கன மழை எச்சரிக்கை!
சென்னை:
''தமிழகத்தில், ஐந்து மாவட்டங்களில், இன்று மிக கன மழை பெய்யும்,'' என, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர், புவியரசன் அளித்த பேட்டி:கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி, தமிழக வளிமண்டல மேலடுக்கில் நிலவுகிறது.
இதன் காரணமாக, தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில், இன்று கன மழையும், மிக கன மழையும் பெய்யும்.சேலம், கடலுார், விழுப்புரம், திருவண்ணாமலை, செங்கல்பட்டு மாவட்டங்களில், ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிக கன மழை பெய்யும்.
திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலுார், திருப்பத்துார், ராணிப்பேட்டை, பெரம்பலுார் மாவட்டங்களில், ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய கன மழை பெய்யும்.சென்னையில் வானம் மேகமூட்டமாக காணப்படும். நகரின் சில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யும்.
நேற்று காலை நிலவரப்படி, திருத்தணி, 8; காஞ்சிபுரம், வெம்பாக்கம், 7; அரக்கோணம், 5; காஞ்சிபுரம், ஏற்காடு, செம்பரம்பாக்கம், பூந்தமல்லி, 4; திருப்பத்துார், தர்மபுரி, சோழிங்கநல்லுார், ஆற்காடு, 3 செ.மீ., மழை பெய்துள்ளது.தென் மேற்கு மற்றும் மத்திய மேற்கு அரபிக்கடல் பகுதிகளில், மணிக்கு, 50 கி.மீ., வேகத்தில் பலத்த காற்று வீசும் என்பதால், வரும், 15ம் தேதி வரை, மீனவர்கள் செல்ல வேண்டாம்.இவ்வாறு, அவர் தெரிவித்தார்.
கருத்துரையிடுக