முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு வலை!
கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் பால்வளத் துறை அமைச்சராக இருந்த கே.டி.ராஜேந்திரபாலாஜி மூலம் ஆவின் உள்ளிட்ட அரசின் பல்வேறு துறைகளில் வேலை வாங்கி தருவதாக கூறி 3 கோடி ரூபாய் பெற்றுக்கொண்டு பணியும் வழங்காமல், பணத்தையும் திருப்பி கொடுக்காமல் ஏமாற்றியதாக புகார் எழுந்தது.
இதுதொடர்பாக விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவில் ரவீந்திரன் மற்றும் விஜய் நல்லதம்பி ஆகியோர் அளித்த புகாரில், ராஜேந்திர பாலாஜி மீது இரு வழக்குகள் பதிவு செய்யப்பட்டது.
ராஜேந்திர பாலாஜியுடன் இருந்த என்.பாபுராய், வி.எஸ்.பலராமன், எஸ்.கே.முத்துப்பாண்டியன் ஆகியோர் மீதும் ஒரு வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த இரு வழக்குளில் முன் ஜாமீன் கோரி ராஜேந்திர பாலாஜியும், ஒரு வழக்கில் முன் ஜாமீன் கோரி மற்ற மூவரும் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
இந்த வழக்கில் அனைத்து தரப்பு வாதங்களும் முடிந்த நிலையில், இன்று தீர்ப்பளித்த நீதிமன்றம், கே.டி.ராஜேந்திரபாலாஜி, என்.பாபுராய், வி.எஸ்.பலராமன், எஸ்.கே.முத்துப்பாண்டியன், விஜய் நல்லத்தம்பி ஆகியோரின் முன் ஜாமீன் மனுக்களை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
அப்போது ராஜேந்திர பாலாஜி தரப்பில் தீர்ப்பை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செல்ல உள்ளதால், தள்ளுபடி உத்தரவை 2 வாரங்களுக்கு நிறுத்தி வைக்க வேண்டுமென கோரிக்கை வைக்கப்பட்டது.
ஆனால், வேலை வாங்கி தருவதாக கூறி மோசடி செய்த புகார்களில் தண்டனையை நிறுத்தி வைப்பதில்லை என கூறி ராஜேந்திர பாலாஜி கோரிக்கையை ஏற்க நீதிபதி மறுத்துவிட்டார்.
இந்த நிலையில், அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியை கைது செய்ய 4 தனிப்படை அமைத்து விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவிட்டுள்ளார். டி.எஸ்.பி, 2 காவல் ஆய்வாளர்கள், உள்ளிட்டோர் அடங்கிய 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.
கருத்துரையிடுக