தூத்துக்குடியில் ஆட்டோ டிரைவர் சரமாரியாக குத்திக் கொலை : அண்ணன் - தம்பி கைது
தூத்துக்குடியில் ஆட்டோ டிரைவரை சரமாரியாக குத்தி கொலை செய்த அண்ணன்- தம்பி ஆகிய 2பேரை போலீசார் கைது செய்தனர்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது : தூத்துக்குடி டி.எம்.பி காலனி 6வது தெருவை சேர்ந்தவர் பட்டாணி மகன் சிவபெருமாள் (45). ஆட்டோ டிரைவரான இவர், சொந்தமாக ஆட்டோ வைத்து தொழில் செய்து வருகிறார். இவரும் தொம்மையார் காலனியை சேர்ந்த மாடசாமி மகன் ஆறுமுகம் (31), அவரது தம்பி சொர்ண ராஜ் (28) ஆகிய 3 பேரும் நண்பர்கள். இவர்கள் 3 பேரும் தினசரி தூத்துக்குடி சிதம்பர நகர் அருகே உள்ள மைய வாடியில் வைத்து மதுபானம் குடிப்பது வழக்கம்
இன்று மாலை 5 மணி அளவில் 3 பேரும் வழக்கம்போல் மையவாடி அருகில் உள்ள பூங்கா முன்பு உட்கார்ந்து மது அருந்தியுள்ளனர். போதை அதிகம் ஆனதால் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது ஆத்திரம் அடைந்த அண்ணன்-தம்பி இருவரும் சிவபெருமாள் கத்தியால் குத்தியுள்ளனர். அப்போது அந்த பகுதியில் உள்ள பொதுமக்கள் இருவரையும் சுற்றி வளைத்து பிடிக்க முயன்றனர். உடனே இருவரும் கத்தியை காட்டி தப்பி ஓட முயற்சி செய்தனர். ஆனாலும் பொதுமக்கள் இருவரையும் பிடித்து தென்பாகம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
இந்நிலையில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த சிவபெருமாள் தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு சிறிது நேரத்தில் சிவபெருமாள் சிகிச்சை பலனளிக்காமல் பரிதாபமாக இறந்தார். தென்பாகம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆனந்தராஜ் வழக்குப் பதிந்து, ஆறுமுகம் மற்றும் அவரது தம்பி சொர்ணராஜ் ஆகிய இருவரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார். சம்பவ இடத்தை டவுன் டிஎஸ்பி கணேஷ் பார்வையிட்டார். கொலை செய்யப்பட்ட சிவபெருமாள் சடலம் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. பட்டப்பகலில் நடந்த இந்த கொலை சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
கருத்துரையிடுக