ட்ராமா திரைவிமர்சனம்
இயக்குநர் தம்பிதுரை மாரியப்பன் இயக்கத்தில் விவேக் பிரசன்னா, பூர்ணிமா ரவி முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ள படம் ட்ராமா. ஆனந்த் நாக், சாந்தினி தமிழரசன், நிழல்கள் ரவி, மாரிமுத்து, பிரதோஷ், வையாபுரி, நமோ நாராயணன், பிரதீப் கே. விஜயன், 'ஸ்மைல்' செல்வா, மதனகோபால் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். மார்ச் 21ஆம் தேதி இந்த படம் வெளியானது.
சரி வாங்க விமர்சனத்தை பார்ப்போம்:
திருமணம் ஆகி பல வருடங்களுக்கு குழந்தை இல்லாமல் இருக்கும் தம்பதிகள் சுந்தர் (விவேக் பிரசன்னா) மற்றும் கீதா (சாந்தினி). சில மருத்துவ சிகிக்சைக்கு பின் கீதா கர்ப்பமாகிறார். ஒரு நாள் ஒரு மர்ம மனிதன் கீதாவுக்கு போன் செய்து ஐம்பது லட்சத்துடன் நான் சொல்லும் இடத்திற்கு வா என்று பிளாக்மெயில் செய்கிறான். இரண்டு கார் திருடர்கள் காரை திருடி கொண்டு போகும் போது போலீஸ் மடக்கி பிடிக்கிறது. கார் டிக்கிகுள் ஒரு சடலம் இருப்பதை பார்க்கிறது போலீஸ். இது ஒருபுறம் இருக்க பூர்ணிமா ரவி, பார்த்தோஷ் இருவரும் காதலிக்கிறார்கள். காதலனை பற்றி அதிர்ச்சிகரமான விஷயம் ஒன்றை தெரிந்து கொள்கிறார் பூர்ணிமா ரவி. அது என்ன? இறந்தவரின் பின்னணி என்ன என்பதே மீதி கதை....
குழந்தையின்மை சிகிச்சை மையத்தில் ஏற்படும் சிக்கல்களை புரிய வைக்க முயற்சி செய்துள்ளார் அறிமுக டைரக்டர் தம்பிதுரை மாரியப்பன். குழந்தைக்கு ஏங்கும் ஒரு பெண்ணாக நன்றாக நடித்திருக்கிறார் சாந்தினி. "இந்த உலகத்தில் யாருமே வலியை வேண்டாம் தான் சொல்லுவாங்க. ஆனால் வேணும்ன்னு நினைக்கிற ஒரே வலி தாய்மை தரும் வலியை மட்டும்தான்" என்று சாந்தினி சொல்லும் போது அரங்கமே உருகுகிறது.
கதையின் நாயகனாக நடித்திருக்கும் விவேக் பிரசன்னா, வழக்கம் போல் எதார்த்தமான நடிப்பு மூலம் பல உணர்வுகளை கொட்டி தீர்த்திருக்கிறார். மனைவியின் குழந்தையின்மை பிரச்சனைக்கு தன்னிடம் உள்ள குறைபாடு தான் காரணம் என்பது தெரிந்தாலும், அதை மனைவியிடம் இருந்து மறைப்பது, அதனால் மனைவிக்கு ஏற்படும் பெரும் பாதிப்பு ஆகியவற்றை எண்ணி வருந்துவது என்று நடிப்பில் அசத்தியிருக்கிறார்.
விவேக் பிரசன்னாவின் நண்பராக நடித்திருக்கும் ஆனந்த் நாக் கவனம் ஈர்க்கிறார். போலீஸ் இன்ஸ்பெக்டராக நடித்திருக்கும் சஞ்ஜீவ் நடிப்பிலும் குறையில்லை. மாரிமுத்து, பிரதீப் கே.விஜயன், ரமா என மற்ற வேடங்களில் நடித்திருப்பவர்கள் திரைக்கதையோட்டத்திற்கு பயன்பட்டிருக்கிறார்கள். மூன்று கதைகள் மூலம் தான் சொல்ல வந்த விசயத்தை வித்தியாசமாக சொல்லியிருக்கிறார் இயக்குநர் தம்பிதுரை மாரியப்பன்.
பாடல்களில் கூடுதல் கவனம் தேவை....
மொத்தத்தில் இந்த ‘ட்ராமா’ சிறந்த குழந்தையின்மை விழிப்புணர்வு.
RATING: 3.5/5
கருத்துரையிடுக