ஒரு ஹீரோவாக வலம் வருவார். எப்போதும் இதேபோல பணிவாகவும் இருக்க வேண்டும்.
 
நல்ல படம் வர வேண்டும் என்று சொல்கிறோம். நல்ல படத்தை ஓட வைத்தால் தானே அடுத்து இன்னொரு நல்ல படம் வரும். சமூகத்திற்கு தேவையான கருத்தம்சம் கொண்ட ஒரு படத்தை தான் கொடுத்திருக்கிறார்கள். இதை ஓட வைத்தால் தான் அடுத்தவர்கள் நல்ல படம் எடுக்க முன்வருவார்கள். இப்போதைய சூழலில் தியேட்டர்கள் மினி ரெஸ்டாரன்ட் ஆகிவிட்டன. டிக்கெட் கட்டணத்தை விட அவர்களுக்கு கேண்டீன் வியாபாரம் தான் மிகப்பெரியதாக தெரிகிறது. அதனாலேயே அதற்கேற்ற மாதிரியான படங்களை தயாரிக்க வேண்டிய சூழல் இன்று இருக்கிறது 
 
உற்பத்திக்கான விலையை தாங்களே நிர்ணயிக்க முடியாத சூழலில் தமிழ்நாட்டில் இருக்கும் இரண்டு பேர் யாரென்றால் ஒருவர் விவசாயி.. இன்னொருவர் சினிமா தயாரிப்பாளர்.. இருவருமே தமிழக மக்களை வாழவைக்கிற, சிந்திக்க வைக்கின்ற, சிரிக்க வைக்கின்ற இடத்தில் இருக்கிறார்கள். ஆனால் இவர்கள் இருவரின் நிலைமை படுமோசமாக இருக்கிறது. தயாரிப்பாளர்கள் அனைவரும் ஒன்றிணைந்து ஒரு சக்தியாக மாறினால் மட்டுமே தங்களது பொருளுக்கு தாங்களே விலையை நிர்ணயிக்க முடியும்.
 
நானும் ரோஜாவும் திருமணம் செய்தது, குஷ்பூவும் சுந்தர்சியும் திருமணம் செய்தது எல்லாம் பரபரப்பு செய்தி ஆனால் தேவயானி திருமணம் செய்தது மற்றவர்களுக்கெல்லாம் ஷாக்கிங் ஆன செய்தி. உங்கள் திருமணத்திற்கு பிறகான தேவயானியின் வாழ்க்கை திரையுலகில் இருப்பவர்களுக்கு மட்டுமல்ல தமிழ்நாட்டில் இருக்கும் பெண்களுக்கும் ஒரு பாடம் தான். அந்த கலாச்சாரத்தை இந்த படத்தில் மிக அழகாக எடுத்துக் காட்டி இருக்கிறார்கள். கத்திரி வெயிலுக்கு எப்படி குடை சிறப்பாக இருக்குமோ, அதுபோல கத்திரி வெயிலாக காய்ந்து கிடக்கும் இந்த தமிழ் சினிமாவிற்கு இந்த நிழற்குடை படம் ஒரு சிறப்பாக அமையும். அண்ணன் சீமான் அவர்கள் கருப்பாக இருந்தார்கள். சிவப்பாக இருந்தார்கள்.. இப்போது எந்த வண்ணமும் இல்லாமல் தூய்மையாக இருக்கிறார்கள். எப்போதும் இதேபோல இருக்க வேண்டும்” என்று பேசினார்.
 
இயக்குநர் பாக்யராஜ் பேசும்போது,
 
“எங்க அம்மா எனக்கு இந்த பெயரை வைத்து பெருமைப்பட வைத்துவிட்டார். ஆனால் இயக்குனர் ராஜகுமாரனின் நிஜ பெயரே அதுதானா ? இல்லை சினிமாவுக்கு வந்த பின் வைத்துக் கொண்டாரா என்பதைவிட தேவயானி கிடைக்கும்போது அவர் உண்மையானவை ராஜகுமாரன் ஆகிவிட்டார். சினிமாவைப் பொறுத்தவரை சில பேருக்கு மட்டும் இவர்களுக்கெல்லாம் எப்படி படம் கிடைத்துக் கொண்டே இருக்கிறது என்கிற எண்ணம் ஏற்படும். அதேபோல சில பேரை பார்க்கும்போது இவர்களுக்கு ஏன் படமே கிடைப்பது இல்லை என்ற எண்ணமும் ஏற்படும். அப்படி இரண்டாவது லிஸ்டில் இருப்பவர் தான் இயக்குனர் கே.எஸ் அதியமான். ஒரு கிலோ அறிவாளியாக இருந்தாலும் 10 கிராம் அதிர்ஷ்டக்காரனிடம் கைகட்டி தான் நின்றாக வேண்டும் என்று சொல்வது போல, சினிமாவில் அதிர்ஷ்டம் சில நேரம் திறமைசாலிகளுக்கு கை கொடுக்காது. நிழற்குடை. படத்தின் டைட்டிலுக்கு ஏற்ப இந்த படத்தின் இயக்குனர் சிவா ஆறுமுகத்திற்கு கே.எஸ் அதியமான் உள்ளிட்ட பட குழுவினர் நிழற்குடையாக இருக்கிறார்கள். அதுபோல இந்த படத்திற்கு நிழற்குடையாக தேவையானி நிற்கிறார்” என்று பேசினார்.
 
நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசும்போது,
 
“இது நம்முடைய குடும்ப நிகழ்வு போல தான். நான் வரும்போது என்னை வரவேற்ற தேவயானி, நீங்கள் வந்ததற்கு நன்றி என்றார். ஆனால் நான் சொன்னேன் நீங்கள் இந்த படத்தில் நடித்ததற்கு நன்றி என்று. காரணம் முன்பு கே.ஆர் விஜயா, அடுத்து ரேவதி ஆகியோரைப் போல இப்போது தேவயானி நடித்தால் அது நல்ல படமாக தான் இருக்கும் என்று சொல்வதற்கு ஏற்ப நல்ல படங்களையும் கதாபாத்திரங்களையும் தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். ஒவ்வொரு காலகட்டத்திலும் தன் பெயரை பதிவு செய்யும் விதமாக நல்ல படங்களை கொடுத்திருக்கிறார். பணம் வருகிறதே என்பதற்காக எல்லா படங்களையும் ஏற்றுக் கொண்டு தன்னுடைய பெயரை ஒருபோதும் அவருக்கு கெடுத்துக் கொண்டதில்லை. அந்த நற்பெயர் தான் 30 வருடம் கழித்தும் இவர் கதாநாயகியாக நடிப்பதற்கு காரணம். எல்லோருக்கும் இந்த வாய்ப்பு கிடைத்து விடாதே. தயாரிப்பாளர் டி.சிவாவுக்கு ஒரு நல்ல வெற்றிப்படம் தரவில்லை என்கிற குற்ற உணர்வு இப்போதும் எனக்கு இருக்கிறது. தம்பி படத்துக்கு அடுத்தபடியாக பகலவன் என்கிற படத்தை அவருக்காக எடுக்க இருந்தேன். ஆனால் மாதவன் அதில் நடிக்க மறுத்துவிட்டார். காரணம் தம்பி படத்தில் அவர் பட்ட கஷ்டங்கள் தான் ஆனால் அதன்பிறகு தான் வாழ்த்துக்கள் படத்தை அவருக்காக இயங்கினேன். ஆனால் படம் சரியாக போகவில்லை. இந்த இடத்தில் சொல்கிறேன், என்றைக்காவது ஒருநாள் அவருக்கு ஏற்பட்ட இழப்பை நான் சரி செய்வேன்.. கே.எஸ் அதியமான் போன்ற இயக்குனர்கள் இப்போது ரொம்ப குறைவு. தாலியை கழற்றி எறிந்து விட்டு இன்னொரு நபருடன் புரட்சி திருமணம் செய்யும்படி கதை எழுதியவரும் பாக்கியராஜ் தான்.. அதே தாலியை கழட்ட மாட்டார்கள் அதுதான் கலாச்சாரம் என்று ஒரு கதையை எழுதி அதையும் வெற்றி படமாக்கியவர் நம் பாக்யராஜ் காரணம். அவரது எழுத்தின் வன்மை அப்படி.
 
எளிய கதாபாத்திரங்களை வைத்து ஒரு குடும்பப்பாங்கான படமாக கொடுத்து வெற்றி அடைய வேண்டும் என்றால் அது அவரால் மட்டும் தான் முடியும். கே.எஸ் கோபாலகிருஷ்ணன் போல பாக்கியராஜ் நம் திரை உலகில் ஒரு மைல் கல். அவர் நம் கூட இருக்கிறார் என்பதை பெருமை. இந்த படத்தின் ஒளிப்பதிவாளர் குருதேவ் அற்புதமாக காட்சிகளை படமாக்கி உள்ளார் என்பது தெரிகிறது. அடிதடி ஆக்சன் படங்களுக்கு இசையமைப்பதை விட இப்படி மென்மையான உணர்வுகளை கடத்தும் படத்திற்கு இசையமைப்பது ஒரு சவால். அதிலும் மனதில் நிற்பது போல மென்மையான இசையால் வருடுவது என்பது மிகக் கடினம். அதை இசையமைப்பாளர் நரேன் பாலகுமார் அழகாக செய்துள்ளார்.
 
ரொம்ப நாளைக்கு பிறகு ஒரு பெண் பாடலாசிரியர் பாடல் எழுதியிருப்பது பெருமையாக இருக்கிறது. பெரிய படம் சின்ன படம் என்கிற அளவு எல்லாம் இல்லை. ஓடுகிற படம், ஓடாத படம் அவ்வளவுதான்.. தெலுங்கில் ஆறு கோடியில் எடுக்கப்பட்ட கோர்ட் என்கிற படம் 60 கோடி வசூலித்துள்ளது. இந்த நிழற்குடை படம் நிச்சயம் வெல்லும். தியேட்டர்கள் இந்தப் படத்திற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். ஆனால் அதற்கான சூழல் இப்போது இல்லை. ஆனால் விரைவில் அதற்கான சூழல் வர இருக்கிறது. பெரிய பெரிய வளாகங்களில் சின்ன படங்களுக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும் என சட்டம் வரும். பல இரவுகள் பசி பட்டினியுடன் கிடந்து இந்த சினிமாவை நேசித்தவர்கள் நாங்கள்.. அவ்வளவு எளிதாக சினிமாவை அழிய விட்டுவிட மாட்டோம். செல்வமணி சொன்னது போல விவசாயி, தயாரிப்பாளர் இருவருமே தங்களது உற்பத்திக்கான விலையை தீர்மானிக்கும் காலத்தை உருவாக்குவோம்.
 
சிவா ஆறுமுகம் எத்தனை வருடங்கள் கழிந்தாலும் என்ன நடந்தாலும் கூட சினிமாவை விட்டு அவர் வெளியேறவில்லை. அவரது மகனும் இந்த படத்தில் ஒரு கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். துவங்குவது எல்லோருக்கும் எளிது தான். ஆனால் அதை தக்க வைத்துக் கொள்ள தொடர்ந்து போராட வேண்டும். அதற்காகவே அவரை பாராட்ட வேண்டும்.
 
அய்யா ரஜினிகாந்தை தூரகுதில் இருந்தே பார்த்து வந்த நிலையில்  நேரில் பார்க்கும் வாய்ப்பு வந்தது. இரண்டரை மணி நேரம் பேசிக் கொண்டிருந்தோம். இவ்வளவு படம் நடித்து, இவ்வளவு சாதித்த பிறகும். புதிதாக ஒன்றை தெரிந்து கொள்வதில் அவருக்கு இருக்கும் ஆர்வத்தை பார்க்கும்போது இவர் ஏன் ஜெயிக்க மாட்டார் என நமக்கே தோணும். என்னுடன் பேசிக் கொண்டிருக்கும்போது ஒரு நிமிடம் இருங்கள் என்று கூறிவிட்டு அவர் உள்ளே நடந்து சென்றபோது சினிமாவில் படத்தில் பார்க்கும் அதே வேகம் தான் நிஜத்திலும் அவரிடம் இருந்தது. சோம்பேறிகள் கூட அவர் இயங்குவதை பார்த்தால் உற்சாகமாகி விடுவார்கள் இந்த தேடலும் வெறியும் இருக்கும் ஒவ்வொருவரும் உச்சத்தை தொடலாம் சாதிக்கலாம்.
 
ஒரு குழந்தைக்கு முதல் ஆசிரியை அதன் தாய் தான். இந்த படம் தாய்மையை பற்றி சொல்கிறது. நீங்கள் எவ்வளவு உயர்த்திற்கு சென்றாலும் உங்களைப் பார்த்து பொறாமைப்படாத ஒரே உயிர் உங்களுடைய தாய் தான். இந்தத் தாய்மை கதாபாத்திரத்தை தாங்கி நிற்கின்ற தகுதி நம் தேவயானிக்கு இருக்கிறது. நிழற்குடை படத்திலிருந்து திரையரங்கின் தொடக்க காட்சிக்கு மக்களை அழைத்து வருவதற்கு அவரே போதும்” என்று கூறினார்.

வல்லமை விமர்சனம்

 


கருப்பையா முருகன் இயக்கத்தில் பிரேம் ஜி, திவா தர்ஷினி, தீபா சங்கர், முத்துராமன், சி ஆர் ரஞ்சித், சூப்பர் குட் சுப்ரமணி, ஆகியோர் நடித்துள்ள படம் தான் ‘வல்லமை’

சரி வாங்க விமர்சனத்தை பார்ப்போம்: 

மனைவியை இழந்த துக்கத்தில் தனது மகளை அழைத்துக் கொண்டு கிராமத்தில் இருந்து சென்னை புறப்படுகிறார் நாயகன் பிரேம்ஜி. மனைவி இழந்த துக்கத்தால் தனது செவித்திறனையும் இழக்கிறார் பிரேம்ஜி. செவியில் சிறப்பு கருவி பொருத்தி பிறர் பேசுவதை கேட்டுக்கொள்கிறார். சென்னை வந்து போஸ்டர் ஒட்டும் வேலையை செய்து தனது மகளை படிக்க வைக்கிறார். மகளே உலகம் என வாழ்ந்து வரும் பிரேம்ஜி மகளை பள்ளி முடிந்து அழைத்து வரும் போது அப்பா…. சிறுநீர் கழிக்கும் இடத்தில் ரத்தம் வருகிறது என்று மகள் கூறுகிறாள். 

உடனே மருத்துவரிடம் அழைத்து சென்று கேட்டால் அங்கு அதிர்ச்சியாக உங்கள் மகள் பாலியல் சீண்டலுக்கு ஆளாக்கப்பட்டு இருக்கிறார் என்று டாக்டர் கூறுகிறார். கோபம் அடைந்த நம்ம ஹீரோ இதற்கு யார் காரணம்? என அறிய தன் மகளுடன் களம் இறங்குகிறார். பிறகு யார் அந்த நபர்? அவரை என்ன செய்தார்கள்? என்பதே கதை…..

வலிமை இல்லாத ஒருவன் வலிமை உள்ளவனை வெற்றி கொள்வதே வல்லமை படத்தின் கரு. பிரேம்ஜியின் எதார்த்த நடிப்பு சிறப்பு. சிறுமியாக நடித்த திவா தர்ஷினி உண்மையான மகளாகவே மாறி நடித்திருக்கிறார் என்றே சொல்லலாம். சரியான அப்பா மகள் தேர்வு. பின்னணி இசை மற்றும் ஒளிப்பதிவு ஓகே. சிறுகதைகள் தன்னம்பிக்கையை தூண்டுகிறது. பெண் குழந்தைகளுக்கு நடக்கும் அநியாயத்தை இந்த சமூகத்திற்கு சொல்ல வேண்டும் என்ற இயக்குனர் கருப்பையா முருகனின் எண்ணத்திற்கு பாராட்ட வேண்டும். 

கதையை தெளிவாக இன்னும் அழுத்தமாக சொல்லியிருந்தால் மேலும் நன்றாக இருந்திருக்கும்.....

மொத்தத்தில் இந்த வல்லமை-யை குடும்பத்துடன் பார்க்கலாம்.

RATING: 3/5

 

சச்சின் திரைப்படத்தின் வெற்றி விழா! 



சமீப ஆண்டுகளில் ரசிகர்களால் அதிகம் கொண்டாடப் பட்டு வெற்றியடைந்த தமிழ் படங்களை மறு வெளியீடு செய்வது சமீபத்திய ட்ரென்டாக உள்ளது. இதனால் ரசிகர்கள் பெரிய திரையில் தங்களுக்குப் பிடித்த காட்சிகளை மீண்டும் பார்த்து கொண்டாடுவதை காண முடிகிறது. விஜய்யின் 'கில்லி' மறு வெளியீடாகி மாபெரும் வெற்றி பெற்றது, இதற்கு ஒரு உதாரணமாக அமைந்துள்ள நிலையில், பழைய 'பிளாக்பஸ்டர்' படங்கள் திரையரங்குகளில் மீண்டும் வெளியாவது ரசிகர்களிடையே உற்சாகத்தை மேலும் அதிகரித்துள்ளது. 'தளபதி' விஜய்யின் நடிப்பில் 2005-ஆம் ஆண்டு வெளியான காதல் மற்றும் நகைச்சுவை திரைப்படமான 'சச்சின்' 20-ஆண்டுகளுக்குப் பிறகு கடந்த ஏப்ரல் 18-ஆம் தேதி உலகமெங்கும் 350-க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் மறுவெளியீடாகி மாபெரும் வெற்றி பெற்றதை கொண்டாடும் விதமாக படக்குழுவினரின் செய்தியாளர்கள் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது.


ஷோபி

படத்தில் இடம்பெற்ற 'வாடி வாடி' உள்ளிட்ட பாடல்களுக்கு நடனம் அமைத்த நடன இயக்குனர் ஷோபி பேசியபோது," திரையரங்குகளில் மீண்டும் வெளியாகி வெற்றி பெற்ற 'சச்சின்' திரைப்படத்தின் சக்சஸ் மீட்டில் கலந்து கொள்வது ஒரு புது அனுபவமாக உள்ளது. அப்போதைய ரசிகர்களைப் போல 20 வருடங்களுக்குப் பிறகு இன்றைய தலைமுறையினரும் அந்த பாடல்களை கொண்டாடுவது, மகிழ்ச்சியாக உள்ளது. தயாரிப்பாளர் தாணு அவர்களின் தயாரிப்பில், இயக்குனர் ஜான் மகேந்திரன், ஒளிப்பதிவாளர் ஜீவா, இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் ஆகியோருடன் முதல் முறையாக இணைந்து பணியாற்றியது மலரும் நினைவுகளாக உள்ளது. படத்தின் பாடல் காட்சிகள் மிக சிறப்பாக அமைய 'தளபதி' விஜய் அவர்களின் ஒத்துழைப்பும் மிக முக்கிய காரணம். தயாரிப்பாளர் தாணு அவர்களிடம் 'தளபதி' விஜயின் பொக்கிஷம் போன்று மூன்று திரைப்படங்கள் சச்சின்,துப்பாக்கி, தெறி உள்ளன. இத்திரைப்படக் குழுவினருக்கும், என்னுடைய நடன குழுவினருக்கும், ஊடக நண்பர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்", என்று பேசினார்.

ஜான் மகேந்திரன்

அடுத்ததாக இயக்குனர் ஜான் பேசும்போது," சச்சின் திரைப்படம் மீண்டும் வெளியாகியுள்ளதைப் போன்றே எனக்கு தோன்றவில்லை. 20 வருடம் கடந்து விட்டதா என்று ஆச்சரியமாக உள்ளது. புதுப்படம் வெளியானதை போன்றே உள்ளது. படத்தை மறுபடியும் வெளியீடப் போவதாக தயாரிப்பாளர் தாணு அவர்கள் என்னிடம் ஏற்கனவே கூறியிருந்தார். அடுத்ததாக படத்தின் பாடல்கள் மற்றும் ட்ரெய்லர் போன்ற அடுத்தடுத்த அப்டேட்டுகளை புதுப்படத்திற்கு விளம்பரப்படுத்துவது போன்றே கொடுத்துக் கொண்டிருந்தார். ட்ரெய்லர் தான் இந்த படத்தை தியேட்டரில் பார்க்க வேண்டும் என்ற ஆர்வத்தை அனைவருக்கும் ஏற்படுத்தியிருக்கும். அதற்கு முழுக்க முழுக்க தயாரிப்பாளர் தாணு அவர்கள் தான் காரணம். திரைப்படத்தை உலகம் முழுவதும் வெளியிடுகிறார் என்பது மிகப்பெரிய ஆச்சர்யத்தை கொடுத்தது. திரைப்படத்தை மீண்டும் திரையரங்குகளில் கண்டுகளிக்க முக்கியமான ஈர்ப்பு சக்தியாக இருப்பது 'தளபதி' விஜய் என்றால், படத்திற்கு தேவையான விளம்பரத்தை கொடுத்து ரசிகர்களை திரையரங்குகளுக்கு வரவழைத்ததற்கு இன்னொரு காரணம் தயாரிப்பாளர் தாணு அவர்கள். அதே போல திரையரங்குகளில் தனது இசையின் மூலம் தேவி ஸ்ரீ பிரசாத் ரசிகர்களை கொண்டாட வைக்க, நடன இயக்குனர் ஷோபி அவர்கள் துள்ளலான நடன அசைவுகள் மூலம் ரசிகர்களை ஆடிப்பாட வைக்கிறார். அற்புதமான காட்சிகளை அளித்த ஒளிப்பதிவாளர், இயக்குனர் ஜீவா அவர்கள் நம்மிடையே இல்லை என்பது மிகவும் வருத்தமாக உள்ளது. படப்பிடிப்பு முழுக்க நல்ல ஒத்துழைப்பு கொடுத்து நடித்த 'தளபதி' விஜய் மற்றும் ஜெனிலியா இருவருக்கும், படக்குழுவினர் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்", என முடித்தார்.

'கலைப்புலி' எஸ்.தாணு

அடுத்ததாக நன்றி தெரிவிக்க வந்த தயாரிப்பாளர் 'கலைப்புலி' எஸ்.தாணு அவர்கள் படப்பிடிப்பின்போது நடந்த சுவாரசிய நிகழ்வுகளை பகிர்ந்து கொண்டு பேசியபோது," 'தளபதி' விஜய்யிடம் எப்படி சச்சின் திரைப்படம் சென்றது என்பதை கூறினால் ஒரு நாள் போதாது. 'தளபதி' விஜய் திருப்பாச்சி, மதுர போன்ற அதிரடி திரைப்படங்களில் கவனம் செலுத்தும் பொழுது, ஒரு மாற்றத்திற்காக 'தளபதி' விஜய்யுடன் கலந்துரையாடும் போது இயக்குனர் ஜான் மகேந்திரன் பற்றி கூறினேன். அவர் என்னிடம் குஷி போன்ற கதை ஒன்றை கூறினார்,நீங்கள் கேட்கிறீர்களா?என்று கேட்டேன். அதன் பிறகு இயக்குனர் ஜான் மகேந்திரன் 'தளபதி' விஜய்யிடம் கதை  கூற ஏற்பாடு செய்தேன். ஒன்றறை மணி நேரத்திற்கு பிறகு 'தளபதி' விஜய்யிடமிருந்து எனக்கு ஒரு அழைப்பு வந்தது, 'கதை மிகவும் பிடித்திருக்கிறது; கண்டிப்பாக பண்ணலாமென்று' கூறினார்.

உலகமெங்கும் 2005-ஆம் ஆண்டு ஏப்ரல் 14-ஆம் தேதி வெளியிட்டேன். திரைப்படத்தை வாங்கிய அனைத்து விநியோகஸ்தர்களும் நல்ல வசூல் சாதனை செய்ததாக கூறினார்கள். 200 நாட்கள் கடந்தும் திரையரங்குகளில் ஓடி சாதனை படைத்தது, இப்பொழுது விளம்பரப்படுத்துதலின் செலவு குறைந்திருப்பதாலும், டிஜிட்டல் ஊடக விளம்பரங்கள் மூலம் ரசிகர்களை எளிதாக சென்றடைவதன் மூலம் ரசிகர்கள் குடும்பம் குடும்பமாக கொண்டாடி, மிகப்பெரிய வெற்றியை தந்துள்ளார்கள். 'சச்சின்' மறுவெளியீடு செய்த மறுநாள் என் குடும்பத்துடன் திரையரங்குக்கு சென்றேன். அப்படி ஒரு மக்கள் கூட்டத்தை நான் பார்த்ததில்லை. தயாரிப்பாளர்களுக்கு எந்த ஒரு சிரமமும் இல்லாமல், அவர்களை உயர்த்தி ஊக்குவிக்கும் நடிகர்களில் 'தளபதி' விஜய்யும் ஒருவர். 'சச்சின்' திரைப்படம் மீண்டும் வெற்றியடைய திரையரங்கு உரிமையாளர்களும் மிகப்பெரிய காரணம். மேலும் திரைப்படத்தை மக்களிடம் கொண்டு சேர்த்து, மிகப்பெரிய வெற்றியடைய செய்த ஊடக நண்பர்களுக்கு மிக்க நன்றி", என தனது உரையை முடித்துக் கொண்டார்.

தேவி ஸ்ரீ பிரசாத்

துள்ளலான இசையை தந்து இரண்டு தலைமுறை ரசிகர்களை ஆட்டம் போடவைத்த, 'சச்சின்' திரைப்படத்தின் இசையமைப்பாளர் தேவிஸ்ரீபிரசாத் பேசியபோது,"என் வாழ்க்கையை நான் இசையோடு தான் கொண்டாடுவேன். நான் எங்கு சென்றாலும் என்னிடம் எல்லோரும் சொல்வது 'சச்சின்' திரைப்படத்தின் பாடல்கள் மிகவும் அருமையாக இருக்கிறது என்று தான் இன்று வரையிலும் சொல்வார்கள். நான் செல்லும் இசை நிகழ்ச்சி அல்லது விருது விழாக்கள் என எங்கு சென்றாலும், இந்த படத்தின் பாடலை பாடாமல் மேடையை விட்டு இறங்க விட்டதே இல்லை. என் இசைப் பயணத்தில் 'சச்சின்' திரைப்படம் மிகவும் முக்கியமான ஒன்று, அதனால் தாணு சார் அவர்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். ஒருமுறை சாரிடமிருந்து அழைப்பு வந்தது, 'எங்கு பார்த்தாலும் உனது பெயர் தான் பேசுகிறார்கள்' என்று கூறினார். விரைவில் நாம் சந்திக்கலாம் சென்னை வந்ததும் கூறுங்கள் என்று கூறினார், நான் சென்னை வந்ததும் அவரை சந்தித்தேன். அப்பொழுதுதான் " 'சச்சின்' என்ற திரைப்படம் பண்ணுகின்றோம்" என்று கூறினார். என்னை அவர் வீட்டு பிள்ளையாக தான் பார்ப்பார். சில மாதங்களுக்கு முன்பு 'சச்சின்' மறுவெளியீடு செய்யப் போகிறேன் என்று கூறினார். படமும் வெளியாகி தற்போது வரை மக்கள் கொண்டாடிக் கொண்டு இருக்கிறார்கள் என்பதை பார்க்கும் பொழுது மகிழ்ச்சியாக இருக்கிறது. படக்குழுவினர் மற்றும் ஊடக நண்பர்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்", என்று பேசினார்.

அத்துடன் படத்தின் வெற்றி விழா செய்தியாளர் சந்திப்புடன் இனிதே நிறைவுற்றது.



Author Name

{picture#YOUR_PROFILE_PICTURE_URL} YOUR_PROFILE_DESCRIPTION {facebook#YOUR_SOCIAL_PROFILE_URL} {twitter#YOUR_SOCIAL_PROFILE_URL} {google#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.