புழல் ஏரியில் குதித்து தாய்,மகள் தற்கொலை!
செங்குன்றம்:
விஷம் குடித்து, புழல் ஏரியில் குதித்து, தற்கொலைக்கு முயன்ற மூவரில், தாய், மகள் பலியாகினர்; தந்தை ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.சென்னை, அம்பத்துார் அடுத்த ஒரகடம், வெங்கடேஸ்வரா நகர், ஏரிக்கரை பகுதியைச் சேர்ந்தவர் சிவகுமார், 49; சுயதொழில் செய்கிறார்.
இவரது மனைவி லதா, 40. மகள் ரேஷ்மா, 18; அண்ணா நகரில் உள்ள தனியார் கல்லுாரியில் பி.காம்., முதலாமாண்டு படித்து வந்தார்.மூவரும், புழல் ஏரி மதகு அருகே, நேற்று மாலை, ஏரியில் குதித்தனர்.
நடைபயிற்சி சென்ற சிலர், இதைப்பார்த்து, செங்குன்றம் போலீசாருக்கு தகவல் அளித்தனர்.போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள், சம்பவ இடத்திற்கு சென்று, சிவகுமார், லதாவை மீட்டனர். இதில், லதா பலியானார். உயிருக்கு ஆபத்தான நிலையில், சிவகுமார் மீட்கப்பட்டு, சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அப்போது, விஷம் குடித்து, ஏரியில் குதித்து தற்கொலை செய்து கொள்ள முயன்றதாக சிவகுமார் தெரிவித்துள்ளார்.ரேஷ்மாவின் சடலம் கிடைக்கவில்லை. இருட்டியதால், சடலத்தை தேடும் முயற்சி நிறுத்தப்பட்டது. இந்த தற்கொலை சம்பவம் குறித்து, செங்குன்றம் போலீசார் விசாரிக்கின்றனர்.
கருத்துரையிடுக