நெல்லை போலீஸ்காரர் தம்பி கொலையில் 3 பேர் கைது: 5 பேர் நீதிமன்றத்தில் சரண்...
நெல்லையில் போலீஸ்காரர் தம்பி கொலையில் 3 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் 5 பேர் நீதிமன்றத்தில் சரண் அடைந்தனர்.
நெல்லை பாளையங்கோட்டை சாந்தி நகர் போலீஸ் குடியிருப்பை சேர்ந்தவர் மக்தூம். இவருடைய மகன் அப்துல் காதர் (27).
இவரது அண்ணன் சாகுல் தாழையூத்து காவல் நிலையத்தில் போலீஸ்காரராக உள்ளார். அப்துல் காதர் தற்போது பாளை சங்கர் காலனியில் வசித்து வந்தார். இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பாளையங்கோட்டை மிலிட்டரி கேன்டீன் அருகே அப்துல் காதர் மர்ம கும்பலால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இதுகுறித்து பாளையங்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
கொலையாளிகளை பிடிக்க, நெல்லை மாநகர சட்டம் ஒழுங்கு துணை போலீஸ் கமிஷனர் சுரேஷ்குமார் தலைமையில் 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. இந்த தனிப்படையினர் கொலையாளிகளை பல்வேறு இடங்களில் தீவிரமாக தேடி வந்தனர். இந்நிலையில் தூத்துக்குடி மேல சண்முகநாதபுரத்தைச் சேர்ந்த சங்கர் மகன் விஜி என்ற விஜயகுமார் (25), ராஜீவ்நகர் 2-வது தெருவை சேர்ந்த துரை மகன் சரவணன் (24), மில்லர்புரத்தை சேர்ந்த பரமசிவன் மகன் பிரவீன்குமார் என்ற சூர்யா ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
போலீசார் நடத்திய விசாரணையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு சாத்தான்குளத்தை சேர்ந்த பணம் கொடுக்கல் வாங்கல் தொழில் செய்து வந்த மார்ட்டின் என்பவரின் கொலைக்கு பழிக்குப்பழியாக அப்துல்காதர் கொலை செய்யப்பட்டது தெரியவந்தது.
இதற்கிடையே இந்த கொலையில் தொடர்புடைய சாத்தான்குளத்தை சேர்ந்த பாலமுருகன் (22), செல்லப்பா (25), ஸ்ரீவில்லிபுத்தூரை சேர்ந்த மாதேஷ்வரன் (23), தூத்துக்குடி 3-வது மைலை சேர்ந்த காளியப்பன் (26) ஆகிய 4 பேர் ஸ்ரீவைகுண்டம் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நேற்று சரண் அடைந்தனர்.
அவர்களை நீதிபதி தமிழரசன் 15 நாள் சிறையில் அடைக்க உத்தரவிட்டார். மேலும் சாத்தான்குளத்தை சேர்ந்த மாணிக்கராஜா (25) தாம்பரம் நீதிமன்றத்தில் சரண் அடைந்தார். இந்த கொலை தொடர்பாக போலீசார் மேலும் சிலரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கருத்துரையிடுக