நர்சுகள் 6 பேருக்கு கொரோனா!
மஞ்சூர்:
நீலகிரி மாவட்டம் மஞ்சூர் அரசு மருத்துவமனையில், 6 நர்சுகளுக்கு கொரோனா அறிகுறி ஏற்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து 3 நாட்களுக்கு கடைகளை அடைக்க வியாபாரிகள் சங்கம் முடிவு செய்துள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் நாளுக்குநாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. இந்நிலையில் சமீபத்தில் முள்ளிகூர் பகுதியை சேர்ந்த 72 வயதான மூதாட்டி ஒருவர் கொரானா பாதிப்பால் உயிரிழந்தார்.
இவர், இறப்பதற்கு சில தினங்களுக்கு முன் மஞ்சூர் அரசு மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை மேற்கொண்டது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து மருத்துவமனையில் பணியாற்றி வரும் நர்சுகள் உள்பட அனைவருக்கும் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
இதில் 5 பெண்கள் ஒரு ஆண் உள்பட 6 நர்சுகளுக்கு கொரோனா அறிகுறி இருந்தது. அனைவரும் நேற்று மாலை ஆம்புலன்ஸ் மூலம் ஊட்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
கொரோனா அறிகுறி ஏற்பட்ட நர்சு ஒருவர் மஞ்சூர் பஜாரை ஒட்டியுள்ள மஞ்சூர் அட்டியில் வசித்து வருகிறார். இதைதொடர்ந்து அவர் வசித்து வந்த பகுதியில் தடுப்புகள் அமைக்கப்பட்டு பேரூராட்சி தூய்மை பணியாளர்கள் மூலம் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு தூய்மை பணிகள் மேற்கொள்ளப்பட்டது.
இதேபோல் மற்றொரு நர்சு பள்ளிமனையில் வசித்து வருவதையடுத்து அப்பகுதியிலும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது. மாவட்டத்தில் இதுவரை மஞ்சூர் பகுதியில் கொரோனா நோய் தொற்று அறிகுறி இல்லாதநிலையில் நேற்று நர்சுகள் 6 பேருக்கு கொரோனா அறிகுறி தென்பட்டுள்ளது பரபரப்பையும், பொதுமக்கள் மத்தியில் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
இதனால் பஜார் மற்றும் கடைவீதிகளில் பொதுமக்கள் நடமாட்டத்தை கட்டுப்படுத்தும் வகையிலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இன்று (திங்கள்) முதல் 3 நாட்களுக்கு மஞ்சூரில் கடைகள் முழுமையாக அடைக்கப்படும் அனைத்து கடைக்காரர்கள் சங்கத்தின் சார்பில் சங்க தலைவர் சஜி தெரிவித்துள்ளார். இதன்படி இன்று காலை மஞ்சூர் பகுதியில் அனைத்து கடைகளும் திறக்கப்படவில்லை.
கருத்துரையிடுக